Monday, January 09, 2017

எல்லாவற்றையும் செய்ய எனக்குப் பெலனுண்டு


"என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே
எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு” பிலி. 4:13

நண்பர்கள் அனைவருக்கும் எனது அன்பான இனிய புத்தாண்டு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். இந்த வருடம் உங்கள் வாழ்வில் ஒரு ஆசீர்வாதமான மற்றும் சமாதானமான வருடமாக இருந்திட மனதார வாழ்த்துகிறேன். நம்மில் பலரும் இன்று புதுவருட ஆராதனைகளில் கலந்து கொண்டு இந்த வருடத்திற்கான வாக்குத்தத்த வசனங்களை இன்று முதல் உரிமைகோர தொடங்கியிருப்போம். அது அப்படியே நடக்கட்டும். ஏனெனில், ’தேவனுடைய வாக்குத்தத்தங்களெல்லாம் இயேசுகிறிஸ்துவுக்குள் ஆம் என்றும், அவருக்குள் ஆமென் என்றும் இருக்கிறதே’ (2 கொரி. 1:20).

அவ்விதமே, இந்த வருடத்தில் செய்ய வேண்டிய அல்லது செய்ய வேண்டாத காரியங்கள் குறித்தும் நம்மில் பலரும் திட்டமிடுவதுண்டு. அவ்வித தீர்மானங்கள் நிச்சயம் வருட இறுதியில் திரும்பிப் பார்க்கும் போது, ஒருவேளை நாம் அவைகளை முழுமையாக நிறைவேற்றாவிட்டாலும், அது ஒரு இலக்கினை நோக்கிப் பயணிக்க நமக்கு உதவியிருப்பதை நாம் நிச்சயம் அறிந்து கொள்வோம். நாம் எடுத்திருக்கும் தீர்மானங்கள் அனைத்தையும் நாம் நிறைவேற்ற வேண்டும் என்றே நாம் விரும்புகிறோம். அதற்கு நமது சொந்த பக்தியோ சக்தியோ மட்டும் போதாது. தேவனுடைய கிருபையும் பெலனும் அவசியமாகிறது. ’என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு’ பிலி. 4:13) என்ற பவுலின் வார்த்தைகளை நாமும் இந்த புத்தாண்டு வாக்காக உரிமை கொண்டாடி, இந்த வருடத்தில் செய்யவேண்டுமென எடுத்த தீர்மானங்களை நிறைவேற்றிட உற்சாகம் அடைவோம்.

பெலப்படுத்துகிற கிறிஸ்து:

’தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்’ என பிலிப்பியர் 2:13 ல் வாசிக்கிறோம். எனவே இந்த புத்தாண்டு தினத்தில் நல்ல தீர்மானங்களை நாம் எடுக்க நமக்கு உதவி செய்தவர் தேவன். நாம் அவைகளை நிறைவேற்றிடவும் அவர் நம்மை பெலப்படுத்துவார். ’என்னைப் பலப்படுத்துகிற நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்னை உண்மையுள்ளவனென்றெண்ணி, இந்த ஊழியத்திற்கு ஏற்படுத்தினபடியால், அவரை ஸ்தோத்திரிக்கிறேன் (I தீமோ. 1:12) என்கிறார் பவுல். கர்த்தராகிய அநாதி தேவன் 'சோர்ந்துபோகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார்' (ஏசாயா. 40:29). எனவே நமது தீர்மானங்களை நிறைவேற்றி முடித்திட, தனியாக நான் மட்டுமல்ல என்னுடன் தேவனும் இருக்கிறார் என்ற தைரியத்துடன் நாம் செயல்படலாம்.

எல்லாவற்றையும் செய்ய:

இந்த வருடத்தில் நான் இதைச் செய்துவிட வேண்டும், அதைச் செய்துவிட வேண்டும் என நாம் கண்டதற்கும் ஆசைப்படுகிறோம். நமது தகுதிக்கும் வாய்ப்புகளுக்கும் பொருத்துமானவைகளையே நாம் ஆசைப்பட வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக நாம் தீர்மானிப்பது தேவனுடைய சித்தத்திற்கு உட்பட்டதா என்பதையும் சோதித்தறிய வேண்டும். 'நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படிகேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம்' (I யோவான் 5:14).

