கிறிஸ்துவில்
பிரியமான சகோதர சகோதரிகளுக்கு, நமது
இரட்சகர் இயேசு கிறிஸ்துவின் இனிய
நாமத்தில் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத்
தெரிவித்துக் கொள்கிறேன். புத்தாண்டு பிறந்தாலே நமக்குள் ஒரு சந்தோஷம் பிறக்கிறது.
கடந்த ஆண்டை விட இந்த
ஆண்டாவது நமது எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிடும்
ஆண்டாக இருந்துவிடாதா என்ற எதிர்பார்ப்பே அந்த
சந்தோஷத்தின் அடிப்படையான காரணம். ஆனால், அந்த
சந்தோஷம் நிலையானது அல்ல; நாட்கள் செல்லச்செல்ல,
அந்த சந்தோஷம் படிப்படியாக குறைந்து ஓரிரு வாரங்களுக்குள் பழைய
நிலைமைக்கே நம்மை கொண்டு செல்ல
நேரும். உண்மையான சந்தோஷம் சூழ்நிலைகளைப் பொறுத்தது அல்ல. நமது கனியுள்ள
கிறிஸ்தவ வாழ்க்கையில் வெளிப்படவேண்டிய ஆவியின் கனியாகிய சந்தோஷம்
குறித்து இந்த இதழில் காண்போம்.
ஆவியின்
கனியாகிய அன்பு நம்முடைய வாழ்க்கையில்
நிலைத்திருக்கும் போது நம்மில் வெளிப்படும்
இன்னுமொரு அம்சம் தான் சந்தோஷம்.
’நான் என் பிதாவின் கற்பனைகளைக்
கைக்கொண்டு அவருடைய அன்பிலே நிலைத்திருக்கிறதுபோல,
நீங்களும் என் கற்பனைகளைக் கைக்கொண்டிருந்தால்,
என்னுடைய அன்பிலே நிலைத்திருப்பீர்கள்’ என்று சொன்ன
இயேசு கிறிஸ்து அதன் தொடர்ச்சியாக, ‘என்னுடைய
சந்தோஷம் உங்களில் நிலைத்திருக்கும்படிக்கும், உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படிக்கும்,
இவைகளை உங்களுக்குச் சொன்னேன்’ என்கிறார் (யோவான்.15:10,11). இந்த வசனங்களின் அடிப்படையில்,
ஆவியின் கனியாகிய சந்தோஷத்தின் அம்சங்களை பின்வருமாறு விவரிக்கலாம்.
கிறிஸ்து
தரும் சந்தோஷம்: நம்மில் இருக்க வேண்டிய
சந்தோஷம் கிறிஸ்து தரும் சந்தோஷம். அது
உலகப்ப்பிரகாரமான காரியங்களில் முயன்று கிடைக்கும் அற்ப
சந்தோஷமல்ல, கிறிஸ்துவில் நிலைத்திருப்பதினால் நம்மில் உருவாகும் நிலையான
சந்தோஷம். ஏனெனில் அது கிறிஸ்துவின்
சந்தோஷம்; வேறு எங்கும் அது
கிடைப்பதில்லை. அது நமது பக்தி
முயற்சிகளினாலும் நமக்குக் கிடைத்து விடுவதில்லை. இந்த சந்தோஷம் ஒரு
கனியுள்ள கிறிஸ்தவ வாழ்க்கையின் அடையாளம். அது ஆவியின் கனி
மட்டுமல்ல; அவர் தரும் ஈவு.
சந்தோஷம் என்பதற்கான கிரேக்க மூல வார்த்தை ’chara’ என்பது
அந்த மொழியில் கிருபை என்னும் வார்த்தைக்கான
’charis’ என்னும் வார்த்தையை ஒட்டியே வருகிறது.
நிறைவான
சந்தோஷம்: ’என்னுடைய சந்தோஷம் உங்களில் நிலைத்திருக்கும்படிக்கும், உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படிக்கும்,
இவைகளை உங்களுக்குச் சொன்னேன்’ என்றார் இயேசு.(யோவான்
15:,11). ’உம்முடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தமும், உம்முடைய
வலது பாரிசத்தில் நித்திய பேரின்பமும் உண்டு
(சங். 16:11). தேவனை நாம் கண்களினால்
காணாமலிருந்தும் அவரிடத்தில் அன்பு கூர்ந்து, அவரை
முழுமையாய் நம்பி விசுவாசித்து நமது
விசுவாச வாழ்க்கையை நடத்தும் போது, சொல்லிமுடியாததும் மகிமையால்
நிறைந்ததுமாயிருக்கிற சந்தோஷமுள்ளவர்களாய்க் களிகூர்ந்து, இறுதியில் விசுவாசத்தின் பலனாகிய ஆத்துமரட்சிப்பை அடைகிறோம்
(1 பேதுரு 1:8,9)
நிலையான
சந்தோஷம்: ஆவியின் கனியாகிய சந்தோஷம்
அவ்வப்போது சூழ்நிலைகளைப் பொறுத்து வந்து செல்லும் சந்தோஷமல்ல;
அது நிலையான சந்தோஷம். வெளிப்புற
சூழ்நிலைகள் என்னவாயிருந்தாலும் ஆவியினாவருடைய ஆளுகைக்குள் இருக்கும் ஒருவனுடைய இருதயத்தில் உள்ளான சந்தோஷம் அது
எப்போதும் நிலைத்திருக்கும். ’உங்கள் சந்தோஷத்தை ஒருவனும்
உங்களிடத்திலிருந்து எடுத்துப்போடமாட்டான்’ என்றார் இயேசு. (யோவான்
16:22). கர்த்தருக்குள் சந்தோஷமாயிருங்கள் என பவுல் சொல்லும்
போது எல்லா காலநேரத்திலும் (time duration) சந்தோஷமாயிருப்பதைக் காட்டிலும் எல்லா சூழ்நிலைகளிலும் (all situations) சந்தோஷமாயிருப்பதையே குறிப்பிடுகிறார் (பிலி. 4:4,6).
