Thursday, March 31, 2016

அப்படியானால், நாங்கள் என்ன செய்ய வேண்டும்?

கிறிஸ்துவுக்குள் மிகவும் பிரியமான ஹெப்ரோன் IPC (Tamil) பஹரைன் சபையினருக்கு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எனது வாழ்த்துதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நாளில் நாங்கள் குடும்பமாக பஹரைன் நாட்டில் எங்கள் உறவினர்களையும், பார்க்க வேண்டிய சில இடங்களையும் சுற்றிப் பார்க்க வந்த இடத்தில், ஆண்டவருடைய செய்தியை உங்களிடத்தில் பகிர்ந்து கொள்ளும் படியாக, ஆண்டவர் கொடுத்த இந்த வாய்ப்புக்காக நான் ஆண்டவருக்கு நன்றி செலுத்துகிறேன். இந்த நாளில் செய்தி அளிக்கும்படியாக எனக்கு மூன்று வாரங்களுக்கு முன்னரே அழைப்பு கொடுக்கப்பட்டிருப்பினும், மூன்று நாட்களுக்கு முன்னர் வரையும் நான் இன்றைய செய்தியை இறுதி செய்யவில்லை. என்ன செய்தியை பகிரவேண்டும் என நான் ஜெபித்து ஆயத்தப்பட்ட போது, இந்த வாரத்தில் எனது தியானத்தில் இருந்த ஒரு கதாபாத்திரம் மூலம் தேவ செய்தியை பகிர்ந்து கொள்ள முடிவு செய்தேன். அந்த கதாபாத்திரம் தான் யோவான் ஸ்நானகன்.    


யோவான் ஸ்நானகனுக்கும் இயேசு கிறிஸ்துவுக்கும் பிறப்பு முதல் இறப்பு வரை அத்தனை ஒற்றுமைகள் உண்டு. இருவரும் உறவினர்கள்; இருவருக்கும் ஆறு மாதங்கள் தான் வயது இடைவெளி; இருவரின் பிறப்பும் முன்னறிவிக்கப் பட்டது. ஒருவருக்கு அவருடைய அப்பாவுக்கு; இன்னொருவருக்கு அவருடைய அம்மாவுக்கு. அந்த இருவருமே சந்தேகப்பட்டனர். இருவருக்கும் தேவதூதன் அடையாளம் மூலம் சந்தேகத்தை நிவிர்த்தி செய்தான். இருவருக்குமே பெயர் முன்னறிவிக்கப்பட்டது; இருவருக்குமே அவ்விதமே பெயரிட்டனர். இருவருமே ’மனந்திரும்புங்கள்; பரலோக ராஜ்ஜியம் சமீபித்திருக்கிறது’ என்று ஒரே பிரசங்கத்தையே செய்தனர். இருவரும் ஒருவரையொருவர் உயர்த்தி பேசினர். இவர் தான் அவரோ, அவர் தான் இவரோ என இருவரையும் குறித்து மற்றவர்களுக்கு சந்தேகமே எழுந்தது. அந்த அளவுக்கு இருவரும் வல்லமையான ஊழியம் செய்தனர். இருவருமே தங்கள் பிரசங்கத்தினால் தான் மரணத்தை தழுவ நேர்ந்தது. இருவரையும் மரணத்துக்கு ஒப்புக்கொடுத்தவர்களும் இவ்விருவரும் குற்றமில்லாதவர்கள் என்பதை ஒத்துக் கொண்டனர். இருப்பினும் இவ்விருவரும் தங்கள் சொந்த உயிருக்கு அஞ்சி இவர்களை மரணத்துக்கு ஒப்புக் கொடுத்தனர். யோவான் சிரச்சேதம் செய்யப்பட்டு மரித்து அடக்கம் பண்ணப்பட்டார். இயேசுவோ சிலுவையில் அறையப்பட்டு மரித்து அடக்கம்பண்ணப்பட்டு, மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்தார். இன்றைக்கும் ஜீவிக்கிறார். இதனையே இன்று (25.03.2016 வெள்ளிக்கிழமை) உலகம் முழுவதிலும் புனித வெள்ளியாக நினைவு கூறுகிறார்கள்.

