ஒரு ஆவணத்தை மறுபிரதி எடுப்பதை ஜெராக்ஸ்
என்கிறோம். அப்படி பிரதியெடுக்கும் தொழில்நுட்பத்தை முதலில் அறிமுகப்படுத்திய நிறுவனத்தின்
பெயரே அந்த தொழிலுக்கு பெயர்க் காரணமாயிற்று. அதுபோலவே, டாஸ்மாக் என்பதற்கு தமிழ்நாடு
மாநில வாணிபக் கழகம் (Tamil Nadu State Marketing Corporation) என பரந்த நோக்கம் கொண்ட
முழுப்பெயர் இருப்பினும் அது மதுபான வகைகள் என்ற ஒரே வட்டத்தினுள் நின்றுவிடவே டாஸ்மாக்
என்றாலே மதுபானக்கடை என்று அழைக்கப்பட காரணமாகி விட்டது. டாஸ்மாக் 2003ல் தொடங்கி இன்று வரையிலும் நாட்டின் பொருளாதாரத்தில்
ஒரு பரிணாம வளர்ச்சியை பெற்றிருப்பினும் அதன் தனி மனித, குடும்பப் பொருளாதார மற்றும்
சமூக தாக்கங்கள் குறித்து பரவலான சலசலப்புகளுக்கு பஞ்சமேயில்லை.
குடி குடியைக் கெ(கொ)டுக்கும்
’குடி குடியைக் கெடுக்கும் - குடிப்பழக்கம்
உடல்நலத்தைக் கெடுக்கும்’ ; ‘மது - நாட்டுக்கு,
வீட்டுக்கு, உயிருக்கு கேடு’ என்பதே டாஸ்மாக்கின் தாரகமந்திரம் என்றால் அது ஆச்சரியமாகத்
தான் இருக்கிறது. மதுவிலக்குத் துறை என்னும்
அமைச்சகத்தின் மூலம் விலக்கப்பட வேண்டிய மதுவோ இன்று அதன் மூலமே ஊக்குவிக்கப்படுவது
ஒரு பெருத்த முரண்பாடு. கள்ள சாராயத்திலிருந்து நல்ல (?) சாராயத்திற்கு மா(ற்)றிக்
கொண்டதாக தம்பட்டம் அடித்துக் கொள்ளத்தான் முடிகிறதே தவிர அந்த துறையால், பூரணமாக மதுவை
சமுதாயத்திலிருந்து விலக்கிவைத்துக் கொள்ள முடியவில்லை. சமுதாயத்திலுள்ள மற்றவொரு ’குடி’மகனிடமிருந்து
ஒருவன் எளிதில் கற்றுக்கொள்ளும் கலையாக அது மாறிவிட்டது. மற்ற மதுக்களை ஒப்பிட்டு, ’கள்’ளை நியாயப்படுத்துவோர்
பெருகிடவும் அது வாய்ப்பளித்துள்ளது. தற்போது இவை சமூக, அரசியல், பொருளாதார அடிப்படையில்
அணுகப்பட வேண்டிய பிரச்சினைகளாக உருவெடுத்துள்ளன.
குடிமக்கள் தொகைப் பெருக்கம்
உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ள புள்ளி
விவரத்தின்படி உலகில் 2 பில்லியன் மக்கள் மது அருந்தும் பழக்கம் உடையவர்கள். அவர்களில்
75 மில்லியனுக்கும் மேற்பட்டோர் தங்கள் மதுப்பழக்கத்தினால் உண்டான உடல் உபாதைகளினால்
அவதிப்படுகின்றனர். மட்டுமல்ல, உலகம் முழுவதும் ஆண்டுதோறும் சுமார் 2.5 கோடி பேர் மது
காரணமான நோய்களினால் இறக்கின்றனர். 15 முதல் 29 வயதிற்குட்பட்டோரில் 9 சதவிகித இறப்புக்கு
மதுப்பழக்கம் நேரிடையான காரணமாக இருக்கிறது. கடந்த 30 ஆண்டுகளாக பரவலாக வளர்ந்த நாடுகளில்
மதுப்பழக்கம் குறைந்து வரும் நிலையில், இந்தியா போன்ற வளரும் நாடுகளில் அது அதிகரித்துக்
கொண்டே வருகிறது. மாறிவரும் சமூக கட்டுப்பாடுகள், நகரமயமாக்கல், மது எளிதாக கிடைத்தல்,
அதனை வணிகப்படுத்தியமை, அதன் ஏற்றுமதி இறக்குமதி விதிகளில் தாராளம் இவையே அதற்கு காரணம்
எனவும் அது கூறுகிறது.
