Tuesday, May 15, 2012

வாழ்வா? சாவா? ... முடிவெடுக்கும் தைரியசாலிகளா நீங்கள்?


எனது முதுநிலை பட்டப்படிப்பின் போது எனக்கு சி.எம்.சி. மருத்துவமனையின் மயக்க மருந்து துறையில் ஒருமாத கால பயிற்சி இருந்தது. அப்போது, நான் கண்ட ஒரு அறுவை சிகிச்சை என்னை வெகுவாக கவலையடையச் செய்தது. திடகாத்திரமான உடல்வாகு உடைய 23 வயது இளைஞன் ஒருவனின் வலது காலை அதன் முழங்கால் மூட்டுக்கு மேலே வெட்டி எடுத்து விடுவது தான் (Above Knee Amputation) அந்த அறுவை சிகிச்சை.

அந்த இளைஞனுக்கு அப்படி என்ன பிரச்சினை வந்து விட்டது. வலது முழங்கால் மூட்டில் சிறிய வீக்கம் மற்றும் வலி. வலி காரணமாக மருத்துவர்களிடம் வந்த அவனுக்கு இப்போது மூட்டுவலியைக் காட்டிலும் பெரிய வலி ஒன்று வந்து சேர்ந்தது. அது என்னவெனில், அந்த வீக்கம் மற்றும் வலிக்கு காரணம் அந்த எலும்பில் தோன்றியுள்ள ஒரு சிறிய கேன்சர் கட்டி வளர்ச்சி எந்த மருந்து மாத்திரைக்கும் அடங்காத ஒன்று (). அறுவை சிகிச்சை மூலம் அதையும் அதன் சுற்று வட்டாரத்திலுள்ள நல்ல பகுதிகளையும் அகற்றிவிடுவதே ஒரே வழி என்பது தான் இப்போது மிகப்பெரிய வலி.

வேறுவழியே இன்றி அவ்விதம் அறுவை சிகிச்சை செய்ய அவன் ஒப்புக் கொண்டதால், அன்றைய தினம் அந்த அறுவை சிகிச்சை நடந்தது. மயக்க மருந்துக்கு அவனை தயார் செய்யும் போது, அவனது காலை நன்றாக உற்று நோக்கினேன். அப்படி ஒன்று பெரிதான பிரச்சினை அதில் இருப்பதாக வெளிப்புறமாக தெரியவில்லை. ஆனால் Biopsy Report சொல்லும் விதமாக அறுவை சிகிச்சை செய்யாவிடில் அவன் சில மாதங்களில் இறந்து போவது உறுதி. அறுவை சிகிச்சையின் ஒரு கட்டத்தில் வெட்டப்பட்ட அந்த காலை அப்படியே தூக்கி அதற்குரிய குப்பைத் தொட்டியில் (Bio Medical Disposable Bag) போடும் போது அந்த காட்சி மிகவும் பரிதாபமாக இருந்தது. 

இயேசு கிறிஸ்து இப்படியாக சொல்லியுள்ளார்: “உன் கால் உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைத் தறித்துப்போடு; நீ இரண்டு காலுடையவனாய் அவியாத அக்கினியுள்ள நரகத்திலே தள்ளப்படுவதைப்பார்க்கிலும், சப்பாணியாய் ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும்” (மத்தேயு 18:8; மாற்கு 9:45).  இந்த வசனத்தை யோசிக்கும் போதெல்லாம், அவியாத அக்கினியின் கொடுமையை வர்ணிப்பதற்காக ஒரு எடுத்துக்காட்டாக தான் இதனை சொல்லியிருப்பார் என நான் நினைத்துக் கொள்வதுண்டு. ஆனால், அது உவமையாக அல்ல; உண்மையாகவே சொல்லப்பட்ட வார்த்தை என்பதை இந்த நிகழ்ச்சி எனக்கு ஞாபகப்படுத்தியது.

இரண்டு காலுடையவனாய் சில மாதங்களில் மரிப்பதைக் காட்டிலும் சப்பாணியாய் பல வருடங்கள் இந்த உலகில் வாழ்வது நல்லது அவனுக்கும் அவனது பெற்றோருக்கும் மனதில் பட்டதினால், அந்த அறுவை சிகிச்சைக்கு ஒப்புக் கொண்டனர். ஐயோ, இளம் வயது தானே… இப்போது தானே படித்து முடித்திருக்கிறான்… இனிமேல் தான் வேலைக்கு போக வேண்டும் … பின்னர் திருமணத்திற்கு பெண் பார்க்க வேண்டும். ஒரு கால் இல்லாதவனுக்கு எப்படி பெண் கிடைக்கும் என்றெல்லாம் அவர்கள் மனம் பாடுபட்டிருக்கும்…. ஆனாலும் துணிந்து இந்த முடிவை எடுத்தனர்; ஜீவனைக் காத்துக் கொண்டனர். 