தேவனிடத்தில் பெரிய காரியங்களை எதிர்பார்; தேவனுக்காய் பெரிய காரியங்களை முயற்சி செய்’ என்பது வில்லியம் கேரி அவர்களின் கூற்று. ஆம், நாம் இந்த வருடத்தில் முயற்சிக்க தீர்மானிக்கும் காரியங்கள் அவருடைய விருப்பத்தின் படியும் அவருக்கு மகிமையைக் கொண்டுவருவதாகவும் இருக்கிறதா என சோதித்தறிந்து, அந்த தீர்மானங்களில் முன்னேறுவோம்.

எனக்கு பெலனுண்டு:

எனக்கு பெலனுண்டு என நாம் சொல்லிக் கொள்வது வெறும் விசுவாச அறிக்கையாக மட்டுமல்ல, அது செயலிலும் வெளிப்பட வேண்டும். முதலில் முயற்சிக்க வேண்டும். அதாவது, விசுவாசத்தில் நாம் முதல் படியை எடுத்து வைத்து நமது தீர்மானங்களை நிறைவேற்ற முயலவேண்டும். ஏனெனில் முயற்சி என்னும் முதல்படி தான் மேற்படிகளுக்கு நம்மை நடத்திச் செல்லும் முதற்செயல். குணசாலியான ஸ்திரி ’தன்னைப் பெலத்தால் இடைக்கட்டிக்கொண்டு, தன் கைகளைப் பலப்படுத்துகிறாள்’ என நீதிமொழிகள் 31:17 ல் வாசிக்கிறோம். நம்மில் உள்ள பெலன் நமது கைகளின் கிரியைகளில் வெளிப்பட வேண்டும்.

வெறும் நல்ல தீர்மானங்களை மட்டும் கொண்டிருந்து கைகளினால் அவைகளை நிறைவேற்ற முயற்சி செய்யாதிருப்போமானால், அந்த நல்ல தீர்மானங்களே நம்மை சலிப்படையச் செய்யும் (Ref. நீதி. 21:25). குற்ற உணர்வு, தாழ்வு மனப்பான்மை, (கை)விட்டுவிடுதல் போன்ற காரியங்கள் விரைவில் நம்மை வந்தடையும். கிரியையில்லாத விசுவாசம் செத்ததாயிருக்கிறது போல, கிரியையில்லாத தீர்மானங்களும் செத்தவைகளே. அவைகளினால் எந்த பிரயோஜனமும் இல்லை. தீர்மானங்களை தொடர்ந்து நிறைவேற்றும் போது தடைகள் ஏமாற்றங்கள் சோர்வுகள் குறுக்கே வரும். இருப்பினும் அவற்றில் பொறுமையுடன் ஓடிட, என்னை பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய எனக்குப் பெலனுண்டு’ என்ற விசுவாச அறிக்கை நமக்கு பெரிதும் உதவும்.

நாட்கள் செல்லச் செல்ல, நமது தீர்மானங்களில் தொய்வு காணப்பட்டால், ’நீதிமான் ஏழுதரம் விழுந்தாலும் திரும்பவும் எழுந்திருப்பான், (நீதி. 24:16) என்ற வசனத்தின்படி நாம் உற்சாகமடைய வேண்டும். ஏனெனில் நம்மை பெலப்படுத்துகிறவர் கிறிஸ்து. தினமும் அவரது பெலனுக்காக நாம் அவரது சமூகத்தில் காத்துநிற்க வேண்டியது அவசியமாகிறது. ஏனெனில், ’இளைஞர் இளைப்படைந்து சோர்ந்துபோவார்கள், வாலிபரும் இடறிவிழுவார்கள். கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலனடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்’ (ஏசாயா 40:30,31).

எனவே இந்த வருடத்திலாவது நமது தீர்மானங்கள் முழுமையாக நிறைவே(ற்)றிட, நம்மை பெலப்படுத்தும் கிறிஸ்துவின் பாதத்தில் தினமும் அர்ப்பணித்து செயல்படுவோம்; அவ்விதம் செயல்பட்டால், வருட இறுதியில் திரும்பிப் பார்க்கும்போது அதற்குரிய பலனை அடைந்திருப்போம்.

தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார். [பிலிப்பியர் 2:13]

Tuesday, December 27, 2016

ஆவியின் கனி - அன்பு

கனியுள்ள கிறிஸ்தவ வாழ்க்கையின் அவசியம் குறித்து கடந்த இதழில் கண்டோம். ஆவியின் கனியின் ஒன்பது அம்சங்களையும் முறையாக நமது கிறிஸ்தவ வாழ்க்கையில் வெளிப்படுத்த வேண்டியது ஆவியானவரால் நடத்தப்படும் விசுவாசிகளின் கடமை. எந்தவொரு மரத்தின் வளர்ச்சி மற்றும் முதிர்ச்சியின் வெளிப்பாடே அதன் கனி என நாம் அறிவோம். வளர்ச்சி என்ற ஒரு நிலையை அது தொடர்ச்சியாக அடையும் போது கனி என்பது அதில் தானாக வருகிற ஒன்று. கனி ஒன்றை வரவழைத்து அதன் வளர்ச்சி மற்றும் முதிர்ச்சியை நிரூபிக்க வேண்டிய அவசியம் எந்த மரத்திற்கும் இல்லை. அதுபோலவே ஆவிக்குரிய கனியும் ஆவியினால் நடத்தப்படும் அவரது பிள்ளைகளின் வாழ்க்கையில் தானாக வெளிப்பட வேண்டிய ஒன்று. நமது பக்தியினாலோ சக்தியினாலோ நாம் முயன்று வெளிப்படுத்த வேண்டிய ஒன்று அல்ல.

இருப்பினும் நமது கிறிஸ்தவ வாழ்க்கையில் ஆவியின் கனி வெளிப்பட, நாம் செய்ய வேண்டிய கடமைகளும் உண்டு. அது யாதெனில், தேவனுடைய ஆவியினால் நடத்தப்பட நம்மை முழுமையாக ஒப்புக் கொடுப்பது ஒன்றேயாகும். நாம் ஆவியினாலே பிழைத்திருந்தால், ஆவிக்கேற்றபடி நடக்கவும் கடவோம் (கலா. 5: 20). ஆவியின் கனியில் அன்பு என்னும் அம்சத்தை நம் வாழ்வில் வெளிப்படுத்துவது குறித்து இந்த இதழில் காண்போம்.

அன்பு என்ற வார்த்தைக்கு ஆங்கிலத்தில் Love என்ற ஒரே ஒரு வார்த்தை இருப்பினும் அது பல்வேறு நிலைகளில் பல்வேறு விதமான காரியங்களைக் குறிக்கும்.   கிரேக்க மொழியில் அது ”அகாப்பே” (தியாகமான தெய்வீக அன்பு), ”பிலியோ” (சகோதர அன்பு), ”ஈராஸ்” (இருபாலருக்கிடையிலான காதல்) மற்றும் ”ஸ்டோர்ஜ்” (பெற்றோர் பிள்ளைகள் பாசம்) என்று அன்பினை நான்கு விதமாக குறிக்கிறது. எந்த நிலையிலும் மாறாத, உச்சநிலை அன்பு என்பது தேவன் நம்மீது பொழிந்த அகாப்பே அன்பாக இருப்பதால் வேதாகமம் அதைப் பற்றியே அதிகமாக போதிக்கிறது. மேலும், அகாப்பே அன்பை அனுபவிக்கும் ஒவ்வொருவரும் பிலியோ என்னும் சகோதர அன்பை மற்றவர்களிடம் வெளிக்காட்ட வேண்டும் எனவும் வலியுறுத்துகிறது. இடைப்பட்ட நிலையில் உள்ள இரண்டுவகை அன்பு உட்பட அனைத்து வகையான அன்பையும் ஆவியின் கனியாகிய அன்பு என்ற அம்சத்தில் புரிந்து கொண்டு அவைகளை நாம் முறையாக செயல்படுத்த முடியும்.

