'இந்திய நற்செய்தி மாணவர் மன்றம் - தமிழ்நாடு' ஊழியத்தில் தனது மாணவப் பருவத்திலிருந்தே ஈடுபட்டுவரும் டாக்டர். பேதுரு அவர்கள் நமது
தரிசனச்சுடர் பத்திரிக்கை உதவியாளர் திரு. மா. தமிழ்செல்வன் அவர்களுக்கு (மே 2013ல்) அளித்த சிறப்புப்
பேட்டி:
தமிழ்செல்வன்:
டாக்டர். பேதுரு அவர்களே, தரிசனச்சுடர் சார்பில்
உங்களை பேட்டி காண வந்திருப்பதில் மகிழ்ச்சி. நீங்கள் எப்போதிருந்து மாணவ ஊழியத்தில்
ஈடுபட்டு வருகிறீர்கள்? யார் மூலமாக நீங்கள் இவ்வூழியத்தில் ஈடுபட வழிநடத்தப்பட்டீர்கள்?
பேதுரு:
1993ல்
முதலில் (அப்போதைய) திருச்சி மண்டல பொறியியற் கல்லூரியில் மாணவனாக சேர்ந்தேன். அங்கிருந்த
கிறிஸ்தவ வார்டன் ஒருவர் மூலம், அதே வருடம் நவம்பரில் நான் தஞ்சை மருத்துவக் கல்லூரியில்
மாணவனாக வந்து சேர்ந்தபோது, டாக்டர். மத்தியாஸ்
அவர்களின் தொடர்பு கிடைத்தது. அவர் முதல் நாளிலேயே அங்கு மாணவர்விடுதியில் நடைபெற்று
வந்த EU ஜெபக்குழு தலைவர் செந்தில் (டாக்டர்.
செந்தில் குமார், வேலூர்) மற்றும் முக்கிய விசுவாசிகளிடம் என்னை அறிமுகம் செய்து
வைத்தார். அந்த வாரத்திலேயே மருத்துவ மாணவ மாணவியருக்கென வெளியில் டாக்டர். ஜோசப் விக்டர் அவர்கள் வீட்டில் நடைபெறும்
EU ஜெபக்குழுவில் கலந்து கொண்டேன். அங்கு நான் சந்தித்த விசுவாச மாணவர்கள் மற்றும்
பட்டதாரிகளின் அன்பான அணுகுமுறை, உறுதியான விசுவாசம் மற்றும் சாட்சியான வாழ்க்கைமுறை
என்னை வெகுவாக கவர்ந்துவிட்டது.
அன்றுமுதலே, நான் இந்த
ஜெபக்குழுக்களில் விருப்பத்துடன் கலந்து கொள்ள ஆரம்பித்தேன். வெகுவிரைவில் அங்குள்ள
மற்ற கல்லூரி ஜெபக்குழுக்களின் விசுவாசிகள் மற்றும் நற்செய்தி பட்டதாரிகளின் அறிமுகம்
கிடைத்தது. அதன் மூலம் ஆவிக்குரிய வாழ்க்கையில் தொடர்ந்து முன்னேற வாய்ப்பு கிடைத்தது.
இந்த நிலையில் என்னை தொடர்ந்து சந்தித்து வந்த ஊழியர் திரு. ராஜபாலன் அவர்களின் அணுகுமுறை
மற்றும் வழிநடத்துதல் என்னை மாணவ செயற்குழுக்களில் பொறுப்புக்களை எடுத்து நிறைவேற்றிட
உதவியாக அமைந்தது.
தமிழ்செல்வன்:
ஒரு மாணவனாக இருந்து போது எவ்வாறு உங்கள் நேரத்தை
ஊழியத்துக்கும் படிப்புக்கும் பகிர்ந்தளித்து பயன்படுத்தினீர்கள்?
பேதுரு:
மருத்துவக்
கல்லூரியில் உள்ள பல்வேறு சூழ்நிலைகளில் இப்படியொரு ஜெபக்குழு இல்லாதிருந்தால் எனது
நிலைமை என்னவாக இருந்திருக்கும் என்பதை உணர்ந்து, மற்ற கல்லூரிகளிலும் ஜெபக்குழுக்களை
ஏற்படுத்த முயற்சிக்கும் ICEUவின் செயல்பாடுகளில் என்னை தீவிரமாக இணைத்துக் கொண்டேன்.
இதற்கு எனது பெற்றோரும் ஒத்துழைப்பு நல்கினர். ‘நேரம் கிடைக்கும் போது’ என்று அல்லாமல்,
கிடைக்கும் நேரத்தையெல்லாம் இதற்கென ஒதுக்கி செயல்பட்டதால், அது எனது தனிப்பட்ட ஆவிக்குரிய
வாழ்க்கைக்கு ஆசீர்வாதமாக அமைந்து. இருப்பினும், எனது கல்லூரி நண்பர்களின் மனமடிவாக்கும்
பேச்சுக்களையும் பல சவால்களையும் நான் சந்திக்காமல் இல்லை. ஆனால், இன்றளவில் அவர்கள்
மத்தியில் தேவன் என்னை வெட்கப்படுத்தாமல், உயர்ந்த நிலையில் நிறுத்தியுள்ளார்.
