Tuesday, October 16, 2007

முழு பெலத்தோடு அன்புகூறுதல்

"உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழுஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழுப் பெலத்தோடும் அன்புகூருவாயாக என்பதே பிரதான கற்பனை." மாற்கு 12:31


முழு பெலத்தோடு அன்பு கூறுதல் என்றால் என்ன என்பது எனக்கு வெகு நாளாகவே யோசனையாக இருந்து கொண்டிருந்தது. 7 வருங்களுக்கு முன் எனது வாழ்க்கையில் எற்பட்ட அனுபவத்தின் மூலம் ஒரு நாள் தேவன் இதனை உணர்த்தினார். அதனை இங்கே பதிவு செய்கிறேன்.



கல்லூரி நாட்களில் நான் இந்திய நற்செய்தி மாணவர் மன்றம் என்ற இயக்கத்தில் இணைந்து தீவிரமாக செயல்பட்டு வந்தேன். நகர அளவில் செயல்படும் அனைத்துக் கல்லூரி நற்செய்தி மாணவர் மன்றத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்ததால், நான் ஒரு குறிப்பிட்ட ஞாயிற்றுக் கிழமை மாநில அளவில் நடைபெற்ற REVIEW MEETல் கலந்து கொள்ள வேண்டியிருந்தது.



நான் அந்நாட்களில் பயிற்சி மருத்துவராக தஞ்சை மருத்துவக் கல்லூரியில் பிரசவ அறையில் ( labour Room ) 12 மணிநேர Duty ல் (இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை) இருந்தேன். ஒரு நிமிடம் கூட தூங்குவதற்கு வாய்ப்பே கிடையாது. அவ்வளவு பிஸியாக இருந்தது. என‌வே Duty முடித்த‌ பின்ன‌ர் ஆயத்த‌ம் செய்து விட்டு நேர‌டியாக‌ திருச்சியிலுள்ள‌ மாநில‌ அலுவ‌ல‌க‌த்திற்கு வந்து சேர்ந்தேன். அன்றைய‌ ப‌ணிக‌ளை மாலை வரை முடித்து விட்டு நேர‌டியாக‌ திரும்ப‌வும் பிர‌ச‌வ‌ அறையில் என‌து ப‌ணியினைத் தொடர்ந்தேன்.




ப‌ஸ்ஸில் ப‌ய‌ண‌ம் செய்த‌ நேரம் தான் நான் தூங்கின‌ நேர‌ம். ஞாயிற்றுக்கிழ‌மை அலுவ‌லின் ஆய‌த்த வேலைகளில் ஈடுபட்டு முந்தின‌ ப‌க‌லும் தூங்க‌வில்லை. என‌வே ஞாயிறு ந‌ள்ளிர‌விற்குப் பின் என்னால் தாக்குப்பிடிக்க‌ முடிய‌வில்லை.




அத்த‌னை நாளும் பொறுப்பாக‌ ப‌ணியினைச் செய்து அன்று ம‌ட்டும் வ‌ழ‌க்க‌த்திற்கு மாறாக‌ ப‌ணியினை ச‌ரிவ‌ர‌ செய்யாத‌தை‌ க‌வ‌னித்த‌ முதுநிலை பெண்ம‌ருத்துவ‌ர் என்னிட‌ம் கார‌ண‌த்தை வின‌வினார். நானும் உண்மையைச் சொல்லிவிட்டேன். அப்போது அவ‌ர்க‌ள் சொன்னார்க‌ள்: "ந‌ன்றாக‌ ரெஸ்ட் எடுத்து விட்டு திரும்ப‌வும் க‌டைமையைச் செய்வ‌த‌ற்குத் தானே 12 ம‌ணிநேர‌ இடைவேளை கொடுக்க‌ப்பட்டிருக்கிற‌து. நீ இப்ப‌டி செய்தால் எப்ப‌டி?". க‌டமைக்கு முக்கிய‌த்துவ‌ம் கொடுக்க‌ வேண்டும், அத‌ற்குப் பின் நேர‌ம் கிடைத்தால் தான் பொழுது போக்குக் காரிய‌ங்க‌ளுக்கெல்லாம் நேர‌ம் கொடுக்க‌ வேண்டும் என்று தொடர்ந்தது அவ‌ர்க‌ளின் வாத‌ம். அவ‌ர்க‌ள் கிறிஸ்த‌வ‌ர‌ல்லாத‌வரான‌ ப‌டியால் நான் அவ‌ர்க‌ளிட‌ம் நியாய‌ப்படுத்த‌வும் இல்லை; வாக்குவாத‌ம் செய்ய‌வும் இல்லை.




முழு பெலத்தோடு அன்பு கூறுதல் என்றால் என்ன என்று ச‌மீப‌த்தில் சிந்த‌னை செய்து கொண்டிருந்த‌ போது தேவன் இப்ப‌டியாக‌ உணர்த்தினார்:




திங்க‌ட்கிழ‌மை ஒரு அவ‌சிய‌மான‌ வேலை இருப்பின், ஞாயிற்றுக்கிழ‌மை இர‌வு கொஞ்ச‌ம் சீக்கிர‌மாக‌வே ப‌டுக்கைக்குச் செல்கிறோம்; அப்போது தான் ம‌ன‌து தெளிவாக‌ இருந்து காரிய‌த்தை ந‌ல்ல‌ முறையில் செய்யமுடியும் என‌ நினைத்து நாம் அப்ப‌டி ந‌ம்மை ஆய‌த்த‌ப்ப‌டுத்திக் கொள்கிறோம்....... ஆனால், அதே வித‌மாக‌ ஞாயிற்ருக்கிழ‌மை ஆராத‌னை, ஊழிய‌ காரிய‌ங்க‌ளுக்காக‌ ச‌னிக்கிழ‌மை இர‌வு கொஞ்ச‌ம் சீக்கிர‌மாக‌வே ப‌டுக்கைக்குச் செல்கிறோமா? இல்லையே... முடிக்க வேண்டிய‌ வேண்டிய‌ எல்லா வேலைக‌ளையும் முடித்து விட்டு‌ பின்ன‌ர‌வில் ப‌டுக்கைகுச் சென்று, ஞாயிற்றுக்கிழ‌மை தாம‌த‌மாக‌ எழும்பி ஒன்று ச‌பை ஆராத‌னைக்கு முழுக்கு போட்டு விடுகிறோம் அல்ல‌து தாமத‌மாக‌ ஆராத‌னைக்குச் சென்று அதிலும் தூங்கி வ‌ழிகிறோம். இப்போது சொல்லுங்க‌ள் எங்கே ந‌ம‌து PRIORITY (முன்தெரிவு) என்று?




இதுபோன்றே தான் ந‌ம‌து வேத‌ வாசிப்பு, ஜெப‌ம், விசுவாசிக‌ளோடு ஐக்கிய‌ம் இவைக‌ளையெல்லெம் க‌ளைத்துப் போன‌பின் க‌ட‌மைக்காக‌ செய்வோமா‌னால், ந‌ம்மை நாமே ஆராய்ந்து பார்ப்போம்.



" நான் என் தேவனாகிய கர்த்தரிடத்தில் என் முழு இருதயத்தோடும், என் முழுஆத்துமாவோடும், என் முழு மனதோடும், என் முழுப் பெலத்தோடும் அன்பு கூறுகிறேனா?"




...

0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

Post a Comment