Wednesday, June 14, 2017

உதிரம் கொடுப்போம்; அதை இன்றே கொடுப்போம்


’நல்ல சமாரியன்’ என்ற வார்த்தை வேதாகமத்தில் எங்கும் காணப்படவில்லை; ஆனால் அவனைக் கேள்விப்படாத இந்த சொற்றொடரை பயன்படுத்தாத கிறிஸ்தவர்கள் எவருமில்லை எனலாம். கள்ளர் கையில் அகப்பட்டு குற்றுயிராக்கப்பட்ட வழிப்போக்கனைக் கண்டு மற்றவர்கள் போல தானும் பக்கமாய் விலகிச் செல்லாமல், தன் நேரம், திறமை, பணத்தினை பக்குவமாய் தானம் செய்த இந்த சமாரியன் சரித்திரத்தில் நீங்கா இடம்பெற்று விட்டான் (லூக்கா 10:29-37). விஞ்ஞானம் மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சியுடன் போட்டிப் பொறாமைகளும் பெருகிவிட்ட இந்தக் காலகட்டத்தில், தானங்கள் செய்வோருக்கென்று எப்போதுமே ஒரு  தனி மரியாதை உண்டு.

தானங்கள் பலவிதங்களில் இருந்தாலும் அவற்றில் தலைசிறந்த தானம் இரத்ததானமே எனலாம். ஏனெனில் அதுமட்டுமே எல்லோராரும் எப்போது வேண்டுமானாலும் மற்றவர்களுக்கு வழங்கப்படக்கூடிய எளிதான ஒன்று. ஆனால் அது குறித்த ஒருவரின் சரியான புரிதலும் ஆர்வமும் மட்டுமே அதற்கு தூண்டுகோலாக அமைகிறது.

இரத்ததானம் - ஒரு அவசியத்தேவை ஏன்?

”சகல மாம்சத்துக்கும் இரத்தம் உயிராயிருக்கிறது; இரத்தம் ஜீவனுக்குச் சமானம்” என பரிசுத்த வேதாகமம் கூறுகிறது (லேவி.17:14). இரத்தம் மனித உடலில் இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. அதற்கு மாற்று எதுவும் எதுவும் இல்லை. எனவே அவசர மற்றும் அவசியத் தேவைகளில், ஒருவரிடமிருந்து மற்றொருவர் பெறும் இரத்தமாற்று (Blood Transfusion) மூலம் மட்டுமே இது சரிசெய்து கொள்ளப்பட முடியும். ஒவ்வொரு இரண்டு விநாடிகளிலும் உலகில் யாரோ ஒருவருக்கு இரத்தமாற்று தேவைப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

இரத்தமாற்று என்பது ஏதோ விபத்து மற்றும் அவசர நேரங்களில் மட்டும் செய்யப்படும் மருத்துவ சிகிச்சை முறை அல்ல; புற்றுநோய் மற்றும் இரத்த சம்பந்தமான வியாதியிலுள்ளோருக்கு அது வழக்கமாகவே தேவைப்படுகிற ஒன்று. செஞ்சிலுவை சங்கங்களில் உலகளாவிய அமைப்பின் கணக்கெடுப்பின்படி, உலகில் மூன்றில் ஒரு இரத்தமாற்று புற்றுநோய் மற்றும் இரத்த சம்பந்தமான வியாதியிலுள்ளவர்களுக்கும் வெறும் இரண்டு சதவிகித இரத்தம் மட்டுமே சாலைப்போக்குவரத்து மற்றும் இதர விபத்துகளில் சிக்கியவர்களுக்கு செய்யப்படுகிறது. நம் நாட்டில் ஒரு ஆண்டிற்கு சுமார் 4 கோடி யூனிட் (ஒரு யூனிட் என்பது சராசரியாக 350 மிலி) இரத்தம் தேவைப்படுகிறது; ஆனால் கிடைப்பது வெறும் 40 லட்சம் யூனிட்கள் மட்டுமே.

மேலும் தானமாக பெறப்பட்ட இரத்தத்தை மூன்று மாதங்களுக்குள் உபயோகித்தாக வேண்டும். அதனை  எவ்வளவு குறைந்த இடைவெளிக்குள் தேவையிலுள்ள ஒருவருக்கு பயன்படுத்திக் கொள்கிறோமே அவ்வளவு அது பிரயோஜனமானதாக் இருக்கும். எனவே அவைகளை முன்கூட்டியே தாராளமாக சேமித்து வைக்க இயலாது. அவ்வப்போது எழும்  இரத்ததேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்து கொள்ள, இரத்தத்தை தானமாக வழங்க முன்வரும் தன்னார்வலர்களைத் தன் தொடர்பில் வைத்திருக்கும் இரத்ததான அமைப்புகளின் சேவையும் ஒரு அவசியத் தேவையாகி விட்டது.

