Saturday, October 22, 2016

இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன் [1 யோவான் 2:12-14]


ஆதியிலே வார்த்தையாய் தேவனிடத்தில் இருந்து, பின் மாம்சமாகி பாடுபட்டு பரமேறி இன்றும் நம்மிடையே வாசம் செய்யும் நாம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு என் அன்பின் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

       புதிய ஏற்பாட்டின் 27 புத்தகங்களில் பெரும்பாலும் அவை யாரால், யாருக்காக, எதற்காக எழுதப்பட்டது என நேரடிக் குறிப்புகள் உண்டு. பொதுவாகவே ஒரு புத்தகத்தை எடுத்துக் கொண்டால், அதன் ஆசிரியர் முன்னுரை எழுதியிருப்பார்; அல்லது எழுத்தில் பிரபலமான வேறு எவராவது அறிமுகவுரை எழுதியிருப்பார். அவற்றை வாசிக்கும் போது அந்த புத்தகம் எதற்காக என நமக்குத் தெரியவரும். சில நேரங்களில் ’புத்தகத்தைப் பற்றி’ என அந்த புத்தகத்தின் கடைசி வெளிப்பக்க அட்டையில் இருக்கும். அவைகளை வாசித்தறிந்து, அது பிரயோஜனமான ஒன்று என மனதில் பட்டால் மட்டுமே அந்த புத்தகத்தை நாம் வாங்குவோம்; படிப்போம்.

        பரிசுத்த வேதாகமம் முழுவதுமே முதலிலிருந்து கடைசி வரையும் திரியேக தேவனைக் குறித்து சொல்வதோடு மட்டுமல்லாமல், குறிப்பாக அது தன்னைக் குறித்தும் சொல்லுகிறது. வார்த்தையாகிய இயேசுவே மனிதனாய் உலகத்தில் வந்தது தான் அதன் மையச் செய்தி. பரிசுத்த வேதாகமத்தின் மகத்துவங்கள், இவற்றை வாசிப்பதால் தியானிப்பதினால் கைக்கொள்ளுவதினால் என்ன பயன் என பல்வேறு இடங்களில் தனக்குத் தானே அது சொல்லிக் கொள்கிறது. பொதுவாக புத்தகங்களில் முகவுரை மட்டும் தான் புத்தகத்தைப் பற்றி இருக்கும் பின்பு முழுவதும் அதன் உள்விஷயங்கள் இருக்கும். பரிசுத்த வேதாகமத்தில் மட்டும் தான் ஆரம்பமுதல் இறுதிவரையும் பரிசுத்த வேதாகமத்தைக் குறித்து எழுதப்பட்டிருக்கிறது.

             அந்த விதமாக அப்போஸ்தலனாகிய யோவான், தான் எழுதிய மூன்று நிரூபங்களிலும் யாருக்கு அல்லது எதற்காக என்ற குறிப்புகள் ஆரம்பத்திலேயே இருந்தாலும் [1 யோவான் 1:4, 2 யோவான் 3,5,12, 3 யோவான் 1, 9, 13] இந்த 1 யோவான் 2:12-14 பகுதியில் தனது நிருபத்தின் இடையில் எழுதியது மட்டுமல்லாமல் நிருபத்தின் இறுதிப் பகுதியிலும் (1 யோவான் 5:13) தான் எழுதும் நோக்கத்தை தெரிவிக்கிறார். தனது நிரூபங்களில் மொத்தம் 21 முறை தான் எழுதுவதைக் குறித்து எழுதியுள்ளார். இந்த 1 யோவான் 2:12-14 பகுதியில், அப்போஸ்தலனாகிய யோவான், மூன்று விதமான மக்களுக்கு இதனை எழுதுகிறார். முதலாவது பிள்ளைகள், பின்னர் பிதாக்கள், இடையில் வாலிபர்கள். பரிசுத்த வேதாகமமும் அப்படியே எல்லா வயதினருக்கும் பொதுவானது. சிறுபிள்ளைகளுக்கு நன்னெறிகளைப் புகட்டும் புத்தகமாக மட்டுமல்ல, அது வாலிபர்களுக்கு வழியைக் காட்டும்; பெரியவர்களுக்கும் நல் ஆலோசனைகளைக் கொடுக்கும்.

