Saturday, June 02, 2012

வளாகத்தில் உறவுகள்

கல்லூரி வாழ்க்கையில் இன்னுமொரு கல்வியாண்டு பிறந்து விட்டது. உங்களில் சிலருக்கு இது தான் முதல் கல்வியாண்டாக இருக்கலாம். விரும்பிய அல்லது எதிர்பாராதவொரு துறையினுள் நுழைந்திருக்கலாம். பெற்றோர் மற்றும் உற்றாரின் அறிவுரைகள் பல உங்கள் காதினுள் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கும். இதுவே இறுதி கல்வியாண்டாக இருப்பவர்களுக்கோ, இந்த கல்வியாண்டிலாவது உருப்படியாக உழைத்து வெற்றிகரமாக வளாகத்தைவிட்டு வெளியேறிட வேண்டும் என்ற எண்ணம் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும். இடைப்பட்ட நிலையிலுள்ளோர் இதைக்குறித்து அதிக அக்கறை கொண்டிராமல் இருக்கவும் வாய்ப்புண்டு. இதற்கெல்லாம் முக்கிய காரணம் என்னவெனில், வளாகங்களில் நம்மை எதிர்நோக்கும் சவால்கள் தான். அவைகளில் முக்கியானவைகளில் ஒன்று வளாகத்தில் உறவுகள். 

உறவுகள் பலவிதம்:

வீடு, பள்ளி, நண்பர்கள் என ஒரு குறிப்பிட்ட வட்டத்திலிருந்து கல்லூரி, விடுதி என சூழ்நிலைகள் மாறும் போது நண்பர்கள் வட்டமும் புதிய பரிணாமம் பெறுகிறது. பெற்றோரின் கண்காணிப்பிலிருந்து முற்றிலும் விடுபட்ட பூரண சுதந்திரம் கொண்ட உறவு நிலைக்கு அது மாறி விடுகிறது. நண்பர்கள் மட்டுமல்ல, சக மாணவர்கள், எதிர்பால் நணபர்கள், ஆசிரியர் வட்டம், சமுதாயம் என வளாகத்தில் உறவுகள் பல்வேறு பரிமாணங்களைக் கொண்டது. இருப்பினும் இவற்றில் சக மாணவர்கள் உறவு அதிலும் குறிப்பாக நண்பர்கள் வட்டமே நமது வளாக வாழக்கையின் தரத்தினை நிர்ணயிப்பதில் முதலிடத்தைப் பிடிக்கிறது. 

உருவாக்கும் உறவுகள்:

நல்ல மாணவர்களையே நண்பர்களாகக் கொண்டிருக்க வேண்டும் என்பது தான் அனைவரது எதிர்பார்ப்புமே. ஆனால் ஒருவருக்கு நண்பர்கள் எப்படி அமைகிறார்கள்? வகுப்பறையில் அருகருகே அமர்ந்திருப்பதாலோ, அடிக்கடி பார்க்க நேர்வதாலோ, விடுதியில் ஒரே அறையில் தங்கும் சூழ்நிலையினாலோ, ஒருவரோரு ஒருவர் நெருங்கி பழக கிடைக்கும் வாய்ப்பு மூலமோ ஒருவருக்கு இன்னொருவர் நண்பராகி விடுகிறார். இதுபோக ஒரே ஊர்க்காரர், சாதிக்காரர் என பல்வேறு அம்சங்களின் அடிப்படையிலும் தாமாக விரும்பி சிலரை தங்கள் நண்பர்கள் வட்டத்தினுள் இணைத்துக் கொள்வாரும் உண்டு.  ஆனால், இந்த விஷயத்தில் பொதுவாக யாருமே அதிகம் யோசிப்பதில்லை. சூழ்நிலைகளின் மூலம் தற்செயலாக அமைவது தான் நண்பர்கள். ஆனால் அவர்களே வளாகத்தில் நமது போக்கை நிர்ணயிப்பவர்கள் என்பதை நாம் மறந்துவிடலாகாது. 