பழைய ஏற்பாட்டுக் காலத்தில் கொடுக்கப்பட்ட பத்துக் கட்டளைகளில் 4 தேவனுடனும் 6 சக மனிதனுடனும் நமக்கு இருக்க வேண்டிய காரியங்களைக் கண்கூடாக காண்கிறோம் (யாத். 20:1-17). அவைகளையே சுருக்கமாக இரண்டு கற்பனைகளாக இயேசுகிறிஸ்து கூறும்போது 1 தேவனுடனும் 1 மனிதனுடனும் இருக்கவேண்டிய காரியமாக கூறுகிறார். ”உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக; இது முதலாம் பிரதான கற்பனை. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே” (மத். 22:37-39, மாற்கு 12:30,31).  இவற்றில், அன்புகூருவது என்பது தான் மையமாக இருக்கிறது.
இதையே புதிய ஏற்பாட்டுக் காலத்தில் பவுல் ஒருபடி மேலே போய், ”உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக, என்கிற இந்த ஒரே வார்த்தையிலே நியாயப்பிரமாணம் முழுவதும் நிறைவேறும்” என்கிறார் (ரோமர் 13:9, கலா 5:14). உலகப்பிரகாரமான மனிதர்களெல்லாம் பிறர்மீது சகோதர அன்பை (Brotherly Love) ஒரு மனிதாபிமான அன்பாக (Humanitarian Love) மட்டுமே வெளிப்படுத்துகிறார்கள். ஆனால், கிறிஸ்துவில் அன்புகூருகிறவர்கள் அதை ஒரு கட்டாயத்தின் பேரில் கடமைக்கான காரியமாக எடுத்துக் கொள்ளாமல், பரிசுத்த ஆவியினாலே நம் இருதயங்களில் ஊற்றப்பட்ட அன்பினை (ரோமர் 5:5) நாம் மற்றவர்களிடம் தாராளமாக வெளிப்படுத்த வேண்டும். அப்போது தான் அது ஆவியின் கனியாகிய அன்பாக வெளிப்படும். இல்லையெனில் அது வெறும் மனிதாபிமான அன்பு தான்.
மற்றவர்களிடத்தில் வெளிப்படுத்தபட வேண்டிய அன்பின் அளவுகோல் நாம் முதலில் நம்மில் எவ்வளவு அன்பு கூருகிறோமோ அந்த அளவு தான். அதே அளவுக்கு பிறனிடத்திலும் அன்புகூர வேண்டும். தன் சொந்த மாம்சத்தைப் பகைத்தவன் ஒருவனுமில்லையே (எபே. 5:29). இந்த கண்ணோட்டத்தில் இன்னுமொரு காரியத்தையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். உலகத்தாரைக் காட்டிலும் தேவனுடைய ஆவியினால் நடத்தப்படுகிறவர்கள் இன்னும் சற்று அதிகமாய் பிறனிடத்தில் அன்பு செலுத்த வேண்டும். ஏனெனில், அன்பின் இலக்கணமே தேவன் தான். ”அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்; நாமும் சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்” (I யோவான் 3:16). மட்டுமல்ல, 1 கொரிந்தியர் 13ல் கூறப்பட்டுள்ள அன்பின் வரையறைகளுக்கு ஏற்ற எடுத்துக்காட்டாக தேவனுடைய அகாப்பே அன்பு விளங்குவதால் அதனை அனுபவித்த நாம் ஒவ்வொருவரும் அதை நம் வாழ்வில் பிரதிபலிக்க வேண்டும்.
”இவள் செய்த அநேக பாவங்கள் மன்னிக்கப்பட்டது; இவள் மிகவும் அன்புகூர்ந்தாளே. எவனுக்குக் கொஞ்சம் மன்னிக்கப்படுகிறதோ, அவன் கொஞ்சமாய் அன்பு கூருவான்” என்று இயேசு கிறிஸ்து ஒரு சூழ்நிலையில் கூறினார் (லூக்கா 7:47). நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டதெல்லாம் அவருடைய அநாதி அன்பு மற்றும் நம்மீது பாராட்டின அவரது கிருபை. ”அவர் முந்தி நம்மிடத்தில் அன்புகூர்ந்தபடியால் நாமும் அவரிடத்தில் அன்புகூருகிறோம். … … தேவனிடத்தில் அன்புகூருகிறவன் தன் சகோதரனிடத்திலும் அன்புகூர வேண்டுமென்கிற இந்தக் கற்பனையை அவராலே பெற்றிருக்கிறோம்” (I யோவான் 4:19, 21).


நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள் என்றார் இயேசுகிறிஸ்து (யோவான் 13:35). எனவே அன்பு என்பது நம் கிறிஸ்தவ வாழ்க்கையின் அடையாளம். அந்த அன்பின் வெளிப்பாடாக பிறருக்கு நன்மை செய்வதிலே நாம் சோர்ந்து போகாமலிருக்க வேண்டும் (II தெச. 3:13). இதன் மூலம் அன்பு என்னும் பண்பினை நடைமுறைப்படுத்துவதில் உலகத்தாருக்கும் ஆவிக்குரியவர்களுக்கும் உள்ள பெரிய வித்தியாசத்தை உலகம் புரிந்து கொண்டு, அது தேவன் பக்கமாய் திரும்பிட, நாம் உறுதி கொள்ள வேண்டும். அதற்காக ஆவியானவராலே பிழைத்திருந்து, ஆவிக்கேற்றபடி நடக்க நம்மை நாமே அர்ப்பணிப்போமாக. ஆமென்.  

