Monday, September 25, 2017

ஆவியின் கனி - இச்சையடக்கம்

கிறிஸ்துவில் பிரியமான சகோதர சகோதரிகளுக்கு நமது இரட்சகர் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.  ஆவியின் கனி வரிசையில், கடைசி அம்சமான இச்சையடக்கத்தைக் குறித்து இந்தமாதம் தியானிப்போம். ஆவியின் கனி வரிசையில் இச்சையடக்கம் என்பது கடைசியாய் பட்டியலிடப்பட்டுள்ள காரணத்தினால், ஆவிக்குரிய வாழ்க்கையில் அதன் முக்கியத்துவத்தை ஒருபோதும் நாம் கடைநிலைக்குத் தள்ளிவிடக்கூடாது. ஏனெனில், ஆவியின் கனி என ஒரு பட்டியல் (கலா. 5:22,23) கொடுக்கப்பட முக்கியப் பின்னணியே இந்த இச்சையடக்கம் என்ற காரியம் தான் என்பதை அதன் முன்னும் பின்னும் உள்ள 14ம் மற்றும் 25ம் வசனங்களிலிருந்து தெளிவாக அறிகிறோம்.

இச்சையடக்கம் என்பது ஒருவர் தனது ஆசைகளை (தன்னை) அடக்கி கட்டுக்குள் வைத்திருப்பதாகும். ஆங்கிலத்தில் அது Self-control அல்லது Temperance என்ற வார்த்தைகளில் குறிப்பிடப்படுகிறது. இதன் கிரேக்க வார்த்தையான ‘egkrateia’ என்ற வார்த்தைக்கு ‘உள்ளான பெலன்’ என்று அர்த்தம். இச்சையடக்கமாகிய ஆவியின் கனி என்பது நமது சொந்த பக்தியினால் சக்தியினால் நம்மை நாமே கட்டுப்படுத்திக் கொள்வது (சுயக்கட்டுப்பாடு) அல்ல; மாறாக, பரிசுத்த ஆவியானவர் நமது வாழ்க்கையில் செயல்படுவதினால் நம் வாழ்க்கையில் வெளிப்படும் வெளிப்படையான அம்சமாகும். சுயத்தை சுயம் கட்டுப்படுத்துவது என்பது கூடாத காரியம்.  ’தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்’ (பிலி. 2:13). அவற்றை நிறைவேற்ற உதவியும் செய்கிறார்.

இச்சைகள் பலவிதம்: பரிசுத்த வேதாகமத்தில் ’இச்சை’ என்பது பலவிதமான அடைமொழிகளுடன் குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றில் சில: பாவ இச்சைகள் (ரோமர் 7:5); துர் இச்சைகள் (ரோமர் 13:14); மோக இச்சை (I தெச. 4:4); மோசம்போக்கும் இச்சைகள் (எபே. 4:22); பாலியத்துக்குரிய இச்சைகள் (2 தீமோ. 2:22); பிசாசானவனுடைய இச்சை (2 தீமோ. 2:26); மாம்ச இச்சைகள் (பேதுரு 2:11); அசுத்த இச்சை (2 பேதுரு 2:10); மாம்சத்தின் இச்சை, கண்களின் இச்சை (1 யோவான் 2:16), உலகத்தின் இச்சை (1 யோவான் 2:17) துன்மார்க்கமான இச்சைகள் (யூதா 1:18) என்பன. இதுபோன்ற இச்சைகள் ஒருவனை அடக்கி ஆளாத வண்ணம் அவன அவைகளை மேற்கொள்ளும் நிலைமையை இச்சையடக்கம் எனலாம்.

எவற்றையெல்லாம் இச்சிக்கக்கூடாது?: பழைய ஏற்பாட்டுக் காலத்தில் இஸ்ரவேல் ஜனங்களுக்கு கொடுக்கப்பட்ட பத்துக் கட்டளைகளில் ‘இச்சியாதிருப்பாயாக’ என்பது இறுதியாக பத்தாவது கட்டளையாக கொடுக்கப்பட்டுள்ளது. நாம் எதையெல்லாம் இச்சிக்கக் கூடாது? ’பிறனுடைய வீட்டை இச்சியாதிருப்பாயாக; பிறனுடைய மனைவியையும், அவனுடைய வேலைக்காரனையும், அவனுடைய வேலைக்காரியையும், அவனுடைய எருதையும், அவனுடைய கழுதையையும், பின்னும் பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக’ (யாத். 20:17). ’உன் இருதயத்திலே அவள் [துன்மார்க்க, பரஸ்திரீ] அழகை இச்சியாதே’ (நீதி. 6:25). ’அவனுடைய [அதிபதி] ருசியுள்ள பதார்த்தங்களை இச்சியாதே’ (நீதி. 23:3). ’அந்தப்படியே, உதவிக்காரர்… இழிவான ஆதாயத்தை இச்சிக்கிறவர்களாயும் இராமல்…’ (1 தீமோத்தேயு 3:8)  ’கண்காணியானவன் தேவனுடைய உக்கிராணக்காரனுக்கேற்ற விதமாய், … இழிவான ஆதாயத்தை இச்சியாதவனும்’ (தீத்து 1:7).  இவ்விதம் பலவிதமான காரியங்களை இச்சிக்கக் கூடாது என நாம் வேதாகமத்திலிருந்து வெளிப்படையாக அறிகிறோம்.