தமிழ்நாட்டில் ஆறில் ஒருவருக்கு மதுப்பழக்கம்
உள்ளது. இதில் பெரும்பாலும் ஆண்களே எனினும், பெண்களின் பங்கும் தொடர்ந்து அதிகரித்து
வருவதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன. அண்டை மாநிலமான கர்நாடகாவில் நடத்தப்பட்ட ஒரு
குறிப்பிட்ட ஆய்வில், பெண்களும் கிட்டதட்ட ஆண்களுக்கு இணையான எண்ணிக்கையில் இருப்பது
அதிர்ச்சியைத் தருகிறது. இந்தியாவில் மது அருந்தும் பழக்கம் பரவலாக அதிகரித்து வருகிறது
என்றாலும் இளைஞர்கள் மத்தியில் அது மிக வேகமாக அதிகரித்து வருகிறது. 1950களில் 23 ஆக இருந்து மது அருந்துவோரின் சராசரி
வயது 90களில் 19 ஆக குறைந்து தற்போது 13 ஆகக் குறைந்துள்ளது. டாஸ்மாக் போன்ற மதுமான
சமூக அங்கிகாரம் மற்றும் வாய்ப்புக்கள் காரணமாக வரும்காலங்களில் இது மேலும் குறையும்
என்பது மறுப்பதற்கில்லை.
மிதமான மது மதுரமா?
மதுப்பழக்கத்தினால் உடலில் மருத்துவரீதியாக
கிட்டதட்ட 60 வகையான நோய்நிலைகள் ஏற்படுகின்றன. மட்டுமல்ல, 200க்கும் மேற்பட்ட உடல்உபாதைகளில்
மது நேரிடையாகவோ மறைமுகமாகவோ முக்கிய பங்கு வகிக்கிறது. மிதமான அளவில் மது அருந்துவது
இருதயத்திற்கு நல்லது என ஓரிரு மருத்துவ ஆராய்ச்சிகள் சொல்லுவதை மதுப்பழக்கத்தை நியாயப்படுத்த
விரும்புவோர் மிகவும் பெரிதாக எடுத்துக் கொள்கின்றனர். அத்தகைய ஆராய்ச்சிகளில் அனைத்தும்
இவ்வித சாதகமான முடிவுக்குள் வந்துவிடவில்லை. மட்டுமல்ல இத்தகைய நல்லபண்பு 45 வயதிற்கு
மேற்பட்ட ஆண்கள் மற்றும் மாதவிடாய் நின்றுவிட்ட பெண்களுக்கு மட்டுமே பொருந்தும் என்ற
பின்குறிப்பை வாசிக்கும் அளவுக்கு நமக்குப் பொறுமையில்லை. மதுப்பழக்கம் மெல்ல அடிமைப்படுத்தும்
சாதனம் என்பதையும் அதிக அளவு ஆல்கஹால் பல உடல் உபாதைகளைக் கொண்டுவரும் என்பதை தற்காலிகமாக,
குறிப்பாக ஆரம்பத்தில் உணரத் தவறி விடுகிறோம். மதுப்பழக்கம் உடையோரில் 20 சதவிகிதத்தினர்
அளவை படிப்படியாக அதிகரித்து பின்னர் அதற்கு அடிமைப்படும் நிலைமைக்கு ஆகி விடுகின்றனர்.