 [இது பாலைவனச் சத்தம் - டிசம்பர் 2016 இதழில் வெளியான எனது கட்டுரை]

Wednesday, November 23, 2016

கனியுள்ள கிறிஸ்தவ வாழ்க்கை

கனியுள்ள கிறிஸ்தவ வாழ்க்கை என்ற சொற்றொடரை விசுவாசிகள் நம்மில் பலரும் பரவலாக கேட்டிருக்கக் கூடும். மரம் செடி கொடிகளின் வாழ்க்கை சுழற்சியில், கனி கொடுப்பது என்பது அவற்றின் முக்கியமான  கட்டம். கனிகொடுப்பதில் தான் அவற்றின் பயன்பாடு பூரணமடைகிறது. அது மட்டுமல்லாமல், அடுத்த தலைமுறை உருவாகி வளரவும், பெரும்பாலான சூழ்நிலையில் இவற்றின் கனி சார்ந்த விதைகள் தான்  காரணமாக அமைகின்றன. எனவே அவற்றிற்கு கனி கொடுத்தல் என்பது அவசியமான ஒன்று. அதுபோலவே, நாமும் நமது கிறிஸ்தவ வாழ்க்கையில் கனி கொடுக்க எதிர்பார்க்கப் படுகிறோம்.

யோவான் சுவிசேஷம் 15ம் அதிகாரத்தில், தம்மில் நிலைத்திருப்பது குறித்து இயேசுகிறிஸ்து தன் சீடர்களுக்கு விளக்கும்போது பின்வருவனவற்றை தெளிவாகக் கூறுகிறார்: ”நான் மெய்யான திராட்சச்செடி, என் பிதா திராட்சத் தோட்டக்காரர் (வச.1); நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள் (வச. 5a). என்னில் கனிகொடாதிருக்கிற கொடி எதுவோ அதை அவர் அறுத்துப்போடுகிறார்; கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம்பண்ணுகிறார் (வச. 2); ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான் (வச. 5b); நீங்கள் மிகுந்த கனிகளைக் கொடுப்பதினால் என் பிதா மகிமைப்படுவார், எனக்கும் சீஷராயிருப்பீர்கள் (வச. 8); நீங்கள் போய்க் கனிகொடுக்கும்படிக்கும், உங்கள் கனி நிலைத்திருக்கும்படிக்கும், நான் உங்களை ஏற்படுத்தினேன் (வச. 16)”. இவற்றின் மூலம் நமது கிறிஸ்தவ வாழ்க்கையில் கனிகொடுப்பதின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்கிறோம். 

பொதுவாகவே மரமென்றால் கனி கொடுக்கத்தான் செய்யும். ஆனால் அது நல்ல கனியால் அல்லது கெட்ட கனியா என்பது தான் காரியம் என்றார் இயேசுகிறிஸ்து (மத். 12:33). நீதிமானுடைய பலன் ஜீவவிருட்சம் (நீதி. 11:30). அப்படியானால், நாம் எவ்வகையான கனியைக் கொடுக்க வேண்டும்?. கலாத்தியர் 5:22-23ன் படி, ’ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம்,சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை’. ஆவியின் கனி என்பது ஒருமையில் குறிப்பதாக இருப்பினும் அதில் 9 வகையான காரியங்கள் குறிப்பிடப்படுகிறது. இது சுவைகளை ஆறு வகைப்படுத்துவது போல, ஆவிக்குரிய கனியையும் ஒன்பது அம்சங்களில் வர்ணிக்கிறது. மேலும், ஆவியின் கனி, சகல நற்குணத்திலும் நீதியிலும் உண்மையிலும் விளங்கும் (எபே. 5:9) என்ற வசனத்தில் ஆவியின் கனியின் பல அம்சங்களும் ’சகல நற்குணத்தில்’ எனற ஒரே வார்த்தையில் அடக்கமாகிறது.

