Monday, January 03, 2011

நில்லாதே... கவனியாதே... செல்லாதே...!

நில்... கவனி... செல்...! என்பது நம்மெல்லோருக்கும் பழக்கமானதொரு சொல். ஒருவர் ஒன்றை செய்யச் சொன்னால், சொல்வதற்கு நேரெதிராகச் செய்வது மனித இயல்பு.

வேதாகமத்தில் சொல்லப்பட்டுள்ள கட்டளைகளை, நில்லாதே... கவனியாதே... செல்லாதே...!  என்ற கோணத்தில் பார்ப்பது பிரயோஜனமாக இருக்கலாம் என நம்புகிறேன்.  இதோ அவைகளின் தொகுப்பு:



நில்லாதே...!


1) உன் ஜீவன் தப்ப ஓடிப்போ, பின்னிட்டுப் பாராதே; இந்தச் சமபூமியில் எங்கும் நில்லாதே. (ஆதியாகமம் 19:17 )

2) பாவிகளுடைய வழியில் நில்லாதே. (சங்கீதம் 1:1 )

3) பெரியோர்களுடைய ஸ்தானத்தில் நில்லாதே. (நீதிமொழிகள் 25:6 )

4) பொல்லாதகாரியத்திலே பிடிவாதமாய் நில்லாதே. (பிரசங்கி 8:3 )



கவனியாதே...!


1) சொல்லப்படும் எல்லா வார்த்தைகளையும் கவனியாதே. (பிரசங்கி 7:21)

2) தர்க்கங்களுக்கு ஏதுவாயிருக்கிற கட்டுக்கதைகளையும் முடிவில்லாத வம்சவரலாறுகளையும் கவனியாதபடிக்கும் (I தீமோத்தேயு 1:3 )



செல்லாதே...!


1) நீ எகிப்துக்குப் போகாமல், நான் உனக்குச் சொல்லும் தேசத்திலே குடியிரு. (ஆதியாகமம் 26:2 )
2) வழிக்குப் பையையாகிலும், அப்பத்தையாகிலும், கச்சையில் காசையாகிலும் எடுத்துக்கொண்டுபோகால் (மாற்கு 6:8 )

3) ... வீட்டுக்கு வீடு போகாதிருங்கள். (லூக்கா 10:7 )

Saturday, January 01, 2011

பு(ப)த்தாண்டு வாக்குத்தத்தம்

மூன்றாம் மில்லேனியத்தின் முதல் பத்தாண்டுகளை முடித்து 2011 என்றதொரு புத்தாண்டுடன் இரண்டாம் பத்தாண்டுகளுக்குள் நுழைகிறோம். புத்தாண்டு தினங்கள்தோறும் எப்படியாகிலும் தப்பாமல் அநேக வாக்குத்தத்த வசனங்கள் நம்மை வந்தடைகின்றன. நாம் அவை அவ்வண்ணமே பலித்திட வேண்டுமென விரும்பி ஜெபித்து வருவதுமுண்டு. ஆனால் அவை அப்படியே அனுபவமாகியதாக ஆண்டு இறுதியில் சாட்சி பகருவோர் வெகுசிலரே. காரணம் பலவிதம். அவற்றுள் பின்னணியிலுள்ள நிபந்தனைகளை கண்டுகொள்லாமல் விட்டுவிடுவது முக்கியமானதொரு காரணம்.

ஆசீர்வாதங்களை அருளும் ஆண்டவர் எப்பொழுதுமே பின்னணியில் மறைமுகமாக சில நிபந்தனைகளை வைத்திருக்கிறார் என அவரைக் குறித்து நாம் குறைவாக நினைத்துவிட வேண்டியதில்லை. ஏனெனில் வாக்குத்தத்தங்களின் பின்னணியில் கட்டளைகளை வைத்திருக்கும் தேவன் தாமே மோசே மூலம் கொடுத்த பத்துக் கட்டளைகளினூடே வெளிப்படையாக வாக்குத்தத்தங்களையும் வழங்கிட தவறவில்லை (யாத். 20:6,12 ; எபே. 6:3).

இன்று உங்களை நோக்கி வரும் வாக்குத்தத்த வசனமாகிய ஏசாயா 33: 15-16 ன் பின்னணியிலுள்ள நிபந்தனைகளையும் சற்றே நோக்குவோமா? ”V15 நீதியாய் நடந்து, செம்மையானவைகளைப் பேசி, இடுக்கண் செய்வதால் வரும் ஆதாயத்தை வெறுத்து, பரிதானங்களை வாங்காதபடிக்குத் தன் கைகளை உதறி, இரத்தஞ்சிந்துவதற்கான யோசனைகளைக் கேளாதபடிக்குத் தன் செவியை அடைத்து, பொல்லாப்பைக் காணாதபடிக்குத் தன் கண்களை மூடுகிறவனெவனோ, V16 அவன் உயர்ந்த இடங்களில் வாசம்பண்ணுவான்; கன்மலைகளின் அரண்கள் அவனுடைய உயர்ந்த அடைக்கலமாகும்; அவன் அப்பம் அவனுக்குக் கொடுக்கப்படும்; அவன் தண்ணீர் அவனுக்கு நிச்சயமாய்க் கிடைக்கும்.”


நீதியாய் நடந்து – கால்

செம்மையானவைகளைப் பேசி – வாய் / நாவு

இடுக்கண் செய்வதால் வரும் ஆதாயத்தை வெறுத்து – மனம் / மனபான்மை

பரிதானங்களை வாங்காதபடிக்குத் தன் கைகளை உதறி – கை

இரத்தஞ்சிந்துவதற்கான யோசனைகளைக் கேளாதபடிக்கு…செவியை அடைத்து – காது / செவி

பொல்லாப்பைக் காணாதபடிக்குத் தன் கண்களை மூடுகிறவனெவனோ – கண்

உயர்ந்த இடங்களில் வாசம்...உயர்ந்த அடைக்கலமாகும் – பாதுகாப்பு

அப்பம் .... தண்ணீர் அவனுக்கு நிச்சயமாய்க் கிடைக்கும் – அவசியத் தேவைகள்.



நம் வாழ்வின் அன்றாட அவசியத் தேவைகள் குறைவின்றி நிச்சயமாய் சந்திக்கப்பட நம் உடலின் அவயவங்களை அன்றாடமும் ஆண்டவர் பாதத்தில் அர்ப்பணித்து அவர் விரும்பும் விதம் வாழ ஆயத்தமா?

அப்படியெனில், இந்த வாக்குத்தத்தம் இந்த புத்தாண்டுக்கோ அல்லது வரும் பத்தாண்டுக்கோ மட்டுமல்லாமல், இப்பூவுலகில் நாம் வாழும் நாட்கள் மட்டும் நமக்கு உரித்தாகும்!