தமிழ்செல்வன்:
உங்கள் குடும்பத்தைப் பற்றியும், ஒரு பட்டதாரியாக
எவ்வாறு உங்கள் பணிக்கும் ஊழியத்துக்கும் குடும்பத்திற்கும் நேரத்தை பகிர்ந்து செலவளிக்க
முடிகிறது என்றும் கூறமுடியுமா?
பேதுரு:
நானும்
சென்னை மருத்துவக் கல்லூரி ஜெபக்குழு மூலம் ஆண்டவருக்குள் வளர்ந்த டயானாவும் 2005ல்
திருமணம் செய்து கொண்டோம். தேவ தயவால், 2009ல் ஸ்டீவ் ஹட்ஸன் என்ற மகன் பிறந்தான்.
நான் தற்போது குமரி மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் இணை பேராசியராகவும்
எனது மனைவி அங்கு வெள்ளமடம் என்ற ஊரில் உள்ள ஒரு தொண்டு நிறுவனத்தின் குழந்தைகள் நலமையத்தில்
குழந்தைநல மருத்துவராகவும் பணிபுரிகிறோம். வேலை, குடும்பம், இந்த ஊழியத்தின் பல்வேறு
நிலைகளில் பல்வேறு பொறுப்புகளுக்கிடையில் இரு மாணவர் ஜெபக்குழுக்களில் ஈடுபடுகிறேன்.
இதற்கிடையில் நான் கடந்த ஒருவருடமாக மாலைநேர கிளினிக்கை நடத்த ஆரம்பித்த நாட்கள் முதல்
நேரம் மற்றும் தூரத்தை முன்னிட்டு, EGF ஜெபக்குழுவில் கலந்து கொள்ள முடிவதில்லை. விரைவில்
இந்த நிலைமை மாறும் என நம்புகிறேன்.
தமிழ்செல்வன்:
ஊழியத்தின் பல்வேறு செயற்குழுக்களில் உறுப்பினராக
இருக்கும் நீங்கள் எவ்வாறு அதற்கென நேரம் ஒதுக்க முடிகிறது?
பேதுரு:
1995-96
கல்வியாண்டில் தஞ்சாவூர் ICEUன் செயலாளராக பொறுப்பேற்ற நாட்களில் செயற்குழுக்களின்
செயல்படுமுறைகளையும் உறுப்பினர்களின் தனிப்பட்ட மற்றும் குழுவான கடமைகளையும் சரிவர
புரிந்து கொண்டேன். எனவே அன்றுமுதல் இன்றுவரையில் இந்த ஊழியத்தில் பல்வேறு நிலைகளில்
பல்வேறு செயற்குழுக்களில் ஒரு தெளிவான உள்ளுணர்வுடன் ஈடுபட முடிகிறது. எனவே, அதற்காக
நேரத்தை ஒதுக்கிக் கொள்வதில் முன்னுரிமை கொடுப்பேன். நேரம் அதுவாக கிடைத்தால் ஊழியம்
என்று அல்லாமல், சமயம் வாய்த்தாலும் வாய்க்கா
விட்டாலும் எடுத்த பொறுப்பை சிறப்பாக செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்படும் போது
என்னால் மனதார நேரத்தை ஒதுக்க முடிகிறது. இதுபோக கிடைக்கும் நேரங்களில் சில பத்திரிக்கைகளுக்கும்
அவ்வப்போது எழுதுவதும் உண்டு.
தமிழ்செல்வன்:
நீங்கள் ஒரு சிறந்த எழுத்தாளர் என்று கூறினீர்கள்.
உங்கள் பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் எழுதுவதற்கு எப்படி நேரம் கிடைக்கிறது?
பேதுரு:
நான்
அப்படி ஒன்றும் பெரிய எழுத்தாளன் அல்ல. 1997 நவம்பரில் எனது சாட்சியை வெளியிட்டு, பள்ளிநாட்களிலேயே
எனக்குள் புதைந்திருந்தும் வெளிக்குவராத எனது இலக்கிய ஆர்வத்தை வெளிக்கொணர முதன்முதலில்,
வாய்ப்பை அளித்ததே நமது தரிசனச்சுடர் தான். இன்றும் தரிசனச்சுடர் அவ்வப்போது எனது கட்டுரைகளை வெளியிடுவது என்னை ஊக்குவிப்பதாக
உள்ளது. பரபரப்பான வாழ்க்கை சூழலில் நான் கற்றுவரும் ஆவிக்குரிய பாடங்களே எனது எழுத்துகளின்
கருவாக அமைவதால், அது ஒரு பாரமாக தெரியவில்லை. இருப்பினும் எழுதுவதற்கு கிடைக்கும்
அழைப்புக்களின் மத்தியில் இந்த மாணவர் ஊழியத்தில் நேரம் செலவிடுவதையே முக்கியமானதாக
கருதுகிறேன்.
