Showing posts with label புத்தாண்டுச் செய்தி. Show all posts
Showing posts with label புத்தாண்டுச் செய்தி. Show all posts

Monday, January 09, 2017

எல்லாவற்றையும் செய்ய எனக்குப் பெலனுண்டு


"என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே
எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டுபிலி. 4:13

நண்பர்கள் அனைவருக்கும் எனது அன்பான இனிய புத்தாண்டு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். இந்த வருடம் உங்கள் வாழ்வில் ஒரு ஆசீர்வாதமான மற்றும் சமாதானமான வருடமாக இருந்திட மனதார வாழ்த்துகிறேன். நம்மில் பலரும் இன்று புதுவருட ஆராதனைகளில் கலந்து கொண்டு இந்த வருடத்திற்கான வாக்குத்தத்த வசனங்களை இன்று முதல் உரிமைகோர தொடங்கியிருப்போம். அது அப்படியே நடக்கட்டும். ஏனெனில், ’தேவனுடைய வாக்குத்தத்தங்களெல்லாம் இயேசுகிறிஸ்துவுக்குள் ஆம் என்றும், அவருக்குள் ஆமென் என்றும் இருக்கிறதே’ (2 கொரி. 1:20).

அவ்விதமே, இந்த வருடத்தில் செய்ய வேண்டிய அல்லது செய்ய வேண்டாத காரியங்கள் குறித்தும் நம்மில் பலரும் திட்டமிடுவதுண்டு. அவ்வித தீர்மானங்கள் நிச்சயம் வருட இறுதியில் திரும்பிப் பார்க்கும் போது, ஒருவேளை நாம் அவைகளை முழுமையாக நிறைவேற்றாவிட்டாலும், அது ஒரு இலக்கினை நோக்கிப் பயணிக்க நமக்கு உதவியிருப்பதை நாம் நிச்சயம் அறிந்து கொள்வோம். நாம் எடுத்திருக்கும் தீர்மானங்கள் அனைத்தையும் நாம் நிறைவேற்ற வேண்டும் என்றே நாம் விரும்புகிறோம். அதற்கு நமது சொந்த பக்தியோ சக்தியோ மட்டும் போதாது. தேவனுடைய கிருபையும் பெலனும் அவசியமாகிறது. ’என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டுபிலி. 4:13) என்ற பவுலின் வார்த்தைகளை நாமும் இந்த புத்தாண்டு வாக்காக உரிமை கொண்டாடி, இந்த வருடத்தில் செய்யவேண்டுமென எடுத்த தீர்மானங்களை நிறைவேற்றிட உற்சாகம் அடைவோம்.

பெலப்படுத்துகிற கிறிஸ்து:

தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்என பிலிப்பியர் 2:13 ல் வாசிக்கிறோம். எனவே இந்த புத்தாண்டு தினத்தில் நல்ல தீர்மானங்களை நாம் எடுக்க நமக்கு உதவி செய்தவர் தேவன். நாம் அவைகளை நிறைவேற்றிடவும் அவர் நம்மை பெலப்படுத்துவார். ’என்னைப் பலப்படுத்துகிற நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்னை உண்மையுள்ளவனென்றெண்ணி, இந்த ஊழியத்திற்கு ஏற்படுத்தினபடியால், அவரை ஸ்தோத்திரிக்கிறேன் (I தீமோ. 1:12) என்கிறார் பவுல். கர்த்தராகிய அநாதி தேவன் 'சோர்ந்துபோகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார்' (ஏசாயா. 40:29). எனவே நமது தீர்மானங்களை நிறைவேற்றி முடித்திட, தனியாக நான் மட்டுமல்ல என்னுடன் தேவனும் இருக்கிறார் என்ற தைரியத்துடன் நாம் செயல்படலாம்.

எல்லாவற்றையும் செய்ய:

இந்த வருடத்தில் நான் இதைச் செய்துவிட வேண்டும், அதைச் செய்துவிட வேண்டும் என நாம் கண்டதற்கும் ஆசைப்படுகிறோம். நமது தகுதிக்கும் வாய்ப்புகளுக்கும் பொருத்துமானவைகளையே நாம் ஆசைப்பட வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக நாம் தீர்மானிப்பது தேவனுடைய சித்தத்திற்கு உட்பட்டதா என்பதையும் சோதித்தறிய வேண்டும். 'நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படிகேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம்' (I யோவான் 5:14).

