Wednesday, March 31, 2010

லெந்து கால உபவாசம்

லெந்து கால உபவாசம் - ஐயோ
மறந்தே போனேன் அந்த சகவாசம்
உறுத்தியது என் அடிமனசு - நிலை
நிறுத்தியது எனது பாரம்பரியம் !

எதுதான் எனது பாரம்பரியம்?
பாரம்பரியத்தைச் சாடும் பாரம்பரியம்
பாரம்பரியத்திற்கு எதிரான பாரம்பரியம்
அதுவா எனது பிரியம் ?

பாரம்பரியத்திலும் ஒன்றுமில்லை
பாரம்பரியமின்மையிலும் ஒன்றுமில்லை
எனக்கினி அவற்றில் எதுவுமில்லை
இரண்டுமே எனக்கு சரிசமமே.

இருவகை பாரம்பரியத்துக்கும்
ஒருவாறாக முழுக்கு போட்டது
இந்த லெந்து நாட்களில்
நான் அனுபவிக்கும் உபவாசம் ?!

உணவு உடையுடன் உறையுமிடம் - பிறர்க்கு
தினமும் கிடைத்திட ஆதாரமாய்
நினையே வெளிப்படை ஆக்குவதே
இறையே விரும்பிடும் உபவாசம். (ஏசாயா 58:7)

அமைதியாய் திரும்பு

அமைதி வேளையில்

ஆசையாய் நித்தமும்

இயேசுவின் பாதத்தை

ஈ போன்று மொய்த்து

உறவாடிய நாட்கள்போய்,

ஊரும் உலகமும்

எப்போதும் உணர்த்தியும்

ஏனோ இப்போது

ஐயனின் பாதத்தில்

ஒருநாள் வருவதுவும்

ஓயாத வெறுப்போ? – மனமே

ஔஷதம் தேவையேல்,

அஃதினை விரும்புவாயே.


Friday, March 05, 2010

ஜெபிக்க எது நல்ல நேரம்?

எப்போது வேண்டுமானாலும் ஜெபிக்கலாம்:

அதிகாலையில் - தாவீது போல
மத்தியானத்தில் - தானியேல் போல
நள்ளிரவில் - பவுலும் சீலாவும் போல
ஆபத்தில் - பேதுரு போல
துக்கத்தில் - அன்னாளைப் போல
வியாதி வருத்தங்களில் - யோபுவைப் போல
சிறுவயதில் - சாமுவேல் போல
இளமையில் - தீமோத்தேயு போல
முதிர் வயதில் - சிமியோன் போல
சாவிலும் - ஸ்தேவான் போல
வேலையைத் தொடங்கும் போது - எலியேசர் போல
வேலையை முடிக்கும் போது - சாலொமோன் போல
எந்த வேளையிலும் - இயேசுவைப் போல


எப்போது வேண்டுமானாலும் ஜெபிக்கலாம்; எப்படி வேண்டுமானாலும் ஜெபிக்கலாம்; எங்கு வேண்டுமானாலும் ஜெபிக்கலாம் என்பதால் நம்மில் அநேகர் எப்போதுமே, எப்படியுமே, எங்குமே ஜெபிப்பதில்லை” - யாரோ.

Sunday, November 15, 2009

மன அழுத்தமும் ஆன்மீகமும்

முன் எப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது நாளிதழ்களிலும் இதர ஊடகங்களிலும்
மன அழுத்தத்திற்கான
(Depression) காரணங்களும், அதனைத் தீர்ப்பதற்கான வழிவகைகளும் விரிவாக அலசப்படுகின்றன. இருப்பினும் மனஅழுத்தம் என்பது தொன்று தொட்டே இருந்து வரும் ஒன்று தான். அறிவியல், மருத்துவம், தகவல் தொழில்நுட்பம் என அனைத்துத் துறைகளிலும் மனிதன் பெருவளர்ச்சி கண்ட பின்னரும் எதிர்பார்த்த ஏதோவொன்று இன்னமும் கிடைக்காத ஏமாற்றம், தோல்வி, வெறுமை உணர்வில் மன அழுத்தம் அவனை நிலைகுலையச் செய்து விடுகிறது. வான்மழை பொய்த்தால் வறுமையின் கொடுமை தாங்காமல் உயிர்விடும் விவசாயிகள் முதல் பணவீக்க ஏற்றத்தாழ்வினால் பதவியிழந்து பரிதவிக்கும் படித்தவர்கள் வரையிலும் அது எவரையும் விட்டு வைப்பதில்லை.