வளரிளம் பருவத்தினரும் இளைஞர்களும் இவ்விதம்
மதுப்பழக்கத்திற்கு அடிமையாகும் வாய்ப்புகள் மருத்துவ ரீதியாக மிக அதிகம். காரணம் அவர்களின்
உடல் இன்னும் வளர்ச்சியடைந்து கொண்டிருப்பது தான். சமீபத்தில், தான் அமர்ந்து படிக்கும்
பள்ளிக்கூட பெஞ்சை உடைத்து மரக்கடையில் விற்று டாஸ்மாக் கடையில் மது குடித்த பிளஸ்
2 மாணவர்கள் பற்றிய செய்தி நாளிதழ்களில் வந்தன. 14 வயதுக்குள் மது குடிக்கத் தொடங்குவோர்
ஏறக்குறைய அனைவருமே போதைக்கு அடிமையாகிவிடுவதாகவும், 21 வயதுக்குப் பிறகு மது அருந்தத்
தொடங்குவோரில் 9 சதவீதம் பேர் மட்டுமே போதைக்கு அடிமையாகி விடுவதாகவும் இளைஞர்களிடையே
நடத்தப்பட்ட ஆய்வு தெரிவிக்கிறது. மட்டுமல்ல, மெல்ல மதுவுக்கு அடிமையாவதினால் படிப்படியாக
இவர்களின் உடல், மனம், மூளை பல உருமாற்றங்களைப் இறுதியில் உருப்படாமல் போய்விடுகிறது.
(நீதிமொழிகள் 23:29-35).
மதுப்பழக்கம் என்றவொரு காரணியினால் ஒருவர்
தனது குடும்பப் பொருளாதார மற்றும் சமுதாய அந்தஸ்தில் உயர்வு கண்டதாக சரித்திரம் இல்லை.
அதுபோலவே அத்தகைய பழக்கம் உடலுக்கு நல்லது என அறிவுப்பூர்வமாக வாதிட இயலாது. மது ஒரு இருபுறமும் கருக்குள்ள பட்டையம்.
முதலில் நல்லது போன்ற உணர்வினைத் தூண்டிவிட்டு, பின்னர் மீள்வது கடினம் என்ற நிலைக்கு
அடிமைப்படுத்தும் வலிமை கொண்டது.
மதுவின் சமூக விளைவுகள்:
டாஸ்மாக் கடைகள் திறந்துவிடப்பட்டதால்,
கள்ளச் சாராய சாவுகள் குறைந்து விட்டதாக புள்ளிவிபரங்கள் சொல்லிக் கொண்டாலும், மது
அருந்துவோரின் எண்ணிக்கையோ பன்மடங்காக பெருகி விட்டதை மறுப்பதற்கில்லை; மாத்திரமல்ல,
மேலும், குடி போதையில் திருட்டு, தற்கொலை, கொலை, கொள்ளை, கற்பழிப்பு என பல்வேறு குற்றச்
செயல்களில் ஈடுபடுவோரும், வாகனம் ஓட்டி விபத்தில்
சிக்கி உயிரிழப்போரும் அதிகரித்துக் கொண்டே வருகின்றனர். நாட்டில் 59% சதவிகித விபத்துக்கள்
மது அருந்துவதாலேயே ஏற்படுகின்றன. அவற்றில் பாதிக்கும் மேற்பட்ட விபத்துக்கள் அடுத்தவரின்
குடிப்பழக்கத்தினால் ஏறப்டுகிறது என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று. எனவே ’குடி’மக்கள்
எக்கேடும் கெட்டுப்போகட்டும் என சும்மா விட்டுவிட முடியாது. நாட்டில் சட்டம், ஒழுங்கு
தாராளமாக மீறப்படுகிறது. மதுஅருந்துவதால், வேலைசெய்பவர்களின் திறன் வெகுவாகக் குறைந்து
தனிமனித வருமானம் மட்டுமல்ல, நாட்டின் உற்பத்தியும் 20% வரை குறைகிறது.