தேவனிடத்தில் பெரிய காரியங்களை எதிர்பார்; தேவனுக்காய் பெரிய காரியங்களை முயற்சி செய்என்பது வில்லியம் கேரி அவர்களின் கூற்று. ஆம், நாம் இந்த வருடத்தில் முயற்சிக்க தீர்மானிக்கும் காரியங்கள் அவருடைய விருப்பத்தின் படியும் அவருக்கு மகிமையைக் கொண்டுவருவதாகவும் இருக்கிறதா என சோதித்தறிந்து, அந்த தீர்மானங்களில் முன்னேறுவோம்.

எனக்கு பெலனுண்டு:

எனக்கு பெலனுண்டு என நாம் சொல்லிக் கொள்வது வெறும் விசுவாச அறிக்கையாக மட்டுமல்ல, அது செயலிலும் வெளிப்பட வேண்டும். முதலில் முயற்சிக்க வேண்டும். அதாவது, விசுவாசத்தில் நாம் முதல் படியை எடுத்து வைத்து நமது தீர்மானங்களை நிறைவேற்ற முயலவேண்டும். ஏனெனில் முயற்சி என்னும் முதல்படி தான் மேற்படிகளுக்கு நம்மை நடத்திச் செல்லும் முதற்செயல். குணசாலியான ஸ்திரிதன்னைப் பெலத்தால் இடைக்கட்டிக்கொண்டு, தன் கைகளைப் பலப்படுத்துகிறாள்என நீதிமொழிகள் 31:17 ல் வாசிக்கிறோம். நம்மில் உள்ள பெலன் நமது கைகளின் கிரியைகளில் வெளிப்பட வேண்டும்.

வெறும் நல்ல தீர்மானங்களை மட்டும் கொண்டிருந்து கைகளினால் அவைகளை நிறைவேற்ற முயற்சி செய்யாதிருப்போமானால், அந்த நல்ல தீர்மானங்களே நம்மை சலிப்படையச் செய்யும் (Ref. நீதி. 21:25). குற்ற உணர்வு, தாழ்வு மனப்பான்மை, (கை)விட்டுவிடுதல் போன்ற காரியங்கள் விரைவில் நம்மை வந்தடையும். கிரியையில்லாத விசுவாசம் செத்ததாயிருக்கிறது போல, கிரியையில்லாத தீர்மானங்களும் செத்தவைகளே. அவைகளினால் எந்த பிரயோஜனமும் இல்லை. தீர்மானங்களை தொடர்ந்து நிறைவேற்றும் போது தடைகள் ஏமாற்றங்கள் சோர்வுகள் குறுக்கே வரும். இருப்பினும் அவற்றில் பொறுமையுடன் ஓடிட, என்னை பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய எனக்குப் பெலனுண்டுஎன்ற விசுவாச அறிக்கை நமக்கு பெரிதும் உதவும்.

நாட்கள் செல்லச் செல்ல, நமது தீர்மானங்களில் தொய்வு காணப்பட்டால், ’நீதிமான் ஏழுதரம் விழுந்தாலும் திரும்பவும் எழுந்திருப்பான், (நீதி. 24:16) என்ற வசனத்தின்படி நாம் உற்சாகமடைய வேண்டும். ஏனெனில் நம்மை பெலப்படுத்துகிறவர் கிறிஸ்து. தினமும் அவரது பெலனுக்காக நாம் அவரது சமூகத்தில் காத்துநிற்க வேண்டியது அவசியமாகிறது. ஏனெனில், ’இளைஞர் இளைப்படைந்து சோர்ந்துபோவார்கள், வாலிபரும் இடறிவிழுவார்கள். கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலனடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்’ (ஏசாயா 40:30,31).

எனவே இந்த வருடத்திலாவது நமது தீர்மானங்கள் முழுமையாக நிறைவே(ற்)றிட, நம்மை பெலப்படுத்தும் கிறிஸ்துவின் பாதத்தில் தினமும் அர்ப்பணித்து செயல்படுவோம்; அவ்விதம் செயல்பட்டால், வருட இறுதியில் திரும்பிப் பார்க்கும்போது அதற்குரிய பலனை அடைந்திருப்போம்.

தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார். [பிலிப்பியர் 2:13]

Saturday, January 02, 2016

2016 புத்தாண்டுச் செய்தி

“அவன் செய்வதெல்லாம் வாய்க்கும் - சங். 1:3b”

[வேதபகுதி சங்கீதம் 1: 1-3]

இந்த 2016ம் ஆண்டில் நாம் செய்வதெல்லாம் வாய்க்க வேண்டுமா? கீழ்க்கண்ட தகுதிகள் இருக்கவேண்டும்.

இவை இருக்கக் கூடாது (வச 1):

1) துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடக்கக்கூடாது
2) பாவிகளுடைய வழியில் நிற்கக் கூடாது
3) பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காரக்கூடாது

துன்மார்க்கர் --> பாவிகள் --> பரியாசக்காரர் - தவறான நபர்களின்
நடத்தல் --> நிற்றல் --> உட்காருதல் - தவறான ஐக்கியத்தில் படிப்படியாக முன்னேறுதல்

இவை இருக்க வேண்டும் (வச 2,3):

1) கத்தருடைய வேதத்தில் பிரியம்
2) இரவும் பகலும் வேதத்தில் தியானம்
3) தன்காலத்தில் தன்கனியைக் கொடுத்தல்

இந்த வருடத்தில் செய்வதெல்லாம் வாய்க்க நான் என்ன செய்ய வேண்டும்?

1) தினமும் ஜெபிக்க வேண்டும் - அவருடைய சித்தத்தின்படி.

நீங்கள் விண்ணப்பம் பண்ணாமலிருக்கிறதினாலே, உங்களுக்குச் சித்திக்கிறதில்லை (யாக்கோபு 4:2).

நீங்கள் விண்ணப்பம்பண்ணியும், உங்கள் இச்சைகளை நிறைவேற்றும்படி செலவழிக்கவேண்டுமென்று தகாதவிதமாய் விண்ணப்பம்பண்ணுகிறபடியினால், பெற்றுக்கொள்ளாமலிருக்கிறீர்கள் (யாக்கோபு 4:3).

2) தினமும் தேவனைத் தேட / நாட வேண்டும்

அவன் (உசியா) கர்த்தரைத் தேடின நாட்களில் தேவன் அவன் காரியங்களை வாய்க்கச் செய்தார் (2 நாளாகமம் 26: 5b).

மேய்ப்பர்கள் மிருககுணமுள்ளவர்களாகி, கர்த்தரைத் தேடாமற்போனார்கள்; ஆகையால், அவர்கள் காரியம் வாய்க்காமற்போய், அவர்கள் மந்தையெல்லாம் சிதறடிக்கப்பட்டது (எரேமியா 10:21).

3) தினமும் அவரது வார்த்தைகளைக் கைக்கொள்ள வேண்டும்

இப்பொழுதும் நீங்கள் செய்வதெல்லாம் உங்களுக்கு வாய்க்கும்படிக்கு, இந்த உடன்படிக்கையின் வார்த்தைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்வீர்களாக (உபாகமம் 29:9).

அவன் (உசியா) தன் தகப்பனாகிய அமத்சியா செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்து, தேவனுடைய தரிசனங்களில் புத்திமானாயிருந்த சகரியாவின் நாட்களிலே தேவனைத் தேட மனதிணங்கியிருந்தான் (2 நாளாகமம் 26:4,5).

மோசே அவர்களை நோக்கி: நீங்கள் இப்படி கர்த்தரின் கட்டளையை மீறுகிறதென்ன? அது உங்களுக்கு வாய்க்காது (எண்ணாகமம் 14:41).

இந்த நிபந்தனைகளைத் தினமும் நிறைவேற்றி இந்த 2016 ஆண்டு முழுவதும் உங்கள் காரியங்கள் எல்லாம் வாய்க்க வாழ்த்துக்கள்.

.