இன்று எனது செய்தியின் மையம் யோவான் ஸ்நானகன் அல்ல; அவனுடைய பிரசங்கத்தினிடையே திரும்பத் திரும்ப எழுப்பப்பட்ட ஒரு கேள்வியை மையமாகக் கொண்டது. அந்த கேள்வி யாதெனில், “அப்படியானால், நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” இது பாவத்தைக் குறித்து உணர்வடைந்தவர்கள் சிலர் யோவான் ஸ்னானகனிடம் கேட்ட கேள்வி. இது அவரிடம் மூன்று விதமான மக்கள் தனித்தனியாக கேட்ட கேள்வி, அதாவது மூன்று தடவை கேட்கப்பட்டது. இதுபோன்று ’நான் / நாங்கள் என்ன செய்ய வேண்டும்’ என்ற கேள்வி இன்னும் ஐந்து இடங்களில் வேதாகமத்தில் இடம் பெற்றுள்ளது. மொத்தம் எட்டு இடங்களில் எழுப்பப்பட்டும் இந்த கேள்வியின் பின்னணி ஐந்து இடங்களில் ஒரே விதமாக இருக்கிறது. மற்ற மூன்று இடங்களில் அந்த கேள்விகளின் பின்னணி மற்றும் (உள்)நோக்கம் வித்தியாசமாக இருப்பதால், அந்த ஐந்து கேள்விகளின் பின்னணி, அந்த கேள்விகளுக்காக பதில்கள், அதன் பின் விளைவுகள் குறித்து மட்டும் நான் உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
  
வேதாகமத்தின் மையச்செய்தியே “மனந்திரும்புதல்” தான். இதைத் தான் யோவான் தனது செய்தியாகக் கொண்டிருந்தான் (மத். 3:2). இயேசு கிறிஸ்துவின் முதல் செய்தியும் அதுவாகவே இருந்தது (மத். 4:17). இயேசு கிறிஸ்துவின் பன்னிரு சீடர்களும் புறப்பட்டுப் போய் அவ்விதமே பிரசங்கம் செய்தனர் (மத். 6:12). அந்த பிரசங்கம் செய்த இவர்கள், எந்த ஒரு இடத்திலும் பூசி மொழுகி வழமையாக பேசவில்லை. யோவான் ஸ்நானகன் தன்னிடத்தில் ஞானஸ்நானம் பெறும்படிக்குப் புறப்பட்டுவந்த திரளான ஜனங்களை நோக்கி: விரியன்பாம்புக்குட்டிகளே! வருங்கோபத்துக்குத் தப்பித்துக்கொள்ள உங்களுக்கு வகை காட்டினவன் யார்? என்று தயக்கமில்லாமல் கேட்டான் (லூக்கா 3:7). இயேசுவும் தனது பிரசங்கத்தில் சர்ப்பங்களே, விரியன்பாம்பு குட்டிகளே என்று சாடத் தயங்கவில்லை. அந்த விதமான பிரசங்கத்தில் தான் வல்லமை புறப்பட்டு வந்தது. அநேகர் மனமாற்றம் அடைந்தனர்.

நாங்கள் என்ன செய்ய வேண்டும்? இந்த கேள்விகளின் பின்னணி, இவற்றிற்கான பதில்கள், இதன் பின்விளைவுகளை சற்று விபரமாக ஆராய்வோம். முதலில் அந்த வேதபகுதிகளை நாம் வாசித்து விடுவோம். அதற்கு முன்னர் நான் ஒருசில கேள்விகளை உங்கள் மத்தியில் எழுப்ப விரும்புகிறேன். இங்கு கூடியிருக்கும் உங்களிடம் நீங்கள் கிறிஸ்தவரா என கேட்டால், அதிலென்ன சந்தேகம், பலவருடங்களாக சபையாக கூடி வருகிறோமே என்பீர்கள். அவ்விதமே, நீங்கள் இரட்சிக்கப் பட்டிருக்கிறீர்களா என்றால், உங்களில் சிலர் தலையைச் சொறிந்து கொண்டும், சிலர் சற்று தைரியத்துடன்… நீங்கள் எதை mean பண்ணுகிறீர்கள் என கேள்விகேட்கவும் ஆரம்பிப்பீர்கள். ஏனென்றால், அதைக் குறித்த தெளிவு நம்மில் அநேகருக்கு இல்லை; பலரும் பலவிதமாக அதனைப் புரிந்து கொண்டிருக்கிறோம். சிலருக்கு அது ஒரு நாள் அனுபவம்; பலருக்கு அது நெடுகாலம் கடந்து ஒருகட்டத்தில் இரட்சிப்பின் நிச்சயம் பெறுகின்ற அனுபவமாக இருக்கிறது. இந்த கேள்வியையே, நீங்கள் திருமணம் ஆனவரா என்று கேட்டால், எந்த தயக்கமும் இல்லாமல் உரிய பதிலைச் சொல்லுவோம். சிலருக்கு அது கண்டதும் காதலாக இருக்கலாம்; பலருக்கு தாங்களோ, பெற்றோரோ பல வருடங்கள் யோசித்து எடுத்த முடிவாக இருக்கலாம். எதுவாயினும், திருமணம் என்ற நிகழ்ச்சியில், அதிலும் குறிப்பாக அரசாங்க சட்டதிட்டங்களுக்குட்பட்டு, திருமணப் பதிவேட்டில் பெரியவர்கள் முன்னிலையில் இருவரும் கையெடுத்திடும் நிகழ்வில் அது உறுதி செய்யப்படுகிறது. அவ்விதமே, இரட்சிப்பின் அனுபவமும் ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சியில் உறுதி செய்யப்படுகிறது. அதனை இன்று நாம் புரிந்து கொள்ள இருக்கிறோம்.

