Friday, July 21, 2017

புறப்பட்டுப் போய் … ... ...

{கடந்த வாரம் இதே நாளில் (14.07.2017) குவைத் IEM ஜெபத்தில் நான் பகிர்ந்து கொண்ட சிந்தனை}

தேவனுடைய கிருபையினால் இந்த நாளிலும் நாம் இப்படியாக கூடி ஜெபிக்க கிடைத்த வாய்ப்பு, இதில் அவருடைய வசனத்தை உங்களுடன் பகிந்து கொள்ள தேவன் எனக்குக் கொடுத்த வாய்ப்புக்காக அவருக்கு நன்றி செலுத்துகிறேன். இது பெரிய பிரசங்கம் அல்ல. இன்று வெள்ளிக்கிழமை; சபைகளில் சென்று தேவசெய்திகளைக் கேட்டிருப்போம். இல்லையெனில் இனி கேட்க இருக்கிறோம். நானும் ஏற்கனவே இன்று கேட்டாகி விட்டது; இனியும் கேட்கவிருக்கிறேன். எனவே இது பெரிய செய்தி அல்ல. இது ஒரு சிறிய சிந்தனை தான். 

இப்போது IEM ஊழியங்களை அறிமுகப் படுத்திவிட்டு, நாம் எந்த அளவில் அதில் பங்கெடுக்கலாம் என ஒரு பெரிய பட்டியலைக் காட்டினார்கள். சிறியதாய் ஒன்றில் ஆரம்பித்து அது வரவர பெரியதாகப் போய் கடைசியாக வெடிகுண்டு போடுற மாதிரி ஒன்றைக் கூறினார்கள்.  சிறியதாக முதலில் ஜெபிக்கிற காரியம்... அது ரொம்ப சிம்பிள். அது யார் வேண்டுமானாலும் செய்யலாம். செய்யவில்லையென்றாலும் கூட செய்ததாக சொல்லிக் கொள்ளலாம். ஆனால் கடைசியாகச் சொன்னது மிஷனெரியாகப் போகிறது... அது சாதாரண காரியம் அல்ல. ஆனால், விசுவாசிகளாகிய நாம் அனைவருமே மிஷனெரிகளாக அழைக்கப்பட்டிருக்கிறோம்.

இயேசுகிறிஸ்துவின் இறுதிக்கட்டளையாக (Great Commisison) மத்தேயு 28:19 ல் ’ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்; இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார்’ என வாசிக்கிறோம். ஆகையால், நீங்கள் புறப்பட்டுப் போய் … … போகவேண்டும் என்பது சீடர்களுக்குக் கொடுக்கப்பட்ட கட்டளை. இயேசுவின் சீடர்கள் என சொல்லிக் கொள்ளும் நமக்கும் இது கட்டளையாக கொடுக்கப்பட்டுள்ளது. “The great commission is not an option to be considered; it is a command to be obeyed”  என்றார் Hudson Taylor என்ற மிஷனெரி.

ஆகையால், புறப்பட்டுப் போய்… நாமும் இந்தியாவிலிருந்து புறப்பட்டு இங்கே குவைத் வந்திருக்கிறாம். ஆனால், நாம் வந்த நோக்கம் வேறு என்பது நமக்கே தெரியும். அங்கே இருக்கிற பொருளாதார மற்றும் சில சூழ்நிலைகள் நமது ஒரு சில எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற வில்லை. எனவே அவற்றை நிறைவேற்றிக் கொள்வதற்காகவே நாம் இங்கே வந்திருக்கிறோம். நம்மில் யாருமே இந்த வசனத்தின் அடிப்படையில் தான் குவைத்திற்கு வந்திருக்கிறேன் என்று சொல்ல மாட்டோம் என நினைக்கிறேன். 

