உயிர்த்தெழுந்த
இயேசு பரமேறிச் செல்லும் முன்னர் ”… எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்” என தன்னைச் சுற்றியிருந்த
சீஷர்கள் கூட்டத்தில் தனது இறுதி வார்த்தைகளை சொல்லிச் சென்றார் (அப். 1:8). ஒரு கிறிஸ்தவன்
தன் வாழ்க்கையில் கிறிஸ்துவுக்கு சாட்சியாக இருக்க வேண்டிய அநேக இடங்களில், வேலை செய்யும்
இடம் முக்கியமான ஒன்று. ஏனெனில் சராசரியாக நாம் ஒரு நாளில் குறைந்தபட்சம் மூன்றில்
ஒரு பகுதியை நம் வேலையில் தான் கழிக்கிறோம். மேலும் நமது விருப்பு வெறுப்புகளுக்கு
அப்பாற்பட்டு நமது வேலை இடத்தில் தான் கிறிஸ்துவை அறியாத அநேகரை நாம் அதிக நேரம் சந்திக்க
நேரிடுகிறது. தேறினவன் எவனும் தன் குருவைப்
போல் இருப்பான் என்ற வசனத்திற்கு ஏற்ப, நமது வேலை செய்யும் சூழ்நிலைகளில் கிறிஸ்து
எப்படி நடந்து கொள்வாரோ அந்த விதமாகவே ’கிறிஸ்து அவன்’ என்று சொல்லப்படும் அந்த கிறிஸ்தவன்
நடந்து கொள்வதே வேலை இடத்தில் ஒரு கிறிஸ்தவ சாட்சி என்பதாகும்.
வேலை
இடத்தில் நாம் சாட்சியாக இருக்க முயலும் வேளையில், வேலையை குறித்த நமது கண்ணோட்டம்
சரியாக இருக்க வேண்டும். முதலாவதாக, உலகத்தில்
பலர் நினைப்பது போன்று வேலை என்பது ஒரு சாபமோ அல்லது அதன் விளைவோ அல்ல. தேவன் முதல்
மனிதனைப் படைத்தபோது அவனுக்குத் தேவையான அனைத்தையும் நேர்த்தியாய் படைத்த (creation)
பின்னர் மேற்கொண்டு அவனுக்கு அந்த படைக்கும் வேலையைக் (creative work) கொடுத்தார்.
அதாவது, முதல் மனிதன் தன் பாவத்தினால் சாபத்தை வாங்கிக் கட்டிக் கொள்ளும் முன்னரே,
அவனுக்கு நிலத்தைப் பண்படுத்தும் மற்றும் பாதுகாக்கும் வேலையை தேவன் கொடுத்திருந்தார்
(ஆதி. 2:15).
இரண்டாவதாக, உலகம் வேலையை
ஒரு வருமானம் ஈட்டும் வழிமுறையாக மட்டுமே பார்க்கிறது. கிறிஸ்தவப் பார்வையின்படி, தேவன்
தன் வார்த்தையால் உலகத்தையே படைத்திருப்பினும் நமது வேலை மூலமாகத் தான் உலகத்தின் அதன்
ஜீவராசிகளின் அனைத்து தேவைகளையும் சந்தித்து வருகிறார். அதாவது, மனிதர்கள் மூலமாகவே
தேவன் செயல்படுகிறார். மூன்றாவதாக, உலகப்
பார்வையில் வேலை என்பது ஒருவரின் வாழ்க்கைக்குத் தேவையான வருமானத்தை தருவதுடன் அவருக்கு
சமுதாயத்தில் ஒரு அடையாளத்தையும் அங்கீகாரத்தையும் அளிக்கிறது. கிறிஸ்தவப் பார்வையில்,
நமது வேலைகளின் மூலம் தேவன் தனது செயலை ஆற்றுவதுடன், அந்த வேலைகளின் மூலமாக நம் இருதயங்களை
பக்குவப்படுத்தி நம்மை அவரது சீடர்களாக உருவாக்குகிறார்.
