Sunday, August 29, 2010

அறிந்து கொள்வோம் அரவாணிகளை

அரவாணிகள் அல்லது திருநங்கைகள் என கண்ணியமான வார்த்தைகளாலும் இன்னும் பிற கண்ணியமற்ற சில வார்த்தைகளாலும் அழைக்கப்படும் மூன்றாம் பாலினத்தவர் பற்றி நம்மில் பலருக்கு சரியான முழுவிபரங்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. காரணம் அவர்களைக் குறித்து நேர்மையான நோக்குடன் அணுகாமல் அவர்களை பிச்சை மற்றும் பாலியல் தொழிலாளர்களாக ஊடகங்கள் சித்தரித்து வரும் நிலை தான். முழுமையாக ஆண் எண்றோ அல்லது பெண் என்றோ இல்லாமல் இருவரது பண்புகளையும் உள்ளடக்கிய இடைநிலை பாலினமான (Intersex) இவர்கள் மூன்றம் பாலினத்தவராக (Third Gender) தற்போது தான் பல நாடுகளிலும் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டு வருகிறார்கள்.

ஆணும் பெண்ணுமாக

ஆதியிலே மனுஷரைச் சிருஷ்டித்த தேவன் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார் (மாற்கு 10:6). அப்படியென்றால், இவர்கள் எப்படி வந்தார்கள் எப்போது வந்தார்கள், இவர்களைக் குறித்த தேவனின் திட்டம் என்ன, இவர்களை நாம் அணுக வேண்டிய விதம் என்ன என்பதை குறித்து அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

மனித உடலில் 46 குரோமோசோம்கள் உண்டு என்பது நாம் பள்ளிப் பருவத்திலேயே அறிந்து கொண்டது தான். அதைப்பற்றி இன்னும் கொஞ்சம் தெரிந்து கொண்டால் தான் அரவாணிகளைப் பற்றி புரிந்து கொள்ள முடியும். மனிதனின் பல்வேறு குணாதிசயங்களுக்கும் காரணமான வெவ்வேறு மரபணுக்களை (Genes) கற்றையாக ஒருங்கே கொண்டிருப்பது தான் குரோமோசோம். இந்த 46 குரோமோசோம்களும் இரண்டிரண்டாக மொத்தம் 23 ஜோடிகளாக காணப்படும். இவற்றில் 22 ஜோடிகள் உடலின் பால் சம்பந்தப்பாடாத உடலின் மற்ற அனைத்துப் பண்புகளையும் கட்டுப்படுத்துபவை. கடைசி ஜோடி குரோமோசோம்கள் பாலினம் (Sex) சம்பந்தப்பட்டவை. அது XY என்று ஆண்களிலும் XX என்று பெண்களிலும் கானப்படும். இனப்பெருக்கத்தின் போது ஆண்களில் அது X மற்றும் Y ஆகவும். பெண்களில் இரண்டு X களாகவும் அளவில் மட்டுமல்ல பண்புகளிலும் சரிபாதியாக பிரிந்து கரு உருவாக உதவும். உருவாகும் கருவில் ஆணின் X ம் பெண்ணின் X ம் இணைந்து XX குரோமோசோம் உருவானால் அது பெண்ணாக வளரும். ஆணின் Y ம் பெண்ணின் X ம் இணைந்து XY குரோமோசாமாக உருவானால் ஆணாகவும் வளரும். இன்னும் வேறுவிதமாக கூறினால் உருவாகும் கருவில் Y குரோமாசோம் இருந்தால் அது ஆணாகவும் Y இல்லையென்றால் அது பெண்ணாகவும் வளர்ச்சியடைகிறது எனலாம்.

