Sunday, April 23, 2017

ஆவியின் கனி – தயவு

எல்லார் மேலும் தயவுள்ள நம் கர்த்தருடைய நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன்.  நாம் தொடர்ந்து தியானித்து வரும் ஆவியின் கனியில், தயவு என்பது மையப்பகுதியாக ஐந்தாவதாக இருக்கும் அம்சமாக காணப்படுகிறது. தயவு என்பதற்கு பெரும்பாலான ஆங்கில வேதாகமங்களில் Kindness (இரக்கம்) என்ற வார்த்தையும் Gentleness (மென்மை) என்ற வார்த்தையும் பயன்படுத்தப்படுகின்றன. இதற்கு இணையான கிரேக்க வார்த்தைக்கு ‘இருதயத்தில் உருவாகி செயலில் வெளிப்படும் இரக்கம்’ என பொருள்.

நாம் ஒருவரிடம் ஒன்றை செய்யும்படி எதிர்பார்த்து கேட்கும் போது, ‘தயவு செய்து’ என்ற வார்த்தையை பயன்படுத்துகிறோம். அதை அவரிடமிருந்து எதிர்பார்ப்பதற்கு நமக்கு ஒருவேளை தகுதியும் உரிமையும் இருந்தாலும் கூட, அதனை மறுப்பு எதுவும் இருந்துவிடாமல் உறுதிசெய்து கொள்வதற்காக ’தயவு செய்து’ என்ற வார்த்தையை, நாம் இறங்கி வந்து தாராளமாக பயன்படுத்துகிறோம். ஆனால் தயவு என்பது என்ன? நன்மைசெய்ய மனுஷன் கொண்டிருக்கும் ஆசையே தயை என நீதி 19:22 ல் பார்க்கிறோம். அடுத்தவருக்கு நன்மை பயக்கும் பொருட்டு முழுமனதுடன் செய்யப்படும் செயலை தயை எனலாம்.

தயவு என்பது நம் திரியேக தேவனின் இயல்புகளில் ஒன்று. எனவே தான் அவை நம்மிலும் வெளிப்பட அவர் நம்மை எதிர்பார்க்கிறார். முதலில் நாம் இரட்சிக்கப்பட்டதே முற்றிலும் தேவனுடைய தயவினால் தான். ’நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய தயையும் மனுஷர்மேலுள்ள அன்பும் பிரசன்னமானபோது, நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே, மறுஜென்ம முழுக்கினாலும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார்’ (தீத்து 3:4,5). நாம் இதற்கு எவ்வளவும் தகுதியானவர்கள் அல்ல (தீத்து 3:3). நாம் இரட்சிக்கப்பட்டது அவருடைய சுத்த கிருபையே. 'கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு' என எபேசியர் 2:8 ல் வாசிக்கிறோம். 

கிருபை என்பதற்கு தகுதியில்லாவதனுக்கு காட்டப்படும் இரக்கம் என ஒரு வரையறை உண்டு.  தயவோ பல நேரங்களில் தகுதியை எதிர்பார்க்கும் (ஆதி 21:23, 2 சாமுவேல் 9:1, லூக்கா 7:4). மட்டுமல்ல, பதிலீடாக ஒன்றைக் கொடுத்தும் ஒருவர் தயையை பெற முடியும். (ஆதி. 34:11). தயை செய்தல் பிரதிபலனாக தயையை எதிர்பார்க்கும் (யோசுவா 2:12) ஆனால் தயவு என்பது தகுதியில்லாதவனுக்கும் கிடைக்கும் (ஆதி. 32:10). தேவனால் மட்டுமே கூடும் உச்சபட்ச தயவை கிருபை எனலாம். ஆனால் தயவு செய்வது என்பது மனிதனாலும் கூடும்.