போ என்பது அந்தக் காலத்தில் கடினமான ஒன்று, ஆனால், இந்த காலத்தில் போவது எளிதான காரியமாகிவிட்டது. இன்னும் சொல்லப்போனால், இந்த காலத்தில் போகவேண்டியது கூட இல்லை. இண்டர்நெட், சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தியை பகிர்ந்து கொண்டால் உலகில் பல பாகங்களிலிருந்தும் பலர் நம்மைத் தொடர வாய்ப்பு உள்ளது. அந்த அளவுக்கு தகவல் தொழில்நுட்பங்கள் வளர்ந்து விட்டன. போகவேண்டியது கூட இல்லை. இந்த நாட்களில் போக வேண்டிய சூழ்நிலையும் கூட தானாகவே வந்துவிட்டது. தொழிலுக்காகவோ ஊழியத்திற்காகவோ விரும்பியோ விரும்பாமலோ நாம் போக வேண்டிய சூழ்நிலைகளும் உருவாகி விட்டன. இன்றைய உலக வளர்ச்சியினை நகரமயமாக்கல், உலகமயமாக்கல், தொழில்மயமாதல்  இப்படி எந்த வார்த்தைகளில் நாம் வர்ணித்தாலும் அதில் நாம் உள்ளடங்கியிருப்பதால், இந்தியாவில் ஒரு கிராமத்திலோ அல்லது நகரத்திலோ இருந்த நாம் இப்படியாக நாடுகடந்து நாடு வந்து சேர்ந்திருக்கிறோம். எனவே இப்போது போவது ஒரு பெரிய காரியமே அல்ல. 

நாமெல்லாரும் குவைத் வந்தாயிற்று. ஆனாலும் வந்த இந்த இடத்தில் அடுத்து செய்ய வேண்டிய காரியத்தை நாம் செய்கிறோமா என்பது தான் முக்கியமான காரியம். அது என்ன காரியம்? சகல ஜாதிகளையும் சீஷராக்கி … …  எனவே, ’மிஷனெரிகளாய் வட இந்தியாவில் ஊழியம் செய்பவர்கள் மட்டும் தான் மிஷனெரிகள்; அது அவர்கள் மேல் விழுந்த கடமை, எனவே அவர்களைத் தாங்குவது நம்முடைய கடமை; அத்துடன் நமது கடமை முடிந்து விட்டது’ என நாம் நினைக்கக் கூடாது. நாமும் இங்கு ஒரு மிஷனெரி போன்று தான் இருக்கிறோம். இருக்கிற இடத்திலே நாம் நம்முடைய வேலைகளில் உத்தமமாக கிறிஸ்தவ சாட்கியைக் காத்துக் கொள்கிறோமா? சாட்சியுடன் நடந்து கொள்வதுடன் மட்டுமல்லாமல் சாட்சி பகருகிறோமா என்பதும் முக்கியம். இருக்கிற இந்த இடத்திலும் ஆண்டவருக்காய் யாரையாகிலும் அதாயப்படுத்த முடியுமா என்ற சிந்தனை உள்ளவர்களாக நாம் இருக்க வேண்டும். 

பரிசுத்த வேதாகமத்தில் தேவனுடைய கட்டளையை ஏற்று புறப்பட்டுப் போன ஒருவரைக் குறித்த ஒரு சிந்தனையை உங்களிடம் பகிந்து கொண்டு செய்தியை முடிக்க விரும்புகிறேன். ஆபிரகாமைக் குறித்துச் சொன்னால், அதிகம் சொல்லிக் கொண்டே இருக்கலாம். ஆனாலும் ஆதியாகமம் 12 ம் அதிகாரம் முதல் நான்கு வசனங்களை மாத்திரம் பார்க்கலாம். அந்த வசனங்களை நான் உங்களுக்காக வாசிக்கிறேன். 

1. கர்த்தர் ஆபிராமை நோக்கி: நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ. 2. நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய். 3. உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன், உன்னைச் சபிக்கிறவனைச் சபிப்பேன்; பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும் என்றார். 4. கர்த்தர் ஆபிராமுக்குச் சொன்னபடியே அவன் புறப்பட்டுப் போனான்; லோத்தும் அவனோடேகூடப் போனான். ஆபிராம் ஆரானைவிட்டுப் புறப்பட்டபோது, எழுபத்தைந்து வயதுள்ளவனாயிருந்தான்.

