ஆதலால் இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன் (ரோமர் 8:18)
22 வருடங்களாக எனது மருத்துவத்துறையில் நான் அதிகம் பாடுபிரயாசங்கள் பட்டது என்னுடைய ஒருவருட பயிற்சியின் போது தான். நான்கரை வருட படிப்புக்குப் பின்னர், ஒரு வருட பயிற்சியின் போது பல விஷயங்களை நடைமுறையில் கற்றறிந்து ஒரு முழு மருத்துவனாக தகுதி பெறுகிறோம். ஆனால், அந்த நாட்களில் வேலைப்பளு, பொறுப்புகள், தன்னம்பிக்கையின்மை, தூக்கமின்மை என் பயிற்சி மருத்துவர்கள் அடையும் கஷ்டங்கள் கொஞ்சமல்ல. ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் தொடர்ச்சியாக 80 மணிநேரங்கள் வேலைசெய்தேன் என்றால் உங்கள் பலர் நம்பப் போவதில்லை. இருப்பினும் ஒருவருடத்தில் நானும் ஒரு முழுமையான மருத்துவன் என்பதை எண்ணிப்பார்க்கும் போது அவைகளெல்லாம் நிமிடங்களாய் கடந்தன. அதன் பின்னர், மிஷன் மருத்துவமனைகளில் இரவுபகல் பாராது தொடர்ச்சியாக வேலைசெய்யும் போதும், ஓய்வாக கஷ்டப்படாமல் வேலைசெய்யும் நாட்கள் இனி வருகிறதாய் இருக்கிறது என்ற எதிர்பார்ப்பில் எந்தவித சலிப்புமின்றி வேலைசெய்ய முடிந்தது. உரிய நாட்களில் அந்த நிலையையும் அடைந்தேன்.
வாழ்க்கையில் பாடுகள் இல்லையேல் பலனும் இல்லை என்பதை நாம் அறிவோம். இருப்பினும் வாழ்க்கையில் பாடுகளை நம்மில் எவருமே விரும்பி ஏற்பதில்லை. வாழ்க்கையில் சாதித்த நபர்களின் வாழ்க்கை வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தால் கூட, அவர்கள் தங்கள் இளமைக்காலத்தில் பட்ட பாடுகள் விரிவாக இடம்பெற்றிருப்பதைக் காணலாம்.
பாடுகள் என்று சொல்லும் போது, பலருக்கும் பலவிதம். சிலருக்கு அன்றாட உணவு, குறைந்த பட்சம் ஓரிரு உடைகள் மற்றும் உறைவிடம் உருப்படியாக இல்லாத பாடு. பலருக்கோ பிரியாணி, கோட், கார் மற்றும் பங்களா இல்லையே என்ற அங்கலாய்ப்பு. ஆனால் உண்மை, நீதி, நேர்மை போன்றவைகளில் நிலைத்திருக்க இயலாது நம்மை தடுமாற வைக்கும் சோதனைகளே உண்மையான பாடுகள் என அழைக்கத் தகுதியானவை.
அடைப்படைத் தேவைகளுக்காக அங்கலாய்ப்பது கூட ஒருவேளை நம்மை பக்குவப்படுத்த வாய்ப்புண்டு. ஆனால், அடுத்தவர்களை ஒப்பிட்டு அங்கலாய்ப்பதோ வாழ்க்கையின் அடித்தளத்துக்கே மீண்டும் கொண்டு செல்லும். நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது; அதினால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்ளுகிறேன் (சங். 119:71)என்பது தாவீதின் அனுபவம். எனவே நாம் அனுபவிக்கும் பாடுகள் எந்த விதமானவை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
சாலையில் செல்லும் போது எற்ற இறக்கங்கள் இருக்கத்தான் செய்யும். சாலையில் செல்லும் போது இறக்கங்கள் வரும் போது மட்டும் அகமகிழும் நாம் வாழ்க்கையில் இறக்கங்கள் வரும்போது மட்டும் வெளிப்படையாகவே புலம்பி விடுகிறோம். சாலையின் ஏற்றத்தையே ஏற்றுக்கொள்ள இயலாவிட்டால், வாழ்க்கையில் ஏற்றத்தை எதிர்பார்ப்பதில் என்ன நியாயம் இருக்கிறது? சாலையின் இறக்கத்தில் அகமகிழும் போதே, எதிர்வரும் ஏற்றத்திற்கு ஆயத்தமானால், அதே தொடர்ச்சியான வேகத்தில் ஏற்றத்தையும் கடந்துவிடலாம்.
அதுபோலவே, சாலையில் எதிர்வரும் இறக்கத்தை மனதிற்கொண்டால், ஏற்றம் ஒரு ஏமாற்றமே அல்ல. ஆனால், அதனுடன் ஒருபடி மேலாக ’இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று’ பவுல் சொல்லும் காரியம் வெறும் ஏற்றத்துடன் இறக்கத்தை ஒப்பிடுவதற்கும் சமமானதல்ல. இனி வெளிப்படவிருக்கும் மகிமை இக்காலத்து பாடுகளைக்காட்டிலும் பன்மடங்கு பலனுள்ளது. மட்டுமல்ல, கிறிஸ்துவுடனேகூட நாம் மகிமைப்படும்படிக்கு அவருடனேகூடப் பாடுபட்டால் அப்படியாகும் (ரோமர் 8:17).எனவே, நாம் இப்போது அனுபவிக்கும் பாடுகளை சீர்தூக்கிப் பார்த்து அவைகளை பொறுமையுடன் அனுபவிப்போம்.
ஆதலால் உங்களில் ஒருவனும் கொலைபாதகனாயாவது, திருடனாயாவது, பொல்லாங்கு செய்தவனாயாவது, அந்நிய காரியங்களில் தலையிட்டுக் கொண்டவனாயாவது பாடுபடுகிறவனாயிருக்கக்கூடாது. ஒருவன் கிறிஸ்தவனாயிருப்பதினால் பாடுபட்டால் வெட்கப்படாமலிருந்து, அதினிமித்தம் தேவனை மகிமைப்படுத்தக்கடவன் (1 பேது. 4:15,16).