டாஸ்மாக்கின் சமூக அக்கறை:
பள்ளி மற்றும் சமய வழிபாட்டுத் தலங்களுக்கு
அருகில் டாஸ்மாக் கடைகள் கூடாது என்பது விதி.
டாஸ்மாக் விற்பனைக்கு விடுமுறை விடும் நாட்கள் பட்டியலில், சில பெரியவர்களின் பிறந்து
நாட்களும் சில சமய திருநாட்களும் உள்ளடடக்கம். இவையெல்லாம் உண்மையான சமூக அக்கறையினால்,
என்பதைவிட சமூக எதிர்ப்புகளை சமாளிக்கவே. டாஸ்மாக் விடுமுறை நாட்கள் பட்டியலில் கிறிஸ்துமஸ்
இடம்பெறவில்லை என்பதோ, டாஸ்மாக்கின் உச்சகட்ட விற்பனை கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு
நாட்களில் தான் என்பதோ நம்மை வருத்தப்படுத்த வேண்டிய அவசியமில்லை. மதுப்பழக்கத்தை கிறிஸ்தவம்
அங்கிகரிக்கவில்லை என்பது ஊரறிந்த உண்மை.
மது அருந்துவோரை தாழ்வாகக் கருதிய சமுதாயத்தில்,
டாஸ்மாக் அமைப்பின் மூலம் அரசாங்கமே மதுவிற்பனையை ஏற்று நடத்திவதால், இவர்களின் சமுதாய
அந்தஸ்து உயர்ந்து விட்டதாக கருதுகின்றனர். எப்படியெனில், ஒருகாலத்தில், மது அருந்துவதை
சொல்லிக் கொள்ள வெட்கப்படுபவர்கள், இன்று வெட்கத்தை விட்டு பட்டப்பகலில் நடுவீதிக்கு
வந்து பாட்டிலை வாங்கி சட்டைப் பாக்கெட்டிலேயே வைத்துக் கொண்டு ஊரை வலம் செல்வதைப்
பார்த்தால், இதனை வேறு எப்படி வருணிக்க முடியும்?
டாஸ்மாக் நிறுவனத்தின் வருமானத்தைவிட,
பொதுமக்களின் அமைதியான வாழ்வுதான் முக்கியம்; அரசின் வருவாயை அதிகரிப்பதற்காக, பொதுமக்கள்
தங்கள் அமைதியான வாழ்வை விலையாகக் கொடுக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் இருவருடங்களுக்கு
முன் ஒரு வழக்கில் கருத்து தெரிவித்துள்ளதிலிருந்தே டாஸ்மாக்கின் உண்மையான சமூக அக்கறை
புரிகிறது.
வருமானமா? அவமனமா?
இன்று நாட்டுக்கு 15 சதவிகித வருமானம்
டாஸ்மாக் கடைகள் மூலம் கிடைக்கிறது. 2003ம் ஆண்டில் டாஸ்மாக் ஆரம்பிக்கப்பட்ட போது மூலம் சுமார் ரூ.
4 ஆயிரம் கோடியாக இருந்த தமிழ்நாட்டின் வருமானம், 2011-12ல் ரூ.18 ஆயிரம் கோடியை எட்டியுள்ளது.
இது ஆண்டுதோறும் முந்தைய ஆண்டைக்காட்டிலும் சராசரியாக 20 சதவிகிதம் என்ற அளவில் வளர்ச்சியினைக்
பரிணாம வளர்ச்சியைக் கண்டுவருகிறது. இதன்மூலம் வரும்நாட்களில் நாட்டின் வருமானத்தில்
15% என்பதுவும் அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. இதற்கு புதுரக மதுபான வகைகளின் வரவோ,
விலை உயர்வோ காரணமல்ல, மது அருந்துவோர் எண்ணிக்கை குறிப்பாக இளைஞர்கள் எண்ணிக்கை அதிகரித்து
வருவதே ஆகும் என்கிறது ஒரு புள்ளிவிபரம்.