மிகச்சில வேளைகளில் (ஆயிரத்தில் ஒன்றிரண்டு) இது இவ்விதம் முறைப்படி இரண்டாக பிரிந்து இணைவதில்லை. எடுத்துக்காட்டாக உருவாகும் கருவில் அல்லது என்ற ஒற்றைக்குரோமோசோம் மட்டுமே காணப்படலாம்; இவர்கள் 45Y ஆகவோ (ஆண்பண்புகள் குறைவான ஆண்கள்) அல்லது 45X (பெண்பண்புகள் குறைந்த பெண்களாகள்) ஆகவோ இருப்பர். இதுபோன்று உருவாகும் கருவில் இரண்டிற்கும் மேற்பட்ட குரோமோசோம்களும் காணப்படலாம். இவர்கள் பெண்பண்புகள் அதிகம் கொண்ட பெண்கள் (47XXX) ஆண்பண்புகள் அதிகம் கொண்ட ஆண்கள் (47XYY) ஆண்பண்புகள் கொண்ட பெண்கள் அல்லது பெண்பண்புகள் கொண்ட ஆண்கள் (47XXY) என வித்தியாசமானவர்களாக இருப்பர்.


இவ்விதம் குரோமோசோமின் எண்ணிக்கை கூடுதல் குறைவைப் பொறுத்தும் இவற்றில் Y குரோமோசோம் இருப்பதையும் இல்லாததையும் பொறுத்தும் அந்த கருவானது வளர்ச்சியடையும் போது அதில் உட்புறமான மற்றும் வெளிப்புறமான இன உறுப்புக்கள் உருவாகுவது கட்டுப்படுத்துகிறது. மட்டுமல்ல, இப்படியான இன உறுப்புக்களின் வளர்ச்சியின் அளவை பொறுத்து அவர் பின் நாட்களில் பருவ மாற்றங்கள் உடலில் தென்பட ஆரம்பித்து முழுமையான ஒரு ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ அல்லது இடைநிலையாகவோ அடையாளம் காணப்படுகிறார்.

ஆணா? அல்லது பெண்ணா?

ஒருவரை ஆண் என்றோ அல்லது பெண் என்றோ வெளித்தோற்றத்தை வைத்து, எளிதாக அடையாளம் கண்டு விடுகிறோம். ஆனால் அது எப்போதும் சாத்தியமில்லாத சூழ்நிலையில், ஆணுக்கும் பெண்ணிற்கும் உள்ள பல்வேறு பால் வேறுபாடுகள் பற்றி தெரிந்திருக்க வேண்டும். ஆணுக்கும் பெண்ணிற்கும் உள்ள வேறுபாடுகள் அடிப்படையில் பால் வேறுபாடுகள் என்பதை கீழ்கண்டவாறு 4 முக்கிய வகையாக பிரிக்கலாம்:

1. மரபணு பால் (Genetic Sex) : இதன் படி ஒருவரின் உடலில் 23ம் ஜோடி குரோமோசோமில் Y காணப்பட்டால் அவரை ஆண்(XY) அது காணப்படாவில்லையெனில் பெண்(XX) எனவும் கூறுகிறோம்.

2. இன உறுப்புகள் பால் (Gonadal Sex) : உருவாகும் கருவில் Y குரோமோசோம் இருப்பதையும் இல்லாததையும் பொறுத்து உள்ளான மற்றும் வெளிப்புறமான இனஉறுப்புக்கள் ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ வளர ஆரம்பிக்கும். எனவே இந்த இன உறுப்புகள் பால் உருவாக அடிப்படையாது மரபணு பால் எனலாம்.

3. புறத்தோற்ற பால் (Phenotype Sex) - இதில் இனஉறுப்புக்கள் வளர்வது மாத்திரம்மல்ல, அதற்கேற்ப அவைகளில் நாளமில்லாச் சுரப்பிகள் சுரக்கும் ஹார்மோன்கள் (ஆண்ட்ரோஜன், ஈஸ்ரொஜன்) அதனால் ஏற்படும் உடல்வாகு / பிற உடல் மாற்றங்கள் (Secondary Sexual Characters) ஆகியவை அடங்கும். இன உறுப்புகளில் ஆண்ட்ரோஜென் சுரந்தால் ஆணாகவும் ஈஸ்ட்ரோஜன் சுரந்தால் பெண்ணாகவும் வளர்ச்சியடைகின்றனர்.

