Wednesday, July 07, 2010

இணையம்: ஆக்கமா? அழிவா?

நாம் வாழும் இன்றைய பின்நவீன காலக்கட்டத்தில் (Post–modern Era), இணையமும் இளைஞரும் இணைபிரியாத வார்த்தைகளாகி விட்டன. இணையம் என்றாலே இளைஞருக்கு இடறல் என பெரியவர்களும் இணையம்தான் எல்லாமே என இளைஞரும் இருவேறுதுருவ கருத்துடையவர்களாக இருக்கின்றனர். இன்று இணையம் இளைஞருக்கு மட்டுமல்ல, அனைவருக்குமே அவசியமான ஒன்றாகி விட்ட்து. இன்னும் சொல்லப்போனால், இன்றைய பின்நவீன காலக்கட்டத்தின் ஆரம்பமே இணையத்தின் கண்டுபிடிப்பில் தான் எனலாம்.


இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இணையம் இளைஞரின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் தாக்கங்கள் பல. அவற்றில் சில ஆக்கப்பூர்வமானவையாகவும் சில அழிவுப்பாதையில் நடத்திச் செல்பவையாகவும் உள்ளன. இன்று மாணவர்களுக்கு, குறிப்பாக முதுநிலை மற்றும் ஆராய்ச்சி மாணவர்களின் கல்விக்கு இணையம் ஒரு இன்றியமையாத கருவியாகிவிட்டது. யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் தேவைப்படும் விபரங்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு இணையத்தின் இணையில்லாத சிறப்பு.


சமீபத்தில் “இணையத்தில் நேரத்தை தொலைக்கும் இளைஞர்கள்” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை (தினமணி, மே 12) வெளிவந்தது. அது இன்றைய இளைஞர்கள் தங்களையும் அறியாமல் எப்படியெல்லாம் இணையத்தில் நேரத்தை வீணடிக்கிறார்கள் என விரிவாக அலசியது. இணையம் என்பது ஒரு தொடர்பு ஊடகம். அது தன்னகத்தே ’நல்ல’ அல்லது ’கெட்ட’ என எந்தவொரு பண்பினையும் கொண்டிருக்கவில்லை; நடுநிலையானது. அதன் பயன்பாடு பயன்படுத்துவோரின் கையில் தான் உள்ளது. எண்ணற்ற பயன்கள் இணையத்தில் ஒழிந்துள்ளன. ’எதைத்தேடி? எவ்வளவு நேரம்?’ என எந்தவொரு நோக்கமும் தெளிவும் இல்லாமல் இணையத்தில் இறங்குபவர்களுக்கு இங்கு இடறல்களே அதிகம். மட்டுமல்ல, அத்தகைய காரியங்களில் இணையம் அவர்களை படிப்படியாக அடிமைப்படுத்தி விடுகிறது.


நல்ல காரியங்களைத் தெரிந்து கொள்ளவே இணையத்தில் இறங்குவதாயினும் அதில் ஒரு கட்டுப்பாடு தேவை. எதிர்ப்பார்த்த காரியம் முடிந்தவுடன் வெளியேறிவிடுவது நல்லது. இல்லையெனில் கண்ணையும் மனதையும் கவரும் ’கவர்ச்சி’ விளம்பரங்கள் அவ்வப்போது அழையா விருந்தாளிகளாக வந்துசேரும். ஒரு கிளிக் செய்தாலே அது நம்மை இணையத்தின் மறுமுனைக்கு கொண்டு சென்றுவிடும். எனவே இதனைத் தவிர்க்க தனிமையில் இணைய மையங்களுக்குச் செல்வதை தவிர்க்கலாம்; இணையவசதி வீட்டிலேயே இருக்குமானால் தனிஅறையில் இல்லாமல் விட்டிலுள்ள மற்றவர்களின் பார்வையில் இணையத்தை பயன்படுத்துவது தான் பாதுகாப்பானது.


இணையத்தில் சமீபத்திய முன்னேற்றமாகிய ஆர்குட், ஃபேஸ்புக் போன்ற ’சமூகப் பரிமாற்ற ஊடகம்’ (Social Interactive Media) குறித்து தெளிவுடன் இருப்பது நல்லது. இவற்றில் உரையாடுதல், உடனுக்குடன் செய்தியனுப்புதல், ஆன்லைன் விளையாட்டுக்கள் போன்றவை நன்மையானவையாகவே இருப்பினும் நாளடைவில் தவறான உறவுகளையும் அடிமைத்தனத்தையும் கொண்டு வந்துவிடும். அதற்கு காரணம் இவற்றில் ஈடுபடும் பெரும்பான்மையினோரின் நடவடிக்கைகள் தாம்.


இத்தைய சூழ்நிலையில் இவற்றிலிருந்து அறவே வெளியேறுவதைத் தவிர்த்து, விசுவாச மாணவர்களும் பட்ட்தாரிகளும் இவற்றை நன்மையான காரிய்ங்களுக்காக (Context) அதிக அளவில் (Content) சரியான விதத்தில் பயன்படுத்துவதன் மூலம் ஒரு சிறிய அளவிலாவது சமூக மாற்றத்தை ஏற்படுத்தி, இவ்விதம் இணையத்தின் மூலம் நற்செய்தியைப் பரப்பிட முயற்சி செய்யலாமே?



This is a my Forum article published in THARISANA SUDAR – JULY 2010

1 comment:

  1. Really a nice article Dr.
    Publishing this in Tharisana Sudar would help many....

    ReplyDelete