Tuesday, December 27, 2016

ஆவியின் கனி - அன்பு

கனியுள்ள கிறிஸ்தவ வாழ்க்கையின் அவசியம் குறித்து கடந்த இதழில் கண்டோம். ஆவியின் கனியின் ஒன்பது அம்சங்களையும் முறையாக நமது கிறிஸ்தவ வாழ்க்கையில் வெளிப்படுத்த வேண்டியது ஆவியானவரால் நடத்தப்படும் விசுவாசிகளின் கடமை. எந்தவொரு மரத்தின் வளர்ச்சி மற்றும் முதிர்ச்சியின் வெளிப்பாடே அதன் கனி என நாம் அறிவோம். வளர்ச்சி என்ற ஒரு நிலையை அது தொடர்ச்சியாக அடையும் போது கனி என்பது அதில் தானாக வருகிற ஒன்று. கனி ஒன்றை வரவழைத்து அதன் வளர்ச்சி மற்றும் முதிர்ச்சியை நிரூபிக்க வேண்டிய அவசியம் எந்த மரத்திற்கும் இல்லை. அதுபோலவே ஆவிக்குரிய கனியும் ஆவியினால் நடத்தப்படும் அவரது பிள்ளைகளின் வாழ்க்கையில் தானாக வெளிப்பட வேண்டிய ஒன்று. நமது பக்தியினாலோ சக்தியினாலோ நாம் முயன்று வெளிப்படுத்த வேண்டிய ஒன்று அல்ல.

இருப்பினும் நமது கிறிஸ்தவ வாழ்க்கையில் ஆவியின் கனி வெளிப்பட, நாம் செய்ய வேண்டிய கடமைகளும் உண்டு. அது யாதெனில், தேவனுடைய ஆவியினால் நடத்தப்பட நம்மை முழுமையாக ஒப்புக் கொடுப்பது ஒன்றேயாகும். நாம் ஆவியினாலே பிழைத்திருந்தால், ஆவிக்கேற்றபடி நடக்கவும் கடவோம் (கலா. 5: 20). ஆவியின் கனியில் அன்பு என்னும் அம்சத்தை நம் வாழ்வில் வெளிப்படுத்துவது குறித்து இந்த இதழில் காண்போம்.

அன்பு என்ற வார்த்தைக்கு ஆங்கிலத்தில் Love என்ற ஒரே ஒரு வார்த்தை இருப்பினும் அது பல்வேறு நிலைகளில் பல்வேறு விதமான காரியங்களைக் குறிக்கும்.   கிரேக்க மொழியில் அது ”அகாப்பே” (தியாகமான தெய்வீக அன்பு), ”பிலியோ” (சகோதர அன்பு), ”ஈராஸ்” (இருபாலருக்கிடையிலான காதல்) மற்றும் ”ஸ்டோர்ஜ்” (பெற்றோர் பிள்ளைகள் பாசம்) என்று அன்பினை நான்கு விதமாக குறிக்கிறது. எந்த நிலையிலும் மாறாத, உச்சநிலை அன்பு என்பது தேவன் நம்மீது பொழிந்த அகாப்பே அன்பாக இருப்பதால் வேதாகமம் அதைப் பற்றியே அதிகமாக போதிக்கிறது. மேலும், அகாப்பே அன்பை அனுபவிக்கும் ஒவ்வொருவரும் பிலியோ என்னும் சகோதர அன்பை மற்றவர்களிடம் வெளிக்காட்ட வேண்டும் எனவும் வலியுறுத்துகிறது. இடைப்பட்ட நிலையில் உள்ள இரண்டுவகை அன்பு உட்பட அனைத்து வகையான அன்பையும் ஆவியின் கனியாகிய அன்பு என்ற அம்சத்தில் புரிந்து கொண்டு அவைகளை நாம் முறையாக செயல்படுத்த முடியும்.