தன்னார்வ இரத்ததானமே தலைசிறந்த ஒன்று

ஒருவருக்கு ஏற்படும் அவசர மற்றும் அவசிய இரத்தத் தேவையை அவர் மூன்று வழிகளில் நிறைவு செய்துகொள்ளலாம். 1) பணம் கொடுத்து இரத்த வங்கிகளில் ஏற்கனவே இருக்கும் இரத்ததினை பெறுவது; 2) உறவினர் / குடும்பத்தினரிடமிருந்து அந்த நேரத்தில் பெறுவது; 3) தன்னார்வலர்கள் மூலம் இரத்ததை தானமாக பெறுவது. முதலில், பணம் கொடுத்து இரத்தவங்கிகளில் வாங்கிக் கொள்வது எல்லாருக்கும் சுலபமாக வாய்ப்பதில்லை. அங்கேயும் இது எளிதில் கிடைக்கும் விஷயம் அல்ல. தானாக தானம் செய்ய முன்வந்த அல்லது குறைந்த பணத்திற்கு தன் இரத்தத்தை விற்க வந்த ஒருவரால் தான் இது கிடைக்கிறது. இங்கு பணம் என்ற காரியம் உள்ளே வருவதால் இந்த இரத்தத்தின் சுத்தம் மற்றும் பாதுகாப்புக்கு இங்கு உத்தரவாதமில்லை.

இரண்டாவதாக, நெருங்கிய உறவினர் அல்லது குடும்ப உறுப்பினர்களிடமிருந்து பெறுதல் ஒரு பாதுகாப்பான வழிமுறை தான்.  ஆனால், இங்கு ஒரு அவசரத் தேவை என்று வந்தவுடன் மட்டுமே இந்த உறவுகளை நாடிச் செல்வதால், எல்லோருக்கும் இது சாத்தியப்படுவதில்லை. அவசரத் தேவைகளில் மட்டுமல்லாமல் வழக்கமாகவே இரத்தம் பெறவேண்டிய சில உடல் உபாதைகளில் இருப்போர் எப்போதும் தங்கள் குடும்ப உறுப்பினரையே நம்பியிருக்கும் இந்த வழிமுறை போதாது.

மூன்றாவதாக, தாமாக முன்வந்து இரத்ததானம் செய்யும் முறை ஒரு சிறந்த முறையாக மட்டுமல்ல, செலவு குறைந்த பாதுகாப்பான மற்றும் நிலையான வழிமுறையாக இருக்க முடியும். ஏனெனில் இங்கு தாமாக முன்வருவோர் அப்படி ஒருதேவை வரும் எந்தநேரத்திலும் தன் இரத்தத்தை தானமாக தர எப்போதும் ஆயத்தமாக இருக்கிறார். இங்கு அவருக்கென்று ஊக்கத்தொகை எதுவும் கொடுக்கப்பட வேண்டுவதில்லை என்பதால், தேவையிலுள்ளோர் அந்த இரத்தத்தை பயன்படுத்தும் நிலைக்கு பக்குவப்படுத்த ஆகும் செலவு குறைவாக இருக்கிறது.

இந்த மூன்று முறைகளிலும் மூன்றாம் முறையே உலகில் பரந்த அளவில் நடைமுறையில் சாத்தியமான, காலாகாலமாக நிலைத்து நிற்கும் வழிமுறையாக கண்டறியப்பட்டுள்ளதால், தாமாக முன்வந்து இரத்ததானம் செய்யும் பழக்கத்தை ஊக்குவிக்க உலக சுகாதார நிறுவனம் கி.பி. 2004 முதல் வருடந்தோறும் ஜூன் 14 ல் உலக இரத்ததானம் செய்வோர் தினத்தை அனுசரித்து வருகிறது. இந்த 2017 வருடத்திற்கான அதன் மையக்கருத்து: ”உதிரம் கொடுப்போம்; அதை இன்றே கொடுப்போம்; அவ்வப்போதும் கொடுப்போம்” என்பதாகும். 

