பட்டப் படிப்பின்
உச்சகட்டமாய் இறுதித்தேர்வை எதிர்நோக்கும் இறுதியாண்டு மாணவனுக்கு எதிரே இருக்கும்
சவால்கள் பலப்பல. அப்படி இப்படி என்று எப்படியாவது தேறி விட வேண்டுமென்ற எண்ணத்தில்
ஓடோடி உழைத்த அவனு(ளு)க்கு இப்போதும் ஓய்வில்லை. ’அடுத்து என்ன?’ என்னும் இருசொல் வினா
அவனை ஒரு கை பார்த்து விட்டுத் தான் செல்வேன் என்கிறது. இன்னும் படிக்கவா? இல்லை, வேலைக்குச்
செல்லவா? வேலைக்கு என்றால் படிப்புக்கேற்ற வேலை தான் கிடைக்குமா? இல்லை, சம்பளம் வேண்டுமே
என்பதற்காக ஏதாவது ஒரு வேலையா? எங்கு? எவ்வளவு காலம்? இன்றைய தற்கால முடிவு என் எதிர்கால
கனவுகள் நனவாக உதவுமா? என பல கோணங்களிலும் எண்ண அலைகள் அவர்கள் சிந்தனையை அலைகழித்து
சோர்வடையச் செய்கிறது.
’நம் வாழ்வில்
தேவனுடைய சித்தத்தைக் கண்டறிவது எப்படி?’ என்ற தலைப்பில் ஒன்றுக்கும் மேற்பட்ட கூடுகை
/ முகாம்களில் தெளிவாகக் கற்றிருப்பினும் நடைமுறை சூழ்நிலையில் என்னவோ சிலர் சற்றே
தடுமாற்றமடைகின்றனர். இந்த நிலையினுள் கடந்து செல்லும் இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆண்டவரின்
அருள்வாக்கு இதோ:
”…உங்களுக்காக
நான் வகுத்திருக்கும் திட்டங்கள் எனக்குத் தெரியும் அன்றோ! அவை வளமான எதிர்காலத்தையும்
நம்பிக்கையும் உங்களுக்கு அளிப்பதற்கான நல்வாழ்வின் திட்டங்களே அன்றி, கேடு விளைவிப்பதற்கான
திட்டங்கள் அல்ல, என்கிறார் ஆண்டவர். நீங்கள் என்னிடம் வந்து கூக்குரலிட்டு மன்றாடுவீர்கள்!
அப்பொழுது நான் உங்களுக்குச் செவி கொடுப்பேன். நீங்கள் என்னைத் தேடுவீர்கள்; உங்கள்
முழு இதயத்தோடும் என்னைத் தேடும்பொழுது நீங்கள் என்னைக் கண்டடைவீர்கள். ஆம், நீங்கள்
என்னைக் கண்டடைவீர்கள்”, என்கிறார் ஆண்டவர். - எரேமியா 29:11-14 [பொது மொழிபெயர்ப்பு]
நமக்கான
திட்டங்களை ஏற்கனவே வகுத்திருக்கும் தேவன்:
நம் தேவன் உலகத்
தோற்றத்திற்கு முன்னே கிறிஸ்துவுக்குள் நம்மை தெரிந்து கொண்டவர் (எபே. 1:4) தாயின்
கர்ப்பத்தில் உற்பவித்தது முதல் நம்மை ஆதரிப்பவர் (சங். 71:6); தாங்குபவர் (ஏசா.
46:3). முதிர்வயதும் நரைமயிருமுள்ளவனாகும் வரைக்கும் கைவிடாதவர் (சங். 71:18, ஏசா.
