Showing posts with label ஆவியின் கனி. Show all posts
Showing posts with label ஆவியின் கனி. Show all posts

Saturday, October 28, 2017

கனியற்ற கிறிஸ்தவ வாழ்க்கை

கிறிஸ்துவில் பிரியமான சகோதர சகோதரிகளுக்கு இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள். கடந்த பத்து மாதங்களாக கனியுள்ள கிறிஸ்தவ வாழ்க்கை என ஆரம்பித்து, பின்னர் அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம் என மாதமொரு ஆவியின் கனியாக இவற்றை தொடர்ச்சியாக தியானித்து வந்திருக்கிறோம். இவற்றின் மூலம் நமது கிறிஸ்தவ வாழ்க்கையில் அடிப்படையாக வெளிப்பட வேண்டிய பண்புகளை நன்கு அறிந்து கொண்டோம்.

இருப்பினும் நாளுக்கு நாள் புதிதாக வேண்டிய நமது ஆவிக்குரிய வாழ்க்கையில், ஒருவித சோர்வையும் முன்னேற்றமில்லாத நிலைமையும் நாம் அவ்வப்போது அனுபவிக்க நேரிடுகிறது. கனியற்ற கிறிஸ்தவ வாழ்க்கையின் காரணங்கள், அதன் ஆபத்துக்கள், அதன் நிவாரணங்கள் குறித்து இப்போது பார்ப்போம். இதுகுறித்து சிந்தித்துக் கொண்டிருந்த போது, “God loves everyone, but probably prefers "fruits of the spirit" over "religious nuts." என்ற ஒருவரிச் செய்தி என் கண்ணில் பட்டது. ”தேவன் அனைவரையும் நேசிக்கிறார்; இருப்பினும் புத்திபேதலித்த சமயப் பற்றாளர்களைக் காட்டிலும் ஆவிக்குரிய கனிகளைக் கொடுப்பவர்களுக்குத் தான் அவர் முக்கியத்துவம் கொடுக்கிறார்” என்பதே அந்த ஒருவரிச் செய்தி.

நாம் இரட்சிக்கப்பட்டு தேவனுடைய பிள்ளைகளாய் கிறிஸ்தவ வாழ்க்கையில் வளர்ந்து வரும்போது காலங்கள் செல்லச்செல்ல, நாம் கனிதரும் நிலையில் முன்னேறியிருக்கிறோமா என்று நம்மைநாமே சீர்தூக்கிப் பார்க்க வேண்டியது அவசியம்.  மரம் செடி கொடிகள் என்றால் அவை ஒருகட்டத்தில் அவற்றின் கனியை (பலனை) கொடுக்கும். நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும் (மத்தேயு 3:10). நமது கிறிஸ்தவ வாழ்க்கையும் அப்படித்தான். கனி இல்லையேல் கதி இல்லை. திராட்சைத் தோட்டக்காரரான பரமபிதா திராசைச்செடியாகிய இயேசுகிறிஸ்துவில் கனிகொடாதிருக்கிற கொடி (நாம் தான்) எதுவோ அதை அவர் அறுத்துப்போடுகிறார்; கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம்பண்ணுகிறார் (யோவான் 15:1,2). 

நம்மிடம் ஆவியின் கனி வெளிப்படுகிறதா இல்லையா என்பதை வெளியரங்கமான மாம்சத்தின் கிரியைகள் நம்மிடத்தில் காணப்படுகின்றனவா இல்லையா என்பதிலிருந்து அறிந்து கொள்ளலாம். அவையாவன: விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம், விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள், பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே (கலா. 5:19-21). கிறிஸ்துவை அறிந்தவர்கள் என சொல்லிக்கொள்ளும் நம்மிடத்தில் ஒருவேளை இவைகள் காணப்படுமெனில், நாம் தான் அந்த புத்திபேதலித்த சமயப் பற்றாளர்கள் (religious nuts). இந்த அவலநிலை நமக்கு வேண்டாமெனில், கனிதரும் நிலையில் நாம் முன்னேற வேண்டும்.

மரம் செடி கொடிகள் கனி கொடுக்க, அவற்றிற்கென நேரம் காலங்கள் உண்டு. ஆனால், கிறிஸ்தவ வாழ்க்கையில் அவ்விதம் நேரம் காலங்களெல்லாம் கிடையாது; அனுதினமும் கனி கொடுக்க வேண்டும். இயேசு ஒருமுறை தனது பன்னிரு சீடர்களுடன் பெத்தானியாவுக்கு பயணமான போது, அவருக்குப் பசி உண்டாயிற்று. அப்பொழுது வழியருகே இலைகளுள்ள ஒரு அத்திமரத்தைத் தூரத்திலே கண்டு, அதில் ஏதாகிலும் அகப்படுமோ என்று பார்க்கவந்தார். அத்திப்பழக்காலமாயிராதபடியால், அவர் அதினிடத்தில் வந்தபோது அதிலே இலைகளையன்றி வேறொன்றையும் காணாமல்: இனி ஒருக்காலும் உன்னிடத்தில் கனி உண்டாகாதிருக்கக்கடவது என்றார்; உடனே அத்திமரம் பட்டுப்போயிற்று. சீஷர்கள் அதைக்கண்டு: இந்த அத்திமரம் எத்தனை சீக்கிரமாய்ப் பட்டுப் போயிற்று என்று சொல்லி ஆச்சரியப்பட்டார்கள் (மத். 21:17-20 & மாற்கு 11:11-14). இயேசு நம்மில் கனியைத் தேடும் போது அது இல்லையெனில் நம்மால் எந்த சாக்குப் போக்கும் சொல்ல இயலாது. நிச்சயம் நாம் நித்திய நரகமான அவரது சாபத்திற்கு உள்ளாக நேரிடும்.

இனிப்பு (Sweet), புளிப்பு (Sour), காரம் (Pungent), உவர்ப்பு (Salt), துவர்ப்பு (Astringent) மற்றும் கசப்பு (Bitter) என சுவைகள் ஆறு வகைகள் இருப்பினும் நாம் உண்ணும் அனைத்து உணவிலும், இவை ஆறும் ஒருங்கே இருப்பதில்லை. ஒன்றோ அல்லது ஒன்றிற்கும் மேற்பட்ட சுவையோ இருக்கலாம். ஒன்றிற்கும் மேற்பட்ட சுவைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விகிதாச்சாரத்தில் கலந்திருக்கும் போது அந்த உணவின் சுவையும் தரமும் மாறுவதைக் காண்கிறோம். அதுபோலவே கனிகொடுக்கும் கிறிஸ்தவ வாழ்க்கையும். ஆவியின் கனியாகிய ஒன்பது அம்சங்களும் சூழ்நிலைகளுக்கேற்ப தேவைகளுக்கேற்ற விதவிதமான விகிதாச்சாரங்களில் ஒருங்கே வெளிப்படும் போது அது தேவனுக்கு மகிமை கொண்டுவரக்கூடிய கனிதரும் வாழ்க்கையாக அமைகிறது.

இதனை வலியுறுத்தும் விதமாக அப்போஸ்தலனாகிய பேதுரு இவ்விதம் குறிப்பிடுகிறார். ’இப்படியிருக்க, நீங்கள் அதிக ஜாக்கிரதையுள்ளவர்களாய் உங்கள் விசுவாசத்தோடே தைரியத்தையும், தைரியத்தோடே ஞானத்தையும், ஞானத்தோடே இச்சையடக்கத்தையும், இச்சையடக்கத்தோடே பொறுமையையும், பொறுமையோடே தேவபக்தியையும், தேவபக்தியோடே சகோதர சிநேகத்தையும், சகோதர சிநேகத்தோடே அன்பையும் கூட்டி வழங்குங்கள். இவைகள் உங்களுக்கு உண்டாயிருந்து பெருகினால், உங்களை நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவிலே வீணரும் கனியற்றவர்களுமாயிருக்க வொட்டாது’ (2 பேதுரு 1:5-7). கனிதரும் கிறிஸ்தவ வாழ்க்கையில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆவியின் கனி அம்சங்களில் ஒவ்வொன்றாக நாம் பெருகும் போது எந்த அளவில் நாம் அவற்றில் பெருகுகிறோமோ அந்த அளவுக்கு அது பூரண சுவையுள்ள கனி தரும் வாழ்க்கையாக அமையும்.

கனிதரும் கிறிஸ்தவ வாழ்க்கையில் வளர்ச்சி இல்லையெனில் அது வீழ்ச்சியே. ஏதோ ஒரு முறை ஏதோ ஒரு வகை கனியைக் கொடுத்தை மட்டும் மனதில் வைத்துக்கொண்டு திருப்தியடைந்து விடமுடியாது. தொடர்ச்சியாக இன்னும் பல அம்சங்களில் கனிதரும் நினையில் முன்னேற வேண்டும். இல்லையெனில் நாம் இரட்சிக்கப்பட்டு பாவங்கள் மன்னிக்கப் பட்டதையும் அதன் நோக்கத்தையும் மறந்து ஒரு சாராசரி பெயர்க் கிறிஸ்தவராகவே வாழ்ந்து விடுவோம்.  இதைத் தான், 2 பேதுரு 1:9 ல் இவ்விதம் காண்கிறோம், ’இவைகள் இல்லாதவன் எவனோ, அவன் முன்செய்த பாவங்களறத் தான் சுத்திகரிக்கப்பட்டதை மறந்து கண்சொருகிப்போன குருடனாயிருக்கிறான்’.

இந்த நிலைமை மாற நாம் செய்ய வேண்டியதென்ன? தாவீது சொன்னார்: ’கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்’ (சங். 1:2-3).  இயேசு சொன்னார்: ’என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்கமாட்டாததுபோல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள்’ (யோவான் 15:4). பவுல் சொன்னார்: ’நம்முடையவர்களும் கனியற்றவர்களாயிராதபடி குறைவுகளை நீக்குகிறதற்கேதுவாக நற்கிரியைகளைச் செய்யப் பழகட்டும்’ (தீத்து 3:14). ’ஆவியின் கனி, சகல நற்குணத்திலும் நீதியிலும் உண்மையிலும் விளங்கும்’ (எபே. 5:9).

இவ்விதம் நாம் தேவனுடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இயேசுவில் நிலைத்திருந்து நம் கனிதரும் வாழ்க்கை நமது சகல நற்குணத்திலும் சகல நற்கிரியைகளிலும் வெளிப்பட தேவன் நமக்கு உதவி செய்வாராக. ஆமென்.


[இது பாலைவனச் சத்தம் – அக்டோபர் 2017 இதழில் வெளியான எனது கட்டுரை]
.

Monday, September 25, 2017

ஆவியின் கனி - இச்சையடக்கம்

கிறிஸ்துவில் பிரியமான சகோதர சகோதரிகளுக்கு நமது இரட்சகர் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.  ஆவியின் கனி வரிசையில், கடைசி அம்சமான இச்சையடக்கத்தைக் குறித்து இந்தமாதம் தியானிப்போம். ஆவியின் கனி வரிசையில் இச்சையடக்கம் என்பது கடைசியாய் பட்டியலிடப்பட்டுள்ள காரணத்தினால், ஆவிக்குரிய வாழ்க்கையில் அதன் முக்கியத்துவத்தை ஒருபோதும் நாம் கடைநிலைக்குத் தள்ளிவிடக்கூடாது. ஏனெனில், ஆவியின் கனி என ஒரு பட்டியல் (கலா. 5:22,23) கொடுக்கப்பட முக்கியப் பின்னணியே இந்த இச்சையடக்கம் என்ற காரியம் தான் என்பதை அதன் முன்னும் பின்னும் உள்ள 14ம் மற்றும் 25ம் வசனங்களிலிருந்து தெளிவாக அறிகிறோம்.

இச்சையடக்கம் என்பது ஒருவர் தனது ஆசைகளை (தன்னை) அடக்கி கட்டுக்குள் வைத்திருப்பதாகும். ஆங்கிலத்தில் அது Self-control அல்லது Temperance என்ற வார்த்தைகளில் குறிப்பிடப்படுகிறது. இதன் கிரேக்க வார்த்தையான ‘egkrateia’ என்ற வார்த்தைக்கு ‘உள்ளான பெலன்’ என்று அர்த்தம். இச்சையடக்கமாகிய ஆவியின் கனி என்பது நமது சொந்த பக்தியினால் சக்தியினால் நம்மை நாமே கட்டுப்படுத்திக் கொள்வது (சுயக்கட்டுப்பாடு) அல்ல; மாறாக, பரிசுத்த ஆவியானவர் நமது வாழ்க்கையில் செயல்படுவதினால் நம் வாழ்க்கையில் வெளிப்படும் வெளிப்படையான அம்சமாகும். சுயத்தை சுயம் கட்டுப்படுத்துவது என்பது கூடாத காரியம்.  ’தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்’ (பிலி. 2:13). அவற்றை நிறைவேற்ற உதவியும் செய்கிறார்.