கல்லூரி வாழ்க்கையில் மற்றவர்களிடமிருந்து, குறிப்பாக நண்பர்களிடமிருந்து அறிந்தோ அறியாமலோ சில பல பழக்க வழக்கங்களைக் கற்றுக்கொள்கிறோம். பூவோடு சேர்ந்த நாறும் மணப்பதுபோல நாம் நல்ல நண்பர்களுடன் இணைந்து நல்லபண்புகளை பெற்றுக் கொண்டால் அது நல்லதுதான். சாதி, இன, மத வேறுபாடுகளை மனதிற்கொண்டு குறிப்பிட்ட நபருடன் மட்டுமே பழகி, ’அரசியல்’ பண்ணும் கலாச்சாரம் நிறைந்த வளாகத்தில், விசுவாச மாணவன் வளாக அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைவருடனும் சகஜமாக பழகும் போது மட்டுமே வாழ்வில் ஒரு தரமான முதிர்ச்சி ஏற்படும். ஆனாலும் தனது நண்பர்கள் வட்டத்தினுள் யாரை மட்டுமே கொண்டிருக்க வேண்டுமென்பதில் சற்று சிந்தித்து செயல்பட வேண்டும்.  இதில் சரியான கண்ணோட்டத்துடன் கவனமாய் இல்லாவிடில் அது நாரோடு சேர்ந்த பூவும் நாறுவது போல என்ற புதுக்கதையாகி விடும். 

நல்ல நண்பர்களை கண்டறிவது எப்படி?

ஆபத்தில் அறியலாம் அருமை நண்பனை என்பார்கள். சிநேகிதன் எல்லாக் காலத்திலும் சிநேகிப்பான் என்று நீதிமொழிகள் 17:17 கூறுகிறது, இன்பத்திலும் துன்பத்திலும் சுயநல நோக்கமின்றி அடுத்தவரிடம் அக்கறையுடன் நடந்து கொள்பவனே உண்மையான நண்பன். ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை (யோவான் 15:13). யோனத்தான் தன் உயிரைச் சிநேகித்ததுபோல அவனைச் சிநேகித்தான் என I சாமுவேல் 20:17ல் காண்கிறோம். போட்டிப் பொறாமைகள் நிறைந்த இன்றைய உலகில் இவ்வித உண்மை நண்பர்களை வளாகங்களில் கண்டறிவது கடினமான ஒன்றாயினும் அந்த முயற்சி அவசியமான ஒரு பயிற்சியாகும்.

உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகை… ஆகையால் உலகத்துக்குச் சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாகிறான் (யாக்கோபு 4:4). எனவே உலகத்துக்குச் சிநேகிதனாயிக்க விரும்பும் நம் நண்பர்களுடன் உள்ள உறவில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதற்காக அவர்களுடன் இருந்துவரும் நட்பை (Freiendship) அதிரடியாக முறிக்க அவசியமில்லை; ஆனால் அந்த நட்புறவை உரமூட்டி வளர்த்து அதில் ஐக்கியமாகிவிடாமல் (Fellowship) கவனமாக இருக்க வேண்டும் (1 கொரி. 5: 9,10). மட்டுமல்ல அவர்களுடன் உள்ள நெருக்கத்தைக் குறைத்து அனைவருடனும் சகஜமாக பழகும் சதாரண உறவுநிலை அளவுக்கு அந்த நட்புறவைக் குறைத்துக் கொள்ள வேண்டும். 

எதிர்பால் நண்பர்கள் அவசியம் தானா?

நண்பர்கள் என்றால் ஒரே பாலினத்திற்குள் தான் இருக்க வேண்டுமா?… ஏன் எதிர்பாலருடன் இருக்க இயலாதா? இப்படி ’கேள்விகள் எழுந்தாலே எதோ அங்கு ஒரு விபரீதம் இருக்கிறது’ என்பதை புரிந்து கொள்ள இயலாத சிறுபிள்ளைகள் அல்ல நாம் என்பது நமக்கே தெரியும் ஆனாலும் நம்மில் சிலர் இதில் விதண்டாவாதம் செய்கிறோம். அது ஒன்றும் சக மாணவர்கள் மீதுள்ள சமுதாய அக்கறையில் அல்ல; நமது பரிதாப நிலைக்கு பாதுகாப்பு அளிக்கவே (ரோமர் 1: 32). 