இப்போது நமது தியானத்திற்கான வேதபகுதிகளை வாசிப்போம். லூக்கா 3:6-14; அப்போஸ்தலர் 2:37-41; மற்றும் அப்போஸ்தலர் 16:25-33.

முதல் மூன்று கேள்விகளின் பின்னணி (லூக்கா 6:6-9):

வசனம் 6. அவன் யோர்தான் நதிக்கு அருகான தேசமெங்கும் போய், பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானத்தைக் குறித்துப் பிரசங்கித்தான். வசனம் 7b. வருங்கோபத்துக்குத் தப்பித்துக்கொள்ள உங்களுக்கு வகை காட்டினவன் யார்? வசனம் 8a. மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள்; வசனம் 9. இப்பொழுதே கோடரியானது மரங்களின் வேர் அருகே வைத்திருக்கிறது; ஆகையால் நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும் என்றான்.

முதல் மூன்று கேள்விகளின் பதில்கள் (லூக்கா 3:10-14):

முதல் கேள்வி: லூக்கா 3:10-11. அப்பொழுது ஜனங்கள் அவனை நோக்கி: அப்படியானால் நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று கேட்டார்கள். அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: இரண்டு அங்கிகளையுடையவன் இல்லாதவனுக்குக் கொடுக்கக்கடவன்; ஆகாரத்தை உடையவனும் அப்படியே செய்யக்கடவன் என்றான்.

அப்படியானால் நாங்கள் என்ன செய்ய வேண்டும்? எப்படியானால்?.... பின்னணியைப் பார்த்தோமானால், முக்கிய வார்த்தைகள் பாவமன்னிப்பு, மனந்திரும்புதல், கோபாக்கினைக்கு தப்புதல், மனந்திரும்புதலுக்கேற்ற கனி, கோடாரி ஆகியவை. பாவத்தைக் குறித்த உணர்வடைத்து விடுதலையடைய விரும்பியவர்களே இந்த கேள்வியைக் கேட்டனர். பதில் என்னவாய் இருந்தது? இரண்டு அங்கிகளையுடையவன் இல்லாதவனுக்குக் கொடுக்கக்கடவன்; ஆகாரத்தை உடையவனும் அப்படியே செய்யக்கடவன். 



நாமெல்லாரும் தசமபாகம் பற்றி பேசுகிறோம். அது குறித்து வேதாகமத்தில் சொல்லப்பட்டிருக்கிறதா? [ஆம், மல்கியாவில்…என்று கூட்டத்திலிருந்து ஒரு பதில்]. ஆம். அது மல்கியாவோடு முடிவு பெற்றது. நாட்டின் நிர்வாகத் தேவைகளுக்கான பணத்திற்காக வருமானத்தின் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தை வரியாக நாம் செலுத்துவது போன்றே, பழைய ஏற்பாட்டுக் காலத்தில் யூதர்களுக்கு ஒரு நியமமாக கூறப்பட்டது. புதிய ஏற்பாட்டில் அது கூறப்படுவதே இல்லை. அப்படியானால், ஆண்டவருக்காக கொடுக்க வேண்டாமா? கண்டிப்பாக கொடுக்க வேண்டும். அப்படியானால், எவ்வளவு? யோவான் ஸ்நானகனுடைய கூற்றுப்படி ஐம்பது சதவிகிதம்! ஒத்துக் கொள்ள முடிகிறதா? அதனால் தான் அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார் என்கிறார் பவுல் (II கொரிந்தியர் 9:7). கோல்கேட் பற்பசை முதலாளி தனது வருமானத்தில் 90 சதவிகிதத்தை ஆண்டவருடைய பணிக்காக கொடுப்பதாக கூறுகின்றனர். எப்படி அவரால் முடிகிறது? அவருக்கெல்லாம் அந்த 10 சதவிகித வருமானமே அவருடைய தேவைகளுக்கெல்லாம் மிகவும் அதிகமான ஒன்று. இருப்பினும் அவ்விதம் கொடுக்கும் எண்ணம் அவருக்கு எப்படி வந்திருக்கும்? இந்த முதலாம் கேள்வி பதிலை ஆராயும் போது அதற்கான பதில் கிடைக்கும். 

