Sunday, March 04, 2012

(என்) குழந்தைக்கு பெயர் வைப்பது (வைத்தது) எப்படி?

முன்பெல்லாம் கஞ்சிக்கும் வழியில்லாத பரம ஏழைகள் கூட அஞ்சி ஆறு என குழந்தைகளைப் பெற்றெடுத்த காலம் போய், இப்போது பரவலாக எல்லோருமே ஒன்றிரண்டுடன் முடித்துக் கொள்வது வழக்கமாகிவிட்டது.  குழந்தைகள் எண்ணிக்கை குறைந்திட்டாலும் அப்படிப்பட்ட மதிப்புமிகு குழந்தைகளுக்கு பெயர் வைப்பது  என்பது எளிதான காரியம் அல்ல.

நம் குழந்தைகளுக்கு நாம் ஒரு குறிப்பிட்ட எதிர்பார்ப்புடன் தான் பெயரிடுகிறோம். பெயரிடும் வண்ணம் வரும்நாட்களில் அந்த குழந்தை உருவெடுக்கிறதோ என்னமோ, பொதுவாக குழந்தையின் பெயரை வைத்து அவரது பெற்றோர்களின் எண்ணங்களை, பண்புகளை மதிப்பிட முடியும் என்பது மட்டும் உண்மையான விஷயம்.

நான் இரட்சிப்பின் அனுபவத்திற்குள் வருவதற்கு முன் எனது அப்பாவிடம் ‘உங்களுக்கு வேறே பெயரே கிடைக்கவில்லையா?’ என கடிந்து கொண்டதுண்டு. அவரும் சங்கடப்படாமல் ;நீ இயேசுவின் பன்னிரு சீடர்களில் ஒருவனான பேதுரு போன்று வரவேண்டும்’ என்று தான் வைத்தேன் என கூலாக சொல்லுவார். அப்போது நான் சொல்வேன்: ‘அப்படிண்ணா எனக்கு பீட்டர்-ணு வச்சிருக்க வேண்டியது தானே’ . அதற்கும் அவர் சொல்லும் நியாயமான பதில், ’நான் என்ன ஆங்கிலமா படித்தேன்; A B C D கூட தெரியாத எனக்கு தெரிந்ததெல்லாம் தமிழ் வேதாகமம் ஒன்று தான்’. இப்போது என்னை யாரும் பீட்டர் என சொல்லுவதைவிட பேதுரு என சொல்லுவதையே பெருமையாக நினைக்கிறேன். பன்னிருவரில் ஒருவனான பேதுரு போன்று வரவும் முயற்சிக்கிறேன்.

சரி... இப்போது நான் எனது குழந்தைக்கு பெயர் வைத்தது எப்படி என சொல்லிட விரும்புகிறேன். 

கருவாக இருக்கும் குழந்தை ஆணா அல்லது பெண்ணா என சொல்ல மருத்துவ துறையினருக்கு அனுமதியில்லாத காரணத்தினால், எனது மனைவிக்கு ஸ்கேன் செய்த மருத்துவர் எங்கள் உறவுக்காரராய் இருப்பினும் அதனை சொல்லவில்லை; நாங்களும் பதிலை எதிர்பார்க்கவில்லை. அவர் சொல்லாததினால் இது பெண் குழந்தையாக இருக்கக் கூடும் என நானும் என் மனைவியும் பேசிக்கொண்டோம். மட்டுமல்ல, எங்கள் எதிர்பார்ப்பும் ஒரு பென் குழந்தை தான். எனவே, எனது மனைவியின் அம்மா ‘எலிசபெத்’, எனது அம்மா ‘கிரேஸ்’ இரண்டையும் இணைத்து, “எலிசபெத் கிரேஸ்” என பெயரிடுவதாக முடிவு செய்திருந்தோம்.

பிறந்ததோ ஆண் குழந்தை. எனவே, என்ன பெயரிடலாம் என விவாதிக்க ஆரம்பித்தோம்.  ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை. ஏதாவது மிஷனரி பெயரை இடலாம் என எண்ணி, திருநெல்வேலி சி.எஸ்.ஐ. டயோசிசன் புத்தகச்சாலை சென்று  நண்பர் சுவிஷேச ஜெபக்குழு-வின் வெளியீடான ‘மறக்க முடியா மா மனிதர்கள்’ என்ற நூலை வாங்கினேன். புத்தகம் முழுவதையும் ஒரே மூச்சில் வாசித்து முடித்து அந்த நபர்களின் பெயர்களில் விருப்பமானவற்றை Short list பண்ணிக் கொண்டு, மனைவியிடம் விவாதித்தேன். அவளுக்கு Stephen (தமிழில் - ஸ்தேவன்) என்ற பெயர் இணைந்து வரும்படி இருக்கவேண்டும் என அவள் விருப்பத்தை கூறினாள்.

Short list பண்ணியிருந்த பட்டியலில் இருந்த ஹட்சன் இறுதி செய்யப்பட்டதற்கு இரண்டு காரணம் உண்டு. ஒன்று அவர் சீனாவுக்கு சென்ற முதல் மருத்துவ மிஷனரி; இரண்டாவது எனது அப்பா பெயர் தேவதாசன் என்பதால், இது சன் என முடிவதில் எனக்கு ஒரு திருப்தி.  எனவே இறுதியில் சொல்வழக்குக்கு வசதியாக “ஸ்டீவ் ஹட்சன் - STEVE HUDSON”  என வைத்துக் கொண்டோம்.


முதல் நூற்றாண்டின் இரத்தசாட்சி ஸ்தேவான் போன்று, ஹட்சன் டெய்லர் போன்று அவன் ஒரு மிஷனரியாக வரவேண்டும் என்பது எங்கள் ஆசை.  அது போன்று ஒருகூட்ட மிஷனரிகளை தட்டி எழுப்பவேண்டும் என்பது எனது கனவு.

எனக்கு மிகவும் பிடித்த மறைந்த தேவமனிதர் டாக்டர். ஜஸ்டின் பிரபாகரன் அவர் கடைசியாக பாடிய ’முதல் இரத்த சாட்சி யார்?’ என்ற அவரது இறுதிப் பாடலை அடிக்கடி கேட்டுதான்  எனக்கு அவ்வித எண்ணம். அந்த பாடலை பதிவிறக்கம் செய்து கேட்க இங்கே கிளிக் செய்யவும்: http://www.saavn.com/s/song/tamil/Idimuzhakka-Geethangal/Muthal-Ratha-Saatchi/OiIsVA1XDnA