Saturday, May 07, 2016

நம்பிக்கைக்கு உரிய கர்த்தர்

கிறிஸ்துவில் மிகவும் பிரியமுள்ள சகோதர சகோதரிகளே, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்களுக்கு என் வாழ்த்துதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு மாத இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் கர்த்தருடைய வார்த்தையை வாசிக்கப்பட்ட சங்கீத பகுதியிலிருந்து உங்கள் மத்தியில் பகிர்ந்து கொள்ளும் படியாக தேவன் எனக்குக் கொடுத்த இந்த வாய்ப்புக்காக அவருக்கு நன்றி செலுத்துகிறேன்.

சங்கீதம் 146 ஐ ஒரு மாதத்திற்கு முன்னர் எனது தியான வேளையில் தியானித்துக் கொண்டிருக்கும் போது நான் கற்றுக் கொண்ட ஆவிக்குரிய காரியங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்தநாள் ஆராதனை திருவிருந்து ஆராதனையாக இருப்பதால், இந்த சங்கீத பகுதிமூலம் மட்டுமே நமக்கு இந்த வாரத்திற்குரிய ஆவிக்குரிய உணவை பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. எனவே கவனமுடன் ஆண்டவருடைய வார்த்தையைக் கற்றுக்கொள்ள நமது சிந்தையை அர்ப்பணிப்போம்.

இந்த சங்கீதத்தை நமது சிந்தனைக்காக மூன்று பகுதிகளாக பிரித்துக் கொள்ளலாம்.

1. கர்த்தரை துதித்தல் (வச. 1, 2)
2. கர்த்தரை நம்புதல் (வச. 3-5)
3. கர்த்தர் நம்பிக்கைகுரியவர் (வச. 6-10)

1. கர்த்தரை துதித்தல் (வச 1, 2):

இங்கே சங்கீதக்காரன் கர்த்தரைத் துதிப்பது குறித்து விபரமாக அறிகிறோம். என் ஆத்துமாவே கர்த்தரைத் துதி என தனக்குத்தானே சொல்லிக்கொண்ட அவன், நான் உயிரோடிருக்குமட்டும் கர்த்தரைத் துதிப்பேன், நான் உள்ளளவும்என் தேவனைக் கீர்த்தனம் பண்ணுவேன் என்கிறான். உயிரோடிருக்குமட்டும்… உள்ளவும் என்ற வார்த்தைகள் எவ்வளவு காலம் வரையும் கர்த்தரைத் துதிப்பது என்பதைக் குறிக்கிறது. உயிரோடு இருக்கும் மட்டும், உயிர் உள்ளளவும். உயிர் பிரிந்த பின்னர் நம்மால் ஒன்றும் செய்ய இயலாது. மரித்தவர்களும் மவுனத்தில் இறங்குகிற அனைவரும் கர்த்தரைத் துதியார்கள் என்று சங். 115: 17ல் சொல்லப்பட்டிருக்கிறது.

உயிரோடு உள்ளமட்டும் என்பது ஆங்கிலத்தில், as long as I live என கூறப்படுகிறது. அது as long as I live comfortably, as long as I live happily, as long as I live in prosperity என எந்தவொரு நிபந்தனையுடனும் கூடியதாக இல்லை. உயிரோடிருக்குமட்டும்… உள்ளவும் என்ற வார்த்தைகள் எவ்வளவு காலம் என்பது மட்டுமே; நிபந்தனைகளுடன் கூடிய செயல்பாடு அல்ல. உள்ளளவும் என்ற வாத்தையுமே உயிர் உள்ள அளவு கால அளவைத் தான் குறிக்கிறது. வசதி வாய்ப்புகள் உள்ளளவும், கார், வீடு பங்களா உள்ளளவும் என்ற நிபந்தனைகள் எதையும் அவன் விதித்துக் கொள்ளவில்லை. கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்தரிப்பேன்; அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும் என்ற அவனுடைய வார்த்தை (சங். 34:1) இந்த ஆவிக்குரிய கருத்தை மேலும் உறுதி செய்கிறது.