தயை செய்வது ஒன்றும் தாழ்வான காரியமல்ல. பொன் வெள்ளியைப்பார்க்கிலும் தயையே நலம் (நீதி 22:1). அதனால் வரும் பலன்களோ மிகவும் அதிகம் என்பதை பின்வரும் இந்த வசனங்களில் இருந்து தெளிவாக அறிகிறோம். ’தயையுள்ள மனுஷன் தன் ஆத்துமாவுக்கு நன்மை செய்து கொள்கிறான்’ (நீதி 11:17). ’தயையும் சத்தியமும் ராஜாவைக் காக்கும்; தயையினாலே தன் சிங்காசனத்தை நிற்கப்பண்ணுவான்’ (நீதி 20:18). ’நீதியையும் தயையையும் பின்பற்றுகிறவன் ஜீவனையும் நீதியையும் மகிமையையும் கண்டடைவான்’ (நீதி 21:21). தேவனுடைய தயவுள்ள கரம் நம்மீது இருக்கும் போது மனிதர்கள் கண்னில் தயவு கிடைத்து நமது காரியங்கள் வெற்றியாய் முடிகிறது (நெகே. 2:8)

நம் கிறிஸ்தவ வாழ்க்கையில் ஆவியின் முதல் கனியாகிய அன்பு பெருகும் போது தயவும் வெளிப்படும் (1 கொரி 13:4). ஆவியின் கனியாகிய தயவு நமது வாழ்க்கையில் நிறைவாய் வழிந்தோடுவதற்கு ஆதாரமாக அன்பும், அடையாளமாக மன்னிக்கும் சுபாவமும் நம்மில் பெருகவேண்டும். 'ஆகையால், நீங்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட பரிசுத்தரும் பிரியருமாய், உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு; ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்' (கொலோ. 3:12,13). 'ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்’ (எபே. 4:32). ஏசாயா 55:7ன் படி கர்த்தர் மன்னிக்கிறதற்குத் தயை பெருத்திருக்கிறார்.

பலனை எதிர்பார்த்து மட்டுமே நாம் தயவு காட்டக் கூடாது. இருப்பினும் தயை செய்பவனுக்கு அதிகம் தயை செய்யப்படும். ’கர்த்தர் எல்லார்மேலும் தயவுள்ளவர்’ (சங்145:9); இருப்பினும் சங்கீதம் 18:25ன் படி கர்த்தர் தயவுள்ளவனுக்கு இன்னும் தயவுள்ளவராக இருக்கிறார். ‘இரக்கமுடையவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள்’ (மத். 5:7) என இயேசுவும் தனது மலைப்பிரசங்கத்தில் கூறியுள்ளார். ’தேவனுடைய தயவையும் கண்டிப்பையும் பார்; விழுந்தவர்களிடத்திலே கண்டிப்பையும், உன்னிடத்திலே தயவையும் காண்பித்தார்; அந்தத் தயவிலே நிலைத்திருப்பாயானால் உனக்குத் தயவுகிடைக்கும்; நிலைத்திராவிட்டால் நீயும் வெட்டுண்டுபோவாய்’ (ரோமர் 11:22). 

ஆனால் பலனை எதிர்பார்த்து மட்டுமே தயை செய்தால் அது அன்பின் வெளிப்பாடு அல்ல; அது சுயநலத்தின் வெளிப்பாடு. மட்டுமல்ல, தயை செய்வதில் பாரபடசமும் இல்லாமல் இருக்கவேண்டும். உங்களைச் சிநேகிக்கிறவர்களையே நீங்கள் சிநேகித்தால்,  உங்களுக்கு நன்மைசெய்கிறவர்களுக்கே நீங்கள் நன்மைசெய்தால், அதனால், என்ன பிரயோஜனம்? பாவிகளும் அப்படிச் செய்கிறார்களே என இயேசு கிறிஸ்து கூறியுள்ளார். ’உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள், நன்மைசெய்யுங்கள், கைம்மாறுகருதாமல் கடன் கொடுங்கள், அப்பொழுது உங்கள் பலன் மிகுதியாயிருக்கும், உன்னதமானவருக்கு நீங்கள் பிள்ளைகளாயிருப்பீர்கள், அவர் நன்றியறியாதவர்களுக்கும் துரோகிகளுக்கும் நன்மைசெய்கிறாரே’ (லூக்கா 6:35). 

