முன்னெப்போதும் இருந்திராத அளவுக்கு வளர்ந்துள்ள தகவல் பரிமாற்ற ஊடகங்களின் பரிணாம வளர்ச்சியை உற்றுநோக்கும் போது நமக்கு வியப்பாக இருப்பதுடன் இது எங்கே போய் முடியுமோ என்று ஒருவித பயமும் நம்மைத் தொற்றிக் கொள்கிறது. இது குறித்து 2600 வருடங்களுக்கு முன்னரே முன்னறிவிக்கப்பட்டிருப்பது (தானி. 12:4) இது கடைசிக்காலம் என்பதை நமக்கு நினைவுபடுத்துகிறது. தகவல் பரிமாற்ற ஊடகம் 15ம் நூற்றாண்டில் அச்சு வடிவமும் பின்னர் படிப்படியாக ரேடியோ, தொலைபேசி, தொலைக்காட்சி, சினிமா என ஒலி ஒளி வடிவம் பெற்று, தற்போது இவையனைத்தும் இண்டர்நெட் மூலம் ஒருன்கிணைந்து கையடக்க செல்போன் மூலம் நம் பாக்கெட்டிற்குள்ளேயே வந்துவிட்டன. மேலும் தற்போது சமூக வலைத்தொடர்புகள் தளங்கள் மூலம் இவை அனைவரையும் எளிதில் சென்றடைகின்றன.
இது போன்ற வளர்ச்சி, சமுதாயத்தில் கண்கூடான பல முன்னேற்றங்களுடன் தனிநபர் வாழ்க்கையிலும் பல தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், அதிக ஞானத்திலே அதிக சலிப்புண்டு; அறிவுபெருத்தவன் நோவுபெருத்தவன் (பிர. 1:18). இவற்றை ஏற்கனவே ஞானியாய் இருந்து தன் வாழ்க்கை அனுபவத்தின் மூலம் நமக்கு போதிக்கும் சாலமோனின் பிரசங்கி புத்தகத்தின் முகவுரை (பிரசங்கி 1:8-11) மற்றும் முடிவுரைப் பகுதி (பிரசங்கி 12: 12-14) பகுதிகளிலிருந்து இங்கே நாம் ஆராயலாம்.
ஐம்புலன்களில் பார்வையே பிரதானம்.
ஒளியுடன் ஒலியும் கூடிவரும்போது அது ஒருவரை வெகுவாகக் கவர்ந்துவிடுகிறது. இருப்பினும்
காண்கிறதினால் கண் திருப்தியாகிறதில்லை, கேட்கிறதினால் செவி நிரப்பப்படுகிறதுமில்லை
(பிர. 1:8) என்பது சாலமோனின் அனுபவம். பாதாளமும் அழிவும் திருப்தியாகிறதில்லை; அதுபோல
மனுஷனுடைய கண்களும் திருப்தியாகிறதில்லை (நீதி. 27:20) என்பதும் அவரது கூற்று. கண்ணானது
சரீரத்தின் விளக்காயிருக்கிறது; உன் கண் தெளிவாயிருந்தால், உன் சரீரமுழுவதும் வெளிச்சமாயிருக்கும்;
உன் கண் கெட்டதாயிருந்தால் உன் சரீரம் முழுவதும் இருளாயிருக்கும். ஆகையால் உன்னிலுள்ள
வெளிச்சம் இருளாகாதபடிக்கு (நீ காண்பவைகளைக் குறித்து) எச்சரிக்கையாயிரு (லூக்கா
11:34,35) என்றார் இயேசு. எனவே ஊடக பயன்பாட்டில் தீங்கான காரியத்தை என் கண்முன் வைக்கமாட்டேன்
(சங். 101:3) என்பது நமது தீர்மானமாக இருக்க வேண்டும்.
2) கேட்கிறதினால் செவி: [Audio Media]
– 1:8b
உலகில் இசைக்கு மயங்காத உயிரியே
இல்லை என்பர். நாம் ரசிக்கும் இசையுடன் கூடிய பாடல்கள் எந்த விதத்திலும் துன்மார்க்கத்திற்கு
ஏதுவாக நம்மை நடத்தாமல், புத்திமதிகள் நிறைந்து பக்தியில் பெருகிட உதவுபவையாக இருக்க
வேண்டும் (கொலோ 3:16). தொலைபேசி பயன்பாட்டிற்கான செலவுகள் தற்சமயம் வெகுவாக
குறைந்து விட்டமையால் அவசியமின்றி நாம் பயன்படுத்தலாகாது. அதில் நாம் செலவிடும் நேரமும்
ஒரு பொன்னான செலவினமே. மட்டுமல்லாமல், சொற்களின் மிகுதியில் பாவமில்லாமற்போகாது (நீதி.
10:19) என்ற வசனத்தை மனதிற்கொண்டு, சொல்லவந்த விஷயத்தை பகிர்ந்து சுருக்கமாக உரையாடலை
முடித்துக் கொள்வது நல்லது. அதிலும் எதிர்பாலருடன் பேசும்போது கவனம் தேவை. மோசம்போகாதிருங்கள்;
ஆகாத சம்பாஷணைகள் நல்லொழுக்கங்களைக் கெடுக்கும் (1 கொரி 15:33).
