Saturday, September 14, 2013

மருத்துவ சுகமா? தெய்வீக சுகமா?



’இந்த வருடத்திலிருந்து டாக்டர். பேதுரு அவர்கள் நம் (அமைதிநேர நண்பன்) இதழில் மருத்துவம் மற்றும் மன ஆரோக்கியம் போன்றவைகளைக் குறித்து எழுத சம்மதித்திருக்கிறார்கள்’ என கடந்த இதழில் அறிவிக்கப்பட்டு விட்டது. இப்போது நான் எழுதியே ஆக வேண்டும்... எதை எழுதுவேன்... ஒரு மருத்துவன் என்ற முறையில் உடல்நலக் குறிப்புகளையா? இல்லை, ஒரு கிறிஸ்தவன் என்ற முறையில் ஆன்மீக நலனையா? இப்படி யோசித்துக் கொண்டிருக்கும் போதே எனது அலைபேசியில் ஒரு குறுஞ்செய்தி வந்து சேர்ந்தது. 


எனது கல்லூரியில் கிறிஸ்தவ மாணவன் ஒருவன் குறிப்பிட்ட வேதாகமக் கருத்தில் ஒரு தொடராக தினமும் நண்பர்களுக்கு குறுஞ்செய்திகள் அனுப்புவது வழக்கம். தற்போது ‘இயேசுவின் அற்புதங்கள்’ என்ற தலைப்பில் தினமும் ஒவ்வொரு அற்புதங்களை நினைவுபடுத்தி வருகிறான். அந்த விதத்தில் இந்த யோசனையின்போது வந்து சேர்ந்த குறுஞ்செய்தி – கொன்னை வாயுடைய செவிடனை இயேசு குணமாக்குதல் - மாற்கு 7:31-37. அதனை தியானம் செய்தேன். அப்போது என் மனதில் விழுந்த சிந்தனைகளையும் எழுந்த கேள்விகளையும் இங்கே பதித்துள்ளேன். இவற்றை வாசிக்குமுன்னர் அந்த வேதபகுதியை ஒரு முறை வாசித்து விடுங்களேன்.


கொன்னை வாயுடைய செவிடன் (வ32a):


வெறும் செவிடன் அல்ல; கொன்னை வாயுடைய செவிடன். அவனது செவிடுக்கு காரணம் இருக்கிறதோ இல்லையோ, கொன்னை வாய்க்கு காரணம் இருக்கிறது – அது பெரும்பாலும் செவிடு தான் என்பது மருத்துவ அறிவு. ஊமையும் செவிடுமான ஆவியே இவனை விட்டுப் புறப்பட்டுப்போ என்று இயேசு ஒருமுறை சொன்ன (மாற்கு 9:25) ஒரு ஊமையன் அசுத்த ஆவியினால் பிடிக்கப் பட்டிருந்தமையால் ஊமையனாக இருந்தான்; பிறவியிலிருந்தே உமையன் அல்ல (மாற்கு 9:21). இந்த செவிடனுக்கு கொன்னை வாய் பிறவியிலிருந்தே இருந்ததோ, பின்னர் வந்ததோ நாம் அறியோம். 


ஜனங்களின் எதிர்பார்ப்பு (வ32b)


அவர் தமது கையை அவன் மீது வைத்தால் (ஆசீர்வதித்தால்) விடுதலை கிடைத்துவிடும் என்பது அவனைக் கொண்டுவந்த ஜனங்களின் விசுவாசம். அவ்விதமான விடுதலையை விரும்பியே அவர்கள் அவரிடம் வேண்டினர். ஆனால் இயேசுவின் வழிமுறையோ சற்று வித்தியாசமாக இருந்தது.


இயேசுவின் வழிமுறை (வ33-35)


அவரோ அவனை ஜனக்கூட்டத்திலிருந்து தனித்துப் பிரித்தார். தனது வெற்று விரல்களை அவனது காதினுள் நுழைத்தார்; பின்னர் தன் உமிழ்நீரால் நனைந்த தன் விரல்களால் அவன் நாவைத் தொட்டுக் கொண்டே, வானத்தை அண்ணார்ந்து பார்த்து பெருமூச்சு விட்டு எப்பத்தா (திறக்கப்படுவாயாக) என்றார். உடனே அவனுடைய செவிகள் திறக்கப்பட்டு, அவனுடைய நாவின் கட்டும் அவிழ்ந்து, அவன் செவ்வையாய்ப் பேசினான். 