இரண்டு அங்கிகளையுடையவன் இல்லாதவனுக்குக் கொடுக்கக்கடவன்; ஆகாரத்தை உடையவனும் அப்படியே செய்யக்கடவன். இரண்டு அங்கிகளையுடையவன் இல்லாதவனுக்குக் கொடுக்கக்கடவன்; அதாவது இரண்டில் ஒன்றை இல்லாதவனுக்குக் கொடுத்துவிட வேண்டும். நமக்கு இருக்கும் உடைகளில் இருபதில் ஒன்றை கொடுப்பதில் எந்த தயக்கமும் இல்லை. இரண்டில் ஒன்று என்னும் போது மட்டும் ஏன் தயக்கம் வருகிறது? பண்டிகை நாட்களை முன்னிட்டு நாம் எடுக்கும் உடைகளில் இரண்டில் ஒன்றை தானமாகக் கொடுக்கவேண்டும் என்பது ஒருவேளை கட்டளையாக அல்லது நடைமுறையாக இருந்தால், நம்மில் எத்தனை பேர் நான்கைந்து உடைகள் எடுப்போம்? அதாவது நான்கைந்து உடைகளை மற்றவர்களுக்கு மனதாரக் கொடுப்போம்? நமக்கென்று எடுப்பதினால் தானே கொடுக்க வேண்டியிருக்கிறதென்று எண்னி, நாமும் அதிக உடைகள் எடுப்பதில்லை; மற்றவர்களுக்கும் கொடுப்பதில்லை. ஆனால், எப்போது இது மறுவிதமாக நடக்கும்? அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவானாக (பிலி. 4:2) என்ற வசனத்தை மனதிற்கொண்டால் மாத்திரமே இது சாத்தியமாகும். அதாவது சுயத்துக்கு சாகும்போது மட்டுமே இது சாத்தியமாகும். அது தான் உண்மையான மனந்திரும்புதல். அந்த மனந்திரும்புதலின் கனி இவ்விதம் செயல்களில் வெளிப்பட வேண்டும் என்பது தான் யோவான்ஸ்நானகனின் ஆலோசனை. அதுவே கோல்கேட் பற்பசை முதலாளியின் செயலிலும் வெளிப்பட்டிருக்க வேண்டும்.

இரண்டாம் கேள்வி: லூக்கா 3:12-13. ஆயக்காரரும் ஞானஸ்நானம் பெறவந்து, அவனை நோக்கி: போதகரே, நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று கேட்டார்கள். அதற்கு அவன்: உங்களுக்கு கட்டளையிட்டிருக்கிறதற்கு அதிகமாய் ஒன்றும் வாங்காதிருங்கள் என்றான்.

ஆயக்காரர் என்போர் ரோம ஆட்சியில் ரோமர்களுக்காக வரிவசூல் செய்யும் யூதர்கள். எனவே அவர்களை யூத வெகுஜனங்கள் மதிப்பதில்லை. ஆயக்காரரில் இருவிதமாக இருந்திருக்கின்றனர். ஒருவிதத்தினர் விதிக்கப்ப்பட்டதற்கும் அதிகமான வரியை வசூலித்து தனது வருவாயைப் பெருக்கிக் கொண்டவர்கள்; மற்றொரு விதத்தினர் விதிக்கப்ப்பட்டதற்கும் அதிகமான வரியை மக்களிடம் வசூலித்து அரசாங்கத்துக்கு செலுத்தி ஆட்சியாளர்களிடத்தில் தங்களுக்கு நற்பெயரைத் தேடிக் கொண்டவர்கள். லூக்கா 19:8,9 ன் படி, சகேயு கர்த்தரை நோக்கி: ஆண்டவரே, என் ஆஸ்திகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கிறேன், நான் ஒருவனிடத்தில் எதையாகிலும் அநியாயமாய் வாங்கினதுண்டானால், நாலத்தனையாகத் திரும்பச் செலுத்துகிறேன் என்று சொல்லும் போது, இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு இந்த வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது; இவனும் ஆபிரகாமுக்குக் குமாரனாயிருக்கிறானே என்றார். அதாவது அதிகப்படியாக வசூல்செய்யும் வாய்ப்பு நிலையில் இருப்பவர்கள் தான் இந்த ஆயக்காரர்கள். எனவே தான் அப்படிப்பட்ட ஆயக்காரர்களிடம் உங்களுக்கு கட்டளையிட்டிருக்கிறதற்கு அதிகமாய் ஒன்றும் வாங்காதிருங்கள் என்றான் யோவான்ஸ்நானகன். சமூகத்தில் சர்ச்சைக்குரிய ஆயக்கார வேலையை விட்டுவிடும்படி அவன் அறிவுரை கூறவில்லை; மாறாக, கொடுக்கப்பட்ட வேலையை நேர்மையாக செய்துமுடிக்க அறிவுறுத்துகிறான்.