4. உளவியல் பால் (Psychological Sex) – மேற்கண்ட பண்புகளுடன் ஒருவரது வளர்ப்புமுறை சமுதாய சூச் நிலையை பொறுத்து ஒருவர் மனதளவிலும் முழுமையான ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ முதிர்ச்சிய்டைகிறார்.
இவ்விதம் ஒருவர் நான்கு நிலைகளிலும் ஒரேவகையினராக பொருந்தினால் மட்டுமே அவர் ஒரு முழுமையான ஆண் அல்லது பெண் எனலாம். ஒர் முழுமையான ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ இல்லாமல், இடை நிலையுடன் இருப்பது கரு உருவாகும் போது அவற்றிலுள்ள மரபணுக்கள் மற்றும் அவற்றைத் தாங்கியுள்ள குரோமோசோம்களின் அமைப்பையும் அளவையும் பொறுத்தது. இந்த மரபணுக்களில் நடைபெறும் மாற்றங்கள் (mutations) தன்னிச்சையாக தலைமுறைதோறும் தொடர்கின்றன. இதனை மரபணு ஆலோசனை மூலம் ஓரளவு தவிர்க்கலாமே தவிர முற்றிலும் சரிப்படுத்துவது நம் கையில் இல்லை.

அண்ணகர்கள் (அரவாணிகள்) மூன்றுவிதம் 

விவாகரத்து குறித்து கேள்வி கேட்ட பரிசேயர்களைப் பார்த்து இயேசு: ”தாயின் வயிற்றிலிருந்து அண்ணகர்களாய்ப் பிறந்தவர்களும் உண்டு; மனுஷர்களால் அண்ணகர்களாக்கப் பட்டவர்களும் உண்டு; பரலோகராஜ்யத்தினிமித்தம் தங்களை அண்ணகர்களாக்கிக் கொண்டவர்களும் உண்டு. இதை ஏற்றுக்கொள்ள வல்லவன் ஏற்றுக்கொள்ளக் கடவன்” என்றார் (மத் 19:12).

தாயின் வயிற்றில் அண்ணகர்களாய் பிறந்தவர்களை மரபணு பால் மற்றும் இனப்பெருக்க உறுப்புகள் பால் வகையில் இவ்விதம் வகைப்படுத்துகிறோம். இவர்களுக்கே இன்று சரியான அங்கிகாரமும் தேவைகளும் இல்லாத நிலையில் மனுஷர்களால் அண்ணகர்களாக்கப்படுகிறவர்கள் இன்றைய நாட்களில் இல்லை எனலாம். இவர்கள் இனப்பெருக்க உறுப்புகளை அறுவைசிகிச்சை செய்து கொள்வதன் மூலம் புறத்தோற்ற பால் மற்றும் உளவியல் பாலில் மாற்றம் காண முற்படுபவர்கள். இன்றைய காலகட்டத்தில் அண்ணகர்களுக்கு இத்தகைய அறுவைசிகிச்சை மூலம் தங்களின் முதன்மை பாலினத்தோடு ஒத்துப்போகும் புறத்தோற்ற/உளவியல் பாலின நிலையை அடையவே இவை அதிகம் பயன்படுத்தப் படுகின்றன. பரலோக இராஜ்யத்தினிமித்தம் தங்களை அண்ணகர்களாக்கிக் கொள்பவர்களை உளவியல் பால் வகை எனலாம். இவர்கள் ஒரு முழுமையான ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ இருப்பவர்கள். இவர்களுக்கு உடலளவில் எவ்வித மாற்றமும் ஏற்படப் போவதில்லை; ஆனால் மனதளவில் இவர்கள் தங்களை ஒரு ஆண் அல்லது பெண்ணின் இனப்பெருக்க கடமையை செய்வதில் நாட்டமில்லாதவர்கள். இவர்களைக் குறித்து 1 கொரி 7: 25-40 ல் விபரமாக கூறப்பட்டுள்ளது. இவைகளை உற்று நோக்கும் போது அண்ணகர்கள் எந்த விதத்திலும் தாழ்ந்தவர்கள் அல்ல என்பது தெளிவாகிறது.