உபதேசங்களைக் குறித்த வாக்குவாதங்களினால் அல்ல, உண்மைக் கிறிஸ்வர்களின் தயவு நிறைந்த நடவடிக்கைகளினாலேயே  அநேகர் சபைகளுக்குள் இழுக்கப்பட்டுள்ளனர் என்கிறார் வில்லியம் பார்க்ளே என்னும் வேத அறிஞர். இன்று நமது கனிதரும் கிறிஸ்தவ வாழ்க்கை எப்படி இருக்கிறது? தேவ ​​​​​​​தயையை பெற்றுக் கொண்ட நாம் பிரதிபலனாக மற்றவர்களிடம் தயையை காண்பிக்கிறோமா? மற்றவர்களின் மீது தேவ தயவுக்காக ஜெபிக்கிறோமா? (ரூத். 1:8). மற்றவர்களை நாம்  தாராளமாக ஆசீர்வதிக்கிறோமா? (1 சாமு. 23:21). தயவு என்னும் இந்த ஆவிக்குரிய கனி நம்மில் பெருகி, மற்றவர்களை அவரண்டை நடத்திட நம்மை அர்ப்பணிப்போமாக. ஆமென்.


[இது பாலைவனச் சத்தம் – ஏப்ரல் 2017 இதழில் வெளியான எனது கட்டுரை]

Tuesday, April 11, 2017

My 10 Years of Journey as a Blogger

இப்படியொரு பதிவை எழுதும் அளவிற்கு நான் ஒன்றும் பெரிய எழுத்தாளன் அல்ல. இருப்பினும் இறைவன் இயேசு எனக்கு அருளிய நற்கொடைகளை மற்றவர்களுக்குப் பகிர்ந்தளிக்கும் உக்கிராணத்துவக் கடமையில் கடந்த 10 வருடங்களாக நான் கடந்து வந்த பாதையினை, ஏப்ரல் 10, 2007 ல் முதல் பதிவுடன் தொடங்கிய எனது பிளாக் இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவுசெய்வதை முன்னிட்டு, இந்த கட்டுரை வழியாக  வாசக நண்பர்களுக்குச் சுட்டிக்காட்டுவதில் உண்மையிலேயே எனக்கு மகிழ்ச்சி தான்

வசதி வாய்ப்புகள் இல்லாத ஒரு கிராமத்துப் பின்னணியில் பிறந்து வளர்ந்த எனக்கு இன்று இருக்கும் வசதி மற்றும் வாய்ப்புக்கள் இவையெல்லாம் நினைத்துப் பார்த்தாலே மலைக்கும் அளவிற்கு பெரிய வித்தியாசங்கள் உண்டு. இவையெல்லாம் சிறியவனைப் புழுதியிலிருந்து தூக்கிவிடுகிற, எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிற (சங்கீதம் 113:7) நம் கர்த்தராலே ஆயிற்று.

எனது சிறுவயது கிராமத்துப் பின்னணியில் எங்கள் வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டி கூட கிடையாது (எனக்கு திருமணமாகும் வரையிலும் இல்லை); செய்திதாளும் வாங்கும் பொருளாதார நிலைமை இல்லை. சிறுவயதில் தினமும் நான் எங்கள் உறவினரின் மளிகைக்கடையில் சாமான் வாங்கச் செல்லும் போது, பெரியவர்கள் அங்கே கூடிநின்று ஒரே செய்தித்தாளை பங்குவைத்து படித்துக்கொண்டிருப்பது வழக்கம். அந்த  பெரியவர்களுக்கிடையில் நானும் பங்கு போட்டுக் கொண்டு, என் கையில் கிடைத்த அளவில் அன்றாடம் செய்திதாளை படித்து விடுவது உண்டு. சிறுவயதில் எனக்கு இருந்த இந்த வாசிப்பு ஆர்வத்தை அன்று கிண்டலடித்த பெரியவர்கள் பலர் எங்கள் கிராமத்தில் உண்டு.
 