 இந்த பகுதியில் அப்போஸ்தலனாகிய யோவான் மூன்று பிரிவினர்களில் ஒவ்வொருவருக்கும் இரண்டிரண்டு காரணங்களுக்காக இவற்றை எழுதுவதாக கூறுகிறார். பிள்ளைகளே, அவருடைய நாமத்தினிமித்தம் உங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டிருக்கிறதினால் உங்களுக்கு எழுதுகிறேன் (வச. 12). பிதாக்களே, ஆதிமுதலிருக்கிறவரை நீங்கள் அறிந்திருக்கிறதினால் உங்களுக்கு எழுதுகிறேன். வாலிபரே, பொல்லாங்கனை நீங்கள் ஜெயித்ததினால் உங்களுக்கு எழுதுகிறேன். பிள்ளைகளே நீங்கள் பிதாவை அறிந்திருக்கிறதினால் உங்களுக்கு எழுதுகிறேன் (வச. 13). பிதாக்களே, ஆதிமுதலிருக்கிறவரை நீங்கள் அறிந்திருக்கிறதினால் உங்களுக்கு எழுதியிருக்கிறேன். வாலிபரே, நீங்கள் பலவான்களாயிருக்கிறதினாலும், தேவவசனம் உங்களில் நிலைத்திருக்கிறதினாலும், நீங்கள் பொல்லாங்கனை ஜெயித்ததினாலும், உங்களுக்கு எழுதியிருக்கிறேன் (வச. 14).

பிள்ளைகள்:
               

    பிள்ளைகளுக்கு எழுதுவதன் நோக்கம், பிதாவை அறிந்திருக்கிறதினால் மற்றும் பாவங்கள் மன்னிக்கப்பட்டிருக்கிறதினால். பிதாவாகிய தேவனை அறிந்து, அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொள்ளும் போது நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டு நாம் அவருடைய பிள்ளைகள் ஆகிறோம். பாவங்கள் மன்னிக்கப் பட்டிருக்கும் இரட்சிப்பின் அனுபவம் என்பது ஆவிக்குரிய வாழ்க்கையில் ஒரு பிள்ளை அனுபவம். இது அடிப்படையான மற்றும் ஆரம்ப அனுபவம். இதிலேயெ நாம் திருப்தியடைந்து இருந்துவிடக் கூடாது. பிள்ளைகள் பெரியவர்களாக வளர வேண்டும்; ஆவிக்குரிய நிலையில் இன்னும் நாம் முன்னேறிச் செல்லவேண்டும்.

பிதாக்கள்:  
               
      பிதாக்களுக்கு எழுதுவதன் நோக்கத்தில் ஆதிமுதல் இருக்கிறவரை நீங்கள் அறிந்திருக்கிறதினால் என இருமுறையும் அதையே குறிப்பிடுகிறார். ஆதிமுதல் இருக்கிற திரியேக தேவனை அறிந்திருத்தல் ஆவிக்குரிய நிலையில் பிதாக்களின் அனுபவம். தேவனை நான் முழுமையாய் அறிந்து கொண்டேன் என எவருமே கூற முடியாது. அப்படி ஒரு பூரணம் வரும்போது அவர் நம்மை தம்மிடமாய் எடுத்துக் கொள்வார். அவரைப் பற்றிய பூரண அறிவு என்பது ஆவிக்குரிய வாழ்க்கையில் நாட்கள் செல்லச் செல்லத் தான் வரும். நாம் அனைவருமே அந்த நிலைமைக்கு நேராய் சென்று கொண்டிருக்கிறோம். ஆதிமுதல் இருக்கிறவரை அறிவதற்கும் அவரைப் பற்றி அறிவதற்கும் வித்தியாசம் உண்டு.