வேதாகமத்தில் இவர்கள்

வேதாகமத்தில் இவர்கள் பிரதானிகள் (2 இரா 9:32, எரே 38:7, ஆதி 37:36, எஸ்தர் 1:11) விதயடிக்கப்பட்டவர்கள் (உபா 28:1), அண்ணகர்கள் (மத் 19:12). என பல்வேறு பெயர்களில் குறிப்பிடப்படுகிறார்கள். ராஜாவின் அரணமனைகளில் பிரதானிகள், பானபாத்திரக்காரரின் தலைவன், சுயம்பாகிகளின் தலைவன் (ஆதி 40:2), தலையாரிகளுக்கு அதிபதி (ஆதி 37:36) ராஜஸ்திரீக்கு மந்திரி (அப் 8:27) என்ற முக்கிய பொறுப்புகளில் இவர்கள் இருந்து வந்துள்ளனர். இதன் மூலம் அக்காலங்களில் இவர்களுக்கென்றும் ஒரு சிறப்பான அந்தஸ்து இருந்திருக்கிறது என்பது தெளிவாகிறது. இப்படிப்பட்ட அன்ணகர்களுக்கும் அவர்கள் வகித்த பொறுப்புகளுக்கும் ஒரே வார்த்தை வார்த்தை பயன்படுத்தப்படுவதால் வேதாகமத்தில் இவர்களைக் குறித்து கிட்டதட்ட 50 முறை சொல்லப்பட்டிருந்தாலும் 28 இடங்களில் மட்டுமே தான் உண்மையான விதயடிக்கப்பட்டவர்கள், அண்ணகர்களைக் குறிப்பதாக எடுத்துக் கொள்ளவும் வாய்ப்புண்டு.

ஆரம்பத்தில் ஆலய ஆராதனைகளில் சேர்த்துக் கொள்ளப்படாத இவர்கள் (உபா 23:1) பின்னர் சிறப்பாக அங்கீகரிக்கப்படுவதாக ஏசாயாவால் வாக்கு அருளப்பட்டது. என் ஓய்வுநாட்களை ஆசரித்து, எனக்கு இஷ்டமானவைகைளைத் தெரிந்துகொண்டு உடன்படிக்கையைப் பறறிக்கொள்ளுகிற அண்ணகர்களைக் குறித்துக் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், நான் அவர்களுக்கு என் ஆலயத்திலும், என் மதில்களுக்குள்ளும் குமாரருக்கும் குமாரத்திகளுக்குமுரிய இடத்தையும் கீர்த்தியையும்பார்க்கிலும், உத்தம இடத்தையும் கீர்த்தியையும் கொடுப்பேன், என்றும் அழியாத நித்திய நாமத்தை அவர்களுக்கு அருளுவேன். (ஏசாயா 56:4,5).

தேவனைத் தொழுது கொள்ளும் இஸ்ரவேலர் தூய்மையானவர்களாக இருக்கவேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தவே அன்று அங்கவீனன் அங்கீகரிக்கப்படவில்லை எனலாம். மாத்திரமல்ல இவ்விதம் விதையடிக்கப்படுதல் அந்நிய தேவர்களுக்காக செய்யப்படுதவதாக இருந்ததாலும் பழுதுள்ள எதுவும் பலி செலுத்தப்படலாகாது என நியாயப் பிரமாண சட்டம் இருந்ததாலும் இவர்கள் அவ்விதம் ஆலயங்களில் ஒதுக்கப்பட்டிருந்தனர். புதிய ஏற்பாட்டு காலத்தில் எத்தியோப்பிய ராஜாஸ்திரியின் நிதிப்பொறுப்பிலிருந்த அண்ணகன் பிலிப்பு மூலம் இரட்சிக்கப்பட்டு ஞானஸ்நானம் பெற்றான் (அப். 8:37,38). இது கிறிஸ்தவத்தில் அண்ணகர்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதையும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்பதையுமே காட்டுகிறது.