இச்சைகள் பலவிதம்: பரிசுத்த வேதாகமத்தில் ’இச்சை’ என்பது பலவிதமான அடைமொழிகளுடன் குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றில் சில: பாவ இச்சைகள் (ரோமர் 7:5); துர் இச்சைகள் (ரோமர் 13:14); மோக இச்சை (I தெச. 4:4); மோசம்போக்கும் இச்சைகள் (எபே. 4:22); பாலியத்துக்குரிய இச்சைகள் (2 தீமோ. 2:22); பிசாசானவனுடைய இச்சை (2 தீமோ. 2:26); மாம்ச இச்சைகள் (பேதுரு 2:11); அசுத்த இச்சை (2 பேதுரு 2:10); மாம்சத்தின் இச்சை, கண்களின் இச்சை (1 யோவான் 2:16), உலகத்தின் இச்சை (1 யோவான் 2:17) துன்மார்க்கமான இச்சைகள் (யூதா 1:18) என்பன. இதுபோன்ற இச்சைகள் ஒருவனை அடக்கி ஆளாத வண்ணம் அவன அவைகளை மேற்கொள்ளும் நிலைமையை இச்சையடக்கம் எனலாம்.

எவற்றையெல்லாம் இச்சிக்கக்கூடாது?: பழைய ஏற்பாட்டுக் காலத்தில் இஸ்ரவேல் ஜனங்களுக்கு கொடுக்கப்பட்ட பத்துக் கட்டளைகளில் ‘இச்சியாதிருப்பாயாக’ என்பது இறுதியாக பத்தாவது கட்டளையாக கொடுக்கப்பட்டுள்ளது. நாம் எதையெல்லாம் இச்சிக்கக் கூடாது? ’பிறனுடைய வீட்டை இச்சியாதிருப்பாயாக; பிறனுடைய மனைவியையும், அவனுடைய வேலைக்காரனையும், அவனுடைய வேலைக்காரியையும், அவனுடைய எருதையும், அவனுடைய கழுதையையும், பின்னும் பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக’ (யாத். 20:17). ’உன் இருதயத்திலே அவள் [துன்மார்க்க, பரஸ்திரீ] அழகை இச்சியாதே’ (நீதி. 6:25). ’அவனுடைய [அதிபதி] ருசியுள்ள பதார்த்தங்களை இச்சியாதே’ (நீதி. 23:3). ’அந்தப்படியே, உதவிக்காரர்… இழிவான ஆதாயத்தை இச்சிக்கிறவர்களாயும் இராமல்…’ (1 தீமோத்தேயு 3:8)  ’கண்காணியானவன் தேவனுடைய உக்கிராணக்காரனுக்கேற்ற விதமாய், … இழிவான ஆதாயத்தை இச்சியாதவனும்’ (தீத்து 1:7).  இவ்விதம் பலவிதமான காரியங்களை இச்சிக்கக் கூடாது என நாம் வேதாகமத்திலிருந்து வெளிப்படையாக அறிகிறோம்.

இச்சையின் விளைவுகள்:  ஒருவனுக்கு பாவ சோதனைகளை கொண்டுவருவதே அவனுடைய உள்ளான இச்சை தான். ’அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான்’ (யாக். 1:14 ). ’உங்களுக்குள்ளே யுத்தங்களும் சண்டைகளும் எதினாலே வருகிறது; உங்கள் அவயவங்களில் போர் செய்கிற இச்சைகளினாலல்லவா?’ (யாக். 4:1). இச்சையின் இறுதிபலன் மரணம். ‘பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும்’ (யாக். 1:15). இச்சைகளை நிறைவேற்றும் உள்ளான எண்ணத்துடன்,, வெளிப்படையாக பக்தியாக நாம் ஜெபித்தாலும் அந்த ஜெபம் வீணாய்ப் போய்விடுகிறது. ‘நீங்கள் விண்ணப்பம்பண்ணியும், உங்கள் இச்சைகளை நிறைவேற்றும்படி செலவழிக்கவேண்டுமென்று தகாதவிதமாய் விண்ணப்பம்பண்ணுகிறபடியினால், பெற்றுக்கொள்ளாமலிருக்கிறீர்கள்’ (யாக். 4:3).

இச்சையடக்கத்தின் பலன்கள்: நித்தியவாழ்வில் நித்திய கிரீடத்தைப் பெற்றுக்கொள்ள இச்சையடக்கம் அவசியமான ஒன்றாக இருக்கிறது. ‘பந்தயத்திற்குப் போராடுகிற யாவரும் எல்லாவற்றிலேயும் இச்சையடக்கமாயிருப்பார்கள். அவர்கள் அழிவுள்ள கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறார்கள்; நாமோ அழிவில்லாத கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறோம்’ (கலா. 5:16). இச்சையடக்கத்துடன் நடந்துகொள்வது ஒரு உண்மைக் கிறிஸ்தவனுடைய அடையாளம். ’கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள்’ (கலா. 5:24). அநித்தியாமான, அற்பநேர இன்பம்தரும் இச்சைகளுக்கு இணங்காமல் நித்தியமான பலனை எதிர்நோக்கிக் காத்திருக்கும் போது,   இச்சையடக்கம் நமக்கு பொறுமையைக் கொண்டுவருகிறது (2 பேதுரு 1:6). இச்சையடக்கம் என்பது ஒருவரின் ஆசைஇச்சைகளை அடக்கி வைத்திருப்பதால், அது அவனை அடிமைப்படுத்துவதாக அர்த்தமல்ல; அதுதான் அவனுக்கு உண்மையான விடுதலையைக் கொண்டுவருகிறது. அவனுடைய குற்ற உணர்வுகளிலிருந்து அவனை விடுவிக்கிறது.

இச்சையை மேற்கொள்வது எப்படி?: இச்சைகளின் ஆரம்பமே அது சம்பந்தமான எண்ணங்களும் சூழ்நிலைகளும் தான். எனவே அவற்றில் நாம் கவனமுள்ளவர்களாக இருக்கவேண்டும். ’எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவைகளாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்கு தேவபலமுள்ளவைகளாயிருக்கிறது. அவைகளால் நாங்கள் தர்க்கங்களையும், தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமாய் எழும்புகிற எல்லா மேட்டிமையையும் நிர்மூலமாக்கி, எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறைப்படுத்துகிறவர்களாயிருக்கிறோம்’. (2 கொரி. 10:4,5). நம் எண்ணங்களை கிறிஸ்துவுக்கு நேராக ஒருமுகப்படுத்தும் போது இச்சைகளிலிருந்து விடுபடமுடியும். பரிசுத்த ஆவியானவரின் ஆளுகைக்கும் அனுதின வழிநடத்துதலுக்கும் நம்மை நாம் விட்டுக்கொடுக்க வேண்டும். ’ஆவிக்கேற்றபடி நடந்துகொள்ளுங்கள், அப்பொழுது மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள்’ (கலா. 5:16). ’நாம் ஆவியினாலே பிழைத்திருந்தால், ஆவிக்கேற்றபடி நடக்கவும் கடவோம்’ (கலா. 5:25). 

இச்சையடக்கத்தில் அடுத்து முக்கியமாக கவனமாக இருக்க வேண்டியது பாவ சூழ்நிலைகளிலிருந்து விலகிச் செல்வதாகும். விலகியிருக்க வேண்டிய பாவங்கள் என பல பரிசுத்த வேதாகமத்தில் கூற்ப்பட்டிருந்தாலும் விலகி ஓட வேண்டிய பாவங்கள் என குறிப்பிடப்பட்டுள்ள மூன்றில் இச்சையும் ஒன்று. ’அன்றியும், பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு நீ விலகியோடி, சுத்த இருதயத்தோடே கர்த்தரைத் தொழுதுகொள்ளுகிறவர்களுடனே, நீதியையும் விசுவாசத்தையும் அன்பையும் சமாதானத்தையும் அடையும்படி நாடு’ (2 தீமோ. 2:22). எனவே இச்சையடக்கமில்லாத அஞ்ஞானிகளுடன் உள்ள சகவாசத்தைக் குறைத்து, கிறிஸ்துவினுடையவர்களிடம் அதிகம் ஐக்கியம் கொள்ளுவதினாலும் இவற்றின் மூலம் அனுதின வாழ்க்கையில் பரிசுத்த ஆவியானவரின் ஆளுகைக்குள் நம்மை அர்ப்பணிக்கும் போது ஆவியின் கனியாகிய இச்சையடக்கம் நம் வாழ்வில் வெளிப்படும். இந்த விதமான அனுபவங்களுக்கு நம்மை அர்ப்பணிப்போமாக. 

ஆமென். 


[இது பாலைவனச் சத்தம் – செப்டெம்பர் 2017 இதழில் வெளியான எனது கட்டுரை]