பள்ளி நாட்களில் கலை இலக்கிய நிகழ்வுகளில் நான் எப்படியாவது கலந்து கொண்டு எனது கூச்ச சுபாவத்தை களைய வேண்டும் என எனது இரண்டாவது அண்ணன் எடுத்த முயற்சிகள் பலவும் தோற்றுப் போய், ஒரே ஒரு முறை ஐந்தாம் வகுப்பின் போது பள்ளி ஆண்டுவிழாவின் ஒரு நாடகத்தில் இந்து பூசாரியாக நடித்தது மட்டும் இன்றும் நினைவிற்கு வருகிறது.

வாழ்க்கையில் எப்படியாவது படித்து முன்னுக்கு வரவேண்டும் என்ற உத்வேகத்தை என் வாழ்க்கை அனுபவங்களிலிருந்து கற்றுக் கொண்டதாலும், என் பெற்றோர் மற்றும் உடன்பிறந்தோரின் ஒத்துழைப்பினாலும் கர்த்தரின் அநாதி திட்டம் மற்றும் கிருபையினாலும் எனது பொறியாளர் கனவையும் தாண்டி இன்று மருத்துவராக விளங்கிட முடிந்திருக்கிறது.

மருத்துவக் கல்லூரிக்குள் நுழைந்தும் எனக்கென்று தனிப்பட்ட திறமை தாலந்துகள் இருப்பதாக நான் உணரவில்லை. ’தேவன் எவர் ஒருவருக்கும் எல்லா தாலங்துகளையும் கொடுத்து விடுவதில்லை; எவர் ஒருவருக்கும் ஒரு தாலந்தையாவது கொடுக்காமலும் இல்லை; அந்த தாலந்து எது என்பதை கண்டுபிடித்து அவருடைய நாம மகிமைக்காய்  பயன்படுத்த வேண்டும்என்ற உண்மையையும் உணர்வையும் கல்லூரி நாட்களில் எனக்கு ஆவிக்குரிய வளர்ச்சிக்கு பெரிதும் உதவிய இந்திய நற்செய்தி மாணவர் மன்றம் (EU) மூலம் அடைந்து கொண்டேன்.

அவைகளைக்  கண்டுபிடித்து நிறைவேற்றும் பணியில் நடைமுறையிலும் அதே இயக்கம் தான் எனக்கு உறுதுணையாக இருந்தது. அவற்றுள் ஒன்று தான் எழுதும் தாலந்து. அந்த இயக்கத்தின் மாதாந்திரப் பத்திரிக்கையில் முதன் முதலாக எனது சவாலான சாட்சியை எழுத அதன் ஊழியர் திரு. ராஜபாலன் அவர்கள் என்னை ஊக்குவித்தார். எனது சாட்சியை ஒரு தாளில் எழுதிக்கொடுத்து, அதனை இதழில் பதிப்பாகும் அளவிற்கு திருத்தித் தரும்படி அவரிடம் கொடுத்தால், அவர் அங்கும் இங்குமாக வார்த்தைகளை வெட்டி, ஒட்டி, குத்திக்குதறி திருத்தி எழுதித் தந்து இப்போது இதனை பத்திரிக்கைக்கு அனுப்பி வை என்றார். அப்போது எனது முகம் சுருங்கிப் போனதை உணர்ந்து கொண்ட அவர் எனக்கு பக்குவமாக எடுத்துக் கூறி உற்சாகப்படுத்தி என்னை சமாதானப்படுத்தினார்.