மதுக்கடைகளால் ஏற்படும் ஒரே பயன், அரசாங்கத்துக்கு
கிடைக்கும் வருமானம் மட்டுமே. இத்தகைய வருமானத்தின் மூலம் தான் பல்லாயிரம் கோடி மதிப்பிலான
நலத் (?) திட்டங்களைத் தொடங்க பணம் கிடைக்கிறது என சிலர் நியாயப்படுத்திக் கொள்கின்றனர்.
உண்மையை உரசிப்பார்த்தால், டாஸ்மாக் மூலமாக நாட்டுக்கு கிடைக்கும் மொத்த வருமானத்தைக்
காட்டிலும் மதுப்பழக்கத்தினால் பாதிக்கப்படும் தனிமனித உடல்நலம், குடும்ப வருமானம்,
இதனால் விளையும் சமுதாய சீர்கேடுகள், அதற்கான நாட்டின் செலவிங்கள் இவற்றின் பணமதிப்பு
மெத்தவே அதிகம், இதனை அண்டை மாநிலத்தில் நடத்திய
ஆய்வு உறுதி செய்கிறது.
மக்கள்
நலனில் உண்மையான அக்கறை கொள்ளும் அரசாங்கம் அத்தகைய வருமானத்துக்கு மாற்று வழியைக்
கண்டறிந்து அதன்மூலம் இத்தகைய திட்டங்களை நல்மனசாட்சியுடன் செய்ல்படுத்த திட்டங்களையும்
வகுக்கலாம். குழந்தைகள் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து, குழந்தைகள் வருமானம் குடும்பத்துக்கு
அவமானம் என அம்பலப்படுத்திக் கொள்ளும் நாம் டாஸ்மாக் வருமானம் தமிழ்நாட்டுக்கே அவமானம்
என்பதை ஒத்துக் கொள்ள தயாரா?
மனமிருந்தால் மார்க்கமுண்டு!
பாலியல் தொழில் என்பது இழிவான ஒன்று என்பதை
அனைவருமே ஒத்துக் கொள்வர். ஆனால், பாலியல் தொழிலை ஒழிக்க வேண்டும் என காரியங்களில்
இறங்கும்போது, நடைமுறையில் பல சிக்கல்கள் எழுந்திட, சமூகம், பொருளாதாரம், வாழ்வாதரம்
என பல பிரச்சினைகள் குறுக்கிட, இறுதியில், பாலியல் தொழிலை வரைமுறைப்படுத்தி சட்டமாக்கி
விட்டாலென்ன என்ற கேள்விகள் இன்று பரவலாக மேலோங்க ஆரம்பித்து விட்டன. நாட்டில் ஊழல்கள்
அனைத்து மட்டத்திலும் பரவாலாக பெருகிவிட்ட காரணத்தால், அதனை தவறில்லை என அங்கிகரித்து
விடுவதினால், நாட்டில் எல்லாம் சரியாகிவிடுமா? அதுபோலவே தான் டாஸ்மாக்கையும் நியாயப்படுத்துவதில்
நியாயமில்லை.
சமுதாயத்தில், பல்வேறு தரப்பட்ட மக்களையும்
திருப்திப்படுத்த அரசு எடுக்கும் முயற்சிகளில், உண்மையான சமுதாய அக்கறையுடன் தொலைநோக்குப்
பார்வையுடன், நல்ல முடிவுகளை எடுத்தால் அதனை வருங்கால சந்ததி நிச்சயம் போற்றும்; நாட்டுக்கு
வருமானம் முக்கியம் என்றால், ஊழலற்ற நேர்மையான நிர்வாகத்தை நிலைநிறுத்துவதன் மூலம்
நிச்சயம் பெருக்கிக் கொள்ள முடியும். மதுக்கடைகளை தன்கையில் எடுத்துக் கொண்ட அரசு மணல்,
கிரானைட் கல்குவாரிகளை தன் வசம் எடுத்துக் கொண்டு முறைப்படுத்தினாலே, அரசு கஜானாவில்
மானமுள்ள வருமானம் அதிகாளவில் வந்துசேரும்.