மன அழுத்தம்- ஒரு நோய்


மன அழுத்தம் என்னும் தாழ்வு உணர்வு (Low Mood) நிலை ஒரு நோயாக கருதப்படுகிறது. சாதாரணமாக உடல் நலக் குறைவினால் பொது மருத்துவரை அணுகுவோரில் மூன்றில் ஒருவருக்கு இருப்பது அவர்களின் மன அளவில் ஆரோக்கியமின்மையால் அவர்களது உடல் நலத்தில் ஏற்படும் குறைபாடுகள் என்பது ஆச்சரியமான உண்மை.
உலகில் வாழும் நாம் அனைவருமே நோய் நொடியின்றி ஆரோக்கியமாகத் தான் வாழ விரும்புகிறோம்.

ஆரோக்கியமாயிருத்தல் என்றால் என்ன? ”நோய் நொடி எதுவும் இல்லாமல் இருக்கும் நிலை மட்டுமல்ல; உடல், மனம் மற்றும் சமூக அளவில் ஒருவன் நன்றாயிருப்பதே ஆரோக்கியமாயிருத்தல்” என உலக சுகாதார நிறுவனம் வரையறுக்கிறது. இந்த வரையறை ஒரு உன்னதமான நிலையாக இருப்பதால், இதன்படி உலகில் வாழும் அனைவருமே ஒருவிதத்தில் ஏதாவதொரு கட்டத்தில் நோயாளிகள் தான் என்பது வெளிப்படையான உண்மை.


மன அழுத்தத்தின் மதிப்பீடு

தண்ணீரில் மிதக்கும் பனிக்கட்டி வெளியில் தெரிவது கொஞ்சமாக இருப்பினும் அதன் மொத்த உருவமோ மிகவும் பெரிதாக இருக்கும். அதுபோன்றே, மனநல மருத்துவர்களை நாடும் மன நோயாளிகளின்(Mental Disorders) எண்ணிக்கை 20 மில்லியானாக இருக்கும் பட்சத்தில், இதுதவிர மனஅழுத்தத்தினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மட்டும் 120 மில்லியன் என கணக்கிடப்படுகிறது. இவர்கள் உட்பட எதோவொரு விதத்தில் மனநலம் குன்றியோரின் எண்ணிக்கை 500 மில்லியனைத் தாண்டுகிறது. உலகில் ஆண்டுதோறும் 8, 00, 000 பேர் தற்கொலை செய்துகொள்கின்றனர். இவர்களில் 90 சதவிகிதம் பேருக்கு மன அழுத்தமே காரணம்.


அறிகுறிகள்


அடிக்கடி தலைவலி, மயக்கம், எரிச்சல், மன உழைச்சல், தூக்கமின்மை, அஜீரணக் குறைபாடுகள், கவலை, அச்சம், சோர்வு, தனிமை, தாழ்வு மனப்பான்மை போன்றவை மன அழுத்தத்தின் சாதாரணமான அறிகுறிகள். மன அழுத்தத்தின் தொடர் தாக்குதலினால் உயர் இரத்த அழுத்தம், நெஞ்சுவலி, தோல் நோய்கள், ஒற்றைத் தலைவலி, வயிற்றுப் புண், ஆஸ்துமா மூச்சுத்திணறல் போன்ற நோய்கள் உண்டாகின்றன.


கண்டறிவது எப்படி?

கவலை உணர்வுடன் உடம்பின் பெலன் இழந்த உணர்வு, தன்னம்பிக்கை இழந்து தனிமை உணர்வுடன் ஒதுங்கிக் கொள்லுதல், வழக்கமான பொழுதுபோக்குகளில் நாட்டமின்மை போன்றவை மன அழுத்தத்தின் ஆரம்பகட்ட அறிகுறிகள். அதுவே அதிகமாகி, அதிகாலையில் தூக்கமின்றி விழித்துக் கொள்ளுதல், வாழ்க்கையில் பிடித்தமின்றி வாழக்கையை முடித்துக் கொள்ளலாமோ என்ற எதிர்மறை எண்ணம் அடிக்கடி மனதில் எழுதல், அதற்கான தற்கொலை முயற்சி போன்றவைகளில் ஏதோவொன்று காணப்பட்டால் தகுந்த அலோசகரையோ மனநல மருத்துவரையோ அணுக வேண்டும்.


