நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையும்
உள்ள கர்த்தரின் நாமத்தில் நான் உங்களை வாழ்த்துகிறேன். ஆவியின் கனி வரிசையில் அன்பு,
சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம் இவைகளைத் தொடர்ந்து எட்டாவது
அம்சமாக காணப்படும் சாந்தம் குறித்து நாம் இந்த மாதத்தில் தியானிப்போம்.
சாந்தம் என்பதற்கு கிரேக்க மொழியில்
பயன்படுத்தப்பட்டுள்ள ‘Prautes’ என்ற வார்த்தையானது,
ஆங்கிலத்தில் gentleness (மென்மை) மற்றும் meekness (அடக்கம்) என்ற வார்த்தைகளில் குறிப்பிடப்படுகிறது.
பொதுவாக gentleness என்பது ஒருவரது வெளிப்படையாக செயல்பாடுகளையும் meekness என்பது
ஒருவரது உள்ளான மனநிலையையும் குறிப்பவை. எனவே உள்ளான அடக்க குணம் ஒருவரது மென்மையான
செயல்களில் வெளிப்படுவதை சாந்தம் என வரையறுக்கலாம். சாந்தம் என்பது ஒருவருடைய இருதயத்தில் மறைந்திருக்கும்
குணம் (I பேதுரு 3:4). ஆனால் அது நமது கிரியைகளில்
வெளிப்படும். ’உங்கள் சாந்தகுணம் எல்லா மனுஷருக்கும் தெரிந்திருப்பதாக’ என பவுல் கூறுவதை
பிலிப்பியர் 4:5 ல் நாம் வாசிக்கிறோம்.
சாந்தகுணம் என்பது ஒருவர் தன்
இயலாமையினால் விதியின் மீது பழியைப் போட்டு வேறுவழியின்றி அமைதியாய் இருக்கும் நிலை
அல்ல; மாறாக, சாதகம் மற்றும் பாதகமான எல்லா சூழ்நிலைகளிலும் தேவன் மீது நம்பிக்கை வைத்து
அவரது சித்தத்திற்கு தன்னை அர்ப்பணித்து தனது சுய விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு
அடுத்தவர் மீது மென்மையுடன் நடந்து கொள்ளும் உள்ளான குணம். இந்த உண்மையினை புரிந்து
கொள்ள சங்கீதம் 37 யை நாம் வாசித்து அறிந்து கொள்ளவேண்டும். குறிப்பாக 11ம் வசனத்தில்,
’சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்’
என்று வாசிக்கிறோம். இதையே தான் இயேசு கிறிஸ்துவும்
தனது மலைப்பிரசங்கத்தில், ’சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்
கொள்ளுவார்கள்’ (மத்தேயு 5:5) என கூறினார்.
பழைய மற்றும் புதிய ஏற்பாடுகளில்
சாந்தகுணமுடன் நடந்து கொண்டவர்களை பெரியதாக பட்டியலிட முடியும். அந்தப் பட்டியலில்
மோசே (எண்ணாகமம் 12:3), தாவீது (2 சாமுவேல் 16:11-12), யோபு (யோபு 1:21), எரேமியா
(எரேமியா 11:19), இயேசு கிறிஸ்து (மத். 11:29) மற்றும் பவுல் (2 கொரி. 10:1) ஆகியோர்
முக்கிய இடம் பெறுகின்றனர். இவர்கள் அனைவருமே தங்கள் சாந்தகுணத்தினால் பாதகமான சூழ்நிலைகளிலும்
மனரம்மியத்துடன் நடந்துகொண்டனர்.
’நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாயிருக்கிறேன்;
என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது,
உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்’ என்றார் இயேசுகிறிஸ்து (மத்தேயு
11:29). சாந்தமும் மனத்தாழ்மையும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. மற்றவர்கள் மீது அதிகாரம்
செலுத்தக்கூடிய நிலையில் உள்ள ஒருவர் மற்றவரை தன் அதிகாரத்தினால் தாழ்மைப்படுத்த
(humiliate) தான் முடியும். ஆனால், தான் மனத்தாழ்மை (humility) உடைய ஒருவரோ அந்த அதிகாரத்தை
அடக்கத்துடன் முறையாக பயன்படுத்தி அடுத்தவரை தன் வயப்படுத்த முடியும். இது சாதாரணமாக
மனிதனால் கூடாதது தான். இது ஆவியின் கனி. ஒருவரது அதிகார தோரணைக்குப் பயந்து ஒருவர்
கீழ்ப்படிவதைக்காட்டிலும் அவரது சாந்தகுணத்திற்கு முன்பாகவே அநேகர் கீழ்ப்படிவர்
(I பேதுரு 2:18). மோசேயானவன் பூமியிலுள்ள சகல
மனிதரிலும் மிகுந்த சாந்தகுணமுள்ளவனாயிருந்தான் (எண்ணாகமம் 12:3 ). எனவே தான் இஸ்ரவேல்
ஜனங்களை மோசேயால் வெற்றிகரமாக வழிநடத்த முடிந்தது.