அந்தக் கட்டுரை (தரிசனச் சுடர், நவம்பர் 1995 ல் எனது முதல் கட்டுரை) வெளிவந்த போதோ அதனை வாசித்த பலர் எனது சாட்சியையும் எழுத்து நடையையும் கண்டு என்னைப் பாராட்டி மகிழ்ந்தனர். எனக்கோ உள்ளூர, அது எனது எழுத்து அல்லவே என்ற எண்ணமே மேலோங்கிக் கொண்டிருந்தது. தொடர்ந்து எனக்கு வந்த வாய்ப்புக்களை நான் ஜெபத்துடன் பயன்படுத்திக் கொள்ளவே, நான் (நானாகவே) எழுதிய கட்டுரைகளெல்லாம் அவ்வப்போது அந்த அந்த இதழில் வெளிவந்த வண்ணம் இருந்தன.

கல்லூரி இறுதி நாட்களில் அந்த இயக்கத்தின் வருடாந்திர கூடுகை ஒன்றில், புதிதாய் ஒருவர் தன்னை அறிமுகம் செய்து கொண்டபோது, நானும் பேதுரு தான்; நீங்கள் தான் தரிசுனச்சுடர் பேதுருவா என்றார். ஆம் என்றேன். உங்களை இப்போது தான் முதல் முறையாகப் பார்க்கிறேன். எனது ஆவிக்குரிய வாழ்க்கையில் உங்கள் எழுத்துக்கள் பல எனக்கு உற்சாகமாய்  அமைந்திருக்கின்றன; எனவே நான் இரட்சிக்கப்பட்டு ஞானஸ்நானம் எடுக்கும் போது எனது இந்து பெயருடன் பேதுரு என இணைத்துக் கொண்டேன் என உணர்ச்சிப் பூர்வமாக கூறினார். ஆண்டவருக்கே மகிமை உண்டாகட்டும். அன்றிலிருந்து எழுதுவது ஆண்டவர் எனக்கு அருளிய தாலந்து; அதனை அவருக்காக முறையாக பயன்படுத்த வேண்டும் என்ற முடிவுக்குள் வந்தேன்.

தொடர்ந்து அவ்வப்போது அந்த பத்திரிக்கையில் எழுதிவந்தேன்பட்ட மேற்படிப்பு வேலூரில் படித்துக் கொண்டிருக்கும் போது, Peter Daniel என்னும் ஒரு அண்ணனுடன் இணைந்துவளாகத்தில் தொடரும் தரிசனம்வளாக ஜெபக்குழுக்களுக்கான நடைமுறைக் கையேடுஎன்ற புத்தகத்தை நானும் அவரும் முறையே தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதி முடித்தோம். அவை 2004 ல் முறையே UESI-TN மற்றும் UESI நிறுவனத்தின் வெளியீடுகளாக வந்தன. அந்த இயக்கத்தில் நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கொய்னோனியா மாநாட்டில் 2004 ல் – Literature Ministry என்ற செமினார் நடத்தும் வாய்ப்பு எனக்கு அளிக்கப்பட்டதை என் எழுத்துக்கு கிடைத்த அங்கிகாரமாக கருதி தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன்.

2007 ல் உன்னத சிறகுகள் என்ற பத்திரிக்கையில்யோகா - ஒரு கிறிஸ்தவ மருத்துவரின் கண்ணோட்டம்என்ற தலைப்பில் நான் கட்டுரை எழுதியபோது, அது எனது எழுத்துப்பணியை வேறு தளத்திற்கு கொண்டு சென்றது. இந்த கட்டுரை டாக்டர், புஷ்பராஜ் அவர்களின் ஜாமக்காரன் பத்திரிக்கையின் மறுபதிப்பாகியதும், அதன் பகுதி தமிழ்க்கிறிஸ்தவர் பக்கங்கள் என்னும் தளத்தில் முகப்பில் (http://www.tamilchristian.com/index.php/hot-topics/yoga-in-tamil)   Hot Topics வரிசையில் இன்றும் இடம்பெற்றிருப்பதும் எனது எழுத்து முயற்சிக்கு கிடைத்த அங்கிகாரமாகவே கருதுகிறேன்.