Monday, August 14, 2017

ஆவியின் கனி – சாந்தம்

நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையும் உள்ள கர்த்தரின் நாமத்தில் நான் உங்களை வாழ்த்துகிறேன். ஆவியின் கனி வரிசையில் அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம் இவைகளைத் தொடர்ந்து எட்டாவது அம்சமாக காணப்படும் சாந்தம் குறித்து நாம் இந்த மாதத்தில் தியானிப்போம்.
சாந்தம் என்பதற்கு கிரேக்க மொழியில் பயன்படுத்தப்பட்டுள்ள ‘Prautes’ என்ற வார்த்தையானது, ஆங்கிலத்தில் gentleness (மென்மை) மற்றும் meekness (அடக்கம்) என்ற வார்த்தைகளில் குறிப்பிடப்படுகிறது. பொதுவாக gentleness என்பது ஒருவரது வெளிப்படையாக செயல்பாடுகளையும் meekness என்பது ஒருவரது உள்ளான மனநிலையையும் குறிப்பவை. எனவே உள்ளான அடக்க குணம் ஒருவரது மென்மையான செயல்களில் வெளிப்படுவதை சாந்தம் என வரையறுக்கலாம்.  சாந்தம் என்பது ஒருவருடைய இருதயத்தில் மறைந்திருக்கும் குணம் (I பேதுரு 3:4).  ஆனால் அது நமது கிரியைகளில் வெளிப்படும். ’உங்கள் சாந்தகுணம் எல்லா மனுஷருக்கும் தெரிந்திருப்பதாக’ என பவுல் கூறுவதை பிலிப்பியர் 4:5 ல்  நாம் வாசிக்கிறோம்.
சாந்தகுணம் என்பது ஒருவர் தன் இயலாமையினால் விதியின் மீது பழியைப் போட்டு வேறுவழியின்றி அமைதியாய் இருக்கும் நிலை அல்ல; மாறாக, சாதகம் மற்றும் பாதகமான எல்லா சூழ்நிலைகளிலும் தேவன் மீது நம்பிக்கை வைத்து அவரது சித்தத்திற்கு தன்னை அர்ப்பணித்து தனது சுய விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு அடுத்தவர் மீது மென்மையுடன் நடந்து கொள்ளும் உள்ளான குணம். இந்த உண்மையினை புரிந்து கொள்ள சங்கீதம் 37 யை நாம் வாசித்து அறிந்து கொள்ளவேண்டும். குறிப்பாக 11ம் வசனத்தில், ’சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்’ என்று வாசிக்கிறோம்.  இதையே தான் இயேசு கிறிஸ்துவும் தனது மலைப்பிரசங்கத்தில், ’சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக் கொள்ளுவார்கள்’ (மத்தேயு 5:5) என கூறினார். 
பழைய மற்றும் புதிய ஏற்பாடுகளில் சாந்தகுணமுடன் நடந்து கொண்டவர்களை பெரியதாக பட்டியலிட முடியும். அந்தப் பட்டியலில் மோசே (எண்ணாகமம் 12:3), தாவீது (2 சாமுவேல் 16:11-12), யோபு (யோபு 1:21), எரேமியா (எரேமியா 11:19), இயேசு கிறிஸ்து (மத். 11:29) மற்றும் பவுல் (2 கொரி. 10:1) ஆகியோர் முக்கிய இடம் பெறுகின்றனர். இவர்கள் அனைவருமே தங்கள் சாந்தகுணத்தினால் பாதகமான சூழ்நிலைகளிலும் மனரம்மியத்துடன் நடந்துகொண்டனர்.
’நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாயிருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்’ என்றார் இயேசுகிறிஸ்து (மத்தேயு 11:29). சாந்தமும் மனத்தாழ்மையும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. மற்றவர்கள் மீது அதிகாரம் செலுத்தக்கூடிய நிலையில் உள்ள ஒருவர் மற்றவரை தன் அதிகாரத்தினால் தாழ்மைப்படுத்த (humiliate) தான் முடியும். ஆனால், தான் மனத்தாழ்மை (humility) உடைய ஒருவரோ அந்த அதிகாரத்தை அடக்கத்துடன் முறையாக பயன்படுத்தி அடுத்தவரை தன் வயப்படுத்த முடியும். இது சாதாரணமாக மனிதனால் கூடாதது தான். இது ஆவியின் கனி. ஒருவரது அதிகார தோரணைக்குப் பயந்து ஒருவர் கீழ்ப்படிவதைக்காட்டிலும் அவரது சாந்தகுணத்திற்கு முன்பாகவே அநேகர் கீழ்ப்படிவர் (I பேதுரு 2:18).  மோசேயானவன் பூமியிலுள்ள சகல மனிதரிலும் மிகுந்த சாந்தகுணமுள்ளவனாயிருந்தான் (எண்ணாகமம் 12:3 ). எனவே தான் இஸ்ரவேல் ஜனங்களை மோசேயால் வெற்றிகரமாக வழிநடத்த முடிந்தது.
சாந்தகுணம் என்பது பயந்தசுபாவம் (timid) உடையதல்ல; மாறாக சாந்தம் என்பது தாழ்மையான இருதயத்துடன் சமாதானமான மனநிலையில் தேவனுடைய திட்டத்திற்கு முழுவதும் அர்ப்பணிக்கப் பட்ட நிலையைக் குறிக்கிறது. சாந்தமாய் இருப்பதற்கு எதிர்மறையான காரியம் கோபப்படுதல் ஆகும். கோபக்காரன் சண்டையை எழுப்புகிறான்; நீடிய சாந்தமுள்ளவன் சண்டையை அமர்த்துகிறான் (நீதிமொழிகள் 15:18); நீடிய சாந்தமுள்ளவன் மகாபுத்திமான்; முற்கோபியோ புத்தியீனத்தை விளங்கப்பண்ணுகிறான் (நீதிமொழிகள் 14:29) என்ற வசனங்களின் மூலம் இதனை உணர்ந்து கொள்ளலாம்.
சாந்தகுணம் என்பது அக்கறையின்றி நமக்கேன் வம்பு என அலட்சியமாக இருந்து விடுவது அல்ல; மாறாக  இல்லாமல் அன்பிற்கும் சாந்தகுணத்திற்கும் தொடர்புண்டு. (I கொரிந்தியர் 13:4). தேவனிடமும் சக மனிதரிடமும் உண்மையாக அன்புசெலுத்தும் போது நமது  சாந்தகுணம் வெளிப்படுகிறது. ’உங்களுக்கு முன்பாக இருக்கும்போது தாழ்மையாயும், தூரத்திலே இருக்கும்போது உங்கள்மேல் கண்டிப்பாயுமிருக்கிற பவுலாகிய நான் கிறிஸ்துவின் சாந்தத்தையும் தயவையும் முன்னிட்டு உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்’ (II கொரிந்தியர் 10:1) என்பது பவுலின் அனுபவ சாட்சி.  நாமும் அவ்விதம் நடந்துகொள்ள கலாத்தியர் 6:1 ல் ‘சகோதரரே, ஒருவன் யாதொரு குற்றத்தில் அகப்பட்டால், ஆவிக்குரியவர்களாகிய நீங்கள் சாந்தமுள்ள ஆவியோடே அப்படிப்பட்டவனைச் சீர்பொருந்தப்பண்ணுங்கள்’ என அவர் அறிவுறுத்துவதைப் பார்க்கிறோம்.
சாந்தகுணம் ஒரு பலவீனம் அல்ல (Meekness is not a weakness); மாறாக ஆவிக்குரிய ஒருவருக்கு அதுவே பலம் எனலாம். சாந்தகுணமுள்ளவர்களுக்கு கிடைக்கும் பலன்களாவன: ’சாந்தகுணமுள்ளவர்கள் புசித்துத் திருப்தியடைவார்கள்’ (சங்கீதம் 22:26); ’கர்த்தர் சாந்தகுணமுள்ளவர்களை உயர்த்துகிறார்’ (சங்கீதம் 147:6); ’சாந்தகுணமுள்ளவர்களை இரட்சிப்பினால் அலங்கரிப்பார்’ (சங்கீதம் 149:4); ’சாந்தகுணமுள்ளவர்களை நியாயத்திலே நடத்தி, சாந்தகுணமுள்ளவர்களுக்குத் தமது வழியைப் போதிக்கிறார்’ (சங்கீதம் 25:9); ‘சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக் கொள்ளுவார்கள்’ (மத்தேயு 5:5).
நம்முடைய சுபாவமும் நடத்தையும் எப்படி உள்ளன? எல்லா சூழ்நிலைகளிலும் தேவனுடைய அநாதி தீர்மானம் மற்றும் ஆளுமைக்கு நம்மை முழுவதுமாக அர்ப்பணித்திருக்கிறோமா? அதிகாரம் செலுத்தும் நிலைகளில் இருக்கும் போது அதனை நாம் எந்த மனநிலையுடன் செயல்படுத்துகிறோம்? பாதகமான சூழ்நிலைகளிலும் பரலோக தேவன் மீது பற்றுதல் உள்ளவர்களாக காணப்படுகிறோமா?  நம்மை சுற்றிலும் அநியாயங்கள் அரங்கேறும் போது பொல்லாதவர்களைக் குறித்து எரிச்சல், கோபம், பொறாமை கொள்கிறோமா அல்லது சாந்தகுணத்துடன் மனசமாதானத்தைக் காத்துக்கொண்டு அடுத்தவர் மீது உண்மையான அன்புடன் சூழ்நிலையை பொறுமையுடன் கையாளுகிறோமா? என நம்மை நாமே ஆராந்து அறிந்து சாந்தம் என்னும் ஆவிக்குரிய கனியில் பெருக நம்மை அர்ப்பணிப்போம். ஆமென். 

[இது பாலைவனச் சத்தம் – ஆகஸ்ட் 2017 இதழில் வெளியான எனது கட்டுரை]

Wednesday, July 12, 2017

ஆவியின் கனி - விசுவாசம்

விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் விசுவாசக் குடும்பத்தார் அனைவரையும் வாழ்த்துகிறேன். ஆவியின் கனி வரிசையில் நற்குணத்தைத் தொடர்ந்து நம்மிடம் காணப்பட வேண்டிய இன்னுமொரு அம்சம் விசுவாசம் என்பதாகும்.
’விசுவாசம்’ என்ற வார்த்தையை ’Faith’ என நாம் எளிதில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து விடுவோம். ஆனால் NIV மற்றும் NKJV போன்ற முக்கிய ஆங்கில வேதாகமங்களிலோ இந்த வார்த்தைக்கு ’Faithfulness’ என்ற வார்த்தை பயன்படுத்தப் பட்டுள்ளது. இந்த faithfulness என்ற வார்த்தை அப்படியே உண்மை, சத்தியம் என்ற வார்த்தைகளுக்கும் பயன்படுத்தப் பட்டுள்ளது. எனவே ஆவியின் கனியாகிய விசுவாசம் என்ற வார்த்தையானது விசுவாசித்தல் என்ற காரியத்தை மட்டுமல்ல, விசுவாசமாக / நம்பிக்கைக்குப் பாத்திரமாக நடந்து கொள்ளுதல் என்ற காரியத்தை இந்த ஆவியின் கனி வரிசையில் குறிப்பதாக அறியலாம். கிரேக்க மொழியில் இந்த இரண்டுகாரியங்களுக்கும் ‘Pistis’ என்ற ஒரே வார்த்தையே பயன்படுத்தப்படுகிறது.
விசுவாசம் என்பது தேவனுடைய பிள்ளைகளுக்கு இருக்க வேண்டிய அடிப்படைத் தகுதி. இதனால் தான் அவர்களுக்கு விசுவாசிகள் என்ற பெயரே சூட்டப்பட்டிருக்கிறது. ’மனந்திரும்பி, சுவிசேஷத்தை விசுவாசியுங்கள்’ (மாற்கு 1:15) என்பது தான் இயேசு கிறிஸ்துவின் முதல் பிரசங்கம். கிறிஸ்தவ வாழ்வின் முதல் அடிப்படை தகுதியும் அதுவே (யோவான் 1:12). ’விசுவாசிக்கிறவன் பதறான் (ஏசாயா 28:16); தன் விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் (ஆபகூக் 2:4); நீ விசுவாசித்தபடியே உனக்கு ஆகக்கடவது (மத்தேயு 8:13); மேலும், நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர்கள் (மத்தேயு 21:22)’ போன்ற வசனங்கள் நாம் இன்னும் திரியேக தேவனை, அவருடையை வார்த்தைகளை இன்னும் விசுவாசிக்க நம்மைத் தூண்டுகின்றன.
அத்துடன் நாம் எவற்றையெல்லாம் விசுவாசிக்க வேண்டும் என்றும் அவருடைய கற்பனைகள் நமக்குப் போதிக்கின்றன. தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத்தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும் (எபி. 11:6). நாம் என்னென்ன காரியங்களுக்காக தேவனை விசுவாசிக்கிறோமோ அந்த அளவில் தான் நாம் அவருக்கு விசுவாசமாகவும் உண்மையாகவும் நடந்து கொள்ள முடியும். எந்தவித கிரியைகளில் எல்லாம் அது செயல்படலாம் என எபிரேயர் 11ம் அதிகாரத்தில் கொடுக்கப்படுள்ள விசுவாச வீரர்கள் பட்டியலிலிருந்து தெளிவாக அறிகிறோம்.
விசுவாசத்தினாலே ஆபேல் மேன்மையானபலியை தேவனுக்குச் செலுத்தினான்; ஏனோக்கு தேவனுக்குப் பிரியமானவனாய் நடந்தான்; நோவா பேழையை உண்டுபண்ணினான்; ஆபிரகாம் கீழ்ப்படிந்து, தான் போகும் இடம் இன்னதென்று அறியாமல் புறப்பட்டுப்போனான்; மேலும் ஈசாக்கைப் பலியாக ஒப்புக்கொடுத்தான்; விசுவாசத்தினாலே சாராள் வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவரென்றெண்ணினாள்; விசுவாசத்தினாலே யாக்கோபு தன் மரணகாலத்தில் யோசேப்பினுடைய குமாரர் இருவரையும் ஆசீர்வதித்து, தன்கோலின் முனையிலே சாய்ந்து தொழுதுகொண்டான்; விசுவாசத்தினாலே யோசேப்பு, தன் எலும்புகளைக்குறித்துக் கட்டளைகொடுத்தான்; விசுவாசத்தினாலே மோசே கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தையை அதிக பாக்கியமென்று எண்ணி  செயல்பட்டு இஸ்ரவேலரை வழிநடத்தினான். இவ்விதமே ராகாப்,  கிதியோன், பாராக், சிம்சோன், யெப்தா, தாவீது, சாமுவேல் மற்றும் ஸ்திரீகள் தங்கள் விசுவாசத்தினால் நடந்து கொண்ட காரியங்களை எபியேரர் 11ம் அதிகாரம் முழுவதும் காண்கிறோம்.
எனவே விசுவாசி ஒவ்வொருவரும் விசுவாசத்துக்கு பாத்திரமாகவும் நடந்து கொள்ள வேண்டும். ஏனெனில், ’கிரியைகளில்லாத விசுவாசம் செத்ததாயிருக்கிறது’ (யாக்கோபு 2:26). ’கிறிஸ்துவினிடத்தில் விசுவாசிக்கிறதற்குமாத்திரமல்ல, அவர்நிமித்தமாகப் பாடுபடுகிறதற்கும் உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது’ (பிலி. 1:29). குறிப்பாக, கிறிஸ்தவ விசுவாசத்தினால் வரும் பாடுகள் ஒருபுறம் இருக்க, 2 தீமோத்தேயு 3:1-5 ல் கடைசி நாட்களில் வருமென்று கூறப்பட்டுள்ள உலகப்பிரகாரமான காரியங்களை நம்மிடமிருந்து விலக்கி வைக்க வேண்டும். 
அதற்கு ஆவியின் கனியாகிய விசுவாசத்தில் நாம் பெருக வேண்டியது நமக்கு அவசியமாகிறது. இதற்கு  உதாரணமாக, விசுவாசத்தின் வெளிப்பாடாக பணஆசை அற்றவர்களாக இருக்கும் நிலையை எபிரேயர் நிருபத்தில் பவுல் கூறுவதைக் காண்கிறோம். ’நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே. அதினாலே நாம் தைரியங்கொண்டு: கர்த்தர் எனக்குச் சகாயர், நான் பயப்படேன், மனுஷன் எனக்கு என்னசெய்வான் என்று சொல்லலாமே’ (எபிரேயர் 13:5,6).
இவ்விதம் விசுவாசமும் விசுவாசமாய் இருத்தலும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடையவைகளே. ஒன்றில் வளர மற்றொன்று அவசியமாகிறது. அதாவது விசுவாசத்தில் வளரும் ஒருவரால் தான் விசுவாசமாகவும் நடந்து கொள்ள முடியும். விசுவாசிகளாகிய நாம் தேவனுக்கும் அவருடைய வாத்தைகளுக்கும் உண்மையாய் நடந்து கொள்ளுதல் வேண்டும். ’தேவனிடத்தில் விசுவாசமாய் இருங்கள்; என்னிடத்திலும் விசுவாசமாய் இருங்கள்’ (யோவான் 14:1) என்றார் இயேசு கிறிஸ்து. ’விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்’ (எபிரெயர் 11:6).  