எப்பத்தா என முதலிலேயே சொல்லியிருக்கலாமே... செவிடுக்கு காரணமான அடைப்பை நீக்கவே விரல்களை காதுனுள் நுழைத்தாரோ என்றும், செவிட்டுத்தன்மையால்  அப்படியே இறுகிப் போய்விட்ட அவன் நாவினை தனது நனைந்த கைகளால் தடவி தளர்த்தி விட்டாரோ எனவும் எண்ணத் தோன்றுகிறது. ஊமையும் செவிடுமான ஆவியே இவனை விட்டுப் புறப்பட்டுப்போ என்று இயேசு ஒரு ஊமையனுக்கு ஒருமுறை கட்டளையாக சொன்ன போது (மாற்கு 9:25) அதற்கு காரணமிருந்தது; அவன் அசுத்த ஆவியினால் பிடிக்கப் பட்டிருந்தமையால் தான் ஊமையனாக இருந்தான்.


இயேசுவின் எதிர்பார்ப்பு (வ36)


இயேசு தன்னால் செய்யப்பட்ட அந்த அற்புதத்தை ஒருவருக்கும் சொல்லவேண்டாமென்று அவர்களுக்குக் கண்டிப்பாக கட்டளையிட்டிருந்தார். சொன்னால் ஏற்படும் வீண் சலசலப்புகளால், தான் வந்த காரியம் வீணாகிப் போய்விடக் கூடாது என்பது அவரது எண்ணமாக இருக்கலாம் (மாற்கு 1:43-35). ஆகிலும் எவ்வளவு அதிகமாய் அவர்களுக்குக் கட்டளையிட்டாரோ, அவ்வளவு அதிகமாய் அவர்கள் அதைப் பிரசித்தம்பண்ணினார்கள். இந்நாட்களில் சந்தேகத்திற்கிடமான சுகமாக்குதல்களையும் (?விசுவாச அறிக்கையாக) ’இன்னார்’ மூலமாக இயேசு எனக்கு சுகம் தந்தார் என சொல்லும் படி ஜனங்களை ’அன்னார்’ திணிப்பது ஏனோ? இதனால் எழும் சலசப்புகளுக்கெல்லாம் செவிமடுக்காமல், தற்புகழுக்கான இந்த வாய்ப்பு வீணாகிப் போய்விடக்கூடாது என்பதே ’அன்னார்’ என்ணம் என்பது திண்ணம். 


சிந்தனைக்கு சில கேள்விகள்:


1)  நமக்கு நேரிடும் வியாதிகளுக்கு யார் காரணம்? நம் மூதாதையினரா? நாமா? பிசாசா? இல்லை ஒருவேளை தேவனா?


2) தெய்வீக சுகம்பெற அவசியமான ஒன்று யாருடைய விசுவாசம்? பிணியாளிகளா? பிணியாளிகளின் பொறுப்பாளர்களா? இல்லை, இதையெல்லாம் மீறி இவர்களுக்கு  தெய்வீக சுகம் குறித்த விசுவாசத்தை போதிக்கும் விசுவாச வீரர்களா?


3)   தெய்வீக சுகம் என்பது மருத்துவரால் முடியாத வியாதிகளுக்கு மட்டும் தானா? இல்லை, மருத்துவரால் முடிந்தாலும் அவர்களையல்லாமலே பெற்றுக் கொள்கிற ஒன்றா?


4) பெற்றுக்கொண்ட தெய்வீக சுகத்தை பிரசித்தப்படுத்துவது தவறா? அப்படியானால் வெகுஜன ஊடகங்களைத் தவிர்த்து விட்டு, கிறிஸ்தவ ஊடகங்களில் மட்டுமே அவற்றை பிரபலப்படுத்துவதேன்? 


தலைப்பினைப் பார்த்தவுடனே, இது ஏதோ விவாதத்தை தூண்டும் விதமாக  இருக்கிறதே என எண்ணிய சிலருக்கு இந்த கேள்விகளைக் கண்டவுடன் ஏதோ விதண்டாவாதம் செய்வது போல தோன்றுவதில் தவறில்லை. ஆனால்,  எமது நோக்கம் அதுவல்ல என்பதை வரும் நாட்களில் புரிந்து கொள்வீர்கள். மேற்கண்ட கேள்விகளுக்கு நான் பதிலளிக்கப் போவதில்லை; நீங்களே விடையை தேடிக் கொள்ளுங்கள். அந்த தேடலில், ஆண்டவரை நெருங்கி வருவீர்கள் என்பது எமது எதிர்பார்ப்பு. 