நமது ஆவிக்குரிய வாழ்க்கையில் இரட்சிப்பு அனுபவத்தின் போதும் (லூக்கா 19:6), ஞானஸ்நானம்
பெறும் போதும் (அப். 8:39) தொலைந்து
போன ஆட்டினை (ஆத்துமாவினை) தேடிக் கண்டு பிடித்து
மந்தையில் சேர்க்கும் போதும் (லூக்கா 15:6) சந்தோஷம்
பொங்குவது இயல்பு தான். அதே
சந்தோஷம் எல்லா சூழ்நிலைகளிலும் தொடர
வேண்டும். நாம் பலவிதமான சோதனைகளில்
அகப்படும்போது, நம் விசுவாசத்தின் பரீட்சையானது
பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக
எண்ணவேண்டும் (யாக்கோபு 1:2,3). கிறிஸ்துவின் மகிமை வெளிப்படும்போது நாம்
களிகூர்ந்து மகிழும்படியாக, அவருடைய பாடுகளுக்கு பங்காளிகளானதால்
சந்தோஷப்பட வேண்டும் (1 பேதுரு 4:13). அவருடைய நாமத்துக்காக அவமானமடைவதற்கு
நேர்ந்தாலும் சந்தோஷமாய் நமது கடமைகளை தொடர்ந்து
செய்ய வேண்டும் (அப். 5:41). இப்படியாக, எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள் (1 தெச. 5:16) என பவுல் நமக்கு
கூறுவது வெறும் வாழ்த்து மட்டுமல்ல;
அது தேவ ஆலோசனை.
எல்லா சூழ்நிலையிலும் இந்த சந்தோஷத்தை அனுபவிக்க
நாம் செய்ய வேண்டியதென்ன? வேதத்தை
வாசித்து தியானித்து கடைபிடிக்க வேண்டும்; ஜெபிக்க வேண்டும். இதற்கு
ஆதாரமான சில வசனங்கள் இதோ.
கர்த்தருடைய நியாயங்கள் (வார்த்தைகள்) செம்மையும், இருதயத்தைச் சந்தோஷிப்பிக்கிறதுமாயிருக்கிறது
(சங்.19:8). உம்முடைய வார்த்தைகள் கிடைத்தவுடனே அவைகளை உட்கொண்டேன்; உம்முடைய
வார்த்தைகள் எனக்குச் சந்தோஷமும், என் இருதயத்துக்கு மகிழ்ச்சியுமாயிருந்தது
(எரேமியா 15:16). இதுவரைக்கும் நீங்கள் என் நாமத்தினாலே
ஒன்றும் கேட்கவில்லை; கேளுங்கள், அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி
பெற்றுக்கொள்வீர்கள் (யோவான் 16:24).
இவ்வுலக
வாழ்க்கையில் அல்ல, இவ்வுலக வாழ்க்கை
ஓட்டத்தையே சந்தோசத்துடன் ஓடி முடிக்க வேண்டுமென்பது
தான் பவுலின் விருப்பமாக இருந்தது
(அப். 20:24). அவ்விதமே அவர் திருப்தியுடன் முடித்தும்
காட்டினார் (2 தீமோ. 4:17). நம்முடைய சந்தோஷமும் இம்மைக்குரிய காரியங்களைக் குறித்தாக இருக்காமல், மறுமைக்குரிய காரியங்களைக் குறித்தாதாக இருக்க வேண்டும். கிறிஸ்தவ
ஊழிய ஈடுபாடுகளினால் அதின் பலன்களினால் வரும்
சந்தோசத்தைக் காட்டிலும் நமது நித்திய வாழ்க்கையை
உறுதிப்படுத்துவதே நமக்கு சந்தோஷம் தருவதாக
இருக்க வேண்டும். இயேசு ஒருமுறை சீடர்களைப்
பார்த்து, ‘ஆவிகள் உங்களுக்குக் கீழ்ப்படிகிறதற்காக
நீங்கள் சந்தோஷப்படாமல், உங்கள் நாமங்கள் பரலோகத்தில்
எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள்’ என்றார் (லூக்கா 18:20).
சிறைச்சாலையில்
நடுராத்திரியிலே பவுலும் சீலாவும் ஜெபம்பண்ணி,
தேவனைத் துதித்துப் பாடினது அவர்களுக்கு ஆறுதலையும்
விடுதலையும் கொடுத்தது மட்டுமல்ல, சிறைச்சாலைக் காவலனுக்கும் அவனது வீட்டாருக்கும் இரட்சிப்பினால்
ஏற்படும் மனமகிழ்ச்சியைக் கொடுத்தது (அப். 16:25,34). அதற்கு அடிப்படைக் காரணம்
எல்லா சூழ்நிலைகளிலும் பவுல் மற்றும் சீலாவிடம்
நிலைத்திருந்த உள்ளான சந்தோஷம் தான்.
பரிசுத்த ஆவியானவரால் தொடர்ந்து நிரப்பப்பட்டுக் கொண்டிருக்கும் போது இவ்வித சந்தோஷம்
சாத்தியமாகிறது. இதற்கு இயேசுகிறிஸ்துவும் (லூக்கா
10:21) முதல் நூற்றாண்டு சீஷர்களும் (அப்.13:52) சாட்சி. இந்