உலகப்
பார்வையில் இருந்து வேறுபடும் இந்த மூன்று உண்மைகளையும் நாம் புரிந்து கொண்டு செயல்படும்போது
வேலையிடத்தில் ஒரு கிறிஸ்தவ சாட்சியாக இருப்பது என்பது அவசியமானதாகவும் எளிதாகவும்
நமக்கு அமைந்து விடுகிறது. கிறிஸ்தவர்களாக நாம் கீழ்க்கண்ட காரியங்களில் அவருக்கு சாட்சியாக
இருக்க முடியும்.
1) நேர்த்தி (Perfection):
பிடித்த
வேலை என்றால் மட்டும் உற்சாகமாய் செய்வது உலகத்தார் வழக்கமாக இருக்கலாம். ஆனால் பெரியதோ
சிறியதோ, உயர்ந்ததோ தாழ்ந்ததோ, வருமானம் குறைந்ததோ அதிகமானதோ, வேலை நிரந்தரமானதோ தற்காலிகமானதோ
எப்படி இருந்தாலும் அது தேவன் எனக்குத் தந்த வேலை என்ற உணர்வுடன் அந்த வேலையைச் செய்யும்போதோ,
அதில் உண்மையாகவும் உத்தமமாகவும் இருக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். இல்லாவிட்டால் அது
சுயபரிதாபம், பொறாமை, புறங்கூறுதல் மற்றும் வேலை இடத்து அரசியல் போன்ற காரியங்களுக்குள்
நம்மை வழிநடத்தி விடும். ’செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே
செய்’ (பிரசங்கி 9:10); ’சகல பிரயாசத்தினாலும் பிரயோஜனமுண்டு’ (நீதி 14:23); ’தன் வேலையில்
ஜாக்கிரதையாயிருக்கிறவனை நீ கண்டால், அவன் நீசருக்கு முன்பாக நில்லாமல், ராஜாக்களுக்கு
முன்பாக நிற்பான்’ (நீதி 22:29) என்பவையெல்லாம் சாலமோனின் அனுபவம் மற்றும் அறிவுரை.
எனவே கிறிஸ்தவர்களாக நாம் வேலை இடத்தில் நேர்த்திக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
நேரம் தவறாமை (Punctuality)
நமது
வேலைகளுக்கு நாம் குறித்த நேரத்தில் முடிந்தால் அதற்கு சற்று முன்னரே வந்து சேர்வது
நம்மை குறித்து வேலை இடத்தில் நமக்கு நற்பெயரை கொண்டு வருவதுடன் நாமும் பதட்டமின்றி
பொறுமையுடன் பொறுப்பாக வேலையைச் செய்து முடிக்க அது உதவுகிறது. வேலை நேரத்தில், வேலையைக்
காட்டிலும் வேறு தனிப்பட்ட காரியங்களுக்கு (ஊழிய காரியமாகவே இருப்பினும்) முக்கியத்துவம்
கொடுத்து, உரிய அனுமதி எதுவுமின்றி குறித்த நேரத்திற்கு முன்னரே வேலையிடத்தை காலி செய்வதும்
கூடாது. நேரம் தவறாமை என்பது வேலையில் நமது சுறுசுறுப்பு, ஆர்வம் மற்றும் அர்ப்பணிப்பு
இவைகளின் ஒரு அடையாளம் ஆகும். எனவே, நாட்கள்
பொல்லாதவைகளானதால், புறம்பே இருக்கிறவங்களுக்கு முன்பாக நாம் ஞானமாய் நடந்து காலத்தைப்
’பிரயோஜனப்படுத்திக்’ கொள்ள வேண்டும் (எபே 5:16; கொலோ 4:5) கிறிஸ்தவர்கள் என சொல்லிக்கொள்கிறவர்கள்
எவரும் தங்கள் வேலை நேரத்தில், யாதொரு வேலையும் செய்யாமல், வீண் அலுவற்காரராய், ஒழுங்கற்றுத்
திரிகிறவர்களாக இருக்கக் கூடாது (2 தெச 3:11).
