Monday, January 09, 2017

எல்லாவற்றையும் செய்ய எனக்குப் பெலனுண்டு


"என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே
எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டுபிலி. 4:13

நண்பர்கள் அனைவருக்கும் எனது அன்பான இனிய புத்தாண்டு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். இந்த வருடம் உங்கள் வாழ்வில் ஒரு ஆசீர்வாதமான மற்றும் சமாதானமான வருடமாக இருந்திட மனதார வாழ்த்துகிறேன். நம்மில் பலரும் இன்று புதுவருட ஆராதனைகளில் கலந்து கொண்டு இந்த வருடத்திற்கான வாக்குத்தத்த வசனங்களை இன்று முதல் உரிமைகோர தொடங்கியிருப்போம். அது அப்படியே நடக்கட்டும். ஏனெனில், ’தேவனுடைய வாக்குத்தத்தங்களெல்லாம் இயேசுகிறிஸ்துவுக்குள் ஆம் என்றும், அவருக்குள் ஆமென் என்றும் இருக்கிறதே’ (2 கொரி. 1:20).

அவ்விதமே, இந்த வருடத்தில் செய்ய வேண்டிய அல்லது செய்ய வேண்டாத காரியங்கள் குறித்தும் நம்மில் பலரும் திட்டமிடுவதுண்டு. அவ்வித தீர்மானங்கள் நிச்சயம் வருட இறுதியில் திரும்பிப் பார்க்கும் போது, ஒருவேளை நாம் அவைகளை முழுமையாக நிறைவேற்றாவிட்டாலும், அது ஒரு இலக்கினை நோக்கிப் பயணிக்க நமக்கு உதவியிருப்பதை நாம் நிச்சயம் அறிந்து கொள்வோம். நாம் எடுத்திருக்கும் தீர்மானங்கள் அனைத்தையும் நாம் நிறைவேற்ற வேண்டும் என்றே நாம் விரும்புகிறோம். அதற்கு நமது சொந்த பக்தியோ சக்தியோ மட்டும் போதாது. தேவனுடைய கிருபையும் பெலனும் அவசியமாகிறது. ’என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டுபிலி. 4:13) என்ற பவுலின் வார்த்தைகளை நாமும் இந்த புத்தாண்டு வாக்காக உரிமை கொண்டாடி, இந்த வருடத்தில் செய்யவேண்டுமென எடுத்த தீர்மானங்களை நிறைவேற்றிட உற்சாகம் அடைவோம்.

பெலப்படுத்துகிற கிறிஸ்து:

தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்என பிலிப்பியர் 2:13 ல் வாசிக்கிறோம். எனவே இந்த புத்தாண்டு தினத்தில் நல்ல தீர்மானங்களை நாம் எடுக்க நமக்கு உதவி செய்தவர் தேவன். நாம் அவைகளை நிறைவேற்றிடவும் அவர் நம்மை பெலப்படுத்துவார். ’என்னைப் பலப்படுத்துகிற நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்னை உண்மையுள்ளவனென்றெண்ணி, இந்த ஊழியத்திற்கு ஏற்படுத்தினபடியால், அவரை ஸ்தோத்திரிக்கிறேன் (I தீமோ. 1:12) என்கிறார் பவுல். கர்த்தராகிய அநாதி தேவன் 'சோர்ந்துபோகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார்' (ஏசாயா. 40:29). எனவே நமது தீர்மானங்களை நிறைவேற்றி முடித்திட, தனியாக நான் மட்டுமல்ல என்னுடன் தேவனும் இருக்கிறார் என்ற தைரியத்துடன் நாம் செயல்படலாம்.

எல்லாவற்றையும் செய்ய:

இந்த வருடத்தில் நான் இதைச் செய்துவிட வேண்டும், அதைச் செய்துவிட வேண்டும் என நாம் கண்டதற்கும் ஆசைப்படுகிறோம். நமது தகுதிக்கும் வாய்ப்புகளுக்கும் பொருத்துமானவைகளையே நாம் ஆசைப்பட வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக நாம் தீர்மானிப்பது தேவனுடைய சித்தத்திற்கு உட்பட்டதா என்பதையும் சோதித்தறிய வேண்டும். 'நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படிகேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம்' (I யோவான் 5:14).