மருத்துவ சுகமா? தெய்வீக சுகமா? என்ற விவாதத்தில் இரு தரப்பு கொள்கையினருமே கூட்டிக்கழித்துப் பார்த்தால், இறுதியில் ’உடல்நலம்’ ஒன்றையே மையமாகக் கொண்டுள்ளனர். எனவே வரும் நாட்களில் கர்த்தர் நடத்தும் விதமாக உடல்நலம் சார்ந்த ஆவிக்குரிய காரியங்களை பகிர்ந்து கொள்கிறேன். 


- டாக்டர். பேதுரு.


(இது அமைதிநேர நண்பன் - மார்ச் 2013ல் வெளியான எனது கட்டுரை)

Thursday, September 05, 2013

தேவனால் எல்லாம் கூடும்


'இந்திய நற்செய்தி மாணவர் மன்றம் - தமிழ்நாடு' ஊழியத்தில் தனது மாணவப் பருவத்திலிருந்தே ஈடுபட்டுவரும் டாக்டர். பேதுரு அவர்கள் நமது தரிசனச்சுடர் பத்திரிக்கை உதவியாளர் திரு. மா. தமிழ்செல்வன் அவர்களுக்கு (மே 2013ல்) அளித்த சிறப்புப் பேட்டி:



தமிழ்செல்வன்: டாக்டர். பேதுரு அவர்களே, தரிசனச்சுடர் சார்பில் உங்களை பேட்டி காண வந்திருப்பதில் மகிழ்ச்சி. நீங்கள் எப்போதிருந்து மாணவ ஊழியத்தில் ஈடுபட்டு வருகிறீர்கள்? யார் மூலமாக நீங்கள் இவ்வூழியத்தில் ஈடுபட வழிநடத்தப்பட்டீர்கள்?


பேதுரு: 1993ல் முதலில் (அப்போதைய) திருச்சி மண்டல பொறியியற் கல்லூரியில் மாணவனாக சேர்ந்தேன். அங்கிருந்த கிறிஸ்தவ வார்டன் ஒருவர் மூலம், அதே வருடம் நவம்பரில் நான் தஞ்சை மருத்துவக் கல்லூரியில் மாணவனாக வந்து சேர்ந்தபோது, டாக்டர். மத்தியாஸ் அவர்களின் தொடர்பு கிடைத்தது. அவர் முதல் நாளிலேயே அங்கு மாணவர்விடுதியில் நடைபெற்று வந்த EU ஜெபக்குழு தலைவர் செந்தில் (டாக்டர். செந்தில் குமார், வேலூர்) மற்றும் முக்கிய விசுவாசிகளிடம் என்னை அறிமுகம் செய்து வைத்தார். அந்த வாரத்திலேயே மருத்துவ மாணவ மாணவியருக்கென வெளியில் டாக்டர். ஜோசப் விக்டர் அவர்கள் வீட்டில் நடைபெறும் EU ஜெபக்குழுவில் கலந்து கொண்டேன். அங்கு நான் சந்தித்த விசுவாச மாணவர்கள் மற்றும் பட்டதாரிகளின் அன்பான அணுகுமுறை, உறுதியான விசுவாசம் மற்றும் சாட்சியான வாழ்க்கைமுறை என்னை வெகுவாக கவர்ந்துவிட்டது. 


அன்றுமுதலே, நான் இந்த ஜெபக்குழுக்களில் விருப்பத்துடன் கலந்து கொள்ள ஆரம்பித்தேன். வெகுவிரைவில் அங்குள்ள மற்ற கல்லூரி ஜெபக்குழுக்களின் விசுவாசிகள் மற்றும் நற்செய்தி பட்டதாரிகளின் அறிமுகம் கிடைத்தது. அதன் மூலம் ஆவிக்குரிய வாழ்க்கையில் தொடர்ந்து முன்னேற வாய்ப்பு கிடைத்தது. இந்த நிலையில் என்னை தொடர்ந்து சந்தித்து வந்த ஊழியர் திரு. ராஜபாலன்  அவர்களின் அணுகுமுறை மற்றும் வழிநடத்துதல் என்னை மாணவ செயற்குழுக்களில் பொறுப்புக்களை எடுத்து நிறைவேற்றிட உதவியாக அமைந்தது. 


தமிழ்செல்வன்: ஒரு மாணவனாக இருந்து போது எவ்வாறு உங்கள் நேரத்தை ஊழியத்துக்கும் படிப்புக்கும் பகிர்ந்தளித்து பயன்படுத்தினீர்கள்?