காரணங்கள்


மன அழுத்தத்தை மூளை அமைப்பு மற்றும் செயல்பாடு குறைவினால் ஏற்படும் சைக்காட்டிக் (Psychotic) மன அழுத்தம் மற்றும் அவ்வப்போது வாழ்க்கையில் ஏற்படும் பாதகமான சுழலினால் ஏற்படும் நியூராட்டிக் (Neurotic) மன அழுத்தம் என இருவகையாக பிரிக்கலாம். இவற்றுள் நியூராட்டிக் வகையே மிகவும் பரவலாகக் காணப்படுவது. கடந்த காலத்தைக் குறித்த குற்ற உணர்வு, நிகழ்காலத்தைக் குறித்த உதவியற்ற நிலை, எதிர்காலத்தைக் குறித்த நம்பிக்கையின்மை இவையே இத்தகைய மன அழுத்தத்தின் முக்கிய அடிப்படைக் காரணிகள். எனவே அத்தகைய சூழ்நிலைக்குள் ஒருவனைத் திடீரென்றோ படிப்படியாகவோ தள்ளும் எந்தவொரு பாதகமான சூழ்நிலையும் அவனுக்கு மனஅழுத்தத்தைக் கொண்டுவருகிறது.


சமாளிப்பது எப்படி?

சரியான திட்டமிடுதல், அவசர மற்றும் அவசியப் பணிகளை முதலில் முடித்தல், வேலைப்பளுவில் அவ்வப்போது ஓய்வு எடுத்தல், மனதை தளர்வாக வைத்திருத்தல், தனிமை மற்றும் எதிர்மறை சிந்தனைகளைத் தவிர்த்து நேர்மறை சிந்தனை நண்பர்களுடன் நிறைய நேரம் செலவிடுதல், தியானம், உடற்பயிற்சிகள், பொழுதுபோக்குக் காட்சிகள் முதலானவை மன அழுத்தத்திற்கு மருந்துகளாக பலராலும் அவ்வப்போது பரிந்துரைக்கப்ப்படுகின்றன. இவைகளெல்லாம் சொல்வதற்கு எளிமையாக இருந்தாலும் இவற்றில் செயல்வடிவில் உள்ள பிரச்சினைகள் அதனை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே எளிதில் புரியும்.

இவைகள் தவிர ஆற்றுப்படுத்துதல் (Counseling)), மனதிற்கான சிகிச்சை (Psychotherapy), சமூக ஆதரவு கட்டமைப்புகள் (Social Support), தேவைப்பட்டால் மருந்துகள் (Medications) என பல்வேறு வழிகள் உள்ளன.


ஆன்மீகத்தின் பங்கு


மனநல மருத்துவத்துக்கும் ஆன்மீகத்துக்கும் சம்பந்தமில்லை என்றது ஒருகாலம். அப்போது மதம் மற்றும் ஆன்மீக காரியங்களே மன நோயாக கருதப்பட்டன. ஆனால் சமீபத்திய ஆய்வுமுடிவுகள் ஆன்மீகம் மனிதனின் நோய் மற்றும் அதினால் எழும் மன உழைச்சலுக்கு தீர்வாக அமைவதை உறுதிப் படுத்துகின்றன. இதன் விளைவாக சமீப காலங்களில் உலகமெங்கிலும் பரவலாக பல நாடுகளின் மனநல மருத்துவத் துறையில் ஆன்மீகத்துக்கென்றே தனிபிரிவுகள் செயல்படத் தொடங்கியுள்ளன.

ஆன்மீகம் என்பது தனி ஒருவனின் தனிப்பட்ட அனுபவமாகும். எனவே கருத்து வேறுபாடுகளுக்கு அங்கு இடமுண்டு. அமைப்புகளுக்குட்பட்ட ஆன்மீகம் மதம் எனப்படுகிறது. ஆன்மீகம் அவ்விதம் அமைப்புகளுக்குட்படும் போது அதனுடைய நோக்கம் தவறி, எதிர்மறை விளைவுகளைத் தரும் அமைப்பாக மாறிவிடும் வாய்ப்புண்டு. அன்று தொட்டு இன்று வரையிலும் உலகில் மதத்தில் அடிப்படையில் ஏற்படும் பிரச்சினைகளினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மிகவும் அதிகம் என்பது வரலாறு. இருப்பினும் தனி ஒருவனின் மனஅழுத்தத்தை கையாளுவதில் ஆன்மீகம் தான் முக்கிய பங்கு வகிக்கிறது.