3) புத்தகங்களுக்கு முடிவில்லை: [Print Media] – 12:12
வாசிப்புப் பழக்கம் ஒரு நல்ல
விஷயம் என்பது மறுப்பதற்கில்லை. அதே வேளையில் அநேகம் புஸ்தகங்களை உண்டுபண்ணுகிறதற்கு
முடிவில்லை என்ற உண்மையை உணர்ந்து கொள்ளும் போது தான் நமக்கு இருக்கும் குறுகிய காலத்தை
மிகவும் பிரயோஜனமாக பயன்படுத்த முடியும். நம் வாழ்க்கையில் இதுவரையும் பாடப்புத்தகங்கள்
உட்பட பலநூறு புத்தகங்களைப் படித்துவிட்ட நாம் பரிசுத்த வேதாகமத்தை ஒருமுறையாவது முழுமையாக
படித்திருக்கிறோமா? ’இந்தப் புஸ்தகத்தில் எழுதியிராத வேறு அநேக அற்புதங்களையும் இயேசு
தமது சீஷருக்கு முன்பாகச் செய்தார் (யோவா. 20:30), இயேசு செய்த வேறு அநேக காரியங்களுமுண்டு;
அவைகளை ஒவ்வொன்றாக எழுதினால் எழுதப்படும் புஸ்தகங்கள் உலகம் கொள்ளாதென்று எண்ணுகிறேன்
(யோவா. 21:25)’ என்கிறார் அவரது முதன்மைச் சீடர். அப்படியானால், இருக்கும் வாசிப்பு
ஆர்வத்தில், எழுதப்பட்ட வேதாகமத்தை எவ்வளவு அருமையாய் கருதி நாம் படிக்க வேண்டும்.
4) நூதனம் எதுவுமில்லை: [Sharing / Forwarding] – 1:9-11
தகவல் பரிமாற்றங்கள் பரவலாகி
விட்ட பின்னர், முன்பு சாமானியரின் கையில் கிடைப்பதற்கரிய தகவல்களெல்லாம் இப்போது மிகவும்
எளிதாக கிடைத்துவிடுகின்றன. தகவல் ஒன்றைக் கண்டவுடன் அது நமக்கு நூதனமாக தெரிவதால்,
மற்றவர்களுக்கும் தெரியட்டுமே ஏன்ற நல்லெண்ணத்தில் அவற்றை பகிர்ந்து கடத்துகிறோம்.
ஆனால், உண்மையில் அவற்றில் நூதனம் எதுவுமில்லை. முன் நடந்ததே இப்பொழுதும் நடக்கிறது;
இனி நடக்கப்போகிறதும் முன்னமே நடந்தது (பிர. 3:15). எனவே பரபரப்பு செய்திகளை அடுத்தவருக்கு
பகிர்ந்து கடத்துவதிலும் பரமனின் நற்செய்தியை ஞானமாய் கடத்துவதில் நாம் கவனம் செலுத்தலாம்.
5) நியாயத்தீர்ப்பு நிச்சயம்: [Accountable
Responsibility] 12:13,14
ஊடக பயன்பாட்டில் நமது ஒவ்வொரு கிரியையையும், அந்தரங்கமான ஒவ்வொரு காரியத்தையும்
நன்மையானாலும் தீமையானாலும், தேவன் நியாயத்திலே கொண்டுவருவார். ஊடகங்கள் யாவும் அடிப்படையில்
நடுநிலையான தொடர்பு சாதனங்கள்; அவை தன்னகத்தே நன்மையாகோ தீமையாகவோ இருப்பதில்லை. அதை
பயன்படுத்தி ஒருவர் கடத்தும் தகவல்களின் தன்மையின் மூலம் தான் அது நல்ல அல்லது தீமையான
சாதனமாக மாறுகிறது. கடைசிநாட்களில்
கொடியகாலங்கள் வருமென்று முன்னறிவிக்கப்பட்டவைகளின் (2 தீமோ 3:1-5) நிறைவேறுதலுக்கு
உறுதுணையாக இன்றைய தகவல் பரிமாற்ற ஊடகங்கள் இருந்துவருகின்றன. அதற்காக நாம் அவற்றை ஓரங்கட்டி விடாமல் நமது நேரம், பொருள், திறமை தாலந்துகளைப்
பயன்படுத்தி நித்தியஜீவனுக்கான மீட்பின் நற்செய்தியை மற்றவர்களுக்கு அறிவித்திட, ஊடகங்களை
முறையாக கையாள நாம் கவனம் செலுத்தலாம். ஏனெனில், நன்மையானதைச் செய்தால் நமக்கு நியாயத்தீர்ப்பில்
பலன் கிடைக்கும்.
ஆகையால் நீங்கள் புசித்தாலும், குடித்தாலும், எதைச் செய்தாலும், எல்லாவற்றையும்
தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள். (1 கொரி. 10:31).
[இது தரிசனச்சுடர் அக்டோபர் 2016 ல் வெளிவந்துள்ள ஊடக பயன்பாடுகள் குறித்த
எனது வேத ஆராய்ச்சிக் கட்டுரை]
[இது தரிசனச்சுடர் அக்டோபர் 2016 ல் வெளிவந்துள்ள ஊடக பயன்பாடுகள் குறித்த
எனது வேத ஆராய்ச்சிக் கட்டுரை]