பேதுரு: மருத்துவக் கல்லூரியில் உள்ள பல்வேறு சூழ்நிலைகளில் இப்படியொரு ஜெபக்குழு இல்லாதிருந்தால் எனது நிலைமை என்னவாக இருந்திருக்கும் என்பதை உணர்ந்து, மற்ற கல்லூரிகளிலும் ஜெபக்குழுக்களை ஏற்படுத்த முயற்சிக்கும் ICEUவின் செயல்பாடுகளில் என்னை தீவிரமாக இணைத்துக் கொண்டேன். இதற்கு எனது பெற்றோரும் ஒத்துழைப்பு நல்கினர். ‘நேரம் கிடைக்கும் போது’ என்று அல்லாமல், கிடைக்கும் நேரத்தையெல்லாம் இதற்கென ஒதுக்கி செயல்பட்டதால், அது எனது தனிப்பட்ட ஆவிக்குரிய வாழ்க்கைக்கு ஆசீர்வாதமாக அமைந்து. இருப்பினும், எனது கல்லூரி நண்பர்களின் மனமடிவாக்கும் பேச்சுக்களையும் பல சவால்களையும் நான் சந்திக்காமல் இல்லை. ஆனால், இன்றளவில் அவர்கள் மத்தியில் தேவன் என்னை வெட்கப்படுத்தாமல், உயர்ந்த நிலையில் நிறுத்தியுள்ளார்.


தமிழ்செல்வன்: உங்கள் குடும்பத்தைப் பற்றியும், ஒரு பட்டதாரியாக எவ்வாறு உங்கள் பணிக்கும் ஊழியத்துக்கும் குடும்பத்திற்கும் நேரத்தை பகிர்ந்து செலவளிக்க முடிகிறது என்றும் கூறமுடியுமா?


பேதுரு: நானும் சென்னை மருத்துவக் கல்லூரி ஜெபக்குழு மூலம் ஆண்டவருக்குள் வளர்ந்த டயானாவும் 2005ல் திருமணம் செய்து கொண்டோம். தேவ தயவால், 2009ல் ஸ்டீவ் ஹட்ஸன் என்ற மகன் பிறந்தான். நான் தற்போது குமரி மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் இணை பேராசியராகவும் எனது மனைவி அங்கு வெள்ளமடம் என்ற ஊரில் உள்ள ஒரு தொண்டு நிறுவனத்தின் குழந்தைகள் நலமையத்தில் குழந்தைநல மருத்துவராகவும் பணிபுரிகிறோம். வேலை, குடும்பம், இந்த ஊழியத்தின் பல்வேறு நிலைகளில் பல்வேறு பொறுப்புகளுக்கிடையில் இரு மாணவர் ஜெபக்குழுக்களில் ஈடுபடுகிறேன். இதற்கிடையில் நான் கடந்த ஒருவருடமாக மாலைநேர கிளினிக்கை நடத்த ஆரம்பித்த நாட்கள் முதல் நேரம் மற்றும் தூரத்தை முன்னிட்டு, EGF ஜெபக்குழுவில் கலந்து கொள்ள முடிவதில்லை. விரைவில் இந்த நிலைமை மாறும் என நம்புகிறேன். 


தமிழ்செல்வன்: ஊழியத்தின் பல்வேறு செயற்குழுக்களில் உறுப்பினராக இருக்கும் நீங்கள் எவ்வாறு அதற்கென நேரம் ஒதுக்க முடிகிறது?


பேதுரு: 1995-96 கல்வியாண்டில் தஞ்சாவூர் ICEUன் செயலாளராக பொறுப்பேற்ற நாட்களில் செயற்குழுக்களின் செயல்படுமுறைகளையும் உறுப்பினர்களின் தனிப்பட்ட மற்றும் குழுவான கடமைகளையும் சரிவர புரிந்து கொண்டேன். எனவே அன்றுமுதல் இன்றுவரையில் இந்த ஊழியத்தில் பல்வேறு நிலைகளில் பல்வேறு செயற்குழுக்களில் ஒரு தெளிவான உள்ளுணர்வுடன் ஈடுபட முடிகிறது. எனவே, அதற்காக நேரத்தை ஒதுக்கிக் கொள்வதில் முன்னுரிமை கொடுப்பேன். நேரம் அதுவாக கிடைத்தால் ஊழியம் என்று அல்லாமல்,  சமயம் வாய்த்தாலும் வாய்க்கா விட்டாலும் எடுத்த பொறுப்பை சிறப்பாக செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்படும் போது என்னால் மனதார நேரத்தை ஒதுக்க முடிகிறது. இதுபோக கிடைக்கும் நேரங்களில் சில பத்திரிக்கைகளுக்கும் அவ்வப்போது எழுதுவதும் உண்டு. 


