Saturday, October 22, 2016

இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன் [1 யோவான் 2:12-14]


ஆதியிலே வார்த்தையாய் தேவனிடத்தில் இருந்து, பின் மாம்சமாகி பாடுபட்டு பரமேறி இன்றும் நம்மிடையே வாசம் செய்யும் நாம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு என் அன்பின் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

       புதிய ஏற்பாட்டின் 27 புத்தகங்களில் பெரும்பாலும் அவை யாரால், யாருக்காக, எதற்காக எழுதப்பட்டது என நேரடிக் குறிப்புகள் உண்டு. பொதுவாகவே ஒரு புத்தகத்தை எடுத்துக் கொண்டால், அதன் ஆசிரியர் முன்னுரை எழுதியிருப்பார்; அல்லது எழுத்தில் பிரபலமான வேறு எவராவது அறிமுகவுரை எழுதியிருப்பார். அவற்றை வாசிக்கும் போது அந்த புத்தகம் எதற்காக என நமக்குத் தெரியவரும். சில நேரங்களில் ’புத்தகத்தைப் பற்றி’ என அந்த புத்தகத்தின் கடைசி வெளிப்பக்க அட்டையில் இருக்கும். அவைகளை வாசித்தறிந்து, அது பிரயோஜனமான ஒன்று என மனதில் பட்டால் மட்டுமே அந்த புத்தகத்தை நாம் வாங்குவோம்; படிப்போம்.

        பரிசுத்த வேதாகமம் முழுவதுமே முதலிலிருந்து கடைசி வரையும் திரியேக தேவனைக் குறித்து சொல்வதோடு மட்டுமல்லாமல், குறிப்பாக அது தன்னைக் குறித்தும் சொல்லுகிறது. வார்த்தையாகிய இயேசுவே மனிதனாய் உலகத்தில் வந்தது தான் அதன் மையச் செய்தி. பரிசுத்த வேதாகமத்தின் மகத்துவங்கள், இவற்றை வாசிப்பதால் தியானிப்பதினால் கைக்கொள்ளுவதினால் என்ன பயன் என பல்வேறு இடங்களில் தனக்குத் தானே அது சொல்லிக் கொள்கிறது. பொதுவாக புத்தகங்களில் முகவுரை மட்டும் தான் புத்தகத்தைப் பற்றி இருக்கும் பின்பு முழுவதும் அதன் உள்விஷயங்கள் இருக்கும். பரிசுத்த வேதாகமத்தில் மட்டும் தான் ஆரம்பமுதல் இறுதிவரையும் பரிசுத்த வேதாகமத்தைக் குறித்து எழுதப்பட்டிருக்கிறது.

             அந்த விதமாக அப்போஸ்தலனாகிய யோவான், தான் எழுதிய மூன்று நிரூபங்களிலும் யாருக்கு அல்லது எதற்காக என்ற குறிப்புகள் ஆரம்பத்திலேயே இருந்தாலும் [1 யோவான் 1:4, 2 யோவான் 3,5,12, 3 யோவான் 1, 9, 13] இந்த 1 யோவான் 2:12-14 பகுதியில் தனது நிருபத்தின் இடையில் எழுதியது மட்டுமல்லாமல் நிருபத்தின் இறுதிப் பகுதியிலும் (1 யோவான் 5:13) தான் எழுதும் நோக்கத்தை தெரிவிக்கிறார். தனது நிரூபங்களில் மொத்தம் 21 முறை தான் எழுதுவதைக் குறித்து எழுதியுள்ளார். இந்த 1 யோவான் 2:12-14 பகுதியில், அப்போஸ்தலனாகிய யோவான், மூன்று விதமான மக்களுக்கு இதனை எழுதுகிறார். முதலாவது பிள்ளைகள், பின்னர் பிதாக்கள், இடையில் வாலிபர்கள். பரிசுத்த வேதாகமமும் அப்படியே எல்லா வயதினருக்கும் பொதுவானது. சிறுபிள்ளைகளுக்கு நன்னெறிகளைப் புகட்டும் புத்தகமாக மட்டுமல்ல, அது வாலிபர்களுக்கு வழியைக் காட்டும்; பெரியவர்களுக்கும் நல் ஆலோசனைகளைக் கொடுக்கும்.

 இந்த பகுதியில் அப்போஸ்தலனாகிய யோவான் மூன்று பிரிவினர்களில் ஒவ்வொருவருக்கும் இரண்டிரண்டு காரணங்களுக்காக இவற்றை எழுதுவதாக கூறுகிறார். பிள்ளைகளே, அவருடைய நாமத்தினிமித்தம் உங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டிருக்கிறதினால் உங்களுக்கு எழுதுகிறேன் (வச. 12). பிதாக்களே, ஆதிமுதலிருக்கிறவரை நீங்கள் அறிந்திருக்கிறதினால் உங்களுக்கு எழுதுகிறேன். வாலிபரே, பொல்லாங்கனை நீங்கள் ஜெயித்ததினால் உங்களுக்கு எழுதுகிறேன். பிள்ளைகளே நீங்கள் பிதாவை அறிந்திருக்கிறதினால் உங்களுக்கு எழுதுகிறேன் (வச. 13). பிதாக்களே, ஆதிமுதலிருக்கிறவரை நீங்கள் அறிந்திருக்கிறதினால் உங்களுக்கு எழுதியிருக்கிறேன். வாலிபரே, நீங்கள் பலவான்களாயிருக்கிறதினாலும், தேவவசனம் உங்களில் நிலைத்திருக்கிறதினாலும், நீங்கள் பொல்லாங்கனை ஜெயித்ததினாலும், உங்களுக்கு எழுதியிருக்கிறேன் (வச. 14).