பழைய ஏற்பாட்டுக் காலத்தில் கொடுக்கப்பட்ட பத்துக் கட்டளைகளில் 4 தேவனுடனும் 6 சக மனிதனுடனும் நமக்கு இருக்க வேண்டிய காரியங்களைக் கண்கூடாக காண்கிறோம் (யாத். 20:1-17). அவைகளையே சுருக்கமாக இரண்டு கற்பனைகளாக இயேசுகிறிஸ்து கூறும்போது 1 தேவனுடனும் 1 மனிதனுடனும் இருக்கவேண்டிய காரியமாக கூறுகிறார். ”உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக; இது முதலாம் பிரதான கற்பனை. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே” (மத். 22:37-39, மாற்கு 12:30,31).  இவற்றில், அன்புகூருவது என்பது தான் மையமாக இருக்கிறது.
இதையே புதிய ஏற்பாட்டுக் காலத்தில் பவுல் ஒருபடி மேலே போய், ”உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக, என்கிற இந்த ஒரே வார்த்தையிலே நியாயப்பிரமாணம் முழுவதும் நிறைவேறும்” என்கிறார் (ரோமர் 13:9, கலா 5:14). உலகப்பிரகாரமான மனிதர்களெல்லாம் பிறர்மீது சகோதர அன்பை (Brotherly Love) ஒரு மனிதாபிமான அன்பாக (Humanitarian Love) மட்டுமே வெளிப்படுத்துகிறார்கள். ஆனால், கிறிஸ்துவில் அன்புகூருகிறவர்கள் அதை ஒரு கட்டாயத்தின் பேரில் கடமைக்கான காரியமாக எடுத்துக் கொள்ளாமல், பரிசுத்த ஆவியினாலே நம் இருதயங்களில் ஊற்றப்பட்ட அன்பினை (ரோமர் 5:5) நாம் மற்றவர்களிடம் தாராளமாக வெளிப்படுத்த வேண்டும். அப்போது தான் அது ஆவியின் கனியாகிய அன்பாக வெளிப்படும். இல்லையெனில் அது வெறும் மனிதாபிமான அன்பு தான்.
மற்றவர்களிடத்தில் வெளிப்படுத்தபட வேண்டிய அன்பின் அளவுகோல் நாம் முதலில் நம்மில் எவ்வளவு அன்பு கூருகிறோமோ அந்த அளவு தான். அதே அளவுக்கு பிறனிடத்திலும் அன்புகூர வேண்டும். தன் சொந்த மாம்சத்தைப் பகைத்தவன் ஒருவனுமில்லையே (எபே. 5:29). இந்த கண்ணோட்டத்தில் இன்னுமொரு காரியத்தையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். உலகத்தாரைக் காட்டிலும் தேவனுடைய ஆவியினால் நடத்தப்படுகிறவர்கள் இன்னும் சற்று அதிகமாய் பிறனிடத்தில் அன்பு செலுத்த வேண்டும். ஏனெனில், அன்பின் இலக்கணமே தேவன் தான். ”அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்; நாமும் சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்” (I யோவான் 3:16). மட்டுமல்ல, 1 கொரிந்தியர் 13ல் கூறப்பட்டுள்ள அன்பின் வரையறைகளுக்கு ஏற்ற எடுத்துக்காட்டாக தேவனுடைய அகாப்பே அன்பு விளங்குவதால் அதனை அனுபவித்த நாம் ஒவ்வொருவரும் அதை நம் வாழ்வில் பிரதிபலிக்க வேண்டும்.
”இவள் செய்த அநேக பாவங்கள் மன்னிக்கப்பட்டது; இவள் மிகவும் அன்புகூர்ந்தாளே. எவனுக்குக் கொஞ்சம் மன்னிக்கப்படுகிறதோ, அவன் கொஞ்சமாய் அன்பு கூருவான்” என்று இயேசு கிறிஸ்து ஒரு சூழ்நிலையில் கூறினார் (லூக்கா 7:47). நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டதெல்லாம் அவருடைய அநாதி அன்பு மற்றும் நம்மீது பாராட்டின அவரது கிருபை. ”அவர் முந்தி நம்மிடத்தில் அன்புகூர்ந்தபடியால் நாமும் அவரிடத்தில் அன்புகூருகிறோம். … … தேவனிடத்தில் அன்புகூருகிறவன் தன் சகோதரனிடத்திலும் அன்புகூர வேண்டுமென்கிற இந்தக் கற்பனையை அவராலே பெற்றிருக்கிறோம்” (I யோவான் 4:19, 21).


நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள் என்றார் இயேசுகிறிஸ்து (யோவான் 13:35). எனவே அன்பு என்பது நம் கிறிஸ்தவ வாழ்க்கையின் அடையாளம். அந்த அன்பின் வெளிப்பாடாக பிறருக்கு நன்மை செய்வதிலே நாம் சோர்ந்து போகாமலிருக்க வேண்டும் (II தெச. 3:13). இதன் மூலம் அன்பு என்னும் பண்பினை நடைமுறைப்படுத்துவதில் உலகத்தாருக்கும் ஆவிக்குரியவர்களுக்கும் உள்ள பெரிய வித்தியாசத்தை உலகம் புரிந்து கொண்டு, அது தேவன் பக்கமாய் திரும்பிட, நாம் உறுதி கொள்ள வேண்டும். அதற்காக ஆவியானவராலே பிழைத்திருந்து, ஆவிக்கேற்றபடி நடக்க நம்மை நாமே அர்ப்பணிப்போமாக. ஆமென்.  

 [இது பாலைவனச் சத்தம் - டிசம்பர் 2016 இதழில் வெளியான எனது கட்டுரை]