2. கர்த்தரை நம்புதல் (வச. 3-5):

இந்த சங்கீதக்காரனால் எப்படி எக்காலத்திலும், உயிரோடிருக்குமட்டும் தேவனைத் துதிக்க முடிகிறது? காரணம் அவன் தேவனாகிய கர்த்தர் மேல் தன் நம்பிக்கையை வைத்திருந்தான். மட்டுமல்ல, பிரபுக்களையும் இரட்சிக்க திராணியில்லாத மனுபுத்திரரையும் நம்பாதேயுங்கள் எனவும் அறிவுரையும் கூறுகிறான் (வச. 3). ஏன் நாம் அவர்களை நம்பக் கூடாது?

முதலாவதாக,
அவர்கள் இரட்சிக்க (உதவி செய்ய) திராணியில்லாதவர்கள்.

இரண்டாவதாக,
அவனுடைய ஆவி பிரியும். அதாவது அவன் திடீரென ஒருநாள் இறந்து போவான். அவன் தன் மண்ணுக்குத் திரும்புவான். அதாவது, இறந்து மண்ணோடு மண்ணாக மட்கி மறக்கப்பட்டே போவான்.

மூன்றாவதாக,
அவன் இறக்கும் அந்த நாளில் அவன் நம்மைக் குறித்து, நமக்காக வைத்திருந்த யோசனைகள், திட்டங்களெல்லாம் அழிந்து போகும். 
ஆனால், யாக்கோபின் தேவனைத் தன் துணையாகக் கொண்டிருந்து, தன் தேவனாகிய கர்த்தர்மேல் நம்பிக்கையை வைக்கிறவன் பாக்கியவான் (வச. 5). கர்த்தரை சந்தேகமே இல்லாமல் நம்புவதற்கு என்னென்ன காரணங்கள் என்பது பின்வரும் வசனங்களில் குறிப்பிடப்படுகிறது.

3. கர்த்தர் நம்பிக்கைக்கு உரியவர் (வச. 6-10):

முதலாவதாக, தேவனே வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அதிலுள்ள யாவையும் உண்டாக்கினவர். பிரபுக்கள், பொறுப்பிலுள்ள மனுஷர்கள் தங்கள் திறமையாலோ அடுத்தவர் கருணையாலோ அல்லது தேவனுடைய கிருபையாலோ அந்த பொறுப்புக்கு வந்தவர்கள். தேவனோ அனைத்தையும் படைத்தவர் (வச. 6). எனவே அனைத்திற்கும் அதிபதி.

இரண்டாவதாக,
மனுபுத்திரரின் பொறுப்புகள் பதவிகள் திடீரென மாறிப் போகலாம்; அவன் ஆவி ஒருநாள் பிரியும். கர்த்தர் சதாகாலங்களிலும் அரசாள்கிறார். நாம் நம்பின மனுபுத்திரர் நம் கண்முன்னே, அதாவது நமது தலைமுறையிலேயே திடீரென இறந்துபோவர். தேவனோ தலைமுறை தலைமுறையாய் ராஜரீகம் பண்னுகிறார் (வச. 10).

மூன்றாவதாக,
அவர் என்றென்றைக்கும் உண்மையைக் காக்கிறவர் (வச. 6). மனுபுத்திரர் இடையிலே வாக்குமாறலாம் அல்லது அவன் இறக்கும் நாளிலே அவன் நம்மிடம் கொடுத்திருந்த வாக்குறுதிகள், நமக்காக வைத்திருந்த திட்டங்களெல்லாம் அழிந்து போகும். கர்த்தரோ  உண்மையைக் காக்கிறவர்; சொன்ன வாக்கு மாறாதவர்.

ஒருவர்மீது நமக்கு நம்பிக்கை திடீரென வந்துவிடுவதில்லை. முன் அனுபவம், கண்கூடாக நாம் கண்டறிந்த காரியங்கள், இவை தான் மேற்கொண்டும் அவரை நம்பும்படிச் செய்கிறது. தேவனும் அவ்விதமே தனது பண்புகள் செயல்பாடுகள் மூலம் தனது நம்பகத்தன்மைக்கு இன்னும் நம்பிக்கையூட்டுகிறார். வசனங்கள் 7-9 ன் படி, அவர் ஒடுக்கப்பட்டவர்களுக்கு நியாயஞ்செய்கிறார்; பசியாயிருக்கிறவர்களுக்கு ஆகாரங்கொடுக்கிறார்; கட்டுண்டவர்களை விடுதலையாக்குகிறார்குருடரின் கண்களைத் திறக்கிறார்; மடங்கடிக்கப்பட்டவர்களைத் தூக்கிவிடுகிறார்; நீதிமான்களை சிநேகிக்கிறார்; பரதேசிகளைக் காப்பாற்றுகிறார்; அவர் திக்கற்ற பிள்ளையையும் விதவையையும் ஆதரிக்கிறார்.