தேவனிடத்தில் பெரிய காரியங்களை எதிர்பார்; தேவனுக்காய் பெரிய காரியங்களை முயற்சி செய்என்பது வில்லியம் கேரி அவர்களின் கூற்று. ஆம், நாம் இந்த வருடத்தில் முயற்சிக்க தீர்மானிக்கும் காரியங்கள் அவருடைய விருப்பத்தின் படியும் அவருக்கு மகிமையைக் கொண்டுவருவதாகவும் இருக்கிறதா என சோதித்தறிந்து, அந்த தீர்மானங்களில் முன்னேறுவோம்.

எனக்கு பெலனுண்டு:

எனக்கு பெலனுண்டு என நாம் சொல்லிக் கொள்வது வெறும் விசுவாச அறிக்கையாக மட்டுமல்ல, அது செயலிலும் வெளிப்பட வேண்டும். முதலில் முயற்சிக்க வேண்டும். அதாவது, விசுவாசத்தில் நாம் முதல் படியை எடுத்து வைத்து நமது தீர்மானங்களை நிறைவேற்ற முயலவேண்டும். ஏனெனில் முயற்சி என்னும் முதல்படி தான் மேற்படிகளுக்கு நம்மை நடத்திச் செல்லும் முதற்செயல். குணசாலியான ஸ்திரிதன்னைப் பெலத்தால் இடைக்கட்டிக்கொண்டு, தன் கைகளைப் பலப்படுத்துகிறாள்என நீதிமொழிகள் 31:17 ல் வாசிக்கிறோம். நம்மில் உள்ள பெலன் நமது கைகளின் கிரியைகளில் வெளிப்பட வேண்டும்.

வெறும் நல்ல தீர்மானங்களை மட்டும் கொண்டிருந்து கைகளினால் அவைகளை நிறைவேற்ற முயற்சி செய்யாதிருப்போமானால், அந்த நல்ல தீர்மானங்களே நம்மை சலிப்படையச் செய்யும் (Ref. நீதி. 21:25). குற்ற உணர்வு, தாழ்வு மனப்பான்மை, (கை)விட்டுவிடுதல் போன்ற காரியங்கள் விரைவில் நம்மை வந்தடையும். கிரியையில்லாத விசுவாசம் செத்ததாயிருக்கிறது போல, கிரியையில்லாத தீர்மானங்களும் செத்தவைகளே. அவைகளினால் எந்த பிரயோஜனமும் இல்லை. தீர்மானங்களை தொடர்ந்து நிறைவேற்றும் போது தடைகள் ஏமாற்றங்கள் சோர்வுகள் குறுக்கே வரும். இருப்பினும் அவற்றில் பொறுமையுடன் ஓடிட, என்னை பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய எனக்குப் பெலனுண்டுஎன்ற விசுவாச அறிக்கை நமக்கு பெரிதும் உதவும்.

நாட்கள் செல்லச் செல்ல, நமது தீர்மானங்களில் தொய்வு காணப்பட்டால், ’நீதிமான் ஏழுதரம் விழுந்தாலும் திரும்பவும் எழுந்திருப்பான், (நீதி. 24:16) என்ற வசனத்தின்படி நாம் உற்சாகமடைய வேண்டும். ஏனெனில் நம்மை பெலப்படுத்துகிறவர் கிறிஸ்து. தினமும் அவரது பெலனுக்காக நாம் அவரது சமூகத்தில் காத்துநிற்க வேண்டியது அவசியமாகிறது. ஏனெனில், ’இளைஞர் இளைப்படைந்து சோர்ந்துபோவார்கள், வாலிபரும் இடறிவிழுவார்கள். கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலனடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்’ (ஏசாயா 40:30,31).

எனவே இந்த வருடத்திலாவது நமது தீர்மானங்கள் முழுமையாக நிறைவே(ற்)றிட, நம்மை பெலப்படுத்தும் கிறிஸ்துவின் பாதத்தில் தினமும் அர்ப்பணித்து செயல்படுவோம்; அவ்விதம் செயல்பட்டால், வருட இறுதியில் திரும்பிப் பார்க்கும்போது அதற்குரிய பலனை அடைந்திருப்போம்.

தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார். [பிலிப்பியர் 2:13]

0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

Post a Comment