ஆவியின் கனியை தெளிவாக புரிந்து கொள்ள, நமக்கு ஒப்புமைக்காகத் தான் மாம்சத்தின் கிரியைகள் என  கலாத்தியர் 5:19-21 வரை கொடுக்கப்படுள்ளன. மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன, அவையாவன: விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம்,  விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள், பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே. கிறிஸ்துவை அறியாதவர்கள் வாழ்க்கையில் மேற்கண்ட காரியங்கள் ஒன்று முதல் அனைத்துமே காணப்படக் கூடும். ஆனால், கிறிஸ்தவனுடைய வாழ்க்கையில் இவைகள் இருக்கலாகாது. இது சாத்தியமான ஒன்று.

எப்படியெனில்,  ஆவியின் கனி என்பது பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னத்தினால் ஒரு கிறிஸ்தவனுடைய வாழ்க்கையில் வெளிப்படையாக ஏற்படும் பலன். இயேசுகிறிஸ்துவை இரட்சகராக ஒருவன் ஏற்றுக்கொள்ளும் போதே பரிசுத்த ஆவியானவர் அவனுடைய உள்ளத்தில் வந்துவிட்டாலும், அவருடைய தொடர்ச்சியான ஆளுகையின் விளைவாக அவனுடைய வாழ்க்கையில் தொடர் மாற்றங்கள் ஏற்படுகின்றன. தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும்பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார் (ரோமர் 8:29.) இவ்விதம் நம்மை கிறிஸ்துவின் சாயலில் உருவாக்குவதே பரிசுத்த ஆவியானவரின் பணி. இந்த ஆவியானவரின் ஆளுகைக்கு நம்மை அர்ப்பணிக்கும்போது நம்மில் ஆவியின் கனி வெளிப்படும்.

அதற்கு நாம் செய்ய வேண்டியவை என்ன? நமது கிறிஸ்தவ வாழ்க்கையில் நம் மாம்ச சிந்தைக்கும் ஆவிக்குரிய சிந்தைக்கும் நிரந்தர போராட்டம் உண்டு. மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும், ஆவி மாம்சத்துக்கு விரோதமாகவும் இச்சிக்கிறது; நீங்கள் செய்யவேண்டுமென்றிருக்கிறவைகளைச் செய்யாதபடிக்கு, இவைகள் ஒன்றுக்கொன்று விரோதமாயிருக்கிறது (கலா. 5:17). ஆனால், ஆவிக்கேற்றபடி நடந்துகொள்ளுங்கள், அப்பொழுது மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள் (கலா 5:16). மரணத்துக்கேதுவான பாவத்துக்கானாலும், நீதிக்கேதுவான கீழ்ப்படிதலுக்கானாலும், எதற்குக் கீழ்ப்படியும்படி உங்களை அடிமைகளாக ஒப்புக்கொடுக்கிறீர்களோ, அதற்கே கீழ்ப்படிகிற அடிமைகளாயிருக்கிறீர்களென்று அறியீர்களா? (ரோமர் 6:16) என்கிறார் பவுல். ஒன்றை நாடி மற்றொன்றை அடைய வேண்டுமென்றால் ஒன்றை விட்டு விலகியோடித் தான் ஆக வேண்டும் என்பது தீமோத்தேயுவுக்கு பவுலின் ஆலோசனை (I தீமோ.6:11; II தீமோ. 2:22).

நம் வாழ்க்கையில் வெளிப்படும் கனி எந்த வகையானது என்பது நம் இருதயம் எதினால் நிறைந்திருக்கிறது என்பதைப் பொறுத்தது. இருதயத்தின் நிறைவை வாய் பேசும் (மத். 12:34). இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும், கொலைபாதகங்களும், விபசாரங்களும், வேசித்தனங்களும், களவுகளும், பொய்ச்சாட்சிகளும், தூஷணங்களும் புறப்பட்டுவரும் என்றார் இயேசுகிறிஸ்து (மத். 15:19). தினமும் வேதத்தை வாசித்து தியானித்து, தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, நமது மனம் தினமும் புதிதாக வேண்டும் (ரோமர் 12:2).  இவ்விதம்  கனி தரும் கிறிஸ்தவ வாழ்க்கையில் நமது தீர்மானமும் செயல்பாடும் முக்கிய பங்கை வகிக்கின்றன. எனவே, அவ்விதம் நல்ல தீர்மானங்களை எடுத்து செயல்படுத்துவோம்; கனியுள்ள வாழ்க்கை வாழ்வோம். தேவன் தாமே நம்மை அதற்கு பெலப்படுத்துவாராக.