3) நேர்மை (Integrity):
நாம்
மனுஷருக்குப் பிரியமாயிருக்க விரும்புகிறவர்களாகப் பார்வைக்கு வேலை செய்யாமல், கிறிஸ்துவின்
ஊழியக்காரராக, மனப்பூர்வமாய் தேவனுடைய சித்தத்தின்படி செய்ய வேண்டும்; அப்படி கர்த்தராகிய
கிறிஸ்துவைச் சேவிக்கிறதினாலே, சுதந்தரமாகிய பலனைக் கர்த்தராலே பெறுவோம் (கொலோ
3:24; எபே 6:6). கொஞ்சத்திலே உண்மையாயிருக்கிற உத்தமமும் உண்மையுமான ஊழியக்காரனையே
அவனுடைய எஜமான் அநேகத்தின் மேல் அதிகாரியாக வைப்பார் (மத். 25:21). எனவே வேலையிடத்தில்
இருக்கும் பொருட்கள் மற்றும் வசதிகளை நமது சொந்தத் தேவைகளுக்காக இலவசமாக பயன்படுத்திக்கொள்ள
நினைக்கக் கூடாது. மருத்துவச் சான்று கொடுத்து சொந்த விடுப்பில் செல்வது, பயன்படுத்தப்படாத
வசதிகளுக்கு உரிமை கோருதல், அலுவலக நேரத்தில் சொந்த வேலையைச் செய்தல், மனிதர்களின்
தயவு கிடைப்பதற்காக லஞ்சம் அல்லது செல்வாக்கை பயன்படுத்துதல், வேலை இடத்து நெறிமுறைகளை
மனப்பூர்வமாக மீறுதல் போன்றவை நம்மிடம் இருக்கவே கூடாது. மேலதிகாரிகளை மதித்தல், சக
மற்றும் கீழுள்ள வேலையாட்களிடம் நல்லுறவைப் பேணுதல், குறிப்பாக எதிர்பாலருடம் முறையான
உறவைப் பேணுதல் ஆகியவை நாம் கவனமாக இருக்க வேண்டிய இன்னும் பிற காரியங்களாகும்.
மேற்கண்ட
காரியங்களில் கவனமாக இருந்து மற்றவர்களிடமிருந்து நாம் வித்தியாசமாக இருக்கும் போது
கண்டிப்பாக சிலர் நம்மிடம் வந்து, ’நீ ஏன் இப்படி? உன்னால் மட்டும் எப்படி முடிகிறது?’
என்று வினவுவர். அப்போது ’அதெல்லாம் ஒன்றுமில்லை; அது எனது பழக்கதோஷம்; எனது சிறுவயது
நற்பண்பு’ என்று சாதாரணமாகச் சொல்லி, வந்த வாய்ப்பை நழுவ விட்டுவிட வேண்டாம். ’என்னில்
இருக்கும் இயேசுவால் தான் இப்படி’ என்று நாம் தைரியமாகச் சொல்ல வேண்டும். ’உங்களிலிருக்கிற
நம்பிக்கையைக்குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும்
வணக்கத்தோடும் உத்தரவுசொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள்’ (1 பேதுரு 3:15) என்ற வசனத்தின்படி
வேலை இடத்தில் சாட்சியாக இருக்க மட்டுமல்லாமல் சாட்சி கொடுக்கவும் நாம் ஆயத்தமாக இருக்கவேண்டும்.
அப்படி கொடுக்கும் சாட்சி மட்டுமே மதமாற்றம் என்னும் குற்றச்சாட்டுக்கும் அப்பாற்பட்டு நின்று நிறைவான பலனைத் தரும். இவற்றை
மனதில் நிறுத்தி வேலை இடத்தில் நாம் சாட்சியாக இருப்போம்; சாட்சி பகருவோம்.
”புறஜாதிகள்
உங்களை அக்கிரமக்காரரென்று விரோதமாய்ப் பேசும் விஷயத்தில், அவர்கள் உங்கள் நற்கிரியைகளைக்கண்டு
அவற்றினிமித்தம் சந்திப்பின் நாளிலே தேவனை மகிமைப்படுத்தும்படி நீங்கள் அவர்களுக்குள்ளே
நல்நடக்கையுள்ளவர்களாய் நடந்துகொள்ளுங்கள்” (I பேதுரு 2:12).
0 comments:
Post a Comment