ஆபிரகாமுக்கு அதுவரையும் குழந்தையில்லை என்பது நமக்குத் தெரியும். இப்போது வயது எழுபத்தைந்து; நூற்றி எழுபத்தைந்து வயது வரை அவன் உயிரோடு இருந்ததாக ஆதியாகமம் 25ல் நாம் பார்க்கிறோம். நூற்று எழுபத்தைந்து வருட தன் உலக வாழ்க்கையில், அவன் தனது எழுபத்தைந்தாவது வயதில் தேவனுடய அழைப்பைப் பெறிகிறான். சங்கீதம் 90:10ன் படி,  நமது ஆயுசு நாட்கள் எழுபது; பெலத்தின் மிகுதியினால் எண்பது; அதுவும் இடுப்புவலி மூட்டுவலி அது இது என கொஞ்சம் கஷ்டம் தான். நம்மில் பலரும் நமது ஆயுளில் பாதியில் அல்லது பாதியைக் கடந்து கொண்டு இருக்கிறோம். ஆபிரகாம் அழைப்பைப் பெற்றபோது தனது ஆயுள் நாளில் பாதியை இன்னும் கடக்கவில்லை. நமக்கும் இது மிகவும் தாமதமாகி விட்ட ஒன்று அல்ல. 

ஆபிரகாம் ஆண்டவரிம் இருந்து எப்படிப்பட்ட அழைப்பை பெற்றார் என்று நான் சிந்தித்த போது, அது எனக்கு மிகவும் பிரயோஜனமாகக் காணப்பட்டது. நாம் எப்போதுமே வீடுகளில் இந்த இரண்டாம் வசனத்தைத தான் சுவர்களில் மாட்டி வைத்திருப்போம், இல்லையெனில், மூன்றாம் வசனத்தைக் கூட நமக்குள் சொல்லிக் கொள்வோம். முதல் வசனம் தான் நிபந்தனை. முதல் வசனமாகிய நிபந்தனையை ஆபிரகாம் நிறைவேற்றும் போது, ஆண்டவர் அவ்வித காரியங்களை செய்வதாக வாக்குப் பண்னினார். ஆபிரகாம் அப்படியே நிறைவேற்றினார், ஆண்டவரும் அப்படியே வாய்க்கச் செய்தார் என்பதை பின்பு நாம் சரித்திரத்தில் காண்கிறோம். 

இந்த பின்னணியில், ஆபிரகாமை மூன்று விதமான காரியங்களில் இருந்து போகும்படியாக தேவன் அவனை அழைப்பதை இங்கே பார்க்கிரோம். முதல் வசனத்தில் பாருங்கள். ஒன்று, தேசத்தை விட்டுப் போக வேண்டும்; இரண்டு, இனத்தை விட்டுப் போக வேண்டும், மூன்று, தகப்பனுடைய வீட்டை விட்டுப் போக வேண்டும். அப்பொழுது இரண்டு மற்றும் மூன்றாம் வசனங்களில் சொல்லப்பட்ட ஆசீர்வாதங்கள் வந்து சேரும் என்கிறார். நான்காம் வசனத்தில் பார்க்கிறோம்… கர்த்தர் ஆபிராமுக்குச் சொன்னபடியே அவன் புறப்பட்டுப் போனான். 

நாமெல்லாரும் இங்கு வந்து விட்டோம். ஆனால், இங்கு சொல்லப்படிருக்கும் கோணத்தில் தான் வந்திருக்கிறோமா என்றால் இல்லை என்பது தான் பதிலாக இருக்கும். நம் நாட்டை விட்டு நாம்  வந்திருக்கிறோம். அங்கே நிலைமை சரியில்லை. அங்கு இருக்கும் அரசியல் நிலைமைகளுக்கு இடையில் இங்கு கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறோம். நாம் நமது இனத்தை விட்டு வந்திருக்கிறோமா? சிந்திக்க வேண்டும். இன்னும் நமது மொழியை மறக்கவில்லை. இன்னும் நமது கலாச்சாரத்தை நாம் மறக்கவில்லை. இன்னும் கொஞ்சம் உள்ளே சென்று நோக்கினால், வடக்கு தெற்கு, அது இது என பல்வேறு எண்ண ஓட்டங்கள் இங்கும் நமக்குள் ஓடிக்கொண்டிருக்கும். இங்கே இருந்து கொண்டும் நாம் இன்னும் அவைகளை விட்டுவிடவில்லை. இன்னும் குறிப்பாக, நாம் நமது தகப்பன் வீட்டை விட்டுவந்திருக்கிறோமா? நான் இங்கு வந்ததே அதற்காகத் தானே? பின்னர் எப்படி விட முடியும்? அப்படித் தானே? நமது சொந்தபந்தங்கள் அப்பா அம்மா நமது குடும்ப உறுப்பினர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தானே நாம் இங்கு வந்திருக்கிறோம். 