இரத்ததானம் செய்வோருக்கு வரும் நன்மைகள்

ஒருவர் இரத்ததானம் செய்வதால் அவருக்கு ஏற்படும் நன்மைகள் ஏராளம். முதலில் ஒரு மருத்துவக் குழுவினை சந்தித்து தம் உடலின் பொதுவான தகுதிகளை உறுதி செய்ய அது உதவுகிறது. ஒவ்வொரு முறையும் இரத்ததானம் செய்யும் போதும், எந்த பணமும் செலவும் செய்யாமல் ஒருவர் தமது உடல் ஆரோக்கியமாகவும், மஞ்சள் காமாலை, மலேரியா, எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்கள்  போன்றவை எதுவும் தமக்கு இல்லை என்பதை உறுதி செய்வதற்கும் ஒரு வாய்ப்பாக அமைகிறது. இறைக்கிற கிணறு தான் சுரக்கும் என்பர்; குறிப்பிட்ட இடைவெளியில் வழக்கமாக இரத்ததானம் செய்வதால் நமது உடலில் பழைய இரத்தம் வெளியேறி இயல்பாக உடலில் புதிய இரத்தம் சுரக்க வாய்ப்பாக அமைகிறது. வழக்கமாக  இரத்ததானம் செய்பவர்களுக்கு இரத்தத்திலுள்ள  கொழுப்புச்சத்துகள் குறைவதுடன் இரத்த அழுத்தமும் குறைந்து, இதனால் இருதய மாரடைப்பு நோய்களும் குறைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கிறிஸ்தவர்களாக நாம் ஏன் இதனைச் செய்ய வேண்டும்?

இரத்ததானம் செய்வது ஒரு உயிர்தானம் செய்வதற்கு சமமானது. மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது என லேவி. 17:11 ல் பார்க்கிறோம்.  ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை என்றார் இயேசு கிறிஸ்து (யோவான் 15:13).  எனவே கிறிஸ்தவர்களாகிய நாம் தன்னார்வமாக இரத்ததானம் செய்வதில் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக விளங்க வேண்டும். தேவனுடைய கிருபையினால் நாம் நல்ல உடல்நிலையில் இருக்கும் போதே தேவையுலுள்ள மற்றவர்களுக்காக இரத்ததானம் செய்ய முன்வர வேண்டும். ஏனெனில், ‘நன்மைசெய்யும்படி உனக்குத் திராணியிருக்கும்போது, அதை செய்யத்தக்கவர்களுக்குச் செய்யாமல் இராதே’ (நீதி 3:27) என வேதாகமம் கூறுகிறது.

நாட்டில் பல்வேறு சமூக அரசியல் அமைப்புகளும் தொண்டு நிறுவனங்களும் இரத்ததானத்தை மையமாகக் கொண்டு ஏற்கனவே திட்டங்களை செவ்வனே செயல்படுத்திவரும் வேளையில் கிறிஸ்தவர்களாக நாம் ஒருங்கிணைந்து இந்த முயற்சியை மேற்கொள்ள வேண்டிய அவசியம் என்ன என நம்மில் பலருக்கு மனதில் கேள்விகள் எழும்பாமல் இல்லை. அப்போஸ்தலனாகிய பவுல் கலாத்தியருக்கு எழுதின தன் நிருபத்தில், “நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்துபோகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம். ஆகையால் நமக்குக் கிடைக்கும் சமயத்திற்குத்தக்கதாக, யாவருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும், நன்மைசெய்யக்கடவோம்” (கலா. 6:9,10.) என குறிப்பிடுகிறார். கிறிஸ்தவர்களாக நாம் தன்னார்வ இரத்ததானம் என்னும் நன்மை செய்வதில் நம்மை தொடர்ந்து ஊக்குவிக்கவும், அது அனைவருக்கும் குறிப்பாக நம் கிறிஸ்தவ விசுவாசத்தில் இருப்பவர்களுக்கு தக்க நேரத்தில் உதவியாக அமைந்திடவும், கிறிஸ்தவர்களிடையே இரத்த தானத்தை ஊக்குவிக்கும் ”நல்ல சமாரியன்” அமைப்பு உதவும் என்பதில் எந்த ஐயமும் வேண்டியதில்லை.

18 வயது நிரம்பிய, 50 கிலோவுக்கு குறையாத எடை கொண்ட ஆண், பெண் இருபாலருமே இரத்ததானம் செய்ய முன்வரலாம். மற்றபடிக்கு, தானம் செய்யும் தகுதியும் உடற்பக்குவமும் தங்களுக்கு உள்ளதா இல்லையா என்பதை இரத்த வங்கி சோதனைகள் முடிவுசெய்து கொள்ளும். எனவே, தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிற (பிலி 2:13) தேவன் தாமே நீங்கள் இந்த தருணத்தில் சரியான தீர்மானங்கள் எடுத்து செயல்பட உங்களுக்கு உதவி செய்வாராக.

.
[“நல்ல சமாரியன்” உடன் இணைந்து செயல்பட விரும்புபவர்கள் என்னைத் தொடர்பு கொள்ளலாம்]