         நம் அனைவருக்குமே நமது பிரதமர் மற்றும் முதல்வரைத் தெரியும். அவர்களுக்கு நம்மைத் தெரியுமா? தெரியாது. நாம் தெரிந்திருப்பதெல்லாம் அவர்களைப் பற்றி தான்; அவர்களை அல்ல. அவர்களுக்கோ தனிப்பட்ட முறையில் நம்மையும் தெரியாது; நம்மைப் பற்றியும் தெரியாது. நாம் அவர்களைப் பற்றி அறிந்திருப்பதெல்லாம் கேள்விப்படும் செய்திகள், வாசிக்கும் புத்தகங்கள் மூலம் மட்டுமே. அவர்களை நாமும் அவர்கள் நம்மையும் அறிந்திருக்க வேண்டுமெனில் அவர்களுடன் நெருங்கிப் பழகியிருக்க வேண்டும்; அன்றாடம் தொடர்பில் இருக்க வேண்டும். அதுபோலவே நாமும் ஆதிமுதல் இருக்கிறவரை அறிந்திருக்கிற வேண்டுமென்றால், வாரவாரம் சபைகளில் செய்திகளைக் கேட்டால் மட்டும் போதாது; வேதாகமத்தை வாசித்தால் மட்டும் போதாது. அவருடன் ஜெபத்தில் பேச வேண்டும்; அன்றாடம் உறவாட வேண்டும். நாமும் தேவனும் இருவருமே இருவழித்தொடர்பில் தொடர்ந்து, அவருடன் நாம் ஐக்கியத்தில் நிலைகொண்டிருக்கும் போது தான், நாம் அவரை முழுமையாக அறிய முடியும்; ஆவிக்குரிய வாழ்க்கையில் முன்னேறி பிதாக்கள் என்ற முதிர்ச்சி நிலையை அடைய முடியும்.

வாலிபர்களுக்கு எழுதும் காரியங்களை அடுத்த இதழில் காணலாம்.

[பாலைவனச் சத்தம் - செப்டெம்பர் 2016 இதழில் வெளியான எனது கட்டுரை]





Saturday, October 01, 2016

காண்கிறதினால் … கேட்கிறதினால் …

முன்னெப்போதும் இருந்திராத அளவுக்கு வளர்ந்துள்ள தகவல் பரிமாற்ற ஊடகங்களின் பரிணாம வளர்ச்சியை உற்றுநோக்கும் போது நமக்கு வியப்பாக இருப்பதுடன் இது எங்கே போய் முடியுமோ என்று ஒருவித பயமும் நம்மைத் தொற்றிக் கொள்கிறது. இது குறித்து 2600 வருடங்களுக்கு முன்னரே முன்னறிவிக்கப்பட்டிருப்பது (தானி. 12:4) இது கடைசிக்காலம் என்பதை நமக்கு நினைவுபடுத்துகிறது.  தகவல் பரிமாற்ற ஊடகம் 15ம் நூற்றாண்டில் அச்சு வடிவமும் பின்னர் படிப்படியாக ரேடியோ, தொலைபேசி, தொலைக்காட்சி, சினிமா என ஒலி ஒளி வடிவம்  பெற்று, தற்போது இவையனைத்தும் இண்டர்நெட் மூலம் ஒருன்கிணைந்து கையடக்க செல்போன் மூலம் நம் பாக்கெட்டிற்குள்ளேயே வந்துவிட்டன. மேலும் தற்போது சமூக வலைத்தொடர்புகள் தளங்கள் மூலம் இவை அனைவரையும் எளிதில் சென்றடைகின்றன.

இது போன்ற வளர்ச்சி, சமுதாயத்தில் கண்கூடான பல முன்னேற்றங்களுடன் தனிநபர்  வாழ்க்கையிலும் பல தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், அதிக ஞானத்திலே அதிக சலிப்புண்டு; அறிவுபெருத்தவன் நோவுபெருத்தவன் (பிர. 1:18). இவற்றை ஏற்கனவே ஞானியாய் இருந்து தன் வாழ்க்கை அனுபவத்தின் மூலம் நமக்கு போதிக்கும் சாலமோனின் பிரசங்கி புத்தகத்தின் முகவுரை (பிரசங்கி 1:8-11) மற்றும் முடிவுரைப் பகுதி (பிரசங்கி 12: 12-14) பகுதிகளிலிருந்து இங்கே நாம் ஆராயலாம்.

