இப்படியொரு
பதிவை எழுதும் அளவிற்கு நான்
ஒன்றும் பெரிய எழுத்தாளன் அல்ல.
இருப்பினும் இறைவன் இயேசு எனக்கு
அருளிய நற்கொடைகளை மற்றவர்களுக்குப் பகிர்ந்தளிக்கும் உக்கிராணத்துவக் கடமையில் கடந்த 10 வருடங்களாக நான் கடந்து வந்த
பாதையினை, ஏப்ரல் 10, 2007 ல் முதல் பதிவுடன் தொடங்கிய எனது பிளாக் இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவுசெய்வதை முன்னிட்டு, இந்த கட்டுரை வழியாக வாசக நண்பர்களுக்குச் சுட்டிக்காட்டுவதில் உண்மையிலேயே எனக்கு மகிழ்ச்சி தான்.
வசதி வாய்ப்புகள் இல்லாத ஒரு கிராமத்துப்
பின்னணியில் பிறந்து வளர்ந்த எனக்கு
இன்று இருக்கும் வசதி மற்றும் வாய்ப்புக்கள்
இவையெல்லாம் நினைத்துப் பார்த்தாலே மலைக்கும் அளவிற்கு பெரிய வித்தியாசங்கள் உண்டு.
இவையெல்லாம் சிறியவனைப் புழுதியிலிருந்து தூக்கிவிடுகிற, எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிற (சங்கீதம் 113:7) நம் கர்த்தராலே ஆயிற்று.
எனது சிறுவயது கிராமத்துப் பின்னணியில் எங்கள் வீட்டில் தொலைக்காட்சிப்
பெட்டி கூட கிடையாது (எனக்கு
திருமணமாகும் வரையிலும் இல்லை); செய்திதாளும் வாங்கும்
பொருளாதார நிலைமை இல்லை. சிறுவயதில்
தினமும் நான் எங்கள் உறவினரின்
மளிகைக்கடையில் சாமான் வாங்கச் செல்லும்
போது, பெரியவர்கள் அங்கே கூடிநின்று ஒரே
செய்தித்தாளை பங்குவைத்து படித்துக்கொண்டிருப்பது வழக்கம். அந்த பெரியவர்களுக்கிடையில்
நானும் பங்கு போட்டுக் கொண்டு,
என் கையில் கிடைத்த அளவில்
அன்றாடம் செய்திதாளை படித்து விடுவது உண்டு.
சிறுவயதில் எனக்கு இருந்த இந்த
வாசிப்பு ஆர்வத்தை அன்று கிண்டலடித்த பெரியவர்கள்
பலர் எங்கள் கிராமத்தில் உண்டு.
பள்ளி நாட்களில் கலை இலக்கிய நிகழ்வுகளில்
நான் எப்படியாவது கலந்து கொண்டு எனது
கூச்ச சுபாவத்தை களைய வேண்டும் என
எனது இரண்டாவது அண்ணன் எடுத்த முயற்சிகள்
பலவும் தோற்றுப் போய், ஒரே ஒரு
முறை ஐந்தாம் வகுப்பின் போது
பள்ளி ஆண்டுவிழாவின் ஒரு நாடகத்தில் இந்து
பூசாரியாக நடித்தது மட்டும் இன்றும் நினைவிற்கு
வருகிறது.
வாழ்க்கையில்
எப்படியாவது படித்து முன்னுக்கு வரவேண்டும்
என்ற உத்வேகத்தை என் வாழ்க்கை அனுபவங்களிலிருந்து
கற்றுக் கொண்டதாலும், என் பெற்றோர் மற்றும்
உடன்பிறந்தோரின் ஒத்துழைப்பினாலும் கர்த்தரின் அநாதி திட்டம் மற்றும்
கிருபையினாலும் எனது பொறியாளர் கனவையும்
தாண்டி இன்று மருத்துவராக விளங்கிட
முடிந்திருக்கிறது.
மருத்துவக்
கல்லூரிக்குள் நுழைந்தும் எனக்கென்று தனிப்பட்ட திறமை தாலந்துகள் இருப்பதாக
நான் உணரவில்லை. ’தேவன் எவர் ஒருவருக்கும்
எல்லா தாலங்துகளையும் கொடுத்து விடுவதில்லை; எவர் ஒருவருக்கும் ஒரு
தாலந்தையாவது கொடுக்காமலும் இல்லை; அந்த தாலந்து
எது என்பதை கண்டுபிடித்து அவருடைய
நாம மகிமைக்காய் பயன்படுத்த
வேண்டும்’ என்ற உண்மையையும் உணர்வையும்
கல்லூரி நாட்களில் எனக்கு ஆவிக்குரிய வளர்ச்சிக்கு
பெரிதும் உதவிய இந்திய நற்செய்தி
மாணவர் மன்றம் (EU) மூலம் அடைந்து கொண்டேன்.
