கிறிஸ்துவில்
பிரியமான சகோதர சகோதரிகளுக்கு இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள். கடந்த பத்து மாதங்களாக
கனியுள்ள கிறிஸ்தவ வாழ்க்கை என ஆரம்பித்து, பின்னர்
அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம்,
சாந்தம், இச்சையடக்கம் என மாதமொரு ஆவியின்
கனியாக இவற்றை தொடர்ச்சியாக தியானித்து
வந்திருக்கிறோம். இவற்றின் மூலம் நமது கிறிஸ்தவ
வாழ்க்கையில் அடிப்படையாக வெளிப்பட வேண்டிய பண்புகளை நன்கு
அறிந்து கொண்டோம்.
இருப்பினும்
நாளுக்கு நாள் புதிதாக வேண்டிய
நமது ஆவிக்குரிய வாழ்க்கையில், ஒருவித சோர்வையும் முன்னேற்றமில்லாத
நிலைமையும் நாம் அவ்வப்போது அனுபவிக்க
நேரிடுகிறது. கனியற்ற கிறிஸ்தவ வாழ்க்கையின்
காரணங்கள், அதன் ஆபத்துக்கள், அதன்
நிவாரணங்கள் குறித்து இப்போது பார்ப்போம். இதுகுறித்து
சிந்தித்துக் கொண்டிருந்த போது, “God loves everyone, but
probably prefers "fruits of the spirit" over "religious
nuts." என்ற ஒருவரிச் செய்தி என் கண்ணில்
பட்டது. ”தேவன் அனைவரையும் நேசிக்கிறார்;
இருப்பினும் புத்திபேதலித்த சமயப் பற்றாளர்களைக் காட்டிலும்
ஆவிக்குரிய கனிகளைக் கொடுப்பவர்களுக்குத் தான் அவர் முக்கியத்துவம்
கொடுக்கிறார்” என்பதே அந்த ஒருவரிச்
செய்தி.
நாம் இரட்சிக்கப்பட்டு தேவனுடைய பிள்ளைகளாய் கிறிஸ்தவ வாழ்க்கையில் வளர்ந்து வரும்போது காலங்கள் செல்லச்செல்ல, நாம் கனிதரும் நிலையில்
முன்னேறியிருக்கிறோமா என்று நம்மைநாமே சீர்தூக்கிப்
பார்க்க வேண்டியது அவசியம். மரம்
செடி கொடிகள் என்றால் அவை
ஒருகட்டத்தில் அவற்றின் கனியை (பலனை) கொடுக்கும்.
நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும் (மத்தேயு 3:10). நமது கிறிஸ்தவ வாழ்க்கையும்
அப்படித்தான். கனி இல்லையேல் கதி
இல்லை. திராட்சைத் தோட்டக்காரரான பரமபிதா திராசைச்செடியாகிய இயேசுகிறிஸ்துவில்
கனிகொடாதிருக்கிற கொடி (நாம் தான்)
எதுவோ அதை அவர் அறுத்துப்போடுகிறார்;
கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது
அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம்பண்ணுகிறார் (யோவான்
15:1,2).
நம்மிடம்
ஆவியின் கனி வெளிப்படுகிறதா இல்லையா
என்பதை வெளியரங்கமான மாம்சத்தின் கிரியைகள் நம்மிடத்தில் காணப்படுகின்றனவா இல்லையா என்பதிலிருந்து அறிந்து
கொள்ளலாம். அவையாவன: விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம், விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள்,
கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள், பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே (கலா. 5:19-21). கிறிஸ்துவை அறிந்தவர்கள் என சொல்லிக்கொள்ளும் நம்மிடத்தில்
ஒருவேளை இவைகள் காணப்படுமெனில், நாம்
தான் அந்த புத்திபேதலித்த சமயப்
பற்றாளர்கள் (religious
nuts). இந்த அவலநிலை நமக்கு வேண்டாமெனில்,
கனிதரும் நிலையில் நாம் முன்னேற வேண்டும்.
மரம் செடி கொடிகள் கனி
கொடுக்க, அவற்றிற்கென நேரம் காலங்கள் உண்டு.
ஆனால், கிறிஸ்தவ வாழ்க்கையில் அவ்விதம் நேரம் காலங்களெல்லாம் கிடையாது;
அனுதினமும் கனி கொடுக்க வேண்டும்.
இயேசு ஒருமுறை தனது பன்னிரு
சீடர்களுடன் பெத்தானியாவுக்கு பயணமான போது, அவருக்குப்
பசி உண்டாயிற்று. அப்பொழுது வழியருகே இலைகளுள்ள ஒரு அத்திமரத்தைத் தூரத்திலே
கண்டு, அதில் ஏதாகிலும் அகப்படுமோ
என்று பார்க்கவந்தார். அத்திப்பழக்காலமாயிராதபடியால், அவர் அதினிடத்தில் வந்தபோது
அதிலே இலைகளையன்றி வேறொன்றையும் காணாமல்: இனி ஒருக்காலும் உன்னிடத்தில்
கனி உண்டாகாதிருக்கக்கடவது என்றார்; உடனே அத்திமரம் பட்டுப்போயிற்று.
சீஷர்கள் அதைக்கண்டு: இந்த அத்திமரம் எத்தனை
சீக்கிரமாய்ப் பட்டுப் போயிற்று என்று
சொல்லி ஆச்சரியப்பட்டார்கள் (மத். 21:17-20 & மாற்கு 11:11-14). இயேசு நம்மில் கனியைத்
தேடும் போது அது இல்லையெனில்
நம்மால் எந்த சாக்குப் போக்கும்
சொல்ல இயலாது. நிச்சயம் நாம்
நித்திய நரகமான அவரது சாபத்திற்கு
உள்ளாக நேரிடும்.