இது தேர்தல் காலம். தமிழ்நாடு, கேரளாவில் இந்த மாதம் சட்டமன்றத் தேர்தல்கள் நடக்க இருக்கின்றன. ஒவ்வொரு அணியும் தங்கள் வாக்குறுதிகளை தேர்தல் அறிக்கைகளில் அள்ளி வழங்குகின்றனர். அவர்களை எப்படி நம்புவது? ஆளும் கட்சியாக இருந்தாலும் ஆண்ட கட்சிகளாக இருந்தாலும் தங்கள் ஐந்தாண்டு காலத்தில் என்ன செய்தார்கள் செய்ய தவறினார்கள் என்பதை வைத்து தான் மேற்கொண்டு வாக்குறுதிகளை நிறைவேற்றும் நம்பிக்கைக்கு உரியவர்களா இல்லையா என நாம் தீர்மானிக்க முடியும். அதுபோலவே, ஒடுக்கப்பட்டவர்கள், பசியாயிருக்கிறவர்கள், கட்டுண்டவர்கள், குருடர், மடங்கடிக்கப்பட்டவர்கள், பரதேசிகள், திக்கற்ற பிள்ளைகள் மற்றும் விதவைகள் என வாழ்க்கையில் நம்பிக்கையற்றவர்களுக்கு ஒரு நம்பிக்கையாக இருப்பதன் மூலம் தேவன் நமக்கும் நம்பத்தகுந்தவர் என்ற நம்பிக்கை மேலும் வலுவடைகிறது.

குறிப்பாக துன்மார்க்கரின் வழியைக் கவிழ்த்துப் போடுகிறார் என்பது அவருடைய முக்கியமான ஒரு பண்பு. தேர்தல் காலங்களில் அனைத்து கூட்டணியினரும் அள்ளிவீசும் வாக்குறுதிகளையும் உற்றுப் பார்க்கும்போது, யார் ஆட்சிக்கு வந்தாலும் பிரச்சினையே இல்லை; நல்லது தானே நடக்கப் போகிறது என நினைக்கத் தோன்றுகிறது. ஆனால் அவர்கள் செய்யும் நலத்திட்டங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டு ஊழலற்ற நேர்மையான அரசாக இருந்தால் மட்டுமே அதன்மீது மக்களின் நம்பிக்கை இன்னும் பெருகும். அந்த பண்பினை தேவன் தன்னகத்தே கொண்டிருக்கிறார். நீதிமான்களைக் கர்த்தர் சிநேகிக்கிறார் (வச. 8); துன்மார்க்கரின் வழியையோ கவிழ்த்துப் போடுகிறார் (வச. 9).


எனவே, உலகத்தில் உள்ள எந்த மனுஷனையும் அதிகாரியையும் அரசாங்கங்களையும் காட்டிலும் தேவன் நிச்சயம் நம்பப்படத்தக்கவர். யாக்கோபின் தேவனைத் தன் துணையாகக் கொண்டிருந்து, தன் தேவனாகிய கர்த்தர்மேல் நம்பிக்கையை வைக்கிறவன் பாக்கியவான் (வச. 5). இந்த பாக்கியமான அனுபவத்துக்கு நம்மை தைரியமாய் அர்ப்பணிப்போம். கர்த்தருடைய ஆசீர்வாதங்களைப் பெற்று அனுபவிப்போம். ஆமென். 


[இது நான் 06.05.2016 அன்று PCI Church Kuwait ல் தமிழில் பகிந்து கொண்ட சங்கீதப் பகுதி. செய்தி மலையாளத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டது]