அந்த இளைஞன் சாதாரண வலிதானே, சிறிய வீக்கம் தானே என நினைத்துக் கொண்டு சில நாட்கள் அருகிலுள்ள சாதாரண மருத்துவரிடம் போய் காண்பித்துக் கொண்டிருந்திருக்கிறான். அதற்கென சிறப்பு மருத்துவரிடம் வந்து சேர்ந்தபோதோ, நிலைமையை உணர்ந்து கொண்டு மிகப்பெரிய முடிவை எடுக்க நேர்ந்தது. 

அவ்விதமே,  நாமும் இந்த உலக வாழ்க்கையில் பலவிதமான பிரச்சினைகளின் வழியாக கடந்து வரும் போது முதலில் நண்பர்கள், பின்னர் உறவினர்கள், பெரியவர்கள், தலைவர்கள் என ஒவ்வொருவரிடமாக சென்று ஆலோசனை செய்கிறோம். சாதாரண மருத்துவரைப் போன்று அவர்கள் தரும் ஆலோசனைகள் கூட சில வேளையில் சிறிய அளவில் பலனைத் தரலாம். ஆனால் இறுதியில் நம்மையே படைத்த இறைவன், அவரது ஒரே குமாரன் இயேசு கிறிஸ்துவிடம் ஆலோசிக்கும் போது அவரால் மட்டுமே ஒரு தீர்க்கமான பதிலை கொடுக்க முடியும். அது பல வேளைகளில் கடினமானது போன்று தோன்றும். ஆனால் அது பலவேளைகளில் கடினமானதே அல்ல. என் நுகம் மெதுவாயும் என் சுமை இலகுவாயும் இருக்கிறது என்றார் இயேசு (மத்தேயு 11:30). கடினமானதாக தோன்றுவதற்கு உண்மையான காரணம் இந்த உலகம், மாமிசம் மற்றும் அதின் மீது உள்ள இச்சை தான். அதிலிருந்து விடுபட இறைவனின் ஒத்தாசை அவசியம். 

விசுவாசத்தினாலே மோசே தான் பெரியவனான போது பார்வோனுடைய குமாரத்தியின் மகன் என்னப்படுவதை வெறுத்து, அநித்தியமான பாவ சந்தோஷங்களை அநுபவிப்பதைப் பார்க்கிலும் தேவனுடைய ஜனங்களோடே துன்பத்தை அநுபவிப்பதையே தெரிந்துகொண்டு, இனிவரும் பலன்மேல் நோக்கமாயிருந்து, எகிப்திலுள்ள பொக்கிஷங்களிலும் கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தையை அதிக பாக்கியமென்று எண்ணினான் (எபி. 11:24-26). பின்னாட்களில் அவன் பிரபல தலைவன் ஆனான் என்பது சரித்திரம். 

இந்த உலக வாழ்க்கை தான் எல்லாமுமே என நினைத்துக் கொண்டிருந்தால், பாவ சோதனைகளை வெல்ல முடியாது. மறு உலக வாழ்வு பற்றிய சிந்தனையும் இந்த உலகிலே மறுபிறப்பின் அனுபவமுமே நம்மை பாவ சோதனைகளினின்று காக்கும். இன்னும் பாவங்களில் நிலைத்திருப்பது வாழ்வா சாவா பிரச்சினை என்பதை மனதில் கொண்டு அதில் ஒரு தீர்க்கமான முடிவெடுக்கும் தைரியம் உங்களுக்கு உண்டா? 

வாழ்த்துக்கள்.    

“உன் கால் உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைத் தறித்துப்போடு; நீ இரண்டு காலுடையவனாய் அவியாத அக்கினியுள்ள நரகத்திலே தள்ளப்படுவதைப்பார்க்கிலும், சப்பாணியாய் ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும்” (மாற்கு 9:45).





1 comment:

  1. அருமையான உண்மை உதாரணத்தையும், வேத வசனத்தையும் இணைத்து பரிசுத்த வாழ்வை வலியுருத்தியிருக்கும் பாங்கு மிகவும் அருமை, தொடர்ந்து இதுபோன்ற பதிவுகளை எழுதுங்கள் அண்ணா, நன்றி

    ReplyDelete