46:4). இப்படிப்பட்ட தேவன் இந்த தடுமாற்றமான நிலையில் நமக்கென ஒரு திட்டத்தை ஏற்கனவே
வகுத்து வைத்துக் கொண்டுள்ளார் என்பது ஒன்றும் வியப்பிற்குரியது அல்ல. அவர் ஒருமுறை
திட்டங்களை வகுத்து வைத்துவிட்டு அவைகளை மறந்து விடுபவரல்ல. அவைகளை மனதில் வைத்துக்
கொண்டிருப்பவர். மட்டுமல்ல, ஒருமுறை வகுத்த திட்டங்களுக்காய் பின்னர் மனஸ்தாபப் படுபவரல்ல;
மனம் மாற அவர் மனுஷனும் அல்ல (I சாமு. 15:29). எனவே இப்படிப்பட்ட தேவனை தெய்வமாய் கொண்டுள்ள
நமக்கு எதிர்காலத்தைக் குறித்த எந்த கலக்கமும் இருக்கத் தேவையில்லை.
எதிர்காலத்தை
திட்டமிட உதவிடும் தேவன்:
ஆண்டவர் நமக்கென
வகுத்திருக்கும் திட்டங்கள் அவை வளமான ’எதிர்காலத்தையும்’ அதைக் குறித்த ’நம்பிக்கையும்’
நமக்கு அளிப்பதற்கான நல்வாழ்வின் திட்டங்கள்; ஒருபோதும் அவை கேடு விளைவிப்பதற்கான திட்டங்கள்
அல்ல. வளமான எதிர்காலம் வயப்படும் வகையில் மெத்தப் படித்து உயர்ந்த உத்தியோகத்தில்
இருக்கும் பலருக்கோ இன்று எதிர்காலத்தைக் குறித்த
நம்பிக்கையில்லை. ஒளிமயமான எதிர்காலத்தை குறித்த நம்பிக்கை எதோ வெற்றுப் பட்டத்தையும்
சோற்றுப் பணியையும் பொறுத்தது அல்ல; அது தேவனுடைய ஈவு. அந்த நம்பிக்கையே எதிர்காலத்தை
ஒளிமயமாக்கிவிட வல்லது (யோபு 11:18).
எதிர்காலத்தைக்
குறித்த நம்பிக்கை இல்லாமை எவ்விதம் எதிர்காலத்தையே பாழாக்கி விடுகிறதோ அவ்விதமே நம்
எதிர்காலத்தைக் குறித்து தேவன் வகுத்திருக்கும் திட்டங்களின் மீது இன்று நமக்கு நம்பிக்கை
இல்லாமையே இன்றைய நம் நிகழ்காலத்தை மனமடிவாக்கி விடுகிறது. நமக்கென ஒரு திட்டம்; செயல்பாடு…
அது தேவன் வகுத்துள்ள திட்டத்துடன் ஒத்துப்போனால் அங்கு சந்தோஷம் சமாதானம் நிலவும்;
நாமும் தைரியமாக அதில் முன்னேறலாம். நமது திட்டம்
தேவனுடைய திட்டங்களுடன் முரண்படும் போது தெளிவின்மை, குழப்பம், தோல்வி, ஏமாற்றம் இவையே மிஞ்சுகின்றன.
அவ்வப்போது
நிலைமையைப் பொறுத்து முடிவெடுக்கும் நமது திட்டங்கள் எல்லாம் ஏற்கனவே தேவன் வகுத்துள்ள
திட்டங்களுடன் ஒத்துப் போகிறதா என சோதித்துப் பார்க்கும் அபாயத்தை முயல்வதைக் காட்டிலும்
நம்மைக் குறித்த தேவனின் திட்டங்களை திடமாய் புரிந்து கொண்டு அதற்கேற்ற விதமாய் முடிவெடுப்பது
தான் எளிதான ஒன்று. ’அவை வளமான எதிர்காலத்தையும் நம்பிக்கையும் உங்களுக்கு அளிப்பதற்கான
நல்வாழ்வின் திட்டங்களே அன்றி, கேடு விளைவிப்பதற்கான திட்டங்கள் அல்ல’ என்ற ஆண்டவரின்
வாக்குறுதி, தேவசித்ததை அறிந்து அதன்படி மட்டுமே தைரியமாய் செயல்பட நம்மை உந்தித் தள்ளுகிறது.