தமிழ்செல்வன்: நீங்கள் ஒரு சிறந்த எழுத்தாளர் என்று கூறினீர்கள். உங்கள் பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் எழுதுவதற்கு எப்படி நேரம் கிடைக்கிறது?


பேதுரு: நான் அப்படி ஒன்றும் பெரிய எழுத்தாளன் அல்ல. 1997 நவம்பரில் எனது சாட்சியை வெளியிட்டு, பள்ளிநாட்களிலேயே எனக்குள் புதைந்திருந்தும் வெளிக்குவராத எனது இலக்கிய ஆர்வத்தை வெளிக்கொணர முதன்முதலில், வாய்ப்பை அளித்ததே நமது தரிசனச்சுடர் தான். இன்றும் தரிசனச்சுடர் அவ்வப்போது  எனது கட்டுரைகளை வெளியிடுவது என்னை ஊக்குவிப்பதாக உள்ளது. பரபரப்பான வாழ்க்கை சூழலில் நான் கற்றுவரும் ஆவிக்குரிய பாடங்களே எனது எழுத்துகளின் கருவாக அமைவதால், அது ஒரு பாரமாக தெரியவில்லை. இருப்பினும் எழுதுவதற்கு கிடைக்கும் அழைப்புக்களின் மத்தியில் இந்த மாணவர் ஊழியத்தில் நேரம் செலவிடுவதையே முக்கியமானதாக கருதுகிறேன். 


தமிழ்செல்வன்: உங்கள் மனைவியும் ஒரு மருத்துவர் என்று சொன்னீர்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் குடும்பம், ஊழியம், வேலைக்கு எவ்வாறு சமநிலையுடன் நேரம் கொடுக்க முடிகிறது?


பேதுரு: நீங்கள் சொன்னது போலவே, எனது மனைவியும் மருத்துவர் என்பதால் எனக்கு குடும்ப சுமைகள் கொஞ்சம் அதிகம் தான். இருப்பினும், இருவரும் இணைந்து ஆண்டவரின் சித்தப்படி எப்போது, என்ன, எங்கே படிப்பது என்றும்,  பின்னர் அதுபோன்றே எங்கே, என்னவிதமாக வேலை செய்வது என்பதில் ஒருமித்து செயல்பட்டதாலும், அந்தவிதமான முக்கிய முடிவுகளில் இந்த மாணவர் ஊழிய காரியங்களியும் மனதில் கொண்டு செயல்படுவதாலும், எங்கள் வேலைப்பளு இந்த ஊழிய ஈடுபாட்டிற்கு பெரும் தடையாக இருந்ததில்லை. 


தமிழ்செல்வன்: அப்படி நீங்கள் நேரத்தை பகிர்ந்து பயன்படுத்திய போது ஏற்பட்ட சுவையான நிகழ்ச்சி ஏதாவது…?


பேதுரு: நாங்கள் இருவரும் மாணவப் பருவத்திலேயே இந்த ஊழியத்தில் பயனடைந்துள்ளதால், இந்த ஊழியத்தில் ’குடும்பமாக ஈடுபடும்’ முடிவில் சிரமம் இருக்கவில்லை. இருப்பினும் மனைவியின் படிப்பு, குழந்தை, வேலை என பலகோணங்களிலும் அழுத்தப்படும் வேளைகளில் ஊழியத்தில் எடுத்த பொறுப்பை நிறைவேற்றுவதில் பல சவால்களை சந்தித்தது உண்டு. சிலபல சூழ்நிலைகளினால், பெற்றோரின் உதவிகள் கிடைக்கப் பெறாத நிலையில், வேலைக்காரரை நம்பியே பல பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு ஊழியத்தில் ஈடுபடவேண்டிய நிலைகள் ஏற்பட்டபோது பல்வேறு இன்னல்களை அனுபவித்துள்ளோம். இந்த விஷயத்தில், எனது மனைவியின் ஒத்துழைப்பை மறக்க இயலாது. 