நம்மில் அநேகருக்கு மனந்திரும்புதலுக்கு தொழில் ஒரு தடையாக இருக்கிறது. இயேசுவை ஏற்றுக் கொண்டால், நான் எனது தொழிலை எப்படி செய்யமுடியும்? இந்தந்த தொழிலை செய்வோர் எப்படி மனந்திரும்பி வாழ முடியும் என சந்தேகம் கொள்கிறோம். நம்முடைய மனந்திரும்புதல் உண்மையான மனதார இருக்கும் போது, மேற்கொண்டு நாம் எவ்விதம் நடந்து கொள்ள வேண்டும் என ஆண்டவர் நமக்குத் தெளிவாக நமது சூழலுக்கு ஏற்றவிதமாக சரியான ஆலோசனையைக் கொடுப்பார். முதலில் மனமாற்றம் நேர்மையாக இருத்தல் அவசியம்!

மூன்றாம் கேள்வி: லூக்கா 3:14. போர்ச்சேவகரும் அவனை நோக்கி: நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று கேட்டார்கள். அதற்கு அவன்: நீங்கள் ஒருவருக்கும் இடுக்கண்செய்யாமலும் பொய்யாய்க் குற்றஞ்சாட்டாமலும், உங்கள் சம்பளமே போதுமென்றும் இருங்கள் என்றான்.

ஒருவருக்கும் இடுக்கண்செய்யாமலும் ... … … நான் இங்கு பஹரைன் வந்தபோது வெளியில் செல்லும் வேளையில் பாஸ்போட்டை கையில் எடுத்துக் கொள்ள வேண்டுமா என எனது உறவின சகோதரரிடம் கேட்டேன்; அதற்கு அவர், அதெல்லாம் இங்கு தேவையில்லை என்றார். அதுவே குவைத்தில் என்றால், குடியுரிமை அடையாள அட்டை கையில் இல்லாமல் வீதியில் அலைந்தால் நம்மை உடனே சொந்த ஊருக்கு அனுப்பி வைத்து விடுவர். அத்தனை அதிகாரம்; அத்தனை இடுக்கண். அப்படி செய்து என்ன அவர்கள் சாதித்து விட்டார்கள்? 

பொய்யாய்க் குற்றஞ்சாட்டாமலும் ... … … மாசக் கடைசியானால் கேஸ் நம்பர் தேறணுமே என்பதற்காக வாகனத்தில் செல்வோர் மீது ஏதாவது ஒரு வழக்கு பதிவது நம்மூர் போலீசாருக்கு வழக்கமாய் போய்விட்டது. இதுவெல்லாம் மனந்திரும்பிய விசுவாசியின் நடத்தைக்கு அழகல்ல.

உங்கள் சம்பளமே போதுமென்றும் இருங்கள் ... … … நம்மில் சிலருக்கு கிம்பளத்திலேயே வாழ்க்கையை ஓட்டிக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது; சம்பளம் அப்படியே எந்த சேதாரமுமில்லாமல் வங்கிக் கணக்கில் தங்கி விடுகிறது. நாம் மனந்திரும்பியது உண்மையானால், இவ்வித வாழ்க்கை முறைக்கு இடமே இல்லை.  