Saturday, January 01, 2011

பு(ப)த்தாண்டு வாக்குத்தத்தம்

மூன்றாம் மில்லேனியத்தின் முதல் பத்தாண்டுகளை முடித்து 2011 என்றதொரு புத்தாண்டுடன் இரண்டாம் பத்தாண்டுகளுக்குள் நுழைகிறோம். புத்தாண்டு தினங்கள்தோறும் எப்படியாகிலும் தப்பாமல் அநேக வாக்குத்தத்த வசனங்கள் நம்மை வந்தடைகின்றன. நாம் அவை அவ்வண்ணமே பலித்திட வேண்டுமென விரும்பி ஜெபித்து வருவதுமுண்டு. ஆனால் அவை அப்படியே அனுபவமாகியதாக ஆண்டு இறுதியில் சாட்சி பகருவோர் வெகுசிலரே. காரணம் பலவிதம். அவற்றுள் பின்னணியிலுள்ள நிபந்தனைகளை கண்டுகொள்லாமல் விட்டுவிடுவது முக்கியமானதொரு காரணம்.

ஆசீர்வாதங்களை அருளும் ஆண்டவர் எப்பொழுதுமே பின்னணியில் மறைமுகமாக சில நிபந்தனைகளை வைத்திருக்கிறார் என அவரைக் குறித்து நாம் குறைவாக நினைத்துவிட வேண்டியதில்லை. ஏனெனில் வாக்குத்தத்தங்களின் பின்னணியில் கட்டளைகளை வைத்திருக்கும் தேவன் தாமே மோசே மூலம் கொடுத்த பத்துக் கட்டளைகளினூடே வெளிப்படையாக வாக்குத்தத்தங்களையும் வழங்கிட தவறவில்லை (யாத். 20:6,12 ; எபே. 6:3).

இன்று உங்களை நோக்கி வரும் வாக்குத்தத்த வசனமாகிய ஏசாயா 33: 15-16 ன் பின்னணியிலுள்ள நிபந்தனைகளையும் சற்றே நோக்குவோமா? ”V15 நீதியாய் நடந்து, செம்மையானவைகளைப் பேசி, இடுக்கண் செய்வதால் வரும் ஆதாயத்தை வெறுத்து, பரிதானங்களை வாங்காதபடிக்குத் தன் கைகளை உதறி, இரத்தஞ்சிந்துவதற்கான யோசனைகளைக் கேளாதபடிக்குத் தன் செவியை அடைத்து, பொல்லாப்பைக் காணாதபடிக்குத் தன் கண்களை மூடுகிறவனெவனோ, V16 அவன் உயர்ந்த இடங்களில் வாசம்பண்ணுவான்; கன்மலைகளின் அரண்கள் அவனுடைய உயர்ந்த அடைக்கலமாகும்; அவன் அப்பம் அவனுக்குக் கொடுக்கப்படும்; அவன் தண்ணீர் அவனுக்கு நிச்சயமாய்க் கிடைக்கும்.”


நீதியாய் நடந்து – கால்

செம்மையானவைகளைப் பேசி – வாய் / நாவு

இடுக்கண் செய்வதால் வரும் ஆதாயத்தை வெறுத்து – மனம் / மனபான்மை

பரிதானங்களை வாங்காதபடிக்குத் தன் கைகளை உதறி – கை

இரத்தஞ்சிந்துவதற்கான யோசனைகளைக் கேளாதபடிக்கு…செவியை அடைத்து – காது / செவி

பொல்லாப்பைக் காணாதபடிக்குத் தன் கண்களை மூடுகிறவனெவனோ – கண்

உயர்ந்த இடங்களில் வாசம்...உயர்ந்த அடைக்கலமாகும் – பாதுகாப்பு

அப்பம் .... தண்ணீர் அவனுக்கு நிச்சயமாய்க் கிடைக்கும் – அவசியத் தேவைகள்.



நம் வாழ்வின் அன்றாட அவசியத் தேவைகள் குறைவின்றி நிச்சயமாய் சந்திக்கப்பட நம் உடலின் அவயவங்களை அன்றாடமும் ஆண்டவர் பாதத்தில் அர்ப்பணித்து அவர் விரும்பும் விதம் வாழ ஆயத்தமா?

அப்படியெனில், இந்த வாக்குத்தத்தம் இந்த புத்தாண்டுக்கோ அல்லது வரும் பத்தாண்டுக்கோ மட்டுமல்லாமல், இப்பூவுலகில் நாம் வாழும் நாட்கள் மட்டும் நமக்கு உரித்தாகும்!