எனவே நாம் இங்கு வந்து சேர்ந்திருப்பது ஆபிரகாமுக்குக் கொடுக்கப்பட்ட அழைப்பு போன்றும் அவனது கீழ்ப்படிதல் போன்றும் அல்ல. ஆனால், இங்கு நாம் சிந்திக்க வேண்டியது, ஆபிரகாமை எழுபத்தைந்து வயதில் ஆண்டவர் அழைத்த அழைப்பு ஒரு சாதாரண அழைப்பு அல்ல; அவனது கீழ்ப்படிதலும் ஒரு சாதாரண கீழ்ப்படிதல் அல்ல. நாமெல்லாரும் இங்கு வந்து சேர்ந்தது கூட, ஏதோ ஒருநாளில் திடீரெனெ எடுப்பப்பட்ட தீர்மானம் அல்ல, சில மாதங்களோ வருடங்களோ அதைக்குறித்து யோசித்து தீர ஆராய்ந்து வந்து சேர்ந்திருக்கிறோம். இப்போது நாம் இங்கு இருந்தாலும் வயதான நாட்களிலாவது நாமும் நமது சந்ததியும் பொருளாதார நிலையில் வலுவாக நிம்மதியாக இருக்க வேண்டும் என்பதற்காக நாம் இங்கே இப்போது இருக்கிறோம். ஆபிரகாமோ எல்லவற்றையும் விட்டுவிட்டுப் போகும்படி அழைக்கப்பட்டான். 

எல்லாவற்றையும் விட்டுவிட்டு செல்வதென்றால், பின்னர் வாழ்க்கை என்பது தான் என்ன? என்ற சிந்தனை ஆபிரகாமுக்கு வந்திருக்கக் கூடும். அந்த சூழ்நிலையிலும் அவர் வாழ்க்கையைக் குறித்து ஒரு சரியான நிலைப்பாட்டினை எடுத்ததன் விளைவு தான் அவனது கீழ்ப்படிதல். நாம் எதற்காக இந்த உலகத்தில் வாழ்கிறோம். சிறுவயதில் கஷ்டப்பட்டு படித்தோம்; இப்போதும் கடினமாக உழைக்கிறோம்; நம் சந்ததிக்காக சேர்க்கிறோம்; ஒரு கட்டத்தில் உலகத்தை விட்டுக் கடந்தும் செல்வோம். இந்த கால ஓட்டத்தில் கடந்து செல்வது மட்டும் தான் வாழ்க்கையா? தேவன் நம் ஒவ்வொருவரையும் குறித்து நோக்கங்களும் திட்டங்களும் வைத்திருக்கிறார். அவற்றை நாம் நிறைவேற்ற வேண்டும். 

ஆபிரகாம் இவ்விதமாகத் தான் வாழ்க்கையைக் குறித்து சிந்தித்திருக்க வேண்டும். வாழ்க்கை என்பது வெறுமனே கடந்து செல்வது மட்டுமல்ல; திட்டங்களை நிறைவேற்றுவது தான் என அவர் உணர்ந்திருக்க வேண்டும். நிறைவேற்றுதல் என்னும் போது எதனை? எனது விருப்பங்களையா? பெற்றோர் அல்லது சமுதாய எதிர்பார்ப்புகளையா? இல்லை…  நம்மைக்குறித்த தேவனுடைய சித்தத்தை நம் வாழ்க்கையில் நிறைவேற்றி முடிப்பது தான் வாழ்க்கை. வாழ்க்கையைக் குறித்த இந்த கண்ணோட்டம் இருந்த காரணத்தினால், ஆபிரகாமால் முழுமையாக விட்டுப் போக முடிந்திருக்கிறது. அவரது சந்ததியும் நன்றாக ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறது.