2011 பிப்ரவரி 11-13ல் நடைபெற்ற தரிசனம் 2020 மாநாட்டை நான் ஒருங்கிணைத்தேன். அதே நாட்களில் (11-14 தேதிகளில்) நான் பணிபுரியும் கல்லூரியை இந்திய மருத்துவக் கவுன்சில் (MCI) பார்வையிடுவதால் ஆசிரியர்கள் அனைவரும் அவசியம் 4 நாட்களும் அங்கேயே இருக்க வேண்டும் என்ற கல்லூரியின் கடைசி நேர அறிவிப்பால் சற்று குழப்பமடைந்தேன். சூழ்நிலைகளை மனதிற்கொண்டு, இரண்டு நாட்கள் நமது மாநாட்டிலும் குறிப்பிட்ட இரண்டு நாட்களில் கல்லூரியிலும் கலந்து கொண்டு, இரு இடங்களிலும் எனது வராமையினால் (Absence) எந்தவொரு பாதிப்பும் இல்லாமல் பார்த்துக் கொண்டேன். இருப்பினும் 4 நாட்களும் முழுமையாக கல்லூரியில் இருக்கவில்லை என்ற காரணம் காட்டி கல்லூரி நிர்வாகம் எனது சம்பள உயர்வையும் (Increment) பதவி உயர்வையும் (Promotion) ஒருவருடத்திற்கு தள்ளிப்போட்டனர். இறுதியில் ஒரு வருடம் கழித்து, பதவி உயர்வில் பாதிப்பு ஏற்படாவண்ணம், முன் தேதி குறிப்பிட்டு அதைப்பெற்றுக் கொள்ளும்படி தேவன் உதவி செய்தார்.      


தமிழ்செல்வன்: சவாலான பல அனுபவங்களை வாசகர்களிடம் பகிர்ந்தமைக்கு நன்றி. 


பேதுரு: இந்த வாய்ப்புக்கு நன்றி. 


[இது தரிசனச் சுடர்- மே 2013ல் வெளிவந்த எனது கட்டுரை]

எதிர்காலம் – அவர் கையில்!


பட்டப் படிப்பின் உச்சகட்டமாய் இறுதித்தேர்வை எதிர்நோக்கும் இறுதியாண்டு மாணவனுக்கு எதிரே இருக்கும் சவால்கள் பலப்பல. அப்படி இப்படி என்று எப்படியாவது தேறி விட வேண்டுமென்ற எண்ணத்தில் ஓடோடி உழைத்த அவனு(ளு)க்கு இப்போதும் ஓய்வில்லை. ’அடுத்து என்ன?’ என்னும் இருசொல் வினா அவனை ஒரு கை பார்த்து விட்டுத் தான் செல்வேன் என்கிறது. இன்னும் படிக்கவா? இல்லை, வேலைக்குச் செல்லவா? வேலைக்கு என்றால் படிப்புக்கேற்ற வேலை தான் கிடைக்குமா? இல்லை, சம்பளம் வேண்டுமே என்பதற்காக ஏதாவது ஒரு வேலையா? எங்கு? எவ்வளவு காலம்? இன்றைய தற்கால முடிவு என் எதிர்கால கனவுகள் நனவாக உதவுமா? என பல கோணங்களிலும் எண்ண அலைகள் அவர்கள் சிந்தனையை அலைகழித்து சோர்வடையச் செய்கிறது.

’நம் வாழ்வில் தேவனுடைய சித்தத்தைக் கண்டறிவது எப்படி?’ என்ற தலைப்பில் ஒன்றுக்கும் மேற்பட்ட கூடுகை / முகாம்களில் தெளிவாகக் கற்றிருப்பினும் நடைமுறை சூழ்நிலையில் என்னவோ சிலர் சற்றே தடுமாற்றமடைகின்றனர். இந்த நிலையினுள் கடந்து செல்லும் இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆண்டவரின் அருள்வாக்கு இதோ: 

”…உங்களுக்காக நான் வகுத்திருக்கும் திட்டங்கள் எனக்குத் தெரியும் அன்றோ! அவை வளமான எதிர்காலத்தையும் நம்பிக்கையும் உங்களுக்கு அளிப்பதற்கான நல்வாழ்வின் திட்டங்களே அன்றி, கேடு விளைவிப்பதற்கான திட்டங்கள் அல்ல, என்கிறார் ஆண்டவர். நீங்கள் என்னிடம் வந்து கூக்குரலிட்டு மன்றாடுவீர்கள்! அப்பொழுது நான் உங்களுக்குச் செவி கொடுப்பேன். நீங்கள் என்னைத் தேடுவீர்கள்; உங்கள் முழு இதயத்தோடும் என்னைத் தேடும்பொழுது நீங்கள் என்னைக் கண்டடைவீர்கள். ஆம், நீங்கள் என்னைக் கண்டடைவீர்கள்”, என்கிறார் ஆண்டவர். - எரேமியா 29:11-14 [பொது மொழிபெயர்ப்பு]