இந்த விசுவாசத்தில் வளர நாம் செய்ய வேண்டியதென்ன? ’விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும்’ என ரோமர் 10:17 ல் பார்க்கிறோம். நாம் கிறிஸ்தவ விசுவாசத்தில் மென்மேலும் வளர தேவனுடைய வசனமாகிய பரிசுத்த வேதாகமத்தை முறையாக வாசிக்க வேண்டும்; அவைகளை தியானிக்க வேண்டும்; அவைகளை கேள்விப்படும் போதே நமக்குள் விசுவாசம் பிறக்கும். சிறுசிறு காரியங்களில் அவைகளை செயல்படுத்தப் பழகும் போது பெரிய காரியங்களிலும் அவருக்கு விசுவாசமாக நடந்து கொள்ளும் விசுவாச வீரர்களாக வீராங்கனைகளாக நாம் மாறுவோம். இந்த அனுபவங்களுக்கு நம்மை அர்ப்பணிப்போம். ஆமென்.

[இது பாலைவனச் சத்தம் – ஜூலை 2017 இதழில் வெளியான எனது கட்டுரை]


Sunday, May 21, 2017

ஆவியின் கனி – நற்குணம்

நல்லவரும், நன்மை செய்கிறவருமாயிருக்கிற தேவனுடைய நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். ஆவியின் கனி வரிசையில் நன்மைசெய்ய மனுஷன் கொண்டிருக்கும் ஆசையே தயை (நீதி 19:22) என நாம் கடந்த மாதம் தியானித்தோம். அவ்விதம் நன்மை செய்ய ஒருவருக்கு உள்ளே இருக்கவேண்டிய உள்ளான குணமே நற்குணம். அதைக்குறித்து இப்போது தியானிப்போம். நற்குணம் என்பது ஒருவன் நல்லவனாக இருக்கிற குணம். அது தேவனுடைய குணம். தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனுமில்லை என இயேசுவும் கூறியுள்ளார். ஆனால் நாம் அவரில் நிலைத்திருக்கும் போது அவருடைய அன்பில் நிறைந்திருக்கும் போது இந்த உள்ளான குணம் நமக்குள்ளும் வளரும்.

நற்குணம் என்ற வார்த்தைக்கு ஆங்கில வேதாகமங்களில் ‘Goodness’ என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும் அந்த வார்த்தை நற்குணம் என்ற வார்த்தையை மட்டுமல்ல, தேவனுடையை நல்லுள்ளம் மற்றும் அவரது நற்செயல்களை குறிக்கும் வண்ணம் கிட்டதட்ட 50 இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் நற்குணம் என்ற வார்த்தையோ தமிழில் 7 இடங்களில் மட்டுமே வருகிறது. நற்குணம் என்ற ஆவியின் கனியை குறிக்க கிரேக்க மொழியில் பயன்படுத்தபடும் ‘agathosune’ என்ற வார்த்தை ‘அடுத்தவர்களின் நன்மைக்காக ஒருவரின் உள்ளான இருதயத்திலும்  வாழ்க்கையிலும் காணப்படும் உத்தமம்’ என பொருள்படுகிறது. 

ஒருவரில் காணப்படும் நற்குணம் அடுத்தவருக்கு எப்போதுமே நன்மை செய்யவே நாடும். நன்மையான காரியங்கள் என கூறும் போது, பரிசுத்த வேதாகமத்தில் நற்காரியங்கள், நற்கிரியை, நற்கனி, நற்பொருள், நற்சாட்சி, நற்பலன், நற்செய்தி, நற்போதகம், நற்புத்தி போன்ற வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன். இவற்றுள் நற்குணம், நற்கிரியை, நற்செய்தி என்ற மூன்று காரியங்களுக்குள் மிகவும் நெருங்கிய தொடர்பு உண்டு. தேவனுடைய நற்குணம் அவரது நற்கிரியைகளில் வெளிப்பட்டபோது தான் அது நற்செய்தியாக மக்களுக்கு அறிவிக்கப்பட்டது (லூக்கா 2:10-14).

கிறிஸ்தவர்களாகிய நாம் மற்றவர்களுக்கு அறிவிக்கும் நற்செய்தி நற்பலன்களைக் கொடுக்கவேண்டுமெனில், நம்மில் நற்கிரியைகள் காணப்பட வேண்டும். நற்காரியங்கள் செய்யும் ஒருவனை நல்லவன் என எல்லாரும் எப்போதும் சொல்லிவிட முடியாது. நற்காரியங்கள் சில செய்தாலாவது தங்களின் பாவத்திற்கு பரிகாரம் கிடைத்துவிடாதா என்ற எண்ணத்தில் அனைவருமே ஏதோவொரு கட்டத்தில் ஒருசிலருக்காவது நற்காரியங்களை செய்துவிடுகின்றனர். ஆனால் நற்கிரியை என்பதோ ஒருவர் வாழ்வில் அனுதினமும் வெளிப்படுகிற ஒரு காரியம். அது உள்ளான மனிதனின் வெளிப்படையான வெளிப்பாடு. உள்ளான மனிதனில் நற்குணம் பெருகிவரும் போது வெளியில் அது நற்கிரியைகளாக அனுதினமும் வழிந்தோடும்.

’மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக்கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது’ என்றார் இயேசு கிறிஸ்து (மத்தேயு 5:16). நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம் (எபேசியர் 2:10). சோர்ந்துபோகாமல் நற்கிரியைகளைச் செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்தியஜீவனை அளிப்பார் (ரோமர் 2:7). இவ்விதம் நற்கிரியைகளை நடப்பிக்க நம்மில் நற்குணம் பெருகுவது அவசியமாக இருக்கிறது.

நற்குணம் என்பது அனைவருக்கும் இருக்க வேண்டிய உள்ளான பண்பாக இருப்பினும் அது குறிப்பாக பெண்களுக்கு இருக்க வேண்டிய அல்லது அவர்களிடம் குறிப்பாக எதிர்பார்க்கப்படுகிற காரியமாக இருக்கிறது. நீதிமொழிகள் 12:4 கூறுகிறது, ‘குணசாலியான ஸ்திரீ தன் புருஷனுக்குக் கிரீடமாயிருக்கிறாள்; இலச்சை உண்டுபண்ணுகிறவளோ அவனுக்கு எலும்புருக்கியாயிருக்கிறாள்’. மேலும் நீதிமொழிகள் 31:10 ல் ’குணசாலியான ஸ்திரீயைக் கண்டுபிடிப்பவன் யார்? அவளுடைய விலை முத்துக்களைப்பார்க்கிலும் உயர்ந்தது’ என்றும் காண்கிறோம். பெண்களுக்கான துகுதியுள்ள அலங்கரிப்பைப் குறித்து குறிப்பிடும் போது அப்போஸ்தலனாகிய பேதுருவும், ‘அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாயிருக்கக்கடவது; அதுவே தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றது’  என 1 பேதுரு 3:4 ல் குறிப்பிடுகிறார்.

இந்த நற்குணம் நம்மில் பெருகிட நாம் செய்ய வேண்டியதென்ன? அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:11 ல் வாசிக்கிறோம், ‘அந்தப் (பெரோயா) பட்டணத்தார் மனோவாஞ்சையாய் வசனத்தை ஏற்றுக்கொண்டு, காரியங்கள் இப்படியிருக்கிறதா என்று தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்ந்துபார்த்ததினால், தெசலோனிக்கேயில் உள்ளவர்களைப் பார்க்கிலும் நற்குணசாலிகளாயிருந்தார்கள்’. நாம் தேவனுடைய வசனங்களை மனவிருப்பத்துடன் தினமும் வாசித்து தியானித்து ஆராய்ந்து அறிந்து அதின்படி நடக்க நம்மை தினமும் அர்ப்பணிக்கும் போது நம்மில் ஆவியின் கனியாகிய நற்குணம் பெருகி அது நம் கிரியைகளில் வெளிப்படும். ஏனென்றால், ‘வேதவாக்கியங்களெல்லாம் தேவஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படி, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும் சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது’ (2 தீமோ. 3:16,17).


நற்குணம் என்பது நாமாக நம்மில் நாமே பெருக்கிக் கொள்ள முடியும் காரியம் அல்ல. அது உள்ளான குணம். அது தேவனுடைய குணம். நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது என யாக்கோபு 1:17ல் வாசிக்கிறோம். அவருடைய ஆவியினாலே நாம் உள்ளான மனுஷனில் வல்லமையாய்ப் பலப்பட முடியும் (எபே. 3:16). அது ஒரு நாள் அனுபவம் அல்ல. ’எங்கள் புறம்பான மனுஷனானது அழிந்தும், உள்ளான மனுஷனானது நாளுக்குநாள் புதிதாக்கப்படுகிறது’ என்பது ஆதிவிசுவாசிகளின் அனுபவம் (2 கொரி. 4:16). இந்த அனுபவங்களுக்கு நம்மையும் அர்ப்பணிப்போம்.

ஆமென்.


[இது பாலைவனச் சத்தம் – மே 2017 இதழில் வெளியான எனது கட்டுரை]


Sunday, April 23, 2017

ஆவியின் கனி – தயவு

எல்லார் மேலும் தயவுள்ள நம் கர்த்தருடைய நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன்.  நாம் தொடர்ந்து தியானித்து வரும் ஆவியின் கனியில், தயவு என்பது மையப்பகுதியாக ஐந்தாவதாக இருக்கும் அம்சமாக காணப்படுகிறது. தயவு என்பதற்கு பெரும்பாலான ஆங்கில வேதாகமங்களில் Kindness (இரக்கம்) என்ற வார்த்தையும் Gentleness (மென்மை) என்ற வார்த்தையும் பயன்படுத்தப்படுகின்றன. இதற்கு இணையான கிரேக்க வார்த்தைக்கு ‘இருதயத்தில் உருவாகி செயலில் வெளிப்படும் இரக்கம்’ என பொருள்.

நாம் ஒருவரிடம் ஒன்றை செய்யும்படி எதிர்பார்த்து கேட்கும் போது, ‘தயவு செய்து’ என்ற வார்த்தையை பயன்படுத்துகிறோம். அதை அவரிடமிருந்து எதிர்பார்ப்பதற்கு நமக்கு ஒருவேளை தகுதியும் உரிமையும் இருந்தாலும் கூட, அதனை மறுப்பு எதுவும் இருந்துவிடாமல் உறுதிசெய்து கொள்வதற்காக ’தயவு செய்து’ என்ற வார்த்தையை, நாம் இறங்கி வந்து தாராளமாக பயன்படுத்துகிறோம். ஆனால் தயவு என்பது என்ன? நன்மைசெய்ய மனுஷன் கொண்டிருக்கும் ஆசையே தயை என நீதி 19:22 ல் பார்க்கிறோம். அடுத்தவருக்கு நன்மை பயக்கும் பொருட்டு முழுமனதுடன் செய்யப்படும் செயலை தயை எனலாம்.

தயவு என்பது நம் திரியேக தேவனின் இயல்புகளில் ஒன்று. எனவே தான் அவை நம்மிலும் வெளிப்பட அவர் நம்மை எதிர்பார்க்கிறார். முதலில் நாம் இரட்சிக்கப்பட்டதே முற்றிலும் தேவனுடைய தயவினால் தான். ’நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய தயையும் மனுஷர்மேலுள்ள அன்பும் பிரசன்னமானபோது, நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே, மறுஜென்ம முழுக்கினாலும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார்’ (தீத்து 3:4,5). நாம் இதற்கு எவ்வளவும் தகுதியானவர்கள் அல்ல (தீத்து 3:3). நாம் இரட்சிக்கப்பட்டது அவருடைய சுத்த கிருபையே. 'கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு' என எபேசியர் 2:8 ல் வாசிக்கிறோம். 

கிருபை என்பதற்கு தகுதியில்லாவதனுக்கு காட்டப்படும் இரக்கம் என ஒரு வரையறை உண்டு.  தயவோ பல நேரங்களில் தகுதியை எதிர்பார்க்கும் (ஆதி 21:23, 2 சாமுவேல் 9:1, லூக்கா 7:4). மட்டுமல்ல, பதிலீடாக ஒன்றைக் கொடுத்தும் ஒருவர் தயையை பெற முடியும். (ஆதி. 34:11). தயை செய்தல் பிரதிபலனாக தயையை எதிர்பார்க்கும் (யோசுவா 2:12) ஆனால் தயவு என்பது தகுதியில்லாதவனுக்கும் கிடைக்கும் (ஆதி. 32:10). தேவனால் மட்டுமே கூடும் உச்சபட்ச தயவை கிருபை எனலாம். ஆனால் தயவு செய்வது என்பது மனிதனாலும் கூடும்.