1) காண்கிறதினால் கண்: [Visual Media] – 1:8a

ஐம்புலன்களில் பார்வையே பிரதானம். ஒளியுடன் ஒலியும் கூடிவரும்போது அது ஒருவரை வெகுவாகக் கவர்ந்துவிடுகிறது. இருப்பினும் காண்கிறதினால் கண் திருப்தியாகிறதில்லை, கேட்கிறதினால் செவி நிரப்பப்படுகிறதுமில்லை (பிர. 1:8) என்பது சாலமோனின் அனுபவம். பாதாளமும் அழிவும் திருப்தியாகிறதில்லை; அதுபோல மனுஷனுடைய கண்களும் திருப்தியாகிறதில்லை (நீதி. 27:20) என்பதும் அவரது கூற்று. கண்ணானது சரீரத்தின் விளக்காயிருக்கிறது; உன் கண் தெளிவாயிருந்தால், உன் சரீரமுழுவதும் வெளிச்சமாயிருக்கும்; உன் கண் கெட்டதாயிருந்தால் உன் சரீரம் முழுவதும் இருளாயிருக்கும். ஆகையால் உன்னிலுள்ள வெளிச்சம் இருளாகாதபடிக்கு (நீ காண்பவைகளைக் குறித்து) எச்சரிக்கையாயிரு (லூக்கா 11:34,35) என்றார் இயேசு. எனவே ஊடக பயன்பாட்டில் தீங்கான காரியத்தை என் கண்முன் வைக்கமாட்டேன் (சங். 101:3) என்பது நமது தீர்மானமாக இருக்க வேண்டும்.

2) கேட்கிறதினால் செவி:  [Audio Media] – 1:8b
உலகில் இசைக்கு மயங்காத உயிரியே இல்லை என்பர். நாம் ரசிக்கும் இசையுடன் கூடிய பாடல்கள் எந்த விதத்திலும் துன்மார்க்கத்திற்கு ஏதுவாக நம்மை நடத்தாமல், புத்திமதிகள் நிறைந்து பக்தியில் பெருகிட உதவுபவையாக இருக்க வேண்டும் (கொலோ 3:16).   தொலைபேசி பயன்பாட்டிற்கான செலவுகள் தற்சமயம் வெகுவாக குறைந்து விட்டமையால் அவசியமின்றி நாம் பயன்படுத்தலாகாது. அதில் நாம் செலவிடும் நேரமும் ஒரு பொன்னான செலவினமே. மட்டுமல்லாமல், சொற்களின் மிகுதியில் பாவமில்லாமற்போகாது (நீதி. 10:19) என்ற வசனத்தை மனதிற்கொண்டு, சொல்லவந்த விஷயத்தை பகிர்ந்து சுருக்கமாக உரையாடலை முடித்துக் கொள்வது நல்லது. அதிலும் எதிர்பாலருடன் பேசும்போது கவனம் தேவை. மோசம்போகாதிருங்கள்; ஆகாத சம்பாஷணைகள் நல்லொழுக்கங்களைக் கெடுக்கும் (1 கொரி 15:33).

3) புத்தகங்களுக்கு முடிவில்லை: [Print Media] – 12:12
வாசிப்புப் பழக்கம் ஒரு நல்ல விஷயம் என்பது மறுப்பதற்கில்லை. அதே வேளையில் அநேகம் புஸ்தகங்களை உண்டுபண்ணுகிறதற்கு முடிவில்லை என்ற உண்மையை உணர்ந்து கொள்ளும் போது தான் நமக்கு இருக்கும் குறுகிய காலத்தை மிகவும் பிரயோஜனமாக பயன்படுத்த முடியும். நம் வாழ்க்கையில் இதுவரையும் பாடப்புத்தகங்கள் உட்பட பலநூறு புத்தகங்களைப் படித்துவிட்ட நாம் பரிசுத்த வேதாகமத்தை ஒருமுறையாவது முழுமையாக படித்திருக்கிறோமா? ’இந்தப் புஸ்தகத்தில் எழுதியிராத வேறு அநேக அற்புதங்களையும் இயேசு தமது சீஷருக்கு முன்பாகச் செய்தார் (யோவா. 20:30), இயேசு செய்த வேறு அநேக காரியங்களுமுண்டு; அவைகளை ஒவ்வொன்றாக எழுதினால் எழுதப்படும் புஸ்தகங்கள் உலகம் கொள்ளாதென்று எண்ணுகிறேன் (யோவா. 21:25)’ என்கிறார் அவரது முதன்மைச் சீடர். அப்படியானால், இருக்கும் வாசிப்பு ஆர்வத்தில், எழுதப்பட்ட வேதாகமத்தை எவ்வளவு அருமையாய் கருதி நாம் படிக்க வேண்டும். 