முதல் மூன்று கேள்வி - பதில்களின் பின்விளைவுகள் (லூக்கா 3:15):

இவ்விதம் பதிலைக் கேட்டோர் எவரும் இது கடினமான உபதேசம் என பின்வாங்கிச் சென்றதாக தெரியவில்லை. திரளான ஜனங்கள் கூட்டம் கூட்டமாக மனந்திரும்பினர். அவனிடத்தில் வந்து ஞானஸ்நானம் பெற்றுக் கொண்டனர். ஸ்நானகன் என்பது அவனது அடைமொழி ஆயிற்று. இவன் தான் கிறிஸ்துவோ என்று யோவானைக் குறித்து ஜனங்களெல்லாரும் எண்ணம் கொள்ளும் விதமாக மிகுதியாக அறுவடையை கண்கூடாக கண்டனர்

நான்காம் கேள்வியின் பின்னணி (அப். 2:37):

அப்போஸ்தலர் 2ம் அதிகாரத்தில், பெந்தெகோஸ்தே நாளில், பெந்தெகோஸ்தே அனுபவம் விசித்திரமாய் தோன்றி பலரும் வேடிக்கை பார்க்க கூடி வந்திருக்க, பேதுரு அவர்களை நோக்கி வசனித்து அந்த நிகழ்வின் பின்னணியை முன்னிட்டு இயேசுவின் வாழ்க்கை, பாடு, மரணம், உயிர்த்தெழுதலைப் பிரசங்கித்தான். வசனம் 37. இதை அவர்கள் கேட்டபொழுது, இருதயத்திலே குத்தப்பட்டவர்களாகி, பேதுருவையும் மற்ற அப்போஸ்தலரையும் பார்த்து: சகோதரரே, நாங்கள் என்ன செய்யவேண்டும் என்றார்கள்.

நான்காம் கேள்வியின் பதில் அப். 2:38-40:
பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள். வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது என்று சொல்லி; இன்னும் அநேக வார்த்தைகளாலும் சாட்சிகூறி, மாறுபாடுள்ள இந்தச் சந்ததியை விட்டு விலகி உங்களை இரட்சித்துக்கொள்ளுங்கள் என்றும் புத்திசொன்னான். முக்கியமாக இரண்டு ஆலோசனைகள். ஒன்று ஞானஸ்நானம் பெறவேண்டும்; இரண்டு கிறிஸ்தவரென்ற முறையில் வேறுபாடான வாழ்க்கை வாழவேண்டும். வேறுபாடான வாழ்க்கை குறித்து பவுல் 1 கொரி. 5:9,10 ல் நடைமுறையாக விவரிக்கிறார்.

நான்காம் கேள்வி – பதிலின் பின்விளைவுகள் (அப். 2:41):
அவனுடைய வார்த்தையைச் சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள். அன்றையத்தினம் ஏறக்குறைய மூவாயிரம்பேர் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள். ஒன்று ஞானஸ்நானம் பெற்றனர்; இரண்டு சபையில் அங்கத்தினராயினர்.

ஐந்தாம் கேள்வியின் பின்னணி (அப். 16:25-30):
குறிசொல்லும் ஆவியை துரத்தி விட்டபடியால், தங்கள் வருவாயை இழந்த எஜமானர்கள் பவுலையும் சீலாவையும் காவலில் அடைத்துவிடும் வேலைகளை கச்சிதமாக செய்துமுடித்திட, சிறைச்சாலையில் நடுராத்திரியிலே பவுலும் சீலாவும் ஜெபம்பண்ணி, தேவனைத் துதித்துப் பாடினார்கள். சடிதியிலே சிறைச்சாலையின் அஸ்திபாரங்கள் அசையும்படியாக பூமி மிகவும் அதிர்ந்தது; உடனே கதவுகளெல்லாம் திறவுண்டது; எல்லாருடைய கட்டுகளும் கழன்றுபோயிற்றுசிறைச்சாலைக்காரன் நித்திரைதெளிந்து, சிறைச்சாலையின் கதவுகள் திறந்திருக்கிறதைக் கண்டு, கட்டுண்டவர்கள் ஓடிப்போனார்களென்று எண்ணி, பட்டயத்தை உருவித் தன்னைக் கொலைசெய்து கொள்ளப்போனான். பவுல் மிகுந்த சத்தமிட்டு; நீ உனக்குக் கெடுதி ஒன்றுஞ் செய்துகொள்ளாதே; நாங்கள் எல்லாரும் இங்கேதான் இருக்கிறோம் என்றான். அப்பொழுது அவன் தீபங்களைக் கொண்டுவரச்சொல்லி, உள்ளே ஓடி, நடுநடுங்கி, பவுலுக்கும் சீலாவுக்கும் முன்பாக விழுந்து, அவர்களை வெளியே அழைத்துவந்து: ஆண்டவன்மாரே, இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்றான்.          