தயை செய்வது ஒன்றும் தாழ்வான காரியமல்ல. பொன் வெள்ளியைப்பார்க்கிலும் தயையே நலம் (நீதி 22:1). அதனால் வரும் பலன்களோ மிகவும் அதிகம் என்பதை பின்வரும் இந்த வசனங்களில் இருந்து தெளிவாக அறிகிறோம். ’தயையுள்ள மனுஷன் தன் ஆத்துமாவுக்கு நன்மை செய்து கொள்கிறான்’ (நீதி 11:17). ’தயையும் சத்தியமும் ராஜாவைக் காக்கும்; தயையினாலே தன் சிங்காசனத்தை நிற்கப்பண்ணுவான்’ (நீதி 20:18). ’நீதியையும் தயையையும் பின்பற்றுகிறவன் ஜீவனையும் நீதியையும் மகிமையையும் கண்டடைவான்’ (நீதி 21:21). தேவனுடைய தயவுள்ள கரம் நம்மீது இருக்கும் போது மனிதர்கள் கண்னில் தயவு கிடைத்து நமது காரியங்கள் வெற்றியாய் முடிகிறது (நெகே. 2:8)

நம் கிறிஸ்தவ வாழ்க்கையில் ஆவியின் முதல் கனியாகிய அன்பு பெருகும் போது தயவும் வெளிப்படும் (1 கொரி 13:4). ஆவியின் கனியாகிய தயவு நமது வாழ்க்கையில் நிறைவாய் வழிந்தோடுவதற்கு ஆதாரமாக அன்பும், அடையாளமாக மன்னிக்கும் சுபாவமும் நம்மில் பெருகவேண்டும். 'ஆகையால், நீங்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட பரிசுத்தரும் பிரியருமாய், உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு; ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்' (கொலோ. 3:12,13). 'ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்’ (எபே. 4:32). ஏசாயா 55:7ன் படி கர்த்தர் மன்னிக்கிறதற்குத் தயை பெருத்திருக்கிறார்.

பலனை எதிர்பார்த்து மட்டுமே நாம் தயவு காட்டக் கூடாது. இருப்பினும் தயை செய்பவனுக்கு அதிகம் தயை செய்யப்படும். ’கர்த்தர் எல்லார்மேலும் தயவுள்ளவர்’ (சங்145:9); இருப்பினும் சங்கீதம் 18:25ன் படி கர்த்தர் தயவுள்ளவனுக்கு இன்னும் தயவுள்ளவராக இருக்கிறார். ‘இரக்கமுடையவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள்’ (மத். 5:7) என இயேசுவும் தனது மலைப்பிரசங்கத்தில் கூறியுள்ளார். ’தேவனுடைய தயவையும் கண்டிப்பையும் பார்; விழுந்தவர்களிடத்திலே கண்டிப்பையும், உன்னிடத்திலே தயவையும் காண்பித்தார்; அந்தத் தயவிலே நிலைத்திருப்பாயானால் உனக்குத் தயவுகிடைக்கும்; நிலைத்திராவிட்டால் நீயும் வெட்டுண்டுபோவாய்’ (ரோமர் 11:22). 

ஆனால் பலனை எதிர்பார்த்து மட்டுமே தயை செய்தால் அது அன்பின் வெளிப்பாடு அல்ல; அது சுயநலத்தின் வெளிப்பாடு. மட்டுமல்ல, தயை செய்வதில் பாரபடசமும் இல்லாமல் இருக்கவேண்டும். உங்களைச் சிநேகிக்கிறவர்களையே நீங்கள் சிநேகித்தால்,  உங்களுக்கு நன்மைசெய்கிறவர்களுக்கே நீங்கள் நன்மைசெய்தால், அதனால், என்ன பிரயோஜனம்? பாவிகளும் அப்படிச் செய்கிறார்களே என இயேசு கிறிஸ்து கூறியுள்ளார். ’உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள், நன்மைசெய்யுங்கள், கைம்மாறுகருதாமல் கடன் கொடுங்கள், அப்பொழுது உங்கள் பலன் மிகுதியாயிருக்கும், உன்னதமானவருக்கு நீங்கள் பிள்ளைகளாயிருப்பீர்கள், அவர் நன்றியறியாதவர்களுக்கும் துரோகிகளுக்கும் நன்மைசெய்கிறாரே’ (லூக்கா 6:35). 

உபதேசங்களைக் குறித்த வாக்குவாதங்களினால் அல்ல, உண்மைக் கிறிஸ்வர்களின் தயவு நிறைந்த நடவடிக்கைகளினாலேயே  அநேகர் சபைகளுக்குள் இழுக்கப்பட்டுள்ளனர் என்கிறார் வில்லியம் பார்க்ளே என்னும் வேத அறிஞர். இன்று நமது கனிதரும் கிறிஸ்தவ வாழ்க்கை எப்படி இருக்கிறது? தேவ ​​​​​​​தயையை பெற்றுக் கொண்ட நாம் பிரதிபலனாக மற்றவர்களிடம் தயையை காண்பிக்கிறோமா? மற்றவர்களின் மீது தேவ தயவுக்காக ஜெபிக்கிறோமா? (ரூத். 1:8). மற்றவர்களை நாம்  தாராளமாக ஆசீர்வதிக்கிறோமா? (1 சாமு. 23:21). தயவு என்னும் இந்த ஆவிக்குரிய கனி நம்மில் பெருகி, மற்றவர்களை அவரண்டை நடத்திட நம்மை அர்ப்பணிப்போமாக. ஆமென்.


[இது பாலைவனச் சத்தம் – ஏப்ரல் 2017 இதழில் வெளியான எனது கட்டுரை]

Sunday, March 19, 2017

ஆவியின் கனி – நீடிய பொறுமை

கனியுள்ள கிறிஸ்தவ வாழ்க்கையில் ஆவிக்குரிய கனியின் ஒவ்வொரு அம்சங்களையும் நாம் சிந்தித்து வருகிறோம். இந்த மாதத்தில் ஆவியின் கனியாகிய நீடிய பொறுமை குறித்து காண்போம். ’பொறுத்தார் பூமியாழ்வார்’ எனவும் ’பொறுமைக்கும் எல்லை உண்டு’ எனவும் உலகவழக்கில் பலர் சொல்ல, நாம் கேள்விப்பட்டதுண்டு. எல்லையில்லாத பொறுமை, அதாவது தொடர்ச்சியாக நிலைத்து நிற்கும் பொறுமை தான் நீடியபொறுமை. கடினமான சூழ்நிலைகளில் உறுதிப்பாட்டுடன் தன்நிலையை தக்கவைத்துக் கொள்ளுதல் (long suffering) நீண்ட நேரம் நிதானத்துடன் நடந்துகொள்ளும் நிலை (long temper) என்ற இருவேறு காரியங்களுக்கும் பொறுமை என்ற ஒரே சொல்லே பயன்படுத்தப்படுகிறது.
பலரும் பலவிஷயங்களில் பொறுமையிழக்கும் போது நாம் பொறுமையுடன் இருந்தால் நம்மில் ஏதோ ஒரு வெறுமை இருப்பதாக நினைக்க வேண்டியதில்லை. மாறாக, பொறுமையிழப்பது தான் நம் கிறிஸ்தவ வாழ்வில் ஆவியானவர் செயல்படாத வெறுமையைக் காண்பிக்கிறது. மேலும், நம்மை பூரணராக்குவதே இந்த பொறுமை தான். ’நீங்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல், பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும் இருக்கும்படி, பொறுமையானது பூரண கிரியை செய்யக்கடவது’ (யாக்கோபு 1:4 ). ’பெருமையுள்ளவனைப் பார்க்கிலும் பொறுமையுள்ளவன்  உத்தமன்’ (பிரசங்கி 7:8). பொறுமையாயிருக்கிறவர்கள் பாக்கியவான்கள் (யாக்கோபு 5:11).

பொறுமை ஒரு நல்ல பண்பு என்பதைக் காட்டிலும் அது ஒரு கிறிஸ்தவப் பண்பு என்பது தான் பொருத்தமாக இருக்கும். ஏனெனில் நமது தேவன், அவர் நீடிய பொறுமையுள்ள தேவன் (சங்கீதம் 86:15, 2 தெச 3:5). நாம் முதலில் இரட்சிக்கப் பட்டு அவருடைய பிள்ளைகளாக மாறியதே அவருடைய பொறுமையினால் தான் (1 தீமோ 1:16). நமது அனுதின வாழ்க்கையில் ஏற்படும் நமது மீறுதல்களிலும் அவர் பொறுமையுள்ளவராகவே இருக்கிறார் (ஏசாயா 48:9). நீடிய பொறுமையுள்ளவராக இருப்பதினால் தேவன் அநியாயங்களை சகித்து நீதியுள்ளவர்களுக்கு அநியாயஞ் செய்பவரல்ல. ’அந்தப்படியே தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து அவர்களுக்கு நியாயஞ்செய்யாமலிருப்பாரோ?’ (லூக்கா 18:7).

ஒருவரின் பொறுமை உபத்திரவத்தில் வெளிப்படுவது மட்டுமல்ல, பொறுமையை விருத்தியடையச் செய்வதே உபத்திரவங்கள் தான். ஒரு பொறுமைசாலியினால் மட்டுமே கடினமான துன்பமான சூழ்நிலைகளிலும் முறுமுறுக்காமல் தாங்கிக் கொள்ள முடியும். அடுத்தவர் மீதே தவறுகள் காணப்பட்டாலும் நீதியுள்ள நியாதிபதி பார்த்துக் கொள்வார் என நினைக்கும் பக்குவம் உள்ளவர்கள் மட்டுமே அதற்காக கோபப்படாமலும் புகார் கொடுக்காமலும் மாறாக மன்னித்து மறக்கும் அனுபவத்தை நடைமுறைப் படுத்த முடியும். இந்த நீடிய பொறுமை அது ஆவியின் கனி. பரிசுத்த ஆவியானர் நமது வாழ்க்கையில் செயல்பட முழுவதும் விட்டுக் கொடுக்கும் போது தான் இந்த கனி நம் வாழ்க்கையில் வெளிப்படும்.

இவ்வுலக வாழ்க்கையில் இயேசுவும் கூட தனது பொறுமையை இழந்திருக்கிறார். ஆனால் அது நம்மைப் போன்று சிறுசிறு காரியங்களுக்காக அல்ல. விசுவாசக் குறைச்சலால் பிசாசின் பிடியில் அகப்பட்டவர்களை விடுவிக்க முயற்சி செய்யாமல் கடமைக்கு காலத்தைக் கடத்தின தன் சீடர்களையும் (மத்தேயு 17:17, லூக்கா 9:41), பிதாவின் வீட்டை வியாபார வீடாக்கினவர்களையும் (யோவான் 2:13-17) அவர் பொறுமையிழந்து கடினத்துடன் நடத்த வேண்டியதாயிற்று. நாமும் பல வேளைகளில் பொறுமை இழக்கிறோம். ஆனாலும், தேவன் நமது பொறுமையை அறிந்திருக்கிறார் (வெளி. 2:2,3,19). எனவே, அந்த நிலைகளில் நம்மை நாமே நிதானித்து அறிந்து நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும்.  ஒருமுறை பொறுமையிழந்தாலும் நீடியபொறுமை என்ற நிலையில் இருந்து நாம் தவற வேண்டியதுள்ளது. எனவே நீடிய பொறுமையில் நிலைத்திருக்க பரிசுத்த ஆவியானவரின் ஆளுகை நம் வாழ்வில் தொடர்ச்சியாக இருக்க வேண்டும். நமது நீடிய பொறுமை அவரது வருகை வரையும் நிலைத்திருப்பதாக இருக்க வேண்டும் (யாக்கோபு 5:7a).

குறிப்பாக நமக்கு எந்தெந்த காரியங்களில் பொறுமை வேண்டும்? முதலாவதாக, நமது ஜெபத்தில் பொறுமை வேண்டும். தாவீது கூறுகிறார், ‘கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவர் என்னிடமாய்ச் சாய்ந்து, என் கூப்பிடுதலைக் கேட்டார்’’(சங்கீதம் 40:1). ’நீண்ட பொறுமையினால் பிரபுவையும் சம்மதிக்கப்பண்ணலாம்‘ (நீதி 25:15). எனவே முதலில் ஜெபத்தில் பொறுமை தேவை. இரண்டாவதாக, வேதவசனங்களை கேட்கிற நாம் அவைகள் நம் வாழ்வில் ஏற்ற பலன்களைக் கொடுக்க பொறுமையுடன் செயல்பட வேண்டும். ’நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்டு, அதை உண்மையும் நன்மையுமான இருதயத்திலே காத்துப் பொறுமையுடனே பலன் கொடுக்கிறவர்களாயிருக்கிறார்கள்’ (லூக்கா 8:15). இதோ, பயிரிடுகிறவன் பூமியின் நற்பலனை அடையவேண்டுமென்று, முன்மாரியும் பின்மாரியும் வருமளவும், நீடிய பொறுமையோடே காத்திருக்கிறான் (யாக்கோபு 5:7b) என்ற வசனத்திற்கேற்ப, ஆவிக்குரிய வாழ்க்கையில் பலனை எதிர்பார்த்து செய்து கொண்டிருக்கும் அனைத்து காரியங்களிலும் உரிய பலனை அடையும் வரை பொறுமையுடன் செயல்பட வேண்டும். மூன்றாவதாக, நமக்கு வரும் உபத்திவங்களில் பொறுமையாய் இருக்க வேண்டும் (ரோமர் 12:12). 