இனிப்பு
(Sweet), புளிப்பு (Sour),
காரம் (Pungent), உவர்ப்பு (Salt), துவர்ப்பு (Astringent) மற்றும் கசப்பு (Bitter) என
சுவைகள் ஆறு வகைகள் இருப்பினும்
நாம் உண்ணும் அனைத்து உணவிலும்,
இவை ஆறும் ஒருங்கே இருப்பதில்லை.
ஒன்றோ அல்லது ஒன்றிற்கும் மேற்பட்ட
சுவையோ இருக்கலாம். ஒன்றிற்கும் மேற்பட்ட சுவைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு
விகிதாச்சாரத்தில் கலந்திருக்கும் போது அந்த உணவின்
சுவையும் தரமும் மாறுவதைக் காண்கிறோம்.
அதுபோலவே கனிகொடுக்கும் கிறிஸ்தவ வாழ்க்கையும். ஆவியின் கனியாகிய ஒன்பது
அம்சங்களும் சூழ்நிலைகளுக்கேற்ப தேவைகளுக்கேற்ற விதவிதமான விகிதாச்சாரங்களில் ஒருங்கே வெளிப்படும் போது
அது தேவனுக்கு மகிமை கொண்டுவரக்கூடிய கனிதரும்
வாழ்க்கையாக அமைகிறது.
இதனை வலியுறுத்தும் விதமாக அப்போஸ்தலனாகிய பேதுரு
இவ்விதம் குறிப்பிடுகிறார். ’இப்படியிருக்க, நீங்கள் அதிக ஜாக்கிரதையுள்ளவர்களாய்
உங்கள் விசுவாசத்தோடே தைரியத்தையும், தைரியத்தோடே ஞானத்தையும், ஞானத்தோடே இச்சையடக்கத்தையும், இச்சையடக்கத்தோடே பொறுமையையும், பொறுமையோடே தேவபக்தியையும், தேவபக்தியோடே சகோதர சிநேகத்தையும், சகோதர
சிநேகத்தோடே அன்பையும் கூட்டி வழங்குங்கள். இவைகள்
உங்களுக்கு உண்டாயிருந்து பெருகினால், உங்களை நம்முடைய கர்த்தராகிய
இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவிலே வீணரும்
கனியற்றவர்களுமாயிருக்க வொட்டாது’ (2 பேதுரு 1:5-7). கனிதரும் கிறிஸ்தவ வாழ்க்கையில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆவியின் கனி அம்சங்களில்
ஒவ்வொன்றாக நாம் பெருகும் போது
எந்த அளவில் நாம் அவற்றில்
பெருகுகிறோமோ அந்த அளவுக்கு அது
பூரண சுவையுள்ள கனி தரும் வாழ்க்கையாக
அமையும்.
கனிதரும்
கிறிஸ்தவ வாழ்க்கையில் வளர்ச்சி இல்லையெனில் அது வீழ்ச்சியே. ஏதோ
ஒரு முறை ஏதோ ஒரு
வகை கனியைக் கொடுத்தை மட்டும்
மனதில் வைத்துக்கொண்டு திருப்தியடைந்து விடமுடியாது. தொடர்ச்சியாக இன்னும் பல அம்சங்களில்
கனிதரும் நினையில் முன்னேற வேண்டும். இல்லையெனில்
நாம் இரட்சிக்கப்பட்டு பாவங்கள் மன்னிக்கப் பட்டதையும் அதன் நோக்கத்தையும் மறந்து
ஒரு சாராசரி பெயர்க் கிறிஸ்தவராகவே
வாழ்ந்து விடுவோம். இதைத்
தான், 2 பேதுரு 1:9 ல் இவ்விதம் காண்கிறோம்,
’இவைகள் இல்லாதவன் எவனோ, அவன் முன்செய்த
பாவங்களறத் தான் சுத்திகரிக்கப்பட்டதை மறந்து கண்சொருகிப்போன
குருடனாயிருக்கிறான்’.
இந்த நிலைமை மாற நாம்
செய்ய வேண்டியதென்ன? தாவீது சொன்னார்: ’கர்த்தருடைய
வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய
வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். அவன்
நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன்
காலத்தில் தன் கனியைத் தந்து,
இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்’
(சங். 1:2-3). இயேசு
சொன்னார்: ’என்னில் நிலைத்திருங்கள், நானும்
உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்கமாட்டாததுபோல,
நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள்’
(யோவான் 15:4). பவுல் சொன்னார்: ’நம்முடையவர்களும்
கனியற்றவர்களாயிராதபடி குறைவுகளை நீக்குகிறதற்கேதுவாக நற்கிரியைகளைச் செய்யப் பழகட்டும்’ (தீத்து
3:14). ’ஆவியின் கனி, சகல நற்குணத்திலும்
நீதியிலும் உண்மையிலும் விளங்கும்’ (எபே. 5:9).
இவ்விதம்
நாம் தேவனுடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இயேசுவில் நிலைத்திருந்து நம் கனிதரும் வாழ்க்கை
நமது சகல நற்குணத்திலும் சகல
நற்கிரியைகளிலும் வெளிப்பட தேவன் நமக்கு உதவி
செய்வாராக. ஆமென்.
[இது பாலைவனச் சத்தம் – அக்டோபர் 2017 இதழில் வெளியான எனது கட்டுரை]
[இது பாலைவனச் சத்தம் – அக்டோபர் 2017 இதழில் வெளியான எனது கட்டுரை]
.
0 comments:
Post a Comment