ஐந்தாம் கேள்வியின் பதில் (அப். 16:31,32):
அதற்கு அவர்கள்: கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் என்று சொல்லி, அவனுக்கும் அவன் வீட்டிலிருந்த யாவருக்கும் கர்த்தருடைய வசனத்தைப் போதித்தார்கள். நீ விசுவாசித்தால், நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப் படுவீர்கள்; எப்படி இது சாத்தியம்? முதலில் விசுவாசிக்க வேண்டும்! அம்மா என்ன சொல்வார்கள்; அப்பா என்ன செய்வார்கள்; அடுத்தவர்கள் என்ன நினைப்பார்கள் என கலங்கவோ தயங்கவோ வேண்டியதில்லை. அவர்களும் இயேசுவை ஒருநாள் விசுவாசிப்பார்கள் என்பதை விசுவாசிக்க வேண்டும். அந்த விசுவாசம் அந்த சிறைச்சாலைக்காரனுக்கு இருந்தபடியால் தான் இவர்கள் இருவரையும் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று இவர்களின் பிரசங்கத்தை வீட்டிலுள்ளவர்களும் கேட்கச் செய்தான்.

ஐந்தாம் கேள்வி – பதிலின் பின்விளைவுகள் (அப். 16:33):
மேலும் இராத்திரியில் அந்நேரத்திலேதானே அவன் அவர்களை அழைத்துக்கொண்டுபோய், அவர்களுடைய காயங்களைக் கழுவினான். அவனும் அவனுடையவர்கள் அனைவரும் உடனே ஞானஸ்நானம் பெற்றார்கள். ஒன்று நர்செய்தி அறிவித்த ஊழியர்களுக்கு தன்னாலியன்ற உதவியைச் செய்தான்; இரண்டு தன் வீட்டாரோடு விசுவாசித்து ஞானஸ்நானம் பெற்றான்.

இவைகளைக் கேட்டுக் கொண்டிருக்கும் சகோதர சகோதரிகளே, இந்த ஐந்து விதமாக ‘நாங்கள் என்ன செய்யவேண்டும்’ என்று கேள்வி கேட்டோரின் பின்னணி, அவற்றிற்கான பதில்கள் அவற்றின் பின்விளைவுகளை ஒருங்கே ஒப்பிட்டுப் பார்த்தால் நமக்கு ஒருசில சத்தியங்கள் தெளிவாகத் தெரியவருகின்றன. அவைகளை எடுத்துக் கூறி இந்த செய்தியை நிறைவு செய்ய விரும்புகிறேன்.   

இந்த ஐந்து கேள்விகளின் பின்னணியுமே பாவத்தைக் குறித்த ஒருவித குற்ற உணர்வு தான். பாவத்தைக் குறித்த உண்மையாக உணர்வு வரும்போது தான், அப்படியானால், நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்ற நேர்மையான கேள்வி நமக்குள் எழும். நமது கேள்வியில் உண்மை இருக்கும் பட்சத்தில் தேவனும் நமக்கு நடைமுறையான பதிலை தருவார். அதனை ஏற்றுக் கொண்டு கீழ்ப்படிவது மனந்திரும்புதலின் அடுத்த கட்டம். அதுவே மனந்திரும்புதலின் வெளிப்படையான அடையாளமான ஞானஸ்நானம் எடுத்தல் என்ற சடங்காச்சாரமாகும்.

இதை ஏன் சடங்காச்சாரம் என்கிறேன்? இதனை நியமமாக கருதினால், நியமமாக கருதி நியாயமாக இதற்கு கீழ்ப்படியுங்கள்; அதுவே சடங்காச்சாரம் என கருதினால், ஒரு திருமண நிகழ்வில் அல்லது திருமண வாழ்க்கையில் அரசாங்க திருமணப் பதிவேட்டில் கணவன் மனைவி இருவரும் கையெழுத்திடும் சடங்காச்சாரம் முக்கியமோ அவ்விதமே உங்கள் மனந்திரும்புதல் உண்மையானால், இந்த சடங்காச்சாரத்தை முறையாக நிறைவேற்றிடுங்கள்; வாக்குவாதம் தேவையில்லை.    

இந்த கேள்வியைக் கேட்ட, ஐந்து கூட்டத்தினருமே, அவற்றிற்கான பதில்களுக்கு தங்களை ஒப்புக் கொடுத்து, இறுதியில் ஞானஸ்நானம் பெற்றுக் கொண்டானர். ஞானஸ்நானம் இரட்சிப்பின் முடிவு அல்ல; அதுவே விசுவாச வாழ்க்கையின் தொடக்கம்; இரட்சிப்பு அனுபவத்தின் வெளிப்படையான அடையாளம். அது திருமண நிகழ்வில், இருவரும் கையெழுத்திடுவது போன்றது. சொல்லப் போனால், அதுவே (குடும்ப) வாழ்க்கையின் தொடக்கம்.