நமக்கான திட்டங்களை ஏற்கனவே வகுத்திருக்கும் தேவன்:

நம் தேவன் உலகத் தோற்றத்திற்கு முன்னே கிறிஸ்துவுக்குள் நம்மை தெரிந்து கொண்டவர் (எபே. 1:4) தாயின் கர்ப்பத்தில் உற்பவித்தது முதல் நம்மை ஆதரிப்பவர் (சங். 71:6); தாங்குபவர் (ஏசா. 46:3). முதிர்வயதும் நரைமயிருமுள்ளவனாகும் வரைக்கும் கைவிடாதவர் (சங். 71:18, ஏசா. 46:4). இப்படிப்பட்ட தேவன் இந்த தடுமாற்றமான நிலையில் நமக்கென ஒரு திட்டத்தை ஏற்கனவே வகுத்து வைத்துக் கொண்டுள்ளார் என்பது ஒன்றும் வியப்பிற்குரியது அல்ல. அவர் ஒருமுறை திட்டங்களை வகுத்து வைத்துவிட்டு அவைகளை மறந்து விடுபவரல்ல. அவைகளை மனதில் வைத்துக் கொண்டிருப்பவர். மட்டுமல்ல, ஒருமுறை வகுத்த திட்டங்களுக்காய் பின்னர் மனஸ்தாபப் படுபவரல்ல; மனம் மாற அவர் மனுஷனும் அல்ல (I சாமு. 15:29). எனவே இப்படிப்பட்ட தேவனை தெய்வமாய் கொண்டுள்ள நமக்கு எதிர்காலத்தைக் குறித்த எந்த கலக்கமும் இருக்கத் தேவையில்லை.  

எதிர்காலத்தை திட்டமிட உதவிடும் தேவன்:

ஆண்டவர் நமக்கென வகுத்திருக்கும் திட்டங்கள் அவை வளமான ’எதிர்காலத்தையும்’ அதைக் குறித்த ’நம்பிக்கையும்’ நமக்கு அளிப்பதற்கான நல்வாழ்வின் திட்டங்கள்; ஒருபோதும் அவை கேடு விளைவிப்பதற்கான திட்டங்கள் அல்ல. வளமான எதிர்காலம் வயப்படும் வகையில் மெத்தப் படித்து உயர்ந்த உத்தியோகத்தில் இருக்கும் பலருக்கோ இன்று எதிர்காலத்தைக் குறித்த  நம்பிக்கையில்லை. ஒளிமயமான எதிர்காலத்தை குறித்த நம்பிக்கை எதோ வெற்றுப் பட்டத்தையும் சோற்றுப் பணியையும் பொறுத்தது அல்ல; அது தேவனுடைய ஈவு. அந்த நம்பிக்கையே எதிர்காலத்தை ஒளிமயமாக்கிவிட வல்லது (யோபு 11:18).  

எதிர்காலத்தைக் குறித்த நம்பிக்கை இல்லாமை எவ்விதம் எதிர்காலத்தையே பாழாக்கி விடுகிறதோ அவ்விதமே நம் எதிர்காலத்தைக் குறித்து தேவன் வகுத்திருக்கும் திட்டங்களின் மீது இன்று நமக்கு நம்பிக்கை இல்லாமையே இன்றைய நம் நிகழ்காலத்தை மனமடிவாக்கி விடுகிறது. நமக்கென ஒரு திட்டம்; செயல்பாடு… அது தேவன் வகுத்துள்ள திட்டத்துடன் ஒத்துப்போனால் அங்கு சந்தோஷம் சமாதானம் நிலவும்; நாமும் தைரியமாக அதில்  முன்னேறலாம். நமது திட்டம் தேவனுடைய திட்டங்களுடன் முரண்படும் போது தெளிவின்மை, குழப்பம், தோல்வி, ஏமாற்றம் இவையே  மிஞ்சுகின்றன. 