நாம் ஒருவேளை இவ்விதமாக அழைக்கப்படாவிட்டாலும் இது குறித்த சிந்தனை, வாழ்க்கையைக் குறித்த நமது சிந்தனையை மாற்றியமைக்கிறது. இன்று நமது சிந்தனை எப்படி இருக்கிறது? நாமெல்லாரும் மிஷனெரி ஊழியங்களில் ஏதோவொரு விதங்களில் ஈடுபடுகிறோம், அது நல்லது. ஜெபிக்கிறோம்… கொடுக்கிறோம்… அனுப்புகிறோம்.. ஆனால், போகவும் ஆயத்தமாக இருக்கிறோமா? ’அன்பே இல்லாமல் நம்மால் கொடுக்க முடியும்; ஆனால் கொடுக்காமல் அன்பு செலுத்த முடியாது’ என யாரோ ஒருவர் கூறியதாக ஒரு மேற்கோள் சொல்லப்படுவதைக் கேட்டிருக்கிறேன். ஆனால், மிஷனெரி ஊழியங்களில் பல நேரங்களில் ஜெபிக்காமல் நம்மால் கொடுக்க முடியும்; ஆனால் கொடுக்காமல் அல்லது ஈடுபடாமல், நம்மால் ஜெபிப்பதை மட்டுமே செய்துகொண்டிருக்க முடியாது. ஜெபம் முக்கியமான அடிப்படையான ஒன்று. ஜெபம் நம்மை ஈடுபாட்டுக்குள் வழிநடத்தும். அப்போஸ்தலர் 1:8 ல் ’பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்’ என்று பார்க்கிறோம். அதாவது முதலில் இருக்கும் இடத்தில், இருக்கும் நாட்டில், பக்கத்து இடங்களில், உலகத்தில் அனைத்து நாடுகளிலும் நாம் சாட்சிகளாக இருக்க அழைக்கப் பட்டிருக்கிறோம்.

எனவே ஊழியங்களுக்காக நாம் ஜெபிப்பது நல்லது. ஜெபிக்கும் போது நம்மால் கண்டிப்பாக கொடுக்கவும் முடியும். ஆனால், ஆபிரகாமுக்கு வந்த அழைப்பு நமக்கும் வருமென்றால் சுவிசேஷம் நிமித்தமாய் புறப்பட்டுச் செல்லவும் நாம் ஆயத்தமாக இருக்கிறோமா என்று நம்மை நாமே ஆராய்ந்து பார்ப்போம். நம் சொந்த நாட்டைவிட்டு வந்து விட்ட நாம் வந்த இடத்தில் சாட்சிகளாக வாழுகிறோமா? சாட்சி பகருகிறோமா? சிந்தித்துப் பார்ப்போம். அர்ப்பணிப்போம். தனிப்பட்ட முறையில் தேவன் நம்மோடு இடைபட்டு வழிநடத்துவார். 

ஆமென்.  