பொறுமை நமது வாழ்வில் பெருக இவை நமக்கு அவசியமாகின்றன. 1) வேத வசனம்:  ’தேவவசனத்தினால் உண்டாகும் பொறுமையினாலும் ஆறுதலினாலும் நாம் நம்பிக்கையுள்ளவர்களாகும்படிக்கு, முன்பு எழுதியிருக்கிறவைகளெல்லாம் நமக்குப் போதனையாக எழுதியிருக்கிறது’ (ரோமர் 15:4).  2) தேவ கிருபை: ரோமர் 15:6 கூறுகிறது, ‘பொறுமையையும் ஆறுதலையும் அளிக்கும் தேவன், கிறிஸ்து இயேசுவினுடைய மாதிரியின்படியே, நீங்கள் ஏகசிந்தையுள்ளவர்களாயிருக்கும்படி உங்களுக்கு அநுக்கிரகஞ்செய்வாராக’. 3) ஒருவருக்கொருவர் ஜெபம்: சந்தோஷத்தோடே கூடிய எல்லாப் பொறுமையும் நீடியசாந்தமும் உண்டாவதற்கு, மகிமையான அவருடைய வல்லமையின்படி, எல்லா வல்லமையாலும் பலப்படுத்தப்படவும், உங்களுக்காக வேண்டுதல்செய்கிறோம்’ (கொலோ. 1:11). 4) நல்ல முன்மாதிரிகள்: ’நீங்கள் அசதியாயிராமல், வாக்குத்தத்தமான ஆசீர்வாதங்களை விசுவாசத்தினாலும் நீடிய பொறுமையினாலும் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களைப் பின்பற்றுகிறவர்களுமாயிருந்து, உங்களுக்கு நம்பிக்கையின் பூரண நிச்சயமுண்டாகும்படி நீங்கள் யாவரும் முடிவுபரியந்தம் அப்படியே ஜாக்கிரதையைக் காண்பிக்கவேண்டுமென்று ஆசையாயிருக்கிறோம்’ (எபிரெயர் 6:11,12) என்கிறார் அப்போஸ்தலனாகிய பவுல்.


கிறிஸ்துவின் பொறுமைக்கு உங்கள் உடன்பங்காளனுமாயிருக்கிற யோவான் (வெளி. 1:9), பொறுமையாய்க் காத்திருந்து, வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதைப் பெற்றுக்கொண்ட ஆபிரகாம் (எபிரெயர் 6:15), தேவன் நீடிய பொறுமையோடே காத்திருந்தபோது, பேழையை ஆயத்தம்பண்ணிக் கொண்டிருந்து நீதியைப் பிரசங்கித்தவனாகிய நோவா (I பேதுரு 3:20, 2 பேதுரு 2:5), பொறுமைசாலியான யோபு (யாக்கோபு 5:11) இவர்களெல்லாம் நமது கனிதரும் கிறிஸ்தவ வாழ்க்கையில் நமக்கு நீடியபொறுமையை புகட்டும் நல்ல முன்மாதிரிகள்.  இவர்களைப் பின்பற்றி, நமது விசுவாச ஓட்டத்தை பொறுமையோடே ஓடி முடிக்க தேவன் கிருபை தருவாராக.

ஆமென்.


[இது பாலைவனச் சத்தம் - மார்ச் 2017 இதழில் வெளியான எனது கட்டுரை]



Friday, February 17, 2017

ஆவியின் கனி - சமாதானம்

சமாதானக் காரணராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள். சமாதானம் என்ற வார்த்தை சூழ்நிலைகளைப் பொறுத்து வெவ்வேறு அர்த்தமுள்ளதாய் இருந்தாலும் இதனை முக்கியமாக மனஅமைதி, நல்லிணக்கம் அல்லது பாதுகாப்பு என்ற மூன்று வார்த்தைகளில் பெரும்பாலும் வர்ணித்து விடலாம். இரு நாடுகளுக்குள் சமாதான உறவு, இரு நபர்களுக்குள் சமாதானம், மனிதனுக்கும் தேவனுக்கும் இடையில் சமாதானம், ஒருவருக்குள் உள்ளான மனஅமைதி என பல்வேறு நிலைகளில் சமாதானம் என்கிற அம்சம் வெளிப்படுகிறது.

ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது சமாதானம் என கூறி வாழ்த்துவது இன்றளவும் பல கலாச்சாரங்களில் காணப்படுகிற ஒன்று. உயிர்த்தெழுந்த இயேசுவும் தனது சீடர்களுக்குக் காட்சி கொடுக்கும்போதெல்லாம் ‘உங்களுக்கு சமாதானம்’ என்று கூறி வாழ்த்தினார் (யோவான் 20:19,26). புதிய ஏற்பாட்டில், அப்போஸ்தலனாகிய பவுல் ஏறக்குறைய தனது எல்லா நிரூபங்களிலும் ’நம்முடைய பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும், உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக’ என வாழ்த்துதலுடன் தொடங்கி தனது நிரூபங்களை எழுதியிருப்பதைக் காண்கிறோம்.


புதிய ஏற்பாட்டுக் காலத்தில் சமாதானம் என்ற வார்த்தை பெரும்பாலும் மனஅமைதி என்ற கோணத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.  இயேசு கிறிஸ்து உலகத்தில் மனிதனாக பிறந்த போது, பரம சேனையின் திரள் தேவதூதனோடே தோன்றி, பூமியிலே சமாதானம் உண்டாக வாழ்த்தி தேவனைத் துதித்தார்கள் (லூக்கா 2:17). ஆம். உலக அமைதிக்கு இயேசு ஒருவரே காரண கர்த்தாவாக இருக்க முடியும். ஏனெனில் அவரே சமாதானப் பிரபு (ஏசாயா 9:6).  அவர் சமாதானத்தின் கர்த்தர் (2 தெச. 3:16). இந்த சமாதானம் என்பது தேவனால் அருளப்படும் ஈவு. ஏனெனில் அதனைப் படைத்தவர் அவரே (ஏசாயா 45:7). சமாதானத்தை அவரே கட்டளையிடுபவர் (லேவி. 26:6) சமாதானக் காரணரும் அவரே (மீகா 5:5).


இந்த சமாதானம் எவருக்கும் எளிதில் கிடைத்துவிடக் கூடியது அல்ல. அது நீதியின் கிரியை மற்றும் பலன் (ஏசாயா 32:17). ரோமர் 5:1 ன் படி,  நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப் பட்டிருக்கிறபடியால், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம். ”உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்” என ஏசாயா 26:3 ல் பார்க்கிறோம். மட்டுமல்ல, “துன்மார்க்கருக்குச் சமாதானம் இல்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்” (ஏசாயா 48:22).


அப்போஸ்தலனாகிய பவுல் விசுவாசிகளை கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருக்க வலியுறுத்தும் போது,  ”நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும்மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்” என கூறுகிறார் (பிலிப்பியர் 4:4-7).


கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள் (ரோமர் 12:18 ) என நமக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேவனோடு சமாதானாமாக இருக்கும் ஒருவரால் உலகத்தில் எந்தவிதமான சூழ்நிலைகளிலும் மற்றவர்களோடும் சமாதானமாக இருக்க முடியும். (யோவான் 16:33). எப்படியெனில் ரோமர் 8:6ன் படி, மாம்சசிந்தை மரணம்; ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாம். ”இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின. இவையெல்லாம் தேவனாலே உண்டாயிருக்கிறது; அவர் இயேசுகிறிஸ்துவைக்கொண்டு நம்மைத் தம்மோடே ஒப்புரவாக்கி, ஒப்புரவாக்குதலின் ஊழியத்தை எங்களுக்கு ஒப்புக்கொடுத்தார்” என 2 கொரி. 5:17,18 ல் பார்க்கிறோம். முதலாவதாக தேவசமாதானம் நமது இருதயங்களில் ஆளுகை செய்யும் போது (கொலோ 3:15) நம்மால் மற்றவர்களுடன் சமாதானமாக இருக்க முடியும். மற்றவர்களூடன் சமாதானப் போக்கினை கடைபிடிப்பதில் ஒருவரின் மனோபாவம் அல்லது அவரது அணுகுமுறை முக்கிய பங்கினை வகிக்கிறது. விசுவாசி ஒருவருக்கு தினமும் உணர்த்தி அந்த நல்ல மனோபாவத்தை வெளிப்படுத்த உதவி செய்பவர் ஆவியானவர்.


தேவனுடைய சமாதானத்தை தேவன் நம்மீது திணிப்பதில்லை. ஆனால், அவருடைய மாறாத அன்பை என்றாவது ஒருநாள் ஒருவர் உணர்ந்து ஏற்றுக் கொள்ளும் போது அவர் தரும் சமாதானத்தை அவர் பெற்றுக்கொள்கிறார். அதுபோலவே நம்முடன் சமாதானமாயிருக்க நாம் மற்றொருவரைக் கட்டாயப்படுத்த முடியாது. ஏனெனில், உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள் (யோவான் 14:17). எனவே, ஆவியானவரின் துணையோடு அவரின் கனியாகிய சமாதானம் நம் வாழ்க்கையில் வெளிப்படும் போது, மற்றவர்கள் என்றாவது ஒருநாள் அதை இனம் கண்டு நம்முடன் சமாதானாமாய் ஒப்புரவாக தேவன் கிரியை செய்வார். ஒருவனுடைய வழிகள் கர்த்தருக்குப் பிரியமாயிருந்தால், அவனுடைய சத்துருக்களும் அவனோடே சமாதானமாகும்படி செய்வார் (நீதி.16:7).


ஜனங்களுக்கு சமாதானத்தைக் கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவிப்பது தான் ஒரு சுவிஷேஷகனுடைய வேலை (ஏசாயா 52:7). சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள் (மத்தேயு 5:9). எனவே ஆவியின் கனியாகிய சமாதானம் நம்முடைய மனோபாவத்திலும் செயல்பாடுகளிலும் வெளிப்பட நாம் கவனமாக இருக்க வேண்டும். மேலும், “தேவனுடைய ராஜ்யம் புசிப்பும் குடிப்புமல்ல, அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது … … ஆனபடியால் சமாதானத்துக்கடுத்தவைகளையும், அந்நியோந்நிய பக்திவிருத்தி உண்டாக்கத்தக்கவைகளையும் நாடக்கடவோம் (ரோமர் 14: 17,19). நாம் ஒருவரோடொருவர் சமாதானமாயிருப்போம்; அப்பொழுது அன்புக்கும் சமாதானத்துக்கும் காரணராகிய தேவன் நம்மோடு கூட இருப்பார் (2 கொரி. 13:11).


ஆமென். 

[இது பாலைவனச் சத்தம் – பெப்ருவரி 2017 இதழில் வெளியான எனது கட்டுரை]

Wednesday, January 18, 2017

ஆவியின் கனி - சந்தோஷம்

கிறிஸ்துவில் பிரியமான சகோதர சகோதரிகளுக்கு, நமது இரட்சகர் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். புத்தாண்டு பிறந்தாலே நமக்குள் ஒரு சந்தோஷம் பிறக்கிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டாவது நமது எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிடும் ஆண்டாக இருந்துவிடாதா என்ற எதிர்பார்ப்பே அந்த சந்தோஷத்தின் அடிப்படையான காரணம். ஆனால், அந்த சந்தோஷம் நிலையானது அல்ல; நாட்கள் செல்லச்செல்ல, அந்த சந்தோஷம் படிப்படியாக குறைந்து ஓரிரு வாரங்களுக்குள் பழைய நிலைமைக்கே நம்மை கொண்டு செல்ல நேரும். உண்மையான சந்தோஷம் சூழ்நிலைகளைப் பொறுத்தது அல்ல. நமது கனியுள்ள கிறிஸ்தவ வாழ்க்கையில் வெளிப்படவேண்டிய ஆவியின் கனியாகிய சந்தோஷம் குறித்து இந்த இதழில் காண்போம்.

ஆவியின் கனியாகிய அன்பு நம்முடைய வாழ்க்கையில் நிலைத்திருக்கும் போது நம்மில் வெளிப்படும் இன்னுமொரு அம்சம் தான் சந்தோஷம். ’நான் என் பிதாவின் கற்பனைகளைக் கைக்கொண்டு அவருடைய அன்பிலே நிலைத்திருக்கிறதுபோல, நீங்களும் என் கற்பனைகளைக் கைக்கொண்டிருந்தால், என்னுடைய அன்பிலே நிலைத்திருப்பீர்கள்’ என்று சொன்ன இயேசு கிறிஸ்து அதன் தொடர்ச்சியாக, ‘என்னுடைய சந்தோஷம் உங்களில் நிலைத்திருக்கும்படிக்கும், உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படிக்கும், இவைகளை உங்களுக்குச் சொன்னேன்’ என்கிறார் (யோவான்.15:10,11). இந்த வசனங்களின் அடிப்படையில், ஆவியின் கனியாகிய சந்தோஷத்தின் அம்சங்களை பின்வருமாறு விவரிக்கலாம்.