அவைகளைக் கண்டுபிடித்து
நிறைவேற்றும் பணியில் நடைமுறையிலும் அதே
இயக்கம் தான் எனக்கு உறுதுணையாக
இருந்தது. அவற்றுள் ஒன்று தான் எழுதும்
தாலந்து. அந்த இயக்கத்தின் மாதாந்திரப்
பத்திரிக்கையில் முதன் முதலாக எனது
சவாலான சாட்சியை எழுத அதன் ஊழியர்
திரு. ராஜபாலன் அவர்கள் என்னை ஊக்குவித்தார்.
எனது சாட்சியை ஒரு தாளில் எழுதிக்கொடுத்து,
அதனை இதழில் பதிப்பாகும் அளவிற்கு
திருத்தித் தரும்படி அவரிடம் கொடுத்தால், அவர்
அங்கும் இங்குமாக வார்த்தைகளை வெட்டி, ஒட்டி, குத்திக்குதறி
திருத்தி எழுதித் தந்து இப்போது
இதனை பத்திரிக்கைக்கு அனுப்பி வை என்றார்.
அப்போது எனது முகம் சுருங்கிப்
போனதை உணர்ந்து கொண்ட அவர் எனக்கு
பக்குவமாக எடுத்துக் கூறி உற்சாகப்படுத்தி என்னை
சமாதானப்படுத்தினார்.
அந்தக்
கட்டுரை (தரிசனச் சுடர், நவம்பர் 1995 ல் எனது முதல் கட்டுரை)
வெளிவந்த போதோ அதனை வாசித்த
பலர் எனது சாட்சியையும் எழுத்து
நடையையும் கண்டு என்னைப் பாராட்டி
மகிழ்ந்தனர். எனக்கோ உள்ளூர, அது
எனது எழுத்து அல்லவே என்ற
எண்ணமே மேலோங்கிக் கொண்டிருந்தது. தொடர்ந்து எனக்கு வந்த வாய்ப்புக்களை
நான் ஜெபத்துடன் பயன்படுத்திக் கொள்ளவே, நான் (நானாகவே) எழுதிய
கட்டுரைகளெல்லாம் அவ்வப்போது அந்த அந்த இதழில்
வெளிவந்த வண்ணம் இருந்தன.
கல்லூரி
இறுதி நாட்களில் அந்த இயக்கத்தின் வருடாந்திர
கூடுகை ஒன்றில், புதிதாய் ஒருவர் தன்னை அறிமுகம்
செய்து கொண்டபோது, நானும் பேதுரு தான்;
நீங்கள் தான் தரிசுனச்சுடர் பேதுருவா
என்றார். ஆம் என்றேன். உங்களை
இப்போது தான் முதல் முறையாகப்
பார்க்கிறேன். எனது ஆவிக்குரிய வாழ்க்கையில்
உங்கள் எழுத்துக்கள் பல எனக்கு உற்சாகமாய் அமைந்திருக்கின்றன;
எனவே நான் இரட்சிக்கப்பட்டு ஞானஸ்நானம்
எடுக்கும் போது எனது இந்து
பெயருடன் பேதுரு என இணைத்துக்
கொண்டேன் என உணர்ச்சிப் பூர்வமாக
கூறினார். ஆண்டவருக்கே மகிமை உண்டாகட்டும். அன்றிலிருந்து
எழுதுவது ஆண்டவர் எனக்கு அருளிய
தாலந்து; அதனை அவருக்காக முறையாக
பயன்படுத்த வேண்டும் என்ற முடிவுக்குள் வந்தேன்.
தொடர்ந்து
அவ்வப்போது அந்த பத்திரிக்கையில் எழுதிவந்தேன். பட்ட
மேற்படிப்பு வேலூரில் படித்துக் கொண்டிருக்கும் போது, Peter Daniel என்னும் ஒரு அண்ணனுடன்
இணைந்து ’வளாகத்தில் தொடரும் தரிசனம் – வளாக
ஜெபக்குழுக்களுக்கான நடைமுறைக் கையேடு’ என்ற புத்தகத்தை
நானும் அவரும் முறையே தமிழ்
மற்றும் ஆங்கிலத்தில் எழுதி முடித்தோம். அவை
2004 ல் முறையே UESI-TN மற்றும் UESI நிறுவனத்தின் வெளியீடுகளாக வந்தன. அந்த இயக்கத்தில்
நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கொய்னோனியா
மாநாட்டில் 2004 ல் – Literature Ministry என்ற செமினார் நடத்தும் வாய்ப்பு எனக்கு அளிக்கப்பட்டதை என் எழுத்துக்கு கிடைத்த
அங்கிகாரமாக கருதி தேவனுக்கு நன்றி
செலுத்துகிறேன்.