நாட்டில் மக்கள் தொகையை குறைத்திட, ஆண்
மற்றும் பெண்களின் திருமண வயதை முறையே 21 மற்றும் 18 என உயர்த்தி சட்டமாகியது போலவே,
மது அருந்துவோரின் சட்டப் பூர்வமான அனுமதி
வயதை 21 இலிருந்து 25 க்கு உயர்த்தி அதனை தீவிரமாக நடைமுறைப்படுத்தினாலும் கூட நாட்டில்
’குடி’மக்களின் தொகை கொஞ்சம் குறைந்திட வாய்ப்புண்டு.
ஒருசில அரசியல் கட்சிகளும் பல்வேறு சமூகநல
தொண்டு நிறுவனங்களும் தொடர்ந்து மதுவுக்கெதிரக குரல் எழுப்பிவரும் இன்றைய கால கட்டத்தில்,
டாஸ்மாக்கை ஒழித்துவிட இன்றைய தமிழக அரசு தீவிரமாக ஆலோசித்து வருவதாக இப்போது ஊடகங்களில்
வெளிவரும் இனிப்பான செய்தி வெறும் செய்தியாகவே மாறிவிடாமல் செயல் வடிவம் பெற்று நாடும்
நாமும் தன்மானத்துடன் வாழவேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.
திராட்சை ரசம் ஒழுங்கீனத்தைத்
தோற்றுவிக்கும்: போதை தரும் குடி அமளியைத் தோற்றுவிக்கும்: அவற்றில் நாட்டங்கொள்பவர்
மடையரே. (நீதிமொழிகள்
20:1 - கத்தோலிக்க மொழிபெயர்ப்பு)
(இது உன்னத சிறகுகள் ஜூலை- செப்டெம்பர் 2012ல் வெளிவந்த எனது கட்டுரை)
அச்சேறிய எனது முதல் கட்டுரை எனது பள்ளி ஆண்டு மலரில் நான் ஒன்பதாவது வகுப்பு படிக்கும்போது வெளியானது.அதன் தலைப்பு:குடிப்பழக்கத்தினால் விளையும் தீமைகள்”.அந்த வகையில் இந்த கட்டுரையானது எனது நினைவுகளில் பின்னோக்கி செல்ல உதவுகிறது.குடிப்பழக்கத்தினால் சீரழியும் தமிழ் சமுதாயத்தைக் காப்பாற்ற இளைஞர்களால் மட்டுமே முடியும்.ஆனால் அதிக அளவில் சிக்கியிருப்பது இளைஞர்களே என்றால் அது மிகையல்ல.கிறிஸ்தவர்களாகிய நாம் ஜெபிப்பதோடு மட்டுமல்லாமல் சமுதாய விழிப்புணர்வுக்கான முயற்சிகளில் உடனே இறங்கும் நேரம் வந்துவிட்டது.ஆந்திராவில் கொடிகட்டி பறந்த என்.டி.ஆர் ஆட்சியை வீழ்த்தியது சாராயத்துக்கு எதிரான பெண்களின் போராட்டமே.அதேபோன்றதொரு போராட்டத்தை அரசியல் கலப்பில்லாமல் நாம் துவக்கினால் நிச்சயமாகவே வெற்றி என்பது எட்டாக்கனியல்ல.
ReplyDeleteஉண்மை சகோதரரே....
ReplyDeleteகுடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் மீண்டுவருவது சுலபமான காரியம் அல்ல; கிறிஸ்துவின் மீட்கும் அன்பு அவர்களுக்கு உதவ முடியும் என்பதை உரக்க சொல்லும் பொறுப்பு நமக்கு உள்ளது. இன்று இந்த விஷயத்தில் அரசியல், சமுதாய விழிப்புணர்வு மேலோங்கி வரும் நிலையில் நாமும் செயல்பட இதுவே தருணம்.