- பேதுரு தேவதாசன்

Wednesday, July 12, 2017

ஆவியின் கனி - விசுவாசம்

விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் விசுவாசக் குடும்பத்தார் அனைவரையும் வாழ்த்துகிறேன். ஆவியின் கனி வரிசையில் நற்குணத்தைத் தொடர்ந்து நம்மிடம் காணப்பட வேண்டிய இன்னுமொரு அம்சம் விசுவாசம் என்பதாகும்.
’விசுவாசம்’ என்ற வார்த்தையை ’Faith’ என நாம் எளிதில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து விடுவோம். ஆனால் NIV மற்றும் NKJV போன்ற முக்கிய ஆங்கில வேதாகமங்களிலோ இந்த வார்த்தைக்கு ’Faithfulness’ என்ற வார்த்தை பயன்படுத்தப் பட்டுள்ளது. இந்த faithfulness என்ற வார்த்தை அப்படியே உண்மை, சத்தியம் என்ற வார்த்தைகளுக்கும் பயன்படுத்தப் பட்டுள்ளது. எனவே ஆவியின் கனியாகிய விசுவாசம் என்ற வார்த்தையானது விசுவாசித்தல் என்ற காரியத்தை மட்டுமல்ல, விசுவாசமாக / நம்பிக்கைக்குப் பாத்திரமாக நடந்து கொள்ளுதல் என்ற காரியத்தை இந்த ஆவியின் கனி வரிசையில் குறிப்பதாக அறியலாம். கிரேக்க மொழியில் இந்த இரண்டுகாரியங்களுக்கும் ‘Pistis’ என்ற ஒரே வார்த்தையே பயன்படுத்தப்படுகிறது.
விசுவாசம் என்பது தேவனுடைய பிள்ளைகளுக்கு இருக்க வேண்டிய அடிப்படைத் தகுதி. இதனால் தான் அவர்களுக்கு விசுவாசிகள் என்ற பெயரே சூட்டப்பட்டிருக்கிறது. ’மனந்திரும்பி, சுவிசேஷத்தை விசுவாசியுங்கள்’ (மாற்கு 1:15) என்பது தான் இயேசு கிறிஸ்துவின் முதல் பிரசங்கம். கிறிஸ்தவ வாழ்வின் முதல் அடிப்படை தகுதியும் அதுவே (யோவான் 1:12). ’விசுவாசிக்கிறவன் பதறான் (ஏசாயா 28:16); தன் விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் (ஆபகூக் 2:4); நீ விசுவாசித்தபடியே உனக்கு ஆகக்கடவது (மத்தேயு 8:13); மேலும், நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர்கள் (மத்தேயு 21:22)’ போன்ற வசனங்கள் நாம் இன்னும் திரியேக தேவனை, அவருடையை வார்த்தைகளை இன்னும் விசுவாசிக்க நம்மைத் தூண்டுகின்றன.
அத்துடன் நாம் எவற்றையெல்லாம் விசுவாசிக்க வேண்டும் என்றும் அவருடைய கற்பனைகள் நமக்குப் போதிக்கின்றன. தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத்தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும் (எபி. 11:6). நாம் என்னென்ன காரியங்களுக்காக தேவனை விசுவாசிக்கிறோமோ அந்த அளவில் தான் நாம் அவருக்கு விசுவாசமாகவும் உண்மையாகவும் நடந்து கொள்ள முடியும். எந்தவித கிரியைகளில் எல்லாம் அது செயல்படலாம் என எபிரேயர் 11ம் அதிகாரத்தில் கொடுக்கப்படுள்ள விசுவாச வீரர்கள் பட்டியலிலிருந்து தெளிவாக அறிகிறோம்.
விசுவாசத்தினாலே ஆபேல் மேன்மையானபலியை தேவனுக்குச் செலுத்தினான்; ஏனோக்கு தேவனுக்குப் பிரியமானவனாய் நடந்தான்; நோவா பேழையை உண்டுபண்ணினான்; ஆபிரகாம் கீழ்ப்படிந்து, தான் போகும் இடம் இன்னதென்று அறியாமல் புறப்பட்டுப்போனான்; மேலும் ஈசாக்கைப் பலியாக ஒப்புக்கொடுத்தான்; விசுவாசத்தினாலே சாராள் வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவரென்றெண்ணினாள்; விசுவாசத்தினாலே யாக்கோபு