Tuesday, December 09, 2008

எழுதிப் பிரகாசி... உனக்கு வழி பிறந்தது.



தமிழ்ப் பத்திரிக்கை உலகில் உள்ள மொத்த பத்திரிக்கைகளின் எண்ணிக்கையில் கிறிஸ்தவ பத்திரிக்கைகள் முதலிடத்தில் காணப்பட்டாலும் அவைகளுள் அதிக பிரதிகளிலோ தரத்திலோ உருப்படியாய் வெளிவருபவை ஒரு சிலவே. இதற்கு பல்வேறு சாக்குப்போக்குகள் கூறப்பட்டாலும் இன்றைய தமிழ்க் கிறிஸ்தவம் இதனை பெரிதாக கண்டுகொண்டதில்லை என்பது தான் நிசர்சனமான உண்மை.


அவ்வப்போது சில கிறிஸ்தவ நிறுவனங்கள் நடத்திய எழுத்தாளர் பணிமனைகள் இந்த குறைபாட்டினை சமாளிக்க எடுத்துக் கொண்ட முயற்சிகளின் மத்தியில், சமீபத்தில் ஆசீர்வாத இளைஞர் இயக்கம் நடத்திய எழுத்தாளர் பணிமனை ஒரு குறிப்பிடத்தக்க விசயமாகும். “இறைவன் எழுதுகிறார்” என்ற தலைப்பில் 2008 நவம்பர் 28-30 சென்னை சாந்தோம் தியான ஆசிரமத்தில் இது சிறப்புற நடைபெற்றது.


மும்பை துப்பாக்கிச் சூட்டினால் நாடு முழுவதிலும் பரவியிருந்த பாதுகாப்பு பயம், நிசாவின் தாக்குதலால் தமிழகம் முழுவதும் வெள்ள பாதிப்புகள், இதனால் போக்குவரத்துப் பாதிப்பு... என பல்வேறு தடைகள். இவைகளெல்லாம் இருந்த போதிலும் இதில் பதிவு செய்திருந்த 84 பேர்களில் 63 பேர் சரியான நேரத்தில் வந்திருந்து மூன்று நாட்களும் முழுமையாக பங்கு கொண்ட காரியம் இன்றைய தமிழ்க் கிறிஸ்தவர்களிடையே இதற்கென்று ஆர்வம் கொண்டுள்ளோர் இருக்கத்தான் செய்கின்றனர் என்பதை உறுதிபடுத்தியது. அதனை நிறைவு செய்யும் வண்ணம் பனிமனையின் நிகழ்வுகள் எல்லாம் நிறைவாகவும் சிறப்பாகவும் இருந்தன என்றால் அது மிகையல்ல.



ஆசீர்வாதம் பத்திக்கையில் அடிக்கடி கட்டுரைகள் மற்றும் புத்தகங்கள் பல எழுதி கிறிஸதவ வட்டாரத்தில் சிறப்பான இடம்பிடித்துள்ள டாக்டர். திருமதி. லில்லியன் ஸ்டான்லி, மற்றும் தனியொருவராய் பத்திரிக்கை தொடங்கினும் தரத்திலும் எண்ணிக்கையிலும் உயர்ந்து தமிழ்க் கிறிஸ்தவ உலகில் முத்திரை பதித்துக் கொண்டிருக்கும் வானமுதம் பத்திரிக்கையின் ஆசிரியர். திரு. கிங்ஸ்லி அருணோதய குமார் ஆகியோரின் பயிற்றுவிப்பில் பங்கு கொண்டோர் நல்ல பக்குவம் பெற்றனர். இவர்களுடன் ஆசீர்வாத இளைஞர் இயக்க ஊழியங்களில் தகவல்களைத் தொகுத்து அறிக்கைகளாக தருவதில் நல்ல அனுபவம் கொண்ட திரு. ஈ. எல். மதன்சிங், மொழி பெயர்ப்புப் பணியில் தனக்கென்று தனி பாணியைக் கண்டுள்ள திரு. ஈ.எல். ஈப்ரிம், வானமுதம் இதழில் முக்கிய பங்காற்றும் சிறுகதை சுந்தர் ஆகியோரும் அவரவர் பங்கினை சிறப்பாக பகிர்ந்தளித்தனர்.






பணிமனையில் குழுக்களாகப் பிரிந்து, பத்திரிக்கை தயாரிக்கும் பயிற்சிக்கு நேரம் கொடுக்கப்பட்டது. பங்கு கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்களூம் ஒவ்வொரு துறையிலும் சிறப்பாக அமைந்த படைப்புகளுக்கு சிறப்பு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களும் சிறந்த பத்திரிக்கையை வடிவமைத்த குழுவினருக்கு பாராட்டுப் பரிசு மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.



மிக குறைந்த கட்டணத்தில் நிறைவான பயிற்சியை இயக்க, நிறுவன அமைப்புகள் வேறுபாடின்றி அனைத்து தமிழ்க் கிறிஸ்த எழுத்தார்வலர்களும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் திரு. ஈ. எல். ஈப்ரிம் அவர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இப்பணிமனையின் முழு செலவினையும் ஆசீர்வாத இளைஞர் இயக்கம் எடுத்துக் கொண்டதன் மூலம் கிறிஸ்தவ எழுத்தாளர்களை எழுப்பி விடுவதில் அதன் தீராத ஆசை நிறைவேறி உள்ளது.


பங்கு கொண்ட அனைவரும், ”எழுதிப் பிரகாசி... உனக்கு வழி பிறந்தது” என்று கர்த்தரின் நேரிடைக் கட்டளையினை பெற்றுக் கொண்ட உணர்வில் திரும்பிச் சென்றனர். இதுபோன்ற அரிய காரியங்களில் அனைத்து முன்னணி கிறிஸ்தவ எழுத்தாளர்களும் ஒன்றுபட்டு செயல்பட்டால் நமது சமுதாயத்தில் கிறிஸ்துவின் ஆட்சி வேரூன்றி விரைவில் மாற்றங்கள் நிகழும் என்பதில் ஐயம் இல்லை.


- டாக்டர். பேதுரு, தாராபுரம்.