இவைகளை ஆராய்ந்த போது, எனக்கு ஒரு காரியம் ஆச்சரியமாகவும் இன்றைய கால கட்டத்தில் மனமடிவாகவும் இருக்கும் காரியமாக காணப்பட்டது. அது என்னவெனில், இந்த ஐந்து கூட்டத்தினரும் அந்த நாளிலே ஞானஸ்நானம் பெற்றுக் கொண்டனர்; ஒரு குடும்பத்தினர் இரவோடு இரவாக. ஆனால், இன்றைய நாட்களில் என்ன நடக்கிறது? இரட்சிக்கப் பட்டோம் என சொல்லிக் கொள்வோர் ஞானஸ்நானம் பெற எத்தனை காலங்களைக் கடத்துகிறோம்? எனக்கு உடனே ஞானஸ்நானம் கொடுங்கள் என்று நாமும் கேட்பதில்லை; கேட்டாலும் போதகர்கள் உடனே கொடுத்து விடுவதும் இல்லை. ஏன் இந்த நிலைமை? நமது இரட்சிப்பு குறித்து இருதரப்பினருக்குமே சந்தேகம்; அதனை உறுதி செய்து இறுதி செய்ய சிலகாலம் எடுக்கிறது. சிலவேளைகளில் அது பலவந்தம் பண்ணப்பட வேண்டியுள்ளது. 

அதற்கு என்ன காரணம்? நமது நற்செய்திக் கூட்டங்களில் விரியன் பாம்புக் குட்டிகளே என்று யோவான் ஸ்நானகன் போன்றோ, இயேசுகிறிஸ்து போன்றோ மக்களை அழைப்பதில்லை. மாறாக மக்களுக்கும் அரசுக்கும் பயந்து மேற்போக்காகவோ, பூசி மொழுகியோ நற்செய்தியை அறிவிக்கிறோம். நற்செய்தி என்றால், பாவத்தைக் குறித்த கண்டிப்பு, அதில் எழும் குற்ற உணர்வு, அதிலிருந்து இயேசு கிறிஸ்து தரும் விடுதலை, தொடர்ந்து அவர் தரும் பரிசுத்த வாழ்வு, இறுதியில் நித்தியஜீவன். இதை விட்டுவிட்டு, தலைவலி காய்ச்சல் முதல் கான்சர் வரையிலும் நோயிலிருந்து விடுதலை, பேயிலிருந்து விடுதலை, கடனிருந்து விடுதலை, வாழ்க்கை எல்லாமே இனி செழிப்பு என நாம் அறைகுறையான செய்தியை பகிர்வதால், நாம் எதிர்பார்க்கும் மனந்திரும்புதல் அங்கே ஏற்படுவதில்லை; மாறாக, ஏமாற்றம், விரக்தி தான் சிலருக்கு ஏற்படுகிறது. பாவத்தை குறித்த உணர்வு அடைவோருக்கும் யோவான் ஸ்நானகன் போன்று வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று பிரசங்கிக்க முடிகிறதா? ‘மனந்திரும்புங்கள்; பரலோக ராஜ்யம் சமீபித்திருக்கிறது’ என்பது தான் நமது செய்தியாகவும் இருக்க வேண்டும். 


இங்கு கூடியிருக்கும் நாம், ஜெபசிந்தையுடன் இன்று நமது வாழ்க்கையை ஆராயந்து பார்ப்போம். இரட்சிப்பின் நிச்சயம் நமக்கு உண்டா? அதனை உறுதி செய்யும் ஞானஸ்நான நியமத்தை நிறைவேற்றி விட்டோமா? மனந்திரும்புதலுக்கேற்ற கனி நம்மிடத்தில் காணப்படுகின்றனவா? நம்மை நாமே ஆராய்ந்து பார்த்து, அப்படியானல் நான் என்ன செய்யவேண்டும் என நமக்குள் கேள்வியை எழுப்பிக் கொண்டு, ஆவியானவர் தரும் உள் உணர்வுகளுக்கு நம்மை அர்ப்பணிப்போம்.


கர்த்தர் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

[இது 25.03.2016 அன்று ஹெப்ரோன் IPC (Tamil) பஹரைன் சபையில் நான் கொடுத்த 60 நிமிட செய்தியின் எழுத்துவடிவம்]

.