ஏப்படியெனில், மனதளவில் அரோக்கியமாக இருக்கும் ஒருவனது அடிப்படைப் பண்புகளை ஒருங்கே பக்குவப்படுத்தும் தன்மை ஆன்மீகத்துக்குத் தான் உண்டு. மற்ற முயற்சிகளும் ஓரளவுக்கு உதவக்கூடும். ஆனால் ஆன்மீகத்தின் உதவியினால் அதிக பலன் உண்டு. சரீர முயற்சி அற்ப பிரயோஜனமுள்ளது; தேவபக்தியானது... ... எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது (1 தீமோ 4:8).


மனநலத்தின் பண்புகள்


கீழ்க்கண்ட பண்புகளை தன்னகத்தே கொண்டுள்ளவனைத் தான் முழுமையாக மனதளவில் ஆரோக்கியமாக இருப்பவனாக மனநல மருத்துவர்கள் மற்றும் உளவியல் அறிஞர்கள் கணிக்கின்றனர்:

1) தன்னைப் பற்றி தன்னிறைவோடு இருப்பவன்: தன்னைப் பற்றி மிகவும் உயர்வாகவோ அல்லது மிகவும் தாழ்வாகவோ எண்ணம் கொள்வதில்லை. இவர்கள் தமக்குத் தாமே உள்ளூர பிரச்சினைகள் (Internal Conflict)) எதுவுமின்றி, மனரம்மியமாய் திருப்தி உணர்வுடன் இருப்பர்; தங்கள் தவறுகளை ஒத்துக்கொள்ள தயங்குவதில்லை.

2) அயலானைப் பற்றி தரமான சிந்தனை கொண்டவன்:
அடுத்தவரை நம்பி ஏற்றுக் கொண்டு அரவணைத்து ஒத்துழைப்புடன் நடந்து கொள்வர். இவர்கள் அயலான் மீது அக்கறை கொள்வதுண்டு.

3) வாழ்க்கையின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுபவன்:
வாழ்க்கையில் தமக்கென்று தகுந்த எதிர்பார்ப்புகளைக் கொண்டிருந்து அவர்களை நிறைவேற்றுவதில் துடிப்புடன் இருப்பர். அவைகளில் வரும் தடைகளை மேர்கொள்ளும் பக்குவம் இவர்களுக்கு உண்டு.


தன்னைப் பற்றி


ரோமர் 7:15-25 வசனங்களில் தனக்குதானே சம்மதியில்லாத ஒரு நிர்ப்பந்தமான மனுஷனின் நிலைமை விவரிக்கப்படுகிறது. ”இந்த மரண சரீரத்திலிருந்து யார் விடுதலையாக்குவார்? நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மூலமாய் தேவனை ஸ்தோத்தரிக்கிறேன்”. என்பது பவுலின் அனுபவம். கலா. 5:22-23ன் படி, ஆவியின் கனியோ: அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை. தங்கள் மாம்சத்தையும் அதின் இச்சைகளையும் சிலுவையில் அறைந்துவிட்ட கிறிஸ்துவினுடையவர்களுக்கே இது சாத்தியமாகிறது.


அயலானைப் பற்றி


இயேசு கிறிஸ்து தன்னுடைய ஊழிய நாட்களில் ஊழியம் கொள்ளும்படி அல்ல, ஊழியம் செய்யவே வந்தார். ’உன்னிட்த்தில் நீ அன்புகூருவது போலப் பிறனிடத்திலும் அன்பு கூருவாயாக என்கிற ஒரே வார்த்தையிலே நியாயப்பிரமாணம் முழுவதும் நிறைவேறும் (கலா 5:14)’ என்கிறார் பவுல். ’கடவுளை மற; மனிதனை நினை’ என்ற கோட்பாடு, கடவுள் பெயரில் மனிதனுக்கு தீங்குசெய்த சிலரின் மீதுள்ள ஆதங்கத்தின் வெளிப்பாடு. மற்றபடி கடவுளை நினைத்தவர்கள் தான் மனிதனைக் குறித்தும் அதிகம் நினைத்திருக்கிறார்கள் என்பது கண்கூடான வரலாற்று உண்மை. ஆன்மீகம் ஒருவனை அயலானிடம் அன்பு செலுத்தி அவர்களுடன் நல்லுறவு பேணும் பண்பாளனாக மாற்றுகிறது.