தன் மரணகாலத்தில் யோசேப்பினுடைய குமாரர் இருவரையும் ஆசீர்வதித்து, தன்கோலின் முனையிலே சாய்ந்து தொழுதுகொண்டான்; விசுவாசத்தினாலே யோசேப்பு, தன் எலும்புகளைக்குறித்துக் கட்டளைகொடுத்தான்; விசுவாசத்தினாலே மோசே கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தையை அதிக பாக்கியமென்று எண்ணி  செயல்பட்டு இஸ்ரவேலரை வழிநடத்தினான். இவ்விதமே ராகாப்,  கிதியோன், பாராக், சிம்சோன், யெப்தா, தாவீது, சாமுவேல் மற்றும் ஸ்திரீகள் தங்கள் விசுவாசத்தினால் நடந்து கொண்ட காரியங்களை எபியேரர் 11ம் அதிகாரம் முழுவதும் காண்கிறோம்.
எனவே விசுவாசி ஒவ்வொருவரும் விசுவாசத்துக்கு பாத்திரமாகவும் நடந்து கொள்ள வேண்டும். ஏனெனில், ’கிரியைகளில்லாத விசுவாசம் செத்ததாயிருக்கிறது’ (யாக்கோபு 2:26). ’கிறிஸ்துவினிடத்தில் விசுவாசிக்கிறதற்குமாத்திரமல்ல, அவர்நிமித்தமாகப் பாடுபடுகிறதற்கும் உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது’ (பிலி. 1:29). குறிப்பாக, கிறிஸ்தவ விசுவாசத்தினால் வரும் பாடுகள் ஒருபுறம் இருக்க, 2 தீமோத்தேயு 3:1-5 ல் கடைசி நாட்களில் வருமென்று கூறப்பட்டுள்ள உலகப்பிரகாரமான காரியங்களை நம்மிடமிருந்து விலக்கி வைக்க வேண்டும். 
அதற்கு ஆவியின் கனியாகிய விசுவாசத்தில் நாம் பெருக வேண்டியது நமக்கு அவசியமாகிறது. இதற்கு  உதாரணமாக, விசுவாசத்தின் வெளிப்பாடாக பணஆசை அற்றவர்களாக இருக்கும் நிலையை எபிரேயர் நிருபத்தில் பவுல் கூறுவதைக் காண்கிறோம். ’நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே. அதினாலே நாம் தைரியங்கொண்டு: கர்த்தர் எனக்குச் சகாயர், நான் பயப்படேன், மனுஷன் எனக்கு என்னசெய்வான் என்று சொல்லலாமே’ (எபிரேயர் 13:5,6).
இவ்விதம் விசுவாசமும் விசுவாசமாய் இருத்தலும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடையவைகளே. ஒன்றில் வளர மற்றொன்று அவசியமாகிறது. அதாவது விசுவாசத்தில் வளரும் ஒருவரால் தான் விசுவாசமாகவும் நடந்து கொள்ள முடியும். விசுவாசிகளாகிய நாம் தேவனுக்கும் அவருடைய வாத்தைகளுக்கும் உண்மையாய் நடந்து கொள்ளுதல் வேண்டும். ’தேவனிடத்தில் விசுவாசமாய் இருங்கள்; என்னிடத்திலும் விசுவாசமாய் இருங்கள்’ (யோவான் 14:1) என்றார் இயேசு கிறிஸ்து. ’விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்’ (எபிரெயர் 11:6).  

இந்த விசுவாசத்தில் வளர நாம் செய்ய வேண்டியதென்ன? ’விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும்’ என ரோமர் 10:17 ல் பார்க்கிறோம். நாம் கிறிஸ்தவ விசுவாசத்தில் மென்மேலும் வளர தேவனுடைய வசனமாகிய பரிசுத்த வேதாகமத்தை முறையாக வாசிக்க வேண்டும்; அவைகளை தியானிக்க வேண்டும்; அவைகளை கேள்விப்படும் போதே நமக்குள் விசுவாசம் பிறக்கும். சிறுசிறு காரியங்களில் அவைகளை செயல்படுத்தப் பழகும் போது பெரிய காரியங்களிலும் அவருக்கு விசுவாசமாக நடந்து கொள்ளும் விசுவாச வீரர்களாக வீராங்கனைகளாக நாம் மாறுவோம். இந்த அனுபவங்களுக்கு நம்மை அர்ப்பணிப்போம். ஆமென்.

[இது பாலைவனச் சத்தம் – ஜூலை 2017 இதழில் வெளியான எனது கட்டுரை]