2007 ல்
உன்னத சிறகுகள் என்ற பத்திரிக்கையில் ’யோகா
- ஒரு கிறிஸ்தவ மருத்துவரின் கண்ணோட்டம்’ என்ற தலைப்பில் நான்
கட்டுரை எழுதியபோது, அது எனது எழுத்துப்பணியை
வேறு தளத்திற்கு கொண்டு சென்றது. இந்த
கட்டுரை டாக்டர், புஷ்பராஜ் அவர்களின் ஜாமக்காரன் பத்திரிக்கையின் மறுபதிப்பாகியதும், அதன் பகுதி தமிழ்க்கிறிஸ்தவர்
பக்கங்கள் என்னும் தளத்தில் முகப்பில்
(http://www.tamilchristian.com/index.php/hot-topics/yoga-in-tamil) Hot Topics வரிசையில்
இன்றும் இடம்பெற்றிருப்பதும் எனது எழுத்து முயற்சிக்கு
கிடைத்த அங்கிகாரமாகவே கருதுகிறேன்.
2006 வரை
நான் அவ்வப்போது எழுதி வெளிவந்த கட்டுரைகளை
நான் அதுவரையிலும் நான் ஆவணப்படுத்தவில்லை. எனவே
இனிவரும் எழுத்துக்களையாகிலும் முறைப்படுத்தலாமே என்ற என்ணத்தில் மிகவும்
சாதாரணமாக ஒரு பிளாக்கை ஆரம்பித்து
அங்கு என் எழுத்துக்களை சேர்க்க
ஆரம்பித்தேன். அந்த கால கட்டத்தில்
பிரபலமாக புழக்கத்திலிருந்த தமிழ்க்கிறிஸ்தவர்கள் தளம் (http://www.tamilchristians.com/
- துரதிருஷ்டவசமாக, தற்போது இது பயன்பாட்டில்
இல்லை) மற்றும் அங்கு கிடைத்த
நட்புகள் இதற்கு தூண்டுகோலாக அமைந்தன.
இந்த பத்தாண்டுகளில் ஒரு ஆண்டிலும் கூட
இடைவெளி இல்லாமல் பொத்தம் 65 பதிவுகள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் 27 கட்டுரைகள் பத்திரிக்கைகளில் வெளிவந்தவை. இந்த பத்தாண்டுகளில் மட்டும்
பத்திரிக்கைகளில் வெளிவந்தும் இங்கு இடம்பெறாத கட்டுரைகள்
கிட்டதட்ட 10 வரை விடுபட்டிருக்கும். இடையில்
வந்த முகநூலின் தாக்கம் இங்கு பிளாக்கில்
முறையாக எழுதவேண்டிய அவசியம் இல்லாமல் ஆக்கிவிட்டது.
இருப்பினும் பிளாக்குக்கு என்று ஒரு தேவை
தொடர்ந்து இருப்பதாகவே எனக்கு தென்படுகிறது.
இந்த அளவிற்கு எழுத எனக்கு வாய்ப்புகளை
அருளிய தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன். இந்த
பத்தாண்டுகளில் எனக்கு இருந்த ஒரு
மோசமான பழக்கம் என்னவென்றால், இதுவரை
எந்தவொரு பத்திரிக்கைக்கும் கூட, பிரசுரம் ஆகவேண்டும்
எனபதற்காக நானாக எனது கட்டுரைகளை
எழுதி அனுப்பி வைக்கவில்லை.
வெளியான கட்டுரைகள் அனைத்துமே, அந்தந்த பத்திரிக்கை குழுவினால்
என்னிடம் கேட்டு வாங்கப்பட்ட கட்டுரைகள்
அல்லது என்னை அவர்கள் உற்சாகப்படுத்தி, அதனால் எழுதிய கட்டுரைகள்
மட்டுமே.
எனவே, காலத்தின் கோலத்திற்கேற்ப, தேவைகளை உணர்ந்து அவசியமான
கட்டுரைகளை நானாக எழுத வேண்டும்
என்ற உணர்வு இந்த பத்தாண்டு
நிறைவு தினத்தில் என்னுள் அதிகமாய் பெருகி
வருகிறது. எனது Ph.D இறுதியாண்டுக்கான பணிச்சுமைகள் அதிகமாக இருப்பதால், இந்த
வருடம் எனது பிளாக் பதிவுகளில்
பெரிய அளவில் மாற்றங்கள் இல்லாது
இருப்பினும், வரும்காலங்களில் இவைகளை முறைப்படுத்தி தேவமகிமைக்காய்
தொடர்ந்து எழுத விரும்புகிறேன். தங்களின்
மேலான ஜெபம், ஆலோசனை மற்றும்
கருத்துக்களுக்கு மிக்க நன்றி.