வாழ்க்கையின் எதிர்பார்ப்புகள்


வாழ்க்கையில் தகுதிக்கு மிஞ்சிய எதிர்பார்ப்புகள் தோல்வியையும் ஏமாற்றத்தையும் தந்து இறுதியில் மன அழுத்தத்தைத் தான் கொண்டுவரும். தன்னைப் படைத்த தேவனின் சித்தத்திற்கு உட்பட்டு, வாழ்க்கையில் திட்டங்களை வகுத்துச் செயல்படும் போது அதனை நிறைவேற்றுவதில் தேவனுடைய உதவி கிடைக்கிறது. நோக்கம் உந்தும் வாழ்க்கையில் சவால்களை மேற்கொள்ளும் வலிமை கிடைப்பதால், எத்தகைய சூழ்நிலையிலும் மன அழுத்தத்தில் அழுந்தி விடாமல், சமாளித்துக் கொள்ளமுடிகிறது.


மனதிற்கான சிகிச்சையில் ஆன்மீகம்

மருத்துவம் மற்றும் உளவியல் துறைகளில் மனதிற்கு சிகிச்சையளிப்பது (Psychotherapy) ஒரு முக்கியமான சிகிச்சை முறையாகும். இந்த தொடர் சிகிச்சை மூலமாக காலப்போக்கில் படிப்படியாக மனதளவில் மாற்றம் ஏற்படுத்துவதுதான் இதன் நோக்கம். இதனையே பவுல், ரோமர் 12:2ல், ’நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பரிபூரண சித்தமும் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக உங்கள் மனம் புதிதாகிறதினாலே மருரூபமாகுங்கள்’ என்கிறார். மனதிற்கு சிகிச்சை மூலமாக ஓரளவுக்கு பலன் கிடைத்தால் போதும் என்பதுதான் எதிபார்ப்பு. ஆனால், இயேசு கிறிஸ்து, ’நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும் அது பரிபூரணப்படவும் வந்தேன்’, என வாக்கு பண்ணியிருக்கிறார். எனவே மன அழுத்தத்திற்கு மருத்துவ மற்றும் உளவியல் முறைகளினால் கிடைக்கும் பலனைக் காட்டிலும் நிறைவான மற்றும் விரைவான பலன் ஆன்மீகத்தினால் கிடைக்கிறது.

இயேசு கிறிஸ்து ‘எங்கும் சுற்றித் திரிந்து பிணியாளிகளை சொஸ்தாக்கினார்’ என்று நாம் அறிவோம். ”அவர், பிரசங்கத்தைக் காட்டிலும் பிணியாளிகளை சொஸ்தமாகுவதற்கே அதிக நேரம் செலவளித்தார்” என்கிறார் ஒருவேதவல்லுநர். அந்த பிரசங்கங்கள் கூட பிணிக்குக் காரணமான ஆவி, ஆத்தும பிரச்சினைகளை முதலில் சரி செய்யவே என்பது அவரின் கருத்து. இயேசு கிறிஸ்துவின் போதனைகளை பின்பற்றி நமது ஆவி, ஆத்துமாவில் அரோக்கியமாக வாழும் போது மன அழுத்தினால் ஏற்படும் உடல் உபாதைகளிலிருந்து விடுதலை பெற்று ’ஆரோக்கியம்’ கிடைப்பது நிச்சயம்.

”பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்கிறது போல, நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து
சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன்” (3 யோவான் 2).



This is my article published in Unnatha Siragukal July-Sept 2009 issue.

Tuesday, December 09, 2008

எழுதிப் பிரகாசி... உனக்கு வழி பிறந்தது.



தமிழ்ப் பத்திரிக்கை உலகில் உள்ள மொத்த பத்திரிக்கைகளின் எண்ணிக்கையில் கிறிஸ்தவ பத்திரிக்கைகள் முதலிடத்தில் காணப்பட்டாலும் அவைகளுள் அதிக பிரதிகளிலோ தரத்திலோ உருப்படியாய் வெளிவருபவை ஒரு சிலவே. இதற்கு பல்வேறு சாக்குப்போக்குகள் கூறப்பட்டாலும் இன்றைய தமிழ்க் கிறிஸ்தவம் இதனை பெரிதாக கண்டுகொண்டதில்லை என்பது தான் நிசர்சனமான உண்மை.