சாந்தகுணம் என்பது பயந்தசுபாவம்
(timid) உடையதல்ல; மாறாக சாந்தம் என்பது தாழ்மையான இருதயத்துடன் சமாதானமான மனநிலையில்
தேவனுடைய திட்டத்திற்கு முழுவதும் அர்ப்பணிக்கப் பட்ட நிலையைக் குறிக்கிறது. சாந்தமாய்
இருப்பதற்கு எதிர்மறையான காரியம் கோபப்படுதல் ஆகும். கோபக்காரன் சண்டையை எழுப்புகிறான்;
நீடிய சாந்தமுள்ளவன் சண்டையை அமர்த்துகிறான் (நீதிமொழிகள் 15:18); நீடிய சாந்தமுள்ளவன்
மகாபுத்திமான்; முற்கோபியோ புத்தியீனத்தை விளங்கப்பண்ணுகிறான் (நீதிமொழிகள் 14:29)
என்ற வசனங்களின் மூலம் இதனை உணர்ந்து கொள்ளலாம்.
சாந்தகுணம் என்பது அக்கறையின்றி
நமக்கேன் வம்பு என அலட்சியமாக இருந்து விடுவது அல்ல; மாறாக இல்லாமல் அன்பிற்கும் சாந்தகுணத்திற்கும் தொடர்புண்டு.
(I கொரிந்தியர் 13:4). தேவனிடமும் சக மனிதரிடமும் உண்மையாக அன்புசெலுத்தும் போது நமது சாந்தகுணம் வெளிப்படுகிறது. ’உங்களுக்கு முன்பாக
இருக்கும்போது தாழ்மையாயும், தூரத்திலே இருக்கும்போது உங்கள்மேல் கண்டிப்பாயுமிருக்கிற
பவுலாகிய நான் கிறிஸ்துவின் சாந்தத்தையும் தயவையும் முன்னிட்டு உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்’
(II கொரிந்தியர் 10:1) என்பது பவுலின் அனுபவ சாட்சி. நாமும் அவ்விதம் நடந்துகொள்ள கலாத்தியர் 6:1 ல்
‘சகோதரரே, ஒருவன் யாதொரு குற்றத்தில் அகப்பட்டால், ஆவிக்குரியவர்களாகிய நீங்கள் சாந்தமுள்ள
ஆவியோடே அப்படிப்பட்டவனைச் சீர்பொருந்தப்பண்ணுங்கள்’ என அவர் அறிவுறுத்துவதைப் பார்க்கிறோம்.
சாந்தகுணம் ஒரு பலவீனம் அல்ல
(Meekness is not a weakness); மாறாக ஆவிக்குரிய ஒருவருக்கு அதுவே பலம் எனலாம். சாந்தகுணமுள்ளவர்களுக்கு
கிடைக்கும் பலன்களாவன: ’சாந்தகுணமுள்ளவர்கள் புசித்துத் திருப்தியடைவார்கள்’ (சங்கீதம்
22:26); ’கர்த்தர் சாந்தகுணமுள்ளவர்களை உயர்த்துகிறார்’ (சங்கீதம் 147:6); ’சாந்தகுணமுள்ளவர்களை
இரட்சிப்பினால் அலங்கரிப்பார்’ (சங்கீதம் 149:4); ’சாந்தகுணமுள்ளவர்களை நியாயத்திலே
நடத்தி, சாந்தகுணமுள்ளவர்களுக்குத் தமது வழியைப் போதிக்கிறார்’ (சங்கீதம் 25:9); ‘சாந்தகுணமுள்ளவர்கள்
பாக்கியவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக் கொள்ளுவார்கள்’ (மத்தேயு 5:5).
[இது பாலைவனச் சத்தம் – ஆகஸ்ட் 2017 இதழில் வெளியான எனது கட்டுரை]