கல்லூரி வாழ்க்கையில் எதிர்பாலருடன் அறிமுகமாகும் வாய்ப்பு தவிர்க்க இயலாதது. இருப்பினும் நாம் இதில் கவனமுடன் இருந்து எதிர்பாலருடன் நெருங்கிப் பழகுவதை தவிக்க வேண்டும். எதிர்பாலரை தொட்டுப் பேசுதல், தனிமையில் சந்தித்தல் தவிர்க்கப்பட வேண்டும். எதிர்பாலரிடம் படிப்பு மற்றும் ஊழியம் போன்ற பிற நல்ல காரியங்களுக்காகவே பழகுவதாயினும் அவைகளெல்லாம் ஒரேபாலரிமும் சாத்தியமாகையால் இது தவிர்க்கப்பட வேண்டும். எதிபாலர் நட்புறவு படிக்கும் பருவத்தில் நமது பெற்றோர் மற்றும் இறைவனின் எதிர்பார்ப்புகளையெல்லாம் தாண்டி எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தக் கூடும்.  

நல்ல நண்பராக இருப்பது எப்படி?

உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக, என்கிற இந்த ஒரே வார்த்தையிலே நியாயப்பிரமாணம் முழுவதும் நிறைவேறும் (கலா. 5:14). நாம் நண்பர்களிடம் என்னென்ன எதிர்பார்ப்புகளுடன் பழகுகிறோமோ, அந்த காரியங்களில் மற்றவர்களுக்கு உற்ற நண்பனாக இருக்க வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது. கெட்ட நண்பர்களின் சகவாசத்தால் சீரழிந்து, அதிலிருந்து வெளிவர முயற்சித்தும் முடியாத நிலைமையில் இருக்கும் ஒருகூட்ட மாணவர்கள் வளாகத்தில் எப்போதுமே உண்டு. அவர்களுடன் சற்று நெருங்கிப் பழகி அவர்களை நம் நண்பர்களாக்கிக் கொள்வதன் மூலம் நமது நறுமணத்தை வீசச் செய்திடலாம். 

உன்னத உறவு:

வளாகத்தில் உள்ள நண்பர்களுடன் உறவுநிலை சரிதானா இல்லையா என்பதை உறுதிப்படுத்துவது தேவனுடன் உள்ள நமது தனிப்பட்ட உறவு. வேதவாசிப்பு, ஜெபம் மற்றும் சாட்சி பகர்தல் மூலம் அவருடன் நெருங்கிய உன்னத உறவு நிலையில் காணப்படுவோமானால், நண்பர்கள் உறவு சரியான விதத்தில் அமைந்து விடும். அப்போது தான் கூடா நட்புகள் குறித்த தெளிவு பிறக்கும்; மற்றவர்களுக்கு உற்ற நண்பர்களாய் விளங்கிட வேண்டிய அவசியத்தைக் குறித்த உணர்வும் அதற்கான உற்சாகமும் பெருகும். 

நான் உங்களுக்குக் கற்பிக்கிற யாவையும் நீங்கள் செய்வீர்களானால், என் சிநேகிதராயிருப்பீர்கள் என்றார் இயேசு (யோவான் 15:14). இவ்விதம் கல்லூரி வளாகத்தில் முதலில் இயேசுவின் சிநேகிதர்களாக இருந்து, வளாகத்தில் நல்ல நண்பர்களைக் கண்டுகொண்டு, பின்னர் மற்றவர்களுக்கும் பிரயோஜனமுள்ள நண்பர்களாகத் திகழ்ந்திட வாழ்த்துக்கள். 

(இது ‘தரிசனச் சுடர் - ஜூன் 2012ல் வெளியான எனது கட்டுரை)