கிறிஸ்து தரும் சந்தோஷம்: நம்மில் இருக்க வேண்டிய சந்தோஷம் கிறிஸ்து தரும் சந்தோஷம். அது உலகப்ப்பிரகாரமான காரியங்களில் முயன்று கிடைக்கும் அற்ப சந்தோஷமல்ல, கிறிஸ்துவில் நிலைத்திருப்பதினால் நம்மில் உருவாகும் நிலையான சந்தோஷம். ஏனெனில் அது கிறிஸ்துவின் சந்தோஷம்; வேறு எங்கும் அது கிடைப்பதில்லை. அது நமது பக்தி முயற்சிகளினாலும் நமக்குக் கிடைத்து விடுவதில்லை. இந்த சந்தோஷம் ஒரு கனியுள்ள கிறிஸ்தவ வாழ்க்கையின் அடையாளம். அது ஆவியின் கனி மட்டுமல்ல; அவர் தரும் ஈவு. சந்தோஷம் என்பதற்கான கிரேக்க மூல வார்த்தை  ’chara’ என்பது அந்த மொழியில் கிருபை என்னும் வார்த்தைக்கான ’charis’ என்னும் வார்த்தையை ஒட்டியே வருகிறது.

நிறைவான சந்தோஷம்: ’என்னுடைய சந்தோஷம் உங்களில் நிலைத்திருக்கும்படிக்கும், உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படிக்கும், இவைகளை உங்களுக்குச் சொன்னேன்’ என்றார் இயேசு.(யோவான் 15:,11). ’உம்முடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தமும், உம்முடைய வலது பாரிசத்தில் நித்திய பேரின்பமும் உண்டு (சங். 16:11). தேவனை நாம் கண்களினால் காணாமலிருந்தும் அவரிடத்தில் அன்பு கூர்ந்து, அவரை முழுமையாய் நம்பி விசுவாசித்து நமது விசுவாச வாழ்க்கையை நடத்தும் போது, சொல்லிமுடியாததும் மகிமையால் நிறைந்ததுமாயிருக்கிற சந்தோஷமுள்ளவர்களாய்க் களிகூர்ந்து, இறுதியில் விசுவாசத்தின் பலனாகிய ஆத்துமரட்சிப்பை அடைகிறோம் (1 பேதுரு 1:8,9)

நிலையான சந்தோஷம்: ஆவியின் கனியாகிய சந்தோஷம் அவ்வப்போது சூழ்நிலைகளைப் பொறுத்து வந்து செல்லும் சந்தோஷமல்ல; அது நிலையான சந்தோஷம். வெளிப்புற சூழ்நிலைகள் என்னவாயிருந்தாலும் ஆவியினாவருடைய ஆளுகைக்குள் இருக்கும் ஒருவனுடைய இருதயத்தில் உள்ளான சந்தோஷம் அது எப்போதும் நிலைத்திருக்கும். ’உங்கள் சந்தோஷத்தை ஒருவனும் உங்களிடத்திலிருந்து எடுத்துப்போடமாட்டான்’ என்றார் இயேசு. (யோவான் 16:22). கர்த்தருக்குள் சந்தோஷமாயிருங்கள் என பவுல் சொல்லும் போது எல்லா காலநேரத்திலும் (time duration) சந்தோஷமாயிருப்பதைக் காட்டிலும் எல்லா சூழ்நிலைகளிலும் (all situations) சந்தோஷமாயிருப்பதையே குறிப்பிடுகிறார் (பிலி. 4:4,6).

நமது ஆவிக்குரிய வாழ்க்கையில் இரட்சிப்பு அனுபவத்தின் போதும் (லூக்கா 19:6), ஞானஸ்நானம் பெறும் போதும் (அப். 8:39) தொலைந்து போன ஆட்டினை (ஆத்துமாவினை) தேடிக் கண்டு பிடித்து மந்தையில் சேர்க்கும் போதும் (லூக்கா 15:6) சந்தோஷம் பொங்குவது இயல்பு தான். அதே சந்தோஷம் எல்லா சூழ்நிலைகளிலும் தொடர வேண்டும். நாம் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது, நம் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணவேண்டும் (யாக்கோபு 1:2,3). கிறிஸ்துவின் மகிமை வெளிப்படும்போது நாம் களிகூர்ந்து மகிழும்படியாக, அவருடைய பாடுகளுக்கு பங்காளிகளானதால் சந்தோஷப்பட வேண்டும் (1 பேதுரு 4:13). அவருடைய நாமத்துக்காக அவமானமடைவதற்கு நேர்ந்தாலும் சந்தோஷமாய் நமது கடமைகளை தொடர்ந்து செய்ய வேண்டும் (அப். 5:41). இப்படியாக, எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள் (1 தெச. 5:16) என பவுல் நமக்கு கூறுவது வெறும் வாழ்த்து மட்டுமல்ல; அது தேவ ஆலோசனை.

எல்லா சூழ்நிலையிலும் இந்த சந்தோஷத்தை அனுபவிக்க நாம் செய்ய வேண்டியதென்ன? வேதத்தை வாசித்து தியானித்து கடைபிடிக்க வேண்டும்; ஜெபிக்க வேண்டும். இதற்கு ஆதாரமான சில வசனங்கள் இதோ. கர்த்தருடைய நியாயங்கள் (வார்த்தைகள்) செம்மையும், இருதயத்தைச் சந்தோஷிப்பிக்கிறதுமாயிருக்கிறது (சங்.19:8). உம்முடைய வார்த்தைகள் கிடைத்தவுடனே அவைகளை உட்கொண்டேன்; உம்முடைய வார்த்தைகள் எனக்குச் சந்தோஷமும், என் இருதயத்துக்கு மகிழ்ச்சியுமாயிருந்தது (எரேமியா 15:16). இதுவரைக்கும் நீங்கள் என் நாமத்தினாலே ஒன்றும் கேட்கவில்லை; கேளுங்கள், அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக்கொள்வீர்கள் (யோவான் 16:24).

இவ்வுலக வாழ்க்கையில் அல்ல, இவ்வுலக வாழ்க்கை ஓட்டத்தையே சந்தோசத்துடன் ஓடி முடிக்க வேண்டுமென்பது தான் பவுலின் விருப்பமாக இருந்தது (அப். 20:24). அவ்விதமே அவர் திருப்தியுடன் முடித்தும் காட்டினார் (2 தீமோ. 4:17). நம்முடைய சந்தோஷமும் இம்மைக்குரிய காரியங்களைக் குறித்தாக இருக்காமல், மறுமைக்குரிய காரியங்களைக் குறித்தாதாக இருக்க வேண்டும். கிறிஸ்தவ ஊழிய ஈடுபாடுகளினால் அதின் பலன்களினால் வரும் சந்தோசத்தைக் காட்டிலும் நமது நித்திய வாழ்க்கையை உறுதிப்படுத்துவதே நமக்கு சந்தோஷம் தருவதாக இருக்க வேண்டும். இயேசு ஒருமுறை சீடர்களைப் பார்த்து, ‘ஆவிகள் உங்களுக்குக் கீழ்ப்படிகிறதற்காக நீங்கள் சந்தோஷப்படாமல், உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள்’ என்றார் (லூக்கா 18:20).

சிறைச்சாலையில் நடுராத்திரியிலே பவுலும் சீலாவும் ஜெபம்பண்ணி, தேவனைத் துதித்துப் பாடினது அவர்களுக்கு ஆறுதலையும் விடுதலையும் கொடுத்தது மட்டுமல்ல, சிறைச்சாலைக் காவலனுக்கும் அவனது வீட்டாருக்கும் இரட்சிப்பினால் ஏற்படும் மனமகிழ்ச்சியைக் கொடுத்தது (அப். 16:25,34). அதற்கு அடிப்படைக் காரணம் எல்லா சூழ்நிலைகளிலும் பவுல் மற்றும் சீலாவிடம் நிலைத்திருந்த உள்ளான சந்தோஷம் தான். பரிசுத்த ஆவியானவரால் தொடர்ந்து நிரப்பப்பட்டுக் கொண்டிருக்கும் போது இவ்வித சந்தோஷம் சாத்தியமாகிறது. இதற்கு இயேசுகிறிஸ்துவும் (லூக்கா 10:21) முதல் நூற்றாண்டு சீஷர்களும் (அப்.13:52) சாட்சி. இந்த நூற்றாண்டிலும் இந்த சந்தோஷத்திற்கு சாட்சி பகர நாம் ஆயத்தமா?
[இது பாலைவனச் சத்தம்ஜனவரி 2017 இதழில் வெளியான எனது கட்டுரை]

Tuesday, December 27, 2016

ஆவியின் கனி - அன்பு

கனியுள்ள கிறிஸ்தவ வாழ்க்கையின் அவசியம் குறித்து கடந்த இதழில் கண்டோம். ஆவியின் கனியின் ஒன்பது அம்சங்களையும் முறையாக நமது கிறிஸ்தவ வாழ்க்கையில் வெளிப்படுத்த வேண்டியது ஆவியானவரால் நடத்தப்படும் விசுவாசிகளின் கடமை. எந்தவொரு மரத்தின் வளர்ச்சி மற்றும் முதிர்ச்சியின் வெளிப்பாடே அதன் கனி என நாம் அறிவோம். வளர்ச்சி என்ற ஒரு நிலையை அது தொடர்ச்சியாக அடையும் போது கனி என்பது அதில் தானாக வருகிற ஒன்று. கனி ஒன்றை வரவழைத்து அதன் வளர்ச்சி மற்றும் முதிர்ச்சியை நிரூபிக்க வேண்டிய அவசியம் எந்த மரத்திற்கும் இல்லை. அதுபோலவே ஆவிக்குரிய கனியும் ஆவியினால் நடத்தப்படும் அவரது பிள்ளைகளின் வாழ்க்கையில் தானாக வெளிப்பட வேண்டிய ஒன்று. நமது பக்தியினாலோ சக்தியினாலோ நாம் முயன்று வெளிப்படுத்த வேண்டிய ஒன்று அல்ல.

இருப்பினும் நமது கிறிஸ்தவ வாழ்க்கையில் ஆவியின் கனி வெளிப்பட, நாம் செய்ய வேண்டிய கடமைகளும் உண்டு. அது யாதெனில், தேவனுடைய ஆவியினால் நடத்தப்பட நம்மை முழுமையாக ஒப்புக் கொடுப்பது ஒன்றேயாகும். நாம் ஆவியினாலே பிழைத்திருந்தால், ஆவிக்கேற்றபடி நடக்கவும் கடவோம் (கலா. 5: 20). ஆவியின் கனியில் அன்பு என்னும் அம்சத்தை நம் வாழ்வில் வெளிப்படுத்துவது குறித்து இந்த இதழில் காண்போம்.

அன்பு என்ற வார்த்தைக்கு ஆங்கிலத்தில் Love என்ற ஒரே ஒரு வார்த்தை இருப்பினும் அது பல்வேறு நிலைகளில் பல்வேறு விதமான காரியங்களைக் குறிக்கும்.   கிரேக்க மொழியில் அது ”அகாப்பே” (தியாகமான தெய்வீக அன்பு), ”பிலியோ” (சகோதர அன்பு), ”ஈராஸ்” (இருபாலருக்கிடையிலான காதல்) மற்றும் ”ஸ்டோர்ஜ்” (பெற்றோர் பிள்ளைகள் பாசம்) என்று அன்பினை நான்கு விதமாக குறிக்கிறது. எந்த நிலையிலும் மாறாத, உச்சநிலை அன்பு என்பது தேவன் நம்மீது பொழிந்த அகாப்பே அன்பாக இருப்பதால் வேதாகமம் அதைப் பற்றியே அதிகமாக போதிக்கிறது. மேலும், அகாப்பே அன்பை அனுபவிக்கும் ஒவ்வொருவரும் பிலியோ என்னும் சகோதர அன்பை மற்றவர்களிடம் வெளிக்காட்ட வேண்டும் எனவும் வலியுறுத்துகிறது. இடைப்பட்ட நிலையில் உள்ள இரண்டுவகை அன்பு உட்பட அனைத்து வகையான அன்பையும் ஆவியின் கனியாகிய அன்பு என்ற அம்சத்தில் புரிந்து கொண்டு அவைகளை நாம் முறையாக செயல்படுத்த முடியும்.