 [இது பாலைவனச் சத்தம் - நவம்பர் 2016 இதழில் வெளியான எனது கட்டுரை]

Sunday, November 06, 2016

பொல்லாங்கனை ஜெயித்ததினால் எழுதுகிறேன்

கிறிஸ்துவில் பிரியமான சகோதர சகோதரிகளுக்கு நம் ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு என் அன்பின் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அப்போஸ்தலனாகிய யோவான், தான் எழுதிய நிரூபத்தின் நோக்கங்களை மூன்று விதமான மக்களுக்கும் வெவ்வேறாக குறிப்பிட்டத்தையும் அவற்றில் பிள்ளைகளுக்கும் பிதாக்களுக்கும் எழுதியவற்றையும் கடந்த இதழில் விரிவாக தியானித்தோம். வாலிபர்களுக்கு அவர் எழுத்தும் நோக்கத்தினை இந்த இதழில் காண்போம். 
வாலிபர்களுக்கு அவர் எழுதுவதென்ன? ’பொல்லாங்கனை ஜெயித்ததினால் எழுதுகிறேன்’ என்கிறார் (1 யோவான் 2:13b). இரண்டாம் முறையும் அதையே தான், ஆனால் மூன்று படிநிலைகளில் கூறுகிறார். பலவானாய் இருக்கிறதினாலும், தேவ வசனம் உங்களில் நிலைத்திருக்கிறதினாலும், நீங்கள் பொல்லாங்கனை ஜெயித்ததினாலும் உங்களுக்கு எழுதுகிறேன் (1 யோவான் 2:14b) என்கிறார். ஆவிக்குரிய நிலையில் துடிப்பான வாலிபர்களாக இருக்க வேண்டுமெனில், முதலில் இரட்சிப்பு என்ற பிள்ளைகளின் அனுபவம் அடிப்படைத் தேவை. அதைத்தொடந்து வாலிபர்களாய் விளங்கிட நாம்  பொல்லாங்கனை ஜெயிக்க வேண்டும். பொல்லாங்கனை ஜெயிப்பது எப்படி? அவைகளில் உள்ள படிநிலைகளை இங்கு காண்போம். 
பலவான்களாய் இருப்பதினால்:
வாலிபர்கள் இயல்பாகவே பலம் பொருந்தியவர்களாக இருப்பதினால், அவர்களால் எதிராளிகளை எளிதில் மேற்கொள்ள முடியும். வாலவயதின் குமாரர் பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள் (சங்கீதம் 127:5) என்பது அவர்களுக்கு இரட்டை பலத்தைத் தருகிறது. ஆனால், ஆவிக்குரிய போராட்டத்தில் வாலவயதினர் பலப்படவேண்டியது உடல் ரீதியாக அல்ல; ஆவிக்குரிய நிலையில். கடைசியாக, என் சகோதரரே, கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள் என்கிறார் பவுல் (எபேசியர் 6:10). சோர்ந்துபோகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார் என்கிறார் ஏசாயா தீர்க்கத்தரிசி (ஏசாயா 40:29).
உடல் ரீதியான பெலனுக்கு தினமும் நல்ல சத்தான உணவு, உடற்பயிற்சி மற்றும் முறையான ஓய்வு தேவை. அதுபோன்றே ஆவிக்குரிய பெலனுக்கு தினமும் ஆவிக்குரிய வசன உணவூட்டம், கர்த்தரிடத்தில் காத்திருக்கும் ஜெபம் மற்றும் உற்சாகமான ஊழியம் போன்ற பயிற்சிகள் தேவை. ஆவிக்குரிய போராட்டத்தில், தன் சொந்த பலனை நம்பி களம் இறங்குபவர்கள் தோற்றுப் போவது உறுதி. இளைஞர் இளைப்படைந்து சோர்ந்துபோவார்கள், வாலிபரும் இடறிவிழுவார்கள். கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலனடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள் (ஏசாயா 40:30,31).
வேதவசனம் நிலைத்திருப்பதினால்:
யோவான் 15:4-10 வசனங்களில் விசுவாசிகள் தன்னில் நிலைத்திருப்பதைக் குறித்து இயேசு விபரமாக கூறுகிறார். என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்கமாட்டாததுபோல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள் (யோவான் 15:4). ஆதியிலே வார்த்தையாக தேவனிடத்தில் இருந்தது, பின்னர் மாம்சத்தில் வெளிப்பட்டவர் தான் இயேசு கிறிஸ்து. எனவே வேத வசனம் நம்மில் நிலைத்திருப்பது என்றால், இயேசு நம்மிலும் நாம் அவரிலும் நிலைத்திருப்பது தான்.  
அப்படி நாம் அவரில் நிலைத்திருக்க வேண்டுமெனில், நாம் அவரது கற்பனைகளுக்குக் கீழ்பப்டிய வேண்டும்.  நான் என் பிதாவின் கற்பனைகளைக் கைக்கொண்டு அவருடைய அன்பிலே நிலைத்திருக்கிறதுபோல, நீங்களும் என் கற்பனைகளைக் கைக்கொண்டிருந்தால், என்னுடைய அன்பிலே நிலைத்திருப்பீர்கள் என்றார் இயேசு (யோவான் 15:10). நாம் அவரது கற்பனைகளைக் கைக்கொள்ள வேண்டுமென்றால், அவைகளை தினமும் வாசிக்க வேண்டும், நேசிக்க வேண்டும், தியானிக்க வேண்டும், முக்கிய வசனங்களை மனப்பாடம் செய்ய வேண்டும், அவைகளை கடைபிடிக்க வேண்டும்.  அப்போது தான் வாலிபர்களாக பொல்லாங்கனை ஜெயிக்க முடியும். 
பொல்லாங்கனை ஜெயித்ததினால்:
உலகத்தில் நாம் நமது பெற்றோர்களால் பிறப்பிக்கப்பட்டிருந்தாலும் இயேசுகிறிஸ்துவை நம் இருதயத்தில்  விசுவாசித்து அவரை நம் பாவபரிகர இரட்சகராக ஏற்றுக் கொள்ளும் போது நாம் தேவனுடைய பிள்ளைகளாகிறோம்; அதாவது, நாம் தேவனால் பிறந்தவர்களாகிறோம் (யோவான் 1:12,13). தேவனாலுண்டாயிருந்தவர்கள் பொல்லாங்கனை ஜெயிக்கமுடியும் என்பது வாக்குத்தத்தம். தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யானென்று அறிந்திருக்கிறோம்; தேவனால் பிறந்தவன் தன்னைக் காக்கிறான், பொல்லாங்கன் அவனைத் தொடான் (I யோவான் 5:18). யோவான் அப்போஸ்தலன் மேலும் கூறுகிறார், நீங்கள் தேவனாலுண்டாயிருந்து, அவர்களை ஜெயித்தீர்கள்; ஏனெனில் உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர் (1 யோவான் 4:4). உங்களில் ’இருக்கிறவர்’ பெரியவர். அதாவது நம்மில் தேவ ஆவியானவர் அவருடைய ஆளுமை செயல்பாடுகள் தொடர்ந்து இருந்துகொண்டிருக்கும் போது மட்டுமே நாம் பொல்லாங்கனை ஜெயிக்க முடியும்.

ஆவிக்குரிய வாழ்க்கையில் வாலிபராய் இருக்கும் நாம் பொல்லாங்கனை ஜெயிக்க வேண்டும்; பொல்லாங்கனை ஜெயிக்க நாம் கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படவேண்டும். அவருடைய வசனத்தில் நிலைத்திருக்கும் போது தான் அந்த பலம் நமக்குக் கிடைக்கும். எனவே அவருடைய வசனத்தை நாம் முறையாக வாசிப்போம்; நேசிப்போம்; தியானிப்போம்; அவைகளை முறையாக கடைபிடிப்போம். அப்படி அவரது கற்பனைகளை நாம் கடைபிடிக்கும் போது இயேசுவும் நம்மில் நிலைத்திருப்பார்; நாம் பொல்லாங்கனை எளிதில் ஜெயிக்கலாம்.

இந்தவிதம் பொல்லாங்கனை ஜெயிக்கும் அனுபவத்திற்குள் ஆண்டவர் நம்மை வழிநடத்துவாராக. ஆமென். 


[பாலைவனச் சத்தம் - அக்டோபர் 2016 இதழில் வெளியான எனது கட்டுரை]