4) நூதனம் எதுவுமில்லை: [Sharing / Forwarding] – 1:9-11
தகவல் பரிமாற்றங்கள் பரவலாகி விட்ட பின்னர், முன்பு சாமானியரின் கையில் கிடைப்பதற்கரிய தகவல்களெல்லாம் இப்போது மிகவும் எளிதாக கிடைத்துவிடுகின்றன. தகவல் ஒன்றைக் கண்டவுடன் அது நமக்கு நூதனமாக தெரிவதால், மற்றவர்களுக்கும் தெரியட்டுமே ஏன்ற நல்லெண்ணத்தில் அவற்றை பகிர்ந்து கடத்துகிறோம். ஆனால், உண்மையில் அவற்றில் நூதனம் எதுவுமில்லை. முன் நடந்ததே இப்பொழுதும் நடக்கிறது; இனி நடக்கப்போகிறதும் முன்னமே நடந்தது (பிர. 3:15). எனவே பரபரப்பு செய்திகளை அடுத்தவருக்கு பகிர்ந்து கடத்துவதிலும் பரமனின் நற்செய்தியை ஞானமாய் கடத்துவதில் நாம் கவனம் செலுத்தலாம்.

5) நியாயத்தீர்ப்பு நிச்சயம்: [Accountable Responsibility] 12:13,14
ஊடக பயன்பாட்டில் நமது ஒவ்வொரு கிரியையையும், அந்தரங்கமான ஒவ்வொரு காரியத்தையும் நன்மையானாலும் தீமையானாலும், தேவன் நியாயத்திலே கொண்டுவருவார். ஊடகங்கள் யாவும் அடிப்படையில் நடுநிலையான தொடர்பு சாதனங்கள்; அவை தன்னகத்தே நன்மையாகோ தீமையாகவோ இருப்பதில்லை. அதை பயன்படுத்தி ஒருவர் கடத்தும் தகவல்களின் தன்மையின் மூலம் தான் அது நல்ல அல்லது தீமையான சாதனமாக மாறுகிறது. கடைசிநாட்களில் கொடியகாலங்கள் வருமென்று முன்னறிவிக்கப்பட்டவைகளின் (2 தீமோ 3:1-5) நிறைவேறுதலுக்கு உறுதுணையாக இன்றைய தகவல் பரிமாற்ற ஊடகங்கள் இருந்துவருகின்றன. அதற்காக நாம் அவற்றை ஓரங்கட்டி விடாமல் நமது நேரம், பொருள், திறமை தாலந்துகளைப் பயன்படுத்தி நித்தியஜீவனுக்கான மீட்பின் நற்செய்தியை மற்றவர்களுக்கு அறிவித்திட, ஊடகங்களை முறையாக கையாள நாம் கவனம் செலுத்தலாம். ஏனெனில், நன்மையானதைச் செய்தால் நமக்கு நியாயத்தீர்ப்பில் பலன் கிடைக்கும்.


ஆகையால் நீங்கள் புசித்தாலும், குடித்தாலும், எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் 
தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள். (1 கொரி. 10:31).

[இது தரிசனச்சுடர் அக்டோபர் 2016 ல் வெளிவந்துள்ள  ஊடக பயன்பாடுகள் குறித்த
எனது வேத ஆராய்ச்சிக் கட்டுரை]