தமிழ்செல்வன்:
உங்கள் மனைவியும் ஒரு மருத்துவர் என்று சொன்னீர்கள்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் குடும்பம், ஊழியம், வேலைக்கு எவ்வாறு சமநிலையுடன் நேரம்
கொடுக்க முடிகிறது?
பேதுரு:
நீங்கள்
சொன்னது போலவே, எனது மனைவியும் மருத்துவர் என்பதால் எனக்கு குடும்ப சுமைகள் கொஞ்சம்
அதிகம் தான். இருப்பினும், இருவரும் இணைந்து ஆண்டவரின் சித்தப்படி எப்போது, என்ன, எங்கே
படிப்பது என்றும், பின்னர் அதுபோன்றே எங்கே,
என்னவிதமாக வேலை செய்வது என்பதில் ஒருமித்து செயல்பட்டதாலும், அந்தவிதமான முக்கிய முடிவுகளில்
இந்த மாணவர் ஊழிய காரியங்களியும் மனதில் கொண்டு செயல்படுவதாலும், எங்கள் வேலைப்பளு
இந்த ஊழிய ஈடுபாட்டிற்கு பெரும் தடையாக இருந்ததில்லை.
தமிழ்செல்வன்:
அப்படி நீங்கள் நேரத்தை பகிர்ந்து பயன்படுத்திய
போது ஏற்பட்ட சுவையான நிகழ்ச்சி ஏதாவது…?
பேதுரு:
நாங்கள்
இருவரும் மாணவப் பருவத்திலேயே இந்த ஊழியத்தில் பயனடைந்துள்ளதால், இந்த ஊழியத்தில் ’குடும்பமாக
ஈடுபடும்’ முடிவில் சிரமம் இருக்கவில்லை. இருப்பினும் மனைவியின் படிப்பு, குழந்தை,
வேலை என பலகோணங்களிலும் அழுத்தப்படும் வேளைகளில் ஊழியத்தில் எடுத்த பொறுப்பை நிறைவேற்றுவதில்
பல சவால்களை சந்தித்தது உண்டு. சிலபல சூழ்நிலைகளினால், பெற்றோரின் உதவிகள் கிடைக்கப்
பெறாத நிலையில், வேலைக்காரரை நம்பியே பல பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு ஊழியத்தில் ஈடுபடவேண்டிய
நிலைகள் ஏற்பட்டபோது பல்வேறு இன்னல்களை அனுபவித்துள்ளோம். இந்த விஷயத்தில், எனது மனைவியின்
ஒத்துழைப்பை மறக்க இயலாது.
2011 பிப்ரவரி
11-13ல் நடைபெற்ற தரிசனம் 2020 மாநாட்டை நான் ஒருங்கிணைத்தேன். அதே நாட்களில் (11-14
தேதிகளில்) நான் பணிபுரியும் கல்லூரியை இந்திய மருத்துவக் கவுன்சில் (MCI) பார்வையிடுவதால்
ஆசிரியர்கள் அனைவரும் அவசியம் 4 நாட்களும் அங்கேயே இருக்க வேண்டும் என்ற கல்லூரியின்
கடைசி நேர அறிவிப்பால் சற்று குழப்பமடைந்தேன். சூழ்நிலைகளை மனதிற்கொண்டு, இரண்டு நாட்கள்
நமது மாநாட்டிலும் குறிப்பிட்ட இரண்டு நாட்களில் கல்லூரியிலும் கலந்து கொண்டு, இரு
இடங்களிலும் எனது வராமையினால் (Absence) எந்தவொரு பாதிப்பும் இல்லாமல் பார்த்துக் கொண்டேன்.
இருப்பினும் 4 நாட்களும் முழுமையாக கல்லூரியில் இருக்கவில்லை என்ற காரணம் காட்டி கல்லூரி
நிர்வாகம் எனது சம்பள உயர்வையும் (Increment) பதவி உயர்வையும் (Promotion) ஒருவருடத்திற்கு
தள்ளிப்போட்டனர். இறுதியில் ஒரு வருடம் கழித்து, பதவி உயர்வில் பாதிப்பு ஏற்படாவண்ணம்,
முன் தேதி குறிப்பிட்டு அதைப்பெற்றுக் கொள்ளும்படி தேவன் உதவி செய்தார்.
தமிழ்செல்வன்:
சவாலான பல அனுபவங்களை வாசகர்களிடம் பகிர்ந்தமைக்கு நன்றி.
பேதுரு:
இந்த வாய்ப்புக்கு நன்றி.
[இது தரிசனச் சுடர்- மே 2013ல் வெளிவந்த எனது கட்டுரை]
0 comments:
Post a Comment