2006 வரை நான் அவ்வப்போது எழுதி வெளிவந்த கட்டுரைகளை நான் அதுவரையிலும் நான் ஆவணப்படுத்தவில்லை. எனவே இனிவரும் எழுத்துக்களையாகிலும் முறைப்படுத்தலாமே என்ற என்ணத்தில் மிகவும் சாதாரணமாக ஒரு பிளாக்கை ஆரம்பித்து அங்கு என் எழுத்துக்களை சேர்க்க ஆரம்பித்தேன். அந்த கால கட்டத்தில் பிரபலமாக புழக்கத்திலிருந்த தமிழ்க்கிறிஸ்தவர்கள் தளம் (http://www.tamilchristians.com/ - துரதிருஷ்டவசமாக, தற்போது இது பயன்பாட்டில் இல்லை) மற்றும் அங்கு கிடைத்த நட்புகள் இதற்கு தூண்டுகோலாக அமைந்தன. இந்த பத்தாண்டுகளில் ஒரு ஆண்டிலும் கூட இடைவெளி இல்லாமல் பொத்தம் 65 பதிவுகள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் 27 கட்டுரைகள் பத்திரிக்கைகளில் வெளிவந்தவை. இந்த பத்தாண்டுகளில் மட்டும் பத்திரிக்கைகளில் வெளிவந்தும் இங்கு இடம்பெறாத கட்டுரைகள் கிட்டதட்ட 10 வரை விடுபட்டிருக்கும். இடையில் வந்த முகநூலின் தாக்கம் இங்கு பிளாக்கில் முறையாக எழுதவேண்டிய அவசியம் இல்லாமல் ஆக்கிவிட்டது. இருப்பினும் பிளாக்குக்கு என்று ஒரு தேவை தொடர்ந்து இருப்பதாகவே எனக்கு தென்படுகிறது.

இந்த அளவிற்கு எழுத எனக்கு வாய்ப்புகளை அருளிய தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன். இந்த பத்தாண்டுகளில் எனக்கு இருந்த ஒரு மோசமான பழக்கம் என்னவென்றால், இதுவரை எந்தவொரு பத்திரிக்கைக்கும் கூட, பிரசுரம் ஆகவேண்டும் எனபதற்காக நானாக எனது கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவில்லைவெளியான கட்டுரைகள் அனைத்துமே, அந்தந்த பத்திரிக்கை குழுவினால் என்னிடம் கேட்டு வாங்கப்பட்ட கட்டுரைகள் அல்லது என்னை அவர்கள் உற்சாகப்படுத்தி, அதனால் எழுதிய கட்டுரைகள் மட்டுமே.

எனவே, காலத்தின் கோலத்திற்கேற்ப, தேவைகளை உணர்ந்து அவசியமான கட்டுரைகளை நானாக எழுத வேண்டும் என்ற உணர்வு இந்த பத்தாண்டு நிறைவு தினத்தில் என்னுள் அதிகமாய் பெருகி வருகிறது. எனது Ph.D இறுதியாண்டுக்கான பணிச்சுமைகள் அதிகமாக இருப்பதால், இந்த வருடம் எனது பிளாக் பதிவுகளில் பெரிய அளவில் மாற்றங்கள் இல்லாது இருப்பினும், வரும்காலங்களில் இவைகளை முறைப்படுத்தி தேவமகிமைக்காய் தொடர்ந்து எழுத விரும்புகிறேன். தங்களின் மேலான ஜெபம், ஆலோசனை மற்றும் கருத்துக்களுக்கு மிக்க நன்றி.