Sunday, May 21, 2017

ஆவியின் கனி – நற்குணம்

நல்லவரும், நன்மை செய்கிறவருமாயிருக்கிற தேவனுடைய நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். ஆவியின் கனி வரிசையில் நன்மைசெய்ய மனுஷன் கொண்டிருக்கும் ஆசையே தயை (நீதி 19:22) என நாம் கடந்த மாதம் தியானித்தோம். அவ்விதம் நன்மை செய்ய ஒருவருக்கு உள்ளே இருக்கவேண்டிய உள்ளான குணமே நற்குணம். அதைக்குறித்து இப்போது தியானிப்போம். நற்குணம் என்பது ஒருவன் நல்லவனாக இருக்கிற குணம். அது தேவனுடைய குணம். தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனுமில்லை என இயேசுவும் கூறியுள்ளார். ஆனால் நாம் அவரில் நிலைத்திருக்கும் போது அவருடைய அன்பில் நிறைந்திருக்கும் போது இந்த உள்ளான குணம் நமக்குள்ளும் வளரும்.

நற்குணம் என்ற வார்த்தைக்கு ஆங்கில வேதாகமங்களில் ‘Goodness’ என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும் அந்த வார்த்தை நற்குணம் என்ற வார்த்தையை மட்டுமல்ல, தேவனுடையை நல்லுள்ளம் மற்றும் அவரது நற்செயல்களை குறிக்கும் வண்ணம் கிட்டதட்ட 50 இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் நற்குணம் என்ற வார்த்தையோ தமிழில் 7 இடங்களில் மட்டுமே வருகிறது. நற்குணம் என்ற ஆவியின் கனியை குறிக்க கிரேக்க மொழியில் பயன்படுத்தபடும் ‘agathosune’ என்ற வார்த்தை ‘அடுத்தவர்களின் நன்மைக்காக ஒருவரின் உள்ளான இருதயத்திலும்  வாழ்க்கையிலும் காணப்படும் உத்தமம்’ என பொருள்படுகிறது. 

ஒருவரில் காணப்படும் நற்குணம் அடுத்தவருக்கு எப்போதுமே நன்மை செய்யவே நாடும். நன்மையான காரியங்கள் என கூறும் போது, பரிசுத்த வேதாகமத்தில் நற்காரியங்கள், நற்கிரியை, நற்கனி, நற்பொருள், நற்சாட்சி, நற்பலன், நற்செய்தி, நற்போதகம், நற்புத்தி போன்ற வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன். இவற்றுள் நற்குணம், நற்கிரியை, நற்செய்தி என்ற மூன்று காரியங்களுக்குள் மிகவும் நெருங்கிய தொடர்பு உண்டு. தேவனுடைய நற்குணம் அவரது நற்கிரியைகளில் வெளிப்பட்டபோது தான் அது நற்செய்தியாக மக்களுக்கு அறிவிக்கப்பட்டது (லூக்கா 2:10-14).

கிறிஸ்தவர்களாகிய நாம் மற்றவர்களுக்கு அறிவிக்கும் நற்செய்தி நற்பலன்களைக் கொடுக்கவேண்டுமெனில், நம்மில் நற்கிரியைகள் காணப்பட வேண்டும். நற்காரியங்கள் செய்யும் ஒருவனை நல்லவன் என எல்லாரும் எப்போதும் சொல்லிவிட முடியாது. நற்காரியங்கள் சில செய்தாலாவது தங்களின் பாவத்திற்கு பரிகாரம் கிடைத்துவிடாதா என்ற எண்ணத்தில் அனைவருமே ஏதோவொரு கட்டத்தில் ஒருசிலருக்காவது நற்காரியங்களை செய்துவிடுகின்றனர். ஆனால் நற்கிரியை என்பதோ ஒருவர் வாழ்வில் அனுதினமும் வெளிப்படுகிற ஒரு காரியம். அது உள்ளான மனிதனின் வெளிப்படையான வெளிப்பாடு. உள்ளான மனிதனில் நற்குணம் பெருகிவரும் போது வெளியில் அது நற்கிரியைகளாக அனுதினமும் வழிந்தோடும்.

’மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக்கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது’ என்றார் இயேசு கிறிஸ்து (மத்தேயு 5:16). நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம் (எபேசியர் 2:10). சோர்ந்துபோகாமல் நற்கிரியைகளைச் செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்தியஜீவனை அளிப்பார் (ரோமர் 2:7). இவ்விதம் நற்கிரியைகளை நடப்பிக்க நம்மில் நற்குணம் பெருகுவது அவசியமாக இருக்கிறது.

நற்குணம் என்பது அனைவருக்கும் இருக்க வேண்டிய உள்ளான பண்பாக இருப்பினும் அது குறிப்பாக பெண்களுக்கு இருக்க வேண்டிய அல்லது அவர்களிடம் குறிப்பாக எதிர்பார்க்கப்படுகிற காரியமாக இருக்கிறது. நீதிமொழிகள் 12:4 கூறுகிறது, ‘குணசாலியான ஸ்திரீ தன் புருஷனுக்குக் கிரீடமாயிருக்கிறாள்; இலச்சை உண்டுபண்ணுகிறவளோ அவனுக்கு எலும்புருக்கியாயிருக்கிறாள்’. மேலும் நீதிமொழிகள் 31:10 ல் ’குணசாலியான ஸ்திரீயைக் கண்டுபிடிப்பவன் யார்? அவளுடைய விலை முத்துக்களைப்பார்க்கிலும் உயர்ந்தது’ என்றும் காண்கிறோம். பெண்களுக்கான துகுதியுள்ள அலங்கரிப்பைப் குறித்து குறிப்பிடும் போது அப்போஸ்தலனாகிய பேதுருவும், ‘அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாயிருக்கக்கடவது; அதுவே தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றது’  என 1 பேதுரு 3:4 ல் குறிப்பிடுகிறார்.

இந்த நற்குணம் நம்மில் பெருகிட நாம் செய்ய வேண்டியதென்ன? அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:11 ல் வாசிக்கிறோம், ‘அந்தப் (பெரோயா) பட்டணத்தார் மனோவாஞ்சையாய் வசனத்தை ஏற்றுக்கொண்டு, காரியங்கள் இப்படியிருக்கிறதா என்று தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்ந்துபார்த்ததினால், தெசலோனிக்கேயில் உள்ளவர்களைப் பார்க்கிலும் நற்குணசாலிகளாயிருந்தார்கள்’. நாம் தேவனுடைய வசனங்களை மனவிருப்பத்துடன் தினமும் வாசித்து தியானித்து ஆராய்ந்து அறிந்து அதின்படி நடக்க நம்மை தினமும் அர்ப்பணிக்கும் போது நம்மில் ஆவியின் கனியாகிய நற்குணம் பெருகி அது நம் கிரியைகளில் வெளிப்படும். ஏனென்றால், ‘வேதவாக்கியங்களெல்லாம் தேவஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படி, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும் சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது’ (2 தீமோ. 3:16,17).


நற்குணம் என்பது நாமாக நம்மில் நாமே பெருக்கிக் கொள்ள முடியும் காரியம் அல்ல. அது உள்ளான குணம். அது தேவனுடைய குணம். நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது என யாக்கோபு 1:17ல் வாசிக்கிறோம். அவருடைய ஆவியினாலே நாம் உள்ளான மனுஷனில் வல்லமையாய்ப் பலப்பட முடியும் (எபே. 3:16). அது ஒரு நாள் அனுபவம் அல்ல. ’எங்கள் புறம்பான மனுஷனானது அழிந்தும், உள்ளான மனுஷனானது நாளுக்குநாள் புதிதாக்கப்படுகிறது’ என்பது ஆதிவிசுவாசிகளின் அனுபவம் (2 கொரி. 4:16). இந்த அனுபவங்களுக்கு நம்மையும் அர்ப்பணிப்போம்.

ஆமென்.


[இது பாலைவனச் சத்தம் – மே 2017 இதழில் வெளியான எனது கட்டுரை]