அவ்வப்போது சில கிறிஸ்தவ நிறுவனங்கள் நடத்திய எழுத்தாளர் பணிமனைகள் இந்த குறைபாட்டினை சமாளிக்க எடுத்துக் கொண்ட முயற்சிகளின் மத்தியில், சமீபத்தில் ஆசீர்வாத இளைஞர் இயக்கம் நடத்திய எழுத்தாளர் பணிமனை ஒரு குறிப்பிடத்தக்க விசயமாகும். “இறைவன் எழுதுகிறார்” என்ற தலைப்பில் 2008 நவம்பர் 28-30 சென்னை சாந்தோம் தியான ஆசிரமத்தில் இது சிறப்புற நடைபெற்றது.


மும்பை துப்பாக்கிச் சூட்டினால் நாடு முழுவதிலும் பரவியிருந்த பாதுகாப்பு பயம், நிசாவின் தாக்குதலால் தமிழகம் முழுவதும் வெள்ள பாதிப்புகள், இதனால் போக்குவரத்துப் பாதிப்பு... என பல்வேறு தடைகள். இவைகளெல்லாம் இருந்த போதிலும் இதில் பதிவு செய்திருந்த 84 பேர்களில் 63 பேர் சரியான நேரத்தில் வந்திருந்து மூன்று நாட்களும் முழுமையாக பங்கு கொண்ட காரியம் இன்றைய தமிழ்க் கிறிஸ்தவர்களிடையே இதற்கென்று ஆர்வம் கொண்டுள்ளோர் இருக்கத்தான் செய்கின்றனர் என்பதை உறுதிபடுத்தியது. அதனை நிறைவு செய்யும் வண்ணம் பனிமனையின் நிகழ்வுகள் எல்லாம் நிறைவாகவும் சிறப்பாகவும் இருந்தன என்றால் அது மிகையல்ல.



ஆசீர்வாதம் பத்திக்கையில் அடிக்கடி கட்டுரைகள் மற்றும் புத்தகங்கள் பல எழுதி கிறிஸதவ வட்டாரத்தில் சிறப்பான இடம்பிடித்துள்ள டாக்டர். திருமதி. லில்லியன் ஸ்டான்லி, மற்றும் தனியொருவராய் பத்திரிக்கை தொடங்கினும் தரத்திலும் எண்ணிக்கையிலும் உயர்ந்து தமிழ்க் கிறிஸ்தவ உலகில் முத்திரை பதித்துக் கொண்டிருக்கும் வானமுதம் பத்திரிக்கையின் ஆசிரியர். திரு. கிங்ஸ்லி அருணோதய குமார் ஆகியோரின் பயிற்றுவிப்பில் பங்கு கொண்டோர் நல்ல பக்குவம் பெற்றனர். இவர்களுடன் ஆசீர்வாத இளைஞர் இயக்க ஊழியங்களில் தகவல்களைத் தொகுத்து அறிக்கைகளாக தருவதில் நல்ல அனுபவம் கொண்ட திரு. ஈ. எல். மதன்சிங், மொழி பெயர்ப்புப் பணியில் தனக்கென்று தனி பாணியைக் கண்டுள்ள திரு. ஈ.எல். ஈப்ரிம், வானமுதம் இதழில் முக்கிய பங்காற்றும் சிறுகதை சுந்தர் ஆகியோரும் அவரவர் பங்கினை சிறப்பாக பகிர்ந்தளித்தனர்.






பணிமனையில் குழுக்களாகப் பிரிந்து, பத்திரிக்கை தயாரிக்கும் பயிற்சிக்கு நேரம் கொடுக்கப்பட்டது. பங்கு கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்களூம் ஒவ்வொரு துறையிலும் சிறப்பாக அமைந்த படைப்புகளுக்கு சிறப்பு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களும் சிறந்த பத்திரிக்கையை வடிவமைத்த குழுவினருக்கு பாராட்டுப் பரிசு மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.



மிக குறைந்த கட்டணத்தில் நிறைவான பயிற்சியை இயக்க, நிறுவன அமைப்புகள் வேறுபாடின்றி அனைத்து தமிழ்க் கிறிஸ்த எழுத்தார்வலர்களும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் திரு. ஈ. எல். ஈப்ரிம் அவர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இப்பணிமனையின் முழு செலவினையும் ஆசீர்வாத இளைஞர் இயக்கம் எடுத்துக் கொண்டதன் மூலம் கிறிஸ்தவ எழுத்தாளர்களை எழுப்பி விடுவதில் அதன் தீராத ஆசை நிறைவேறி உள்ளது.