பிள்ளைகள்:
               

    பிள்ளைகளுக்கு எழுதுவதன் நோக்கம், பிதாவை அறிந்திருக்கிறதினால் மற்றும் பாவங்கள் மன்னிக்கப்பட்டிருக்கிறதினால். பிதாவாகிய தேவனை அறிந்து, அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொள்ளும் போது நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டு நாம் அவருடைய பிள்ளைகள் ஆகிறோம். பாவங்கள் மன்னிக்கப் பட்டிருக்கும் இரட்சிப்பின் அனுபவம் என்பது ஆவிக்குரிய வாழ்க்கையில் ஒரு பிள்ளை அனுபவம். இது அடிப்படையான மற்றும் ஆரம்ப அனுபவம். இதிலேயெ நாம் திருப்தியடைந்து இருந்துவிடக் கூடாது. பிள்ளைகள் பெரியவர்களாக வளர வேண்டும்; ஆவிக்குரிய நிலையில் இன்னும் நாம் முன்னேறிச் செல்லவேண்டும்.

பிதாக்கள்:  
               
      பிதாக்களுக்கு எழுதுவதன் நோக்கத்தில் ஆதிமுதல் இருக்கிறவரை நீங்கள் அறிந்திருக்கிறதினால் என இருமுறையும் அதையே குறிப்பிடுகிறார். ஆதிமுதல் இருக்கிற திரியேக தேவனை அறிந்திருத்தல் ஆவிக்குரிய நிலையில் பிதாக்களின் அனுபவம். தேவனை நான் முழுமையாய் அறிந்து கொண்டேன் என எவருமே கூற முடியாது. அப்படி ஒரு பூரணம் வரும்போது அவர் நம்மை தம்மிடமாய் எடுத்துக் கொள்வார். அவரைப் பற்றிய பூரண அறிவு என்பது ஆவிக்குரிய வாழ்க்கையில் நாட்கள் செல்லச் செல்லத் தான் வரும். நாம் அனைவருமே அந்த நிலைமைக்கு நேராய் சென்று கொண்டிருக்கிறோம். ஆதிமுதல் இருக்கிறவரை அறிவதற்கும் அவரைப் பற்றி அறிவதற்கும் வித்தியாசம் உண்டு.

         நம் அனைவருக்குமே நமது பிரதமர் மற்றும் முதல்வரைத் தெரியும். அவர்களுக்கு நம்மைத் தெரியுமா? தெரியாது. நாம் தெரிந்திருப்பதெல்லாம் அவர்களைப் பற்றி தான்; அவர்களை அல்ல. அவர்களுக்கோ தனிப்பட்ட முறையில் நம்மையும் தெரியாது; நம்மைப் பற்றியும் தெரியாது. நாம் அவர்களைப் பற்றி அறிந்திருப்பதெல்லாம் கேள்விப்படும் செய்திகள், வாசிக்கும் புத்தகங்கள் மூலம் மட்டுமே. அவர்களை நாமும் அவர்கள் நம்மையும் அறிந்திருக்க வேண்டுமெனில் அவர்களுடன் நெருங்கிப் பழகியிருக்க வேண்டும்; அன்றாடம் தொடர்பில் இருக்க வேண்டும். அதுபோலவே நாமும் ஆதிமுதல் இருக்கிறவரை அறிந்திருக்கிற வேண்டுமென்றால், வாரவாரம் சபைகளில் செய்திகளைக் கேட்டால் மட்டும் போதாது; வேதாகமத்தை வாசித்தால் மட்டும் போதாது. அவருடன் ஜெபத்தில் பேச வேண்டும்; அன்றாடம் உறவாட வேண்டும். நாமும் தேவனும் இருவருமே இருவழித்தொடர்பில் தொடர்ந்து, அவருடன் நாம் ஐக்கியத்தில் நிலைகொண்டிருக்கும் போது தான், நாம் அவரை முழுமையாக அறிய முடியும்; ஆவிக்குரிய வாழ்க்கையில் முன்னேறி பிதாக்கள் என்ற முதிர்ச்சி நிலையை அடைய முடியும்.

வாலிபர்களுக்கு எழுதும் காரியங்களை அடுத்த இதழில் காணலாம்.

[பாலைவனச் சத்தம் - செப்டெம்பர் 2016 இதழில் வெளியான எனது கட்டுரை]