பழைய ஏற்பாட்டுக் காலத்தில் கொடுக்கப்பட்ட பத்துக் கட்டளைகளில் 4 தேவனுடனும் 6 சக மனிதனுடனும் நமக்கு இருக்க வேண்டிய காரியங்களைக் கண்கூடாக காண்கிறோம் (யாத். 20:1-17). அவைகளையே சுருக்கமாக இரண்டு கற்பனைகளாக இயேசுகிறிஸ்து கூறும்போது 1 தேவனுடனும் 1 மனிதனுடனும் இருக்கவேண்டிய காரியமாக கூறுகிறார். ”உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக; இது முதலாம் பிரதான கற்பனை. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே” (மத். 22:37-39, மாற்கு 12:30,31).  இவற்றில், அன்புகூருவது என்பது தான் மையமாக இருக்கிறது.
இதையே புதிய ஏற்பாட்டுக் காலத்தில் பவுல் ஒருபடி மேலே போய், ”உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக, என்கிற இந்த ஒரே வார்த்தையிலே நியாயப்பிரமாணம் முழுவதும் நிறைவேறும்” என்கிறார் (ரோமர் 13:9, கலா 5:14). உலகப்பிரகாரமான மனிதர்களெல்லாம் பிறர்மீது சகோதர அன்பை (Brotherly Love) ஒரு மனிதாபிமான அன்பாக (Humanitarian Love) மட்டுமே வெளிப்படுத்துகிறார்கள். ஆனால், கிறிஸ்துவில் அன்புகூருகிறவர்கள் அதை ஒரு கட்டாயத்தின் பேரில் கடமைக்கான காரியமாக எடுத்துக் கொள்ளாமல், பரிசுத்த ஆவியினாலே நம் இருதயங்களில் ஊற்றப்பட்ட அன்பினை (ரோமர் 5:5) நாம் மற்றவர்களிடம் தாராளமாக வெளிப்படுத்த வேண்டும். அப்போது தான் அது ஆவியின் கனியாகிய அன்பாக வெளிப்படும். இல்லையெனில் அது வெறும் மனிதாபிமான அன்பு தான்.
மற்றவர்களிடத்தில் வெளிப்படுத்தபட வேண்டிய அன்பின் அளவுகோல் நாம் முதலில் நம்மில் எவ்வளவு அன்பு கூருகிறோமோ அந்த அளவு தான். அதே அளவுக்கு பிறனிடத்திலும் அன்புகூர வேண்டும். தன் சொந்த மாம்சத்தைப் பகைத்தவன் ஒருவனுமில்லையே (எபே. 5:29). இந்த கண்ணோட்டத்தில் இன்னுமொரு காரியத்தையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். உலகத்தாரைக் காட்டிலும் தேவனுடைய ஆவியினால் நடத்தப்படுகிறவர்கள் இன்னும் சற்று அதிகமாய் பிறனிடத்தில் அன்பு செலுத்த வேண்டும். ஏனெனில், அன்பின் இலக்கணமே தேவன் தான். ”அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்; நாமும் சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்” (I யோவான் 3:16). மட்டுமல்ல, 1 கொரிந்தியர் 13ல் கூறப்பட்டுள்ள அன்பின் வரையறைகளுக்கு ஏற்ற எடுத்துக்காட்டாக தேவனுடைய அகாப்பே அன்பு விளங்குவதால் அதனை அனுபவித்த நாம் ஒவ்வொருவரும் அதை நம் வாழ்வில் பிரதிபலிக்க வேண்டும்.
”இவள் செய்த அநேக பாவங்கள் மன்னிக்கப்பட்டது; இவள் மிகவும் அன்புகூர்ந்தாளே. எவனுக்குக் கொஞ்சம் மன்னிக்கப்படுகிறதோ, அவன் கொஞ்சமாய் அன்பு கூருவான்” என்று இயேசு கிறிஸ்து ஒரு சூழ்நிலையில் கூறினார் (லூக்கா 7:47). நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டதெல்லாம் அவருடைய அநாதி அன்பு மற்றும் நம்மீது பாராட்டின அவரது கிருபை. ”அவர் முந்தி நம்மிடத்தில் அன்புகூர்ந்தபடியால் நாமும் அவரிடத்தில் அன்புகூருகிறோம். … … தேவனிடத்தில் அன்புகூருகிறவன் தன் சகோதரனிடத்திலும் அன்புகூர வேண்டுமென்கிற இந்தக் கற்பனையை அவராலே பெற்றிருக்கிறோம்” (I யோவான் 4:19, 21).


நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள் என்றார் இயேசுகிறிஸ்து (யோவான் 13:35). எனவே அன்பு என்பது நம் கிறிஸ்தவ வாழ்க்கையின் அடையாளம். அந்த அன்பின் வெளிப்பாடாக பிறருக்கு நன்மை செய்வதிலே நாம் சோர்ந்து போகாமலிருக்க வேண்டும் (II தெச. 3:13). இதன் மூலம் அன்பு என்னும் பண்பினை நடைமுறைப்படுத்துவதில் உலகத்தாருக்கும் ஆவிக்குரியவர்களுக்கும் உள்ள பெரிய வித்தியாசத்தை உலகம் புரிந்து கொண்டு, அது தேவன் பக்கமாய் திரும்பிட, நாம் உறுதி கொள்ள வேண்டும். அதற்காக ஆவியானவராலே பிழைத்திருந்து, ஆவிக்கேற்றபடி நடக்க நம்மை நாமே அர்ப்பணிப்போமாக. ஆமென்.  

 [இது பாலைவனச் சத்தம் - டிசம்பர் 2016 இதழில் வெளியான எனது கட்டுரை]

Wednesday, November 23, 2016

கனியுள்ள கிறிஸ்தவ வாழ்க்கை

கனியுள்ள கிறிஸ்தவ வாழ்க்கை என்ற சொற்றொடரை விசுவாசிகள் நம்மில் பலரும் பரவலாக கேட்டிருக்கக் கூடும். மரம் செடி கொடிகளின் வாழ்க்கை சுழற்சியில், கனி கொடுப்பது என்பது அவற்றின் முக்கியமான  கட்டம். கனிகொடுப்பதில் தான் அவற்றின் பயன்பாடு பூரணமடைகிறது. அது மட்டுமல்லாமல், அடுத்த தலைமுறை உருவாகி வளரவும், பெரும்பாலான சூழ்நிலையில் இவற்றின் கனி சார்ந்த விதைகள் தான்  காரணமாக அமைகின்றன. எனவே அவற்றிற்கு கனி கொடுத்தல் என்பது அவசியமான ஒன்று. அதுபோலவே, நாமும் நமது கிறிஸ்தவ வாழ்க்கையில் கனி கொடுக்க எதிர்பார்க்கப் படுகிறோம்.

யோவான் சுவிசேஷம் 15ம் அதிகாரத்தில், தம்மில் நிலைத்திருப்பது குறித்து இயேசுகிறிஸ்து தன் சீடர்களுக்கு விளக்கும்போது பின்வருவனவற்றை தெளிவாகக் கூறுகிறார்: ”நான் மெய்யான திராட்சச்செடி, என் பிதா திராட்சத் தோட்டக்காரர் (வச.1); நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள் (வச. 5a). என்னில் கனிகொடாதிருக்கிற கொடி எதுவோ அதை அவர் அறுத்துப்போடுகிறார்; கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம்பண்ணுகிறார் (வச. 2); ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான் (வச. 5b); நீங்கள் மிகுந்த கனிகளைக் கொடுப்பதினால் என் பிதா மகிமைப்படுவார், எனக்கும் சீஷராயிருப்பீர்கள் (வச. 8); நீங்கள் போய்க் கனிகொடுக்கும்படிக்கும், உங்கள் கனி நிலைத்திருக்கும்படிக்கும், நான் உங்களை ஏற்படுத்தினேன் (வச. 16)”. இவற்றின் மூலம் நமது கிறிஸ்தவ வாழ்க்கையில் கனிகொடுப்பதின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்கிறோம்

பொதுவாகவே மரமென்றால் கனி கொடுக்கத்தான் செய்யும். ஆனால் அது நல்ல கனியால் அல்லது கெட்ட கனியா என்பது தான் காரியம் என்றார் இயேசுகிறிஸ்து (மத். 12:33). நீதிமானுடைய பலன் ஜீவவிருட்சம் (நீதி. 11:30). அப்படியானால், நாம் எவ்வகையான கனியைக் கொடுக்க வேண்டும்?. கலாத்தியர் 5:22-23ன் படி, ’ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம்,சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை’. ஆவியின் கனி என்பது ஒருமையில் குறிப்பதாக இருப்பினும் அதில் 9 வகையான காரியங்கள் குறிப்பிடப்படுகிறது. இது சுவைகளை ஆறு வகைப்படுத்துவது போல, ஆவிக்குரிய கனியையும் ஒன்பது அம்சங்களில் வர்ணிக்கிறது. மேலும், ஆவியின் கனி, சகல நற்குணத்திலும் நீதியிலும் உண்மையிலும் விளங்கும் (எபே. 5:9) என்ற வசனத்தில் ஆவியின் கனியின் பல அம்சங்களும்சகல நற்குணத்தில்எனற ஒரே வார்த்தையில் அடக்கமாகிறது.

ஆவியின் கனியை தெளிவாக புரிந்து கொள்ள, நமக்கு ஒப்புமைக்காகத் தான் மாம்சத்தின் கிரியைகள் என  கலாத்தியர் 5:19-21 வரை கொடுக்கப்படுள்ளன. மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன, அவையாவன: விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம்விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள், பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே. கிறிஸ்துவை அறியாதவர்கள் வாழ்க்கையில் மேற்கண்ட காரியங்கள் ஒன்று முதல் அனைத்துமே காணப்படக் கூடும். ஆனால், கிறிஸ்தவனுடைய வாழ்க்கையில் இவைகள் இருக்கலாகாது. இது சாத்தியமான ஒன்று.

எப்படியெனில்ஆவியின் கனி என்பது பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னத்தினால் ஒரு கிறிஸ்தவனுடைய வாழ்க்கையில் வெளிப்படையாக ஏற்படும் பலன். இயேசுகிறிஸ்துவை இரட்சகராக ஒருவன் ஏற்றுக்கொள்ளும் போதே பரிசுத்த ஆவியானவர் அவனுடைய உள்ளத்தில் வந்துவிட்டாலும், அவருடைய தொடர்ச்சியான ஆளுகையின் விளைவாக அவனுடைய வாழ்க்கையில் தொடர் மாற்றங்கள் ஏற்படுகின்றன. தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும்பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார் (ரோமர் 8:29.) இவ்விதம் நம்மை கிறிஸ்துவின் சாயலில் உருவாக்குவதே பரிசுத்த ஆவியானவரின் பணி. இந்த ஆவியானவரின் ஆளுகைக்கு நம்மை அர்ப்பணிக்கும்போது நம்மில் ஆவியின் கனி வெளிப்படும்.

அதற்கு நாம் செய்ய வேண்டியவை என்ன? நமது கிறிஸ்தவ வாழ்க்கையில் நம் மாம்ச சிந்தைக்கும் ஆவிக்குரிய சிந்தைக்கும் நிரந்தர போராட்டம் உண்டு. மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும், ஆவி மாம்சத்துக்கு விரோதமாகவும் இச்சிக்கிறது; நீங்கள் செய்யவேண்டுமென்றிருக்கிறவைகளைச் செய்யாதபடிக்கு, இவைகள் ஒன்றுக்கொன்று விரோதமாயிருக்கிறது (கலா. 5:17). ஆனால், ஆவிக்கேற்றபடி நடந்துகொள்ளுங்கள், அப்பொழுது மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள் (கலா 5:16). மரணத்துக்கேதுவான பாவத்துக்கானாலும், நீதிக்கேதுவான கீழ்ப்படிதலுக்கானாலும், எதற்குக் கீழ்ப்படியும்படி உங்களை அடிமைகளாக ஒப்புக்கொடுக்கிறீர்களோ, அதற்கே கீழ்ப்படிகிற அடிமைகளாயிருக்கிறீர்களென்று அறியீர்களா? (ரோமர் 6:16) என்கிறார் பவுல். ஒன்றை நாடி மற்றொன்றை அடைய வேண்டுமென்றால் ஒன்றை விட்டு விலகியோடித் தான் ஆக வேண்டும் என்பது தீமோத்தேயுவுக்கு பவுலின் ஆலோசனை (I தீமோ.6:11; II தீமோ. 2:22).

நம் வாழ்க்கையில் வெளிப்படும் கனி எந்த வகையானது என்பது நம் இருதயம் எதினால் நிறைந்திருக்கிறது என்பதைப் பொறுத்தது. இருதயத்தின் நிறைவை வாய் பேசும் (மத். 12:34). இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும், கொலைபாதகங்களும், விபசாரங்களும், வேசித்தனங்களும், களவுகளும், பொய்ச்சாட்சிகளும், தூஷணங்களும் புறப்பட்டுவரும் என்றார் இயேசுகிறிஸ்து (மத். 15:19). தினமும் வேதத்தை வாசித்து தியானித்து, தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, நமது மனம் தினமும் புதிதாக வேண்டும் (ரோமர் 12:2).  இவ்விதம்  கனி தரும் கிறிஸ்தவ வாழ்க்கையில் நமது தீர்மானமும் செயல்பாடும் முக்கிய பங்கை வகிக்கின்றன. எனவே, அவ்விதம் நல்ல தீர்மானங்களை எடுத்து செயல்படுத்துவோம்; கனியுள்ள வாழ்க்கை வாழ்வோம். தேவன் தாமே நம்மை அதற்கு பெலப்படுத்துவாராக.

 [இது பாலைவனச் சத்தம் - நவம்பர் 2016 இதழில் வெளியான எனது கட்டுரை]