Sunday, September 21, 2008

2008 - உனக்கு இது கி.பி. எத்தனையாவது ஆண்டு?

உலக வரலாற்றில் எந்தவொரு நிகழ்வினைக் குறிப்பிட்டாலும் கி.மு/ கி.பி என்ற வழக்கமே பரவலாக இருந்துவருவதை நாம் அறிவோம். காரணம் என்ன? அந்த அளவிற்கு உலக வரலாற்றில் இயேசு முக்கியமான (மைய) இடத்தைப் பிடித்து விட்டார் என்றால் அது மிகையல்ல. கிறிஸ்துவுக்குப் பின் உலக சரித்திரத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்பவைகளும் காரணமாகலாம். கி.மு/ கி.பி வழக்கமுறையை வைத்து, உலக நிகழ்வுகளே அவரை மையமாக்க் கொண்டு தானோ என நினைப்பதிலும் தவறு இல்லை.

அந்த அளவிற்கு உலக சரித்திரத்தில் சாதனை படைத்த இயேசு உன் வாழ்க்கையில் ஏதாவது செய்திருக்கிறாரா? ஒருவேளை நீ பிறந்து வளர்ந்ததே கிறிஸ்தவக் குடும்பமாக இருக்கலாம். நல்லது. ஆனாலும் உனது வாழ்க்கைச் சரித்திரத்திலும் கி.மு/ கி.பி என்ற பயன்பாடு உண்டு. அனேகர் தங்களைப் பற்றி அல்லது அடுத்தவரை பற்றி எதையாவது குறிப்பிடும் போது திருமணத்திற்கு முன் அப்படி இருந்தார் இப்போதைக்கு அப்படி இல்லை என்பார்கள்; அல்லது திருமணத்திற்கு பின் ஆளே மாறிவிட்டார் என கூறுவது உண்டு. திருமணம் என்ற நிகழ்வினால் ஒருவனு(ளு)டைய வாழ்க்கையில் நுழையும் ஒருவனா(ள)ல் அவனு(ளு)டைய வாழ்க்கை நடைமுறையில் அத்தனை மாற்றங்கள் நிகழ்கின்றது அல்லவா?

அதுபோன்றே ஒருவனுடைய வாழ்க்கையில் கிறிஸ்து என்று ஒருவர் குறுக்கிட்டால், அவனுடைய வாழ்க்கை நடைமுறையிலும் மாற்றங்கள் கண்டிப்பாக இருக்கும். அது ஒருவேளை சிலருக்கு ஒரே நாளில் வெளிப்படையாக தெரிவதாக இருக்கலாம்; சிலருக்கு படிப்படியான மாற்றங்களுக்குப்பின் பலநாட்கள் கழித்து வெளிப்படுவதாக இருக்கலாம். எது எப்படியாயினும் கிறிஸ்து ஒருவனுக்குள் இருந்தால் அவனுடைய சரித்திரத்தில் கி.மு/ கி.பி என்று இரண்டு அத்தியாயங்கள் கண்டிப்பாக இருக்கும். அப்படி ஏதும் இல்லையெனில், இன்னும் அங்கு கிறிஸ்து வரவில்லையென்று தான் அர்த்தம்.

இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின. 2 கொரிந்தியர் 5:17

அது சரி. உங்கள் வாழ்க்கை சரித்திரத்தில் இது கி.பி எத்தனையாவது ஆண்டு என உறுதியாக கூறமுடியுமா?