பங்கு கொண்ட அனைவரும், ”எழுதிப் பிரகாசி... உனக்கு வழி பிறந்தது” என்று கர்த்தரின் நேரிடைக் கட்டளையினை பெற்றுக் கொண்ட உணர்வில் திரும்பிச் சென்றனர். இதுபோன்ற அரிய காரியங்களில் அனைத்து முன்னணி கிறிஸ்தவ எழுத்தாளர்களும் ஒன்றுபட்டு செயல்பட்டால் நமது சமுதாயத்தில் கிறிஸ்துவின் ஆட்சி வேரூன்றி விரைவில் மாற்றங்கள் நிகழும் என்பதில் ஐயம் இல்லை.


- டாக்டர். பேதுரு, தாராபுரம்.

Sunday, September 21, 2008

2008 - உனக்கு இது கி.பி. எத்தனையாவது ஆண்டு?

உலக வரலாற்றில் எந்தவொரு நிகழ்வினைக் குறிப்பிட்டாலும் கி.மு/ கி.பி என்ற வழக்கமே பரவலாக இருந்துவருவதை நாம் அறிவோம். காரணம் என்ன? அந்த அளவிற்கு உலக வரலாற்றில் இயேசு முக்கியமான (மைய) இடத்தைப் பிடித்து விட்டார் என்றால் அது மிகையல்ல. கிறிஸ்துவுக்குப் பின் உலக சரித்திரத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்பவைகளும் காரணமாகலாம். கி.மு/ கி.பி வழக்கமுறையை வைத்து, உலக நிகழ்வுகளே அவரை மையமாக்க் கொண்டு தானோ என நினைப்பதிலும் தவறு இல்லை.

அந்த அளவிற்கு உலக சரித்திரத்தில் சாதனை படைத்த இயேசு உன் வாழ்க்கையில் ஏதாவது செய்திருக்கிறாரா? ஒருவேளை நீ பிறந்து வளர்ந்ததே கிறிஸ்தவக் குடும்பமாக இருக்கலாம். நல்லது. ஆனாலும் உனது வாழ்க்கைச் சரித்திரத்திலும் கி.மு/ கி.பி என்ற பயன்பாடு உண்டு. அனேகர் தங்களைப் பற்றி அல்லது அடுத்தவரை பற்றி எதையாவது குறிப்பிடும் போது திருமணத்திற்கு முன் அப்படி இருந்தார் இப்போதைக்கு அப்படி இல்லை என்பார்கள்; அல்லது திருமணத்திற்கு பின் ஆளே மாறிவிட்டார் என கூறுவது உண்டு. திருமணம் என்ற நிகழ்வினால் ஒருவனு(ளு)டைய வாழ்க்கையில் நுழையும் ஒருவனா(ள)ல் அவனு(ளு)டைய வாழ்க்கை நடைமுறையில் அத்தனை மாற்றங்கள் நிகழ்கின்றது அல்லவா?

அதுபோன்றே ஒருவனுடைய வாழ்க்கையில் கிறிஸ்து என்று ஒருவர் குறுக்கிட்டால், அவனுடைய வாழ்க்கை நடைமுறையிலும் மாற்றங்கள் கண்டிப்பாக இருக்கும். அது ஒருவேளை சிலருக்கு ஒரே நாளில் வெளிப்படையாக தெரிவதாக இருக்கலாம்; சிலருக்கு படிப்படியான மாற்றங்களுக்குப்பின் பலநாட்கள் கழித்து வெளிப்படுவதாக இருக்கலாம். எது எப்படியாயினும் கிறிஸ்து ஒருவனுக்குள் இருந்தால் அவனுடைய சரித்திரத்தில் கி.மு/ கி.பி என்று இரண்டு அத்தியாயங்கள் கண்டிப்பாக இருக்கும். அப்படி ஏதும் இல்லையெனில், இன்னும் அங்கு கிறிஸ்து வரவில்லையென்று தான் அர்த்தம்.

இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின. 2 கொரிந்தியர் 5:17

அது சரி. உங்கள் வாழ்க்கை சரித்திரத்தில் இது கி.பி எத்தனையாவது ஆண்டு என உறுதியாக கூறமுடியுமா?