இச்சையின் விளைவுகள்:  ஒருவனுக்கு பாவ சோதனைகளை கொண்டுவருவதே அவனுடைய உள்ளான இச்சை தான். ’அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான்’ (யாக். 1:14 ). ’உங்களுக்குள்ளே யுத்தங்களும் சண்டைகளும் எதினாலே வருகிறது; உங்கள் அவயவங்களில் போர் செய்கிற இச்சைகளினாலல்லவா?’ (யாக். 4:1). இச்சையின் இறுதிபலன் மரணம். ‘பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும்’ (யாக். 1:15). இச்சைகளை நிறைவேற்றும் உள்ளான எண்ணத்துடன்,, வெளிப்படையாக பக்தியாக நாம் ஜெபித்தாலும் அந்த ஜெபம் வீணாய்ப் போய்விடுகிறது. ‘நீங்கள் விண்ணப்பம்பண்ணியும், உங்கள் இச்சைகளை நிறைவேற்றும்படி செலவழிக்கவேண்டுமென்று தகாதவிதமாய் விண்ணப்பம்பண்ணுகிறபடியினால், பெற்றுக்கொள்ளாமலிருக்கிறீர்கள்’ (யாக். 4:3).

இச்சையடக்கத்தின் பலன்கள்: நித்தியவாழ்வில் நித்திய கிரீடத்தைப் பெற்றுக்கொள்ள இச்சையடக்கம் அவசியமான ஒன்றாக இருக்கிறது. ‘பந்தயத்திற்குப் போராடுகிற யாவரும் எல்லாவற்றிலேயும் இச்சையடக்கமாயிருப்பார்கள். அவர்கள் அழிவுள்ள கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறார்கள்; நாமோ அழிவில்லாத கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறோம்’ (கலா. 5:16). இச்சையடக்கத்துடன் நடந்துகொள்வது ஒரு உண்மைக் கிறிஸ்தவனுடைய அடையாளம். ’கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள்’ (கலா. 5:24). அநித்தியாமான, அற்பநேர இன்பம்தரும் இச்சைகளுக்கு இணங்காமல் நித்தியமான பலனை எதிர்நோக்கிக் காத்திருக்கும் போது,   இச்சையடக்கம் நமக்கு பொறுமையைக் கொண்டுவருகிறது (2 பேதுரு 1:6). இச்சையடக்கம் என்பது ஒருவரின் ஆசைஇச்சைகளை அடக்கி வைத்திருப்பதால், அது அவனை அடிமைப்படுத்துவதாக அர்த்தமல்ல; அதுதான் அவனுக்கு உண்மையான விடுதலையைக் கொண்டுவருகிறது. அவனுடைய குற்ற உணர்வுகளிலிருந்து அவனை விடுவிக்கிறது.

இச்சையை மேற்கொள்வது எப்படி?: இச்சைகளின் ஆரம்பமே அது சம்பந்தமான எண்ணங்களும் சூழ்நிலைகளும் தான். எனவே அவற்றில் நாம் கவனமுள்ளவர்களாக இருக்கவேண்டும். ’எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவைகளாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்கு தேவபலமுள்ளவைகளாயிருக்கிறது. அவைகளால் நாங்கள் தர்க்கங்களையும், தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமாய் எழும்புகிற எல்லா மேட்டிமையையும் நிர்மூலமாக்கி, எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறைப்படுத்துகிறவர்களாயிருக்கிறோம்’. (2 கொரி. 10:4,5). நம் எண்ணங்களை கிறிஸ்துவுக்கு நேராக ஒருமுகப்படுத்தும் போது இச்சைகளிலிருந்து விடுபடமுடியும். பரிசுத்த ஆவியானவரின் ஆளுகைக்கும் அனுதின வழிநடத்துதலுக்கும் நம்மை நாம் விட்டுக்கொடுக்க வேண்டும். ’ஆவிக்கேற்றபடி நடந்துகொள்ளுங்கள், அப்பொழுது மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள்’ (கலா. 5:16). ’நாம் ஆவியினாலே பிழைத்திருந்தால், ஆவிக்கேற்றபடி நடக்கவும் கடவோம்’ (கலா. 5:25). 

இச்சையடக்கத்தில் அடுத்து முக்கியமாக கவனமாக இருக்க வேண்டியது பாவ சூழ்நிலைகளிலிருந்து விலகிச் செல்வதாகும். விலகியிருக்க வேண்டிய பாவங்கள் என பல பரிசுத்த வேதாகமத்தில் கூற்ப்பட்டிருந்தாலும் விலகி ஓட வேண்டிய பாவங்கள் என குறிப்பிடப்பட்டுள்ள மூன்றில் இச்சையும் ஒன்று. ’அன்றியும், பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு நீ விலகியோடி, சுத்த இருதயத்தோடே கர்த்தரைத் தொழுதுகொள்ளுகிறவர்களுடனே, நீதியையும் விசுவாசத்தையும் அன்பையும் சமாதானத்தையும் அடையும்படி நாடு’ (2 தீமோ. 2:22). எனவே இச்சையடக்கமில்லாத அஞ்ஞானிகளுடன் உள்ள சகவாசத்தைக் குறைத்து, கிறிஸ்துவினுடையவர்களிடம் அதிகம் ஐக்கியம் கொள்ளுவதினாலும் இவற்றின் மூலம் அனுதின வாழ்க்கையில் பரிசுத்த ஆவியானவரின் ஆளுகைக்குள் நம்மை அர்ப்பணிக்கும் போது ஆவியின் கனியாகிய இச்சையடக்கம் நம் வாழ்வில் வெளிப்படும். இந்த விதமான அனுபவங்களுக்கு நம்மை அர்ப்பணிப்போமாக. 

ஆமென். 


[இது பாலைவனச் சத்தம் – செப்டெம்பர் 2017 இதழில் வெளியான எனது கட்டுரை]