அவ்வப்போது நிலைமையைப் பொறுத்து முடிவெடுக்கும் நமது திட்டங்கள் எல்லாம் ஏற்கனவே தேவன் வகுத்துள்ள திட்டங்களுடன் ஒத்துப் போகிறதா என சோதித்துப் பார்க்கும் அபாயத்தை முயல்வதைக் காட்டிலும் நம்மைக் குறித்த தேவனின் திட்டங்களை திடமாய் புரிந்து கொண்டு அதற்கேற்ற விதமாய் முடிவெடுப்பது தான் எளிதான ஒன்று. ’அவை வளமான எதிர்காலத்தையும் நம்பிக்கையும் உங்களுக்கு அளிப்பதற்கான நல்வாழ்வின் திட்டங்களே அன்றி, கேடு விளைவிப்பதற்கான திட்டங்கள் அல்ல’ என்ற ஆண்டவரின் வாக்குறுதி, தேவசித்ததை அறிந்து அதன்படி மட்டுமே தைரியமாய் செயல்பட நம்மை உந்தித் தள்ளுகிறது. 

நமது மன்றாட்டுகளுக்கு செவிகொடுக்கும் தேவன்:

தேவன் நமக்கென்று எதிர்கால திட்டங்களை வகுத்து அவைகளை நிகழ்காலத்தில் செயல்படுத்த வல்லவராயினும், அவைகள் நிறைவேறுவதில் மன்றாட்டு என்ற நமது பங்கும் உண்டு. மன்றாட்டு என்பது அம்பலத்தில் எடுக்கும் அவசர ஜெபம் அல்ல. பதில் ஒன்றையே பதிலாகக் கொண்டு அந்தரங்கத்தில் விடுக்கும் அவசர ஓலம். 

அவசியம் ஒருவரிடம் ஒன்றை சொல்லியே ஆக வேண்டுமென்றால், ஒன்று அந்த நபருடன் நெருங்கி வந்து சொல்லுவோம்; இல்லையானால் கொஞ்சம் சத்தமாக சொல்லுவோம். தூரத்தைப் பொறுத்தும் காரியத்தின் அவசரத்தைப் பொறுத்தும் சத்தம் உயர்வது என்பது இயல்பான ஒன்று. ’என்னிடம் வந்து… கூக்குரலிட்டு…மன்றாடுவீர்கள்’ என்பது இதையே உணர்த்துகிறது  எனலாம். தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார் (யாக். 4:8). நாம் தேவனிடம் ஒரு அடி தூரம் நெருங்கி வந்தால் அவர் பல அடிகள் தூரம் நம்மை நெருங்கி வருவார் என்று சிலர் விளக்கம் கூறுவர். எனது ’அவசிய நேரத்தில் ஆண்டவர் எங்கே’ என வினவும் முன்னர், இருவரில் தூரமாய் சென்றது யார் என்பதை உணர வேண்டும். 
தேவனே, நான் உம்மை நோக்கிக் கெஞ்சுகிறேன், எனக்குச் செவிகொடுக்கிறீர்; என்னிடத்தில் உம்முடைய செவியைச் சாய்த்து, என் வார்த்தையைக் கேட்டருளும் (சங். 17:6); நான் தேவனை நோக்கி என் சத்தத்தை உயர்த்திக் கெஞ்சினேன், என் சத்தத்தை தேவனிடத்தில் உயர்த்தினேன், அவர் எனக்குச் செவிகொடுத்தார் (சங். 77:1) என்பது சங்கீதக்காரனின் ஜெபமும் அனுபவமும். நாம் எப்படி?

உண்மையாய்த் தேடுவோர் கண்டடையும் தேவன்:

தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், கர்த்தர் சமீபமாயிருக்கிறார் (சங். 145:18) என்றான் சங்கீதக்காரன். கர்த்தராகிய தம்மை அவர்கள் தடவியாகிலும் கண்டுபிடிக்கத்தக்கதாக …  … அவர் நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்லவே (அப்.17:27). இயேசுவும் கூட ’கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்’ (மத். 7:7) என்று கூறியுள்ளார். 
 ’என் எதிர்காலம் எப்படியிருக்கும் என்பதை நான் அறியேன்; ஆனால் என் எதிர்காலம் யார் கையிலிருக்கிறதென்பதை அறிவேன்’ என்பது அநேக கிறிஸ்தவப் பெரியவர்களின் அனுபவக் கூற்று. நம் எதிர்காலம் அவர் கையில்… ஆனால் நிகழ்காலத்தில் நமது பொறுப்புகளும் உண்டு என்பதை உணர்ந்து, அவரை நெருங்கி, அவர் சித்தத்தை அறிந்து கொண்டு அதன்படி ஜெபித்து திட்டமிட்டு முன்னேற ஆயத்தமா?


[இது தரிசனச் சுடர்- ஏப்ரல் 2013ல் (கல்வி இறுதியாண்டு மாணவர்களுக்கான சிறப்பிதழ்) வெளிவந்த எனது கட்டுரை]