நமது
மன்றாட்டுகளுக்கு செவிகொடுக்கும் தேவன்:
தேவன் நமக்கென்று
எதிர்கால திட்டங்களை வகுத்து அவைகளை நிகழ்காலத்தில் செயல்படுத்த வல்லவராயினும், அவைகள்
நிறைவேறுவதில் மன்றாட்டு என்ற நமது பங்கும் உண்டு. மன்றாட்டு என்பது அம்பலத்தில் எடுக்கும்
அவசர ஜெபம் அல்ல. பதில் ஒன்றையே பதிலாகக் கொண்டு அந்தரங்கத்தில் விடுக்கும் அவசர ஓலம்.
அவசியம் ஒருவரிடம்
ஒன்றை சொல்லியே ஆக வேண்டுமென்றால், ஒன்று அந்த நபருடன் நெருங்கி வந்து சொல்லுவோம்;
இல்லையானால் கொஞ்சம் சத்தமாக சொல்லுவோம். தூரத்தைப் பொறுத்தும் காரியத்தின் அவசரத்தைப்
பொறுத்தும் சத்தம் உயர்வது என்பது இயல்பான ஒன்று. ’என்னிடம் வந்து… கூக்குரலிட்டு…மன்றாடுவீர்கள்’
என்பது இதையே உணர்த்துகிறது எனலாம். தேவனிடத்தில்
சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார் (யாக். 4:8). நாம் தேவனிடம் ஒரு
அடி தூரம் நெருங்கி வந்தால் அவர் பல அடிகள் தூரம் நம்மை நெருங்கி வருவார் என்று சிலர்
விளக்கம் கூறுவர். எனது ’அவசிய நேரத்தில் ஆண்டவர் எங்கே’ என வினவும் முன்னர், இருவரில்
தூரமாய் சென்றது யார் என்பதை உணர வேண்டும்.
தேவனே,
நான் உம்மை நோக்கிக் கெஞ்சுகிறேன், எனக்குச் செவிகொடுக்கிறீர்; என்னிடத்தில் உம்முடைய
செவியைச் சாய்த்து, என் வார்த்தையைக் கேட்டருளும் (சங். 17:6); நான் தேவனை நோக்கி என்
சத்தத்தை உயர்த்திக் கெஞ்சினேன், என் சத்தத்தை தேவனிடத்தில் உயர்த்தினேன், அவர் எனக்குச்
செவிகொடுத்தார் (சங். 77:1) என்பது சங்கீதக்காரனின் ஜெபமும் அனுபவமும். நாம் எப்படி?
உண்மையாய்த்
தேடுவோர் கண்டடையும் தேவன்:
தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும்,
உண்மையாய்த் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், கர்த்தர் சமீபமாயிருக்கிறார்
(சங். 145:18) என்றான் சங்கீதக்காரன். கர்த்தராகிய தம்மை அவர்கள் தடவியாகிலும் கண்டுபிடிக்கத்தக்கதாக
… … அவர் நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்லவே
(அப்.17:27). இயேசுவும் கூட ’கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள்,
அப்பொழுது கண்டடைவீர்கள்’ (மத். 7:7) என்று கூறியுள்ளார்.
’என் எதிர்காலம்
எப்படியிருக்கும் என்பதை நான் அறியேன்; ஆனால் என் எதிர்காலம் யார் கையிலிருக்கிறதென்பதை
அறிவேன்’ என்பது அநேக கிறிஸ்தவப் பெரியவர்களின் அனுபவக் கூற்று. நம் எதிர்காலம் அவர்
கையில்… ஆனால் நிகழ்காலத்தில் நமது பொறுப்புகளும் உண்டு என்பதை உணர்ந்து, அவரை நெருங்கி,
அவர் சித்தத்தை அறிந்து கொண்டு அதன்படி ஜெபித்து திட்டமிட்டு முன்னேற ஆயத்தமா?
[இது தரிசனச் சுடர்- ஏப்ரல் 2013ல் (கல்வி இறுதியாண்டு மாணவர்களுக்கான சிறப்பிதழ்) வெளிவந்த எனது கட்டுரை]
0 comments:
Post a Comment