இந்தியாவில் இவர்களின் நிலை:

காலாகாலமாக ஒவ்வோரு நாட்டிலும் இவர்கள் வெவ்வேறு குறிப்பிட்ட வேலைகளுக்காக பயன்படுத்தப்பட்டனர். அதனைப் பொறுத்து ஒவ்வொரு நாட்டிலும் அவர்களது சமூக அந்தஸ்தில் மாற்றங்கள் உண்டு. இந்தியா போன்ற நாடுகளில் ஏற்கனவே மக்கள் தொகை மலிந்துவிட்ட நிலையில் இடப்பட்ட இவர்களின் நிலைமை திண்டாட்டம் தான். கேலி, கிண்டல், பரியாசம், குடும்பத்தினரால் வெறுக்கப்படுதல், மற்றும் சமுதாயத்தில் சரியாக ஏற்றுக் கொள்ளப்படாதிருக்கும் போது இவர்களில் பலர் பாலியல் மற்றும் பிச்சை தொழிலுக்கு வந்து சேருகின்றனர். இவர்களைக் குறித்த சரியான விழிப்புணர்வும் புரிந்து கொளதலும் அக்கறையும் சமுதாயத்தில் இல்லாமையால் இவர்களின் சமூக நிலைமை இன்னமும் மோசமாகி இவர்களைக் குறித்த தவறான கண்ணோட்ட்த்துக்கு விட்டுச் செல்கிறது. எனவே இவர்களைக் குறித்த தெளிவான பார்வை நமக்குத் தேவை.

திருநங்கையர் என மரியாதைக்குரியவர்களாக அழைக்கப்படுவது போன்று தோன்றினாலும், அவர்கள் எல்லோரிடமும் குறைந்தபட்சம் ஒரு X குரோமோசோம் உள்ளது என்பதற்காக இவர்களை முற்றிலும் நங்கையர் பிரிவில் சேர்த்துவிட்டது நியாயமாக இருக்க முடியாது. இவர்களில் பெரும்பான்மையினோருக்கு Y குரோமோசோமும் உண்டு என்பதைக் கருத்தில் கொண்டு இவர்களை உளவியல் மற்றும் புறத்தோற்ற பால் வகையில் ஆணாக இருந்திட ஏன் சமுதாயம் அனுமதிக்கக் கூடாது? இன்றும் இந்தியாவில் பெண்களின் நிலையே பரிதாபமாக காணப்படும் போது இவர்கள் நிலை இன்னும் பரிதாபம் தான்.

சமீப காலங்களில் இவர்களைப் பற்றிய சமூகப் பார்வையில் மாற்றங்கள் வந்து கொண்டிருப்பது வரவேற்கத்தக்கது. 2005 முதல் பாள்போர்ட் விண்ணப்பங்களில் இவர்களுக்கென மூன்றாம் பாலினத்தை குறிப்பிட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. 2009 முதல் வாக்காளர் பட்டியலிலும் இவர்கள் தனிபாலின வகையினராக அங்கிகரிக்கப்பட்டு அடையாள அட்டைகளும் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். தமிழ்நாட்டில் இவர்களின் நலனுக்கென தனி வாரியமே அமைக்கப்பட்டுள்ளது நல்ல விஷயம். அரசியல் மற்றும் அதிகார மட்டத்தில் மட்டும் இந்த மாற்றங்கள் போதாது. ஒவ்வொருவரும் இதுபோன்ற ஆயிரத்தில் ஓரிருவரை அடையாளம் காணும்போது பரிவுடனும் நேர்மையுடனும் நடந்து கொள்ள வேண்டும். தங்களாலியன்ற தனிப்பட்ட மற்றும் சமுதாய உதவிகளை நல்கிட முன்வர வேண்டும். இத்தகைய மாற்றுப் பார்வையில் தங்கள் கடமையினை ஆற்றிட முதலில் கிறிஸ்தவர்கள் முன்வரவேண்டும்.

”ஏழையைப் பரியாசம் பண்ணுகிறவன் அவனை உண்டாக்கினவரை நிந்திக்கிறான்”(நீதி 17:5).



 இது உன்னத சிறகுகள் ஜனவரி-மார்ச் 2010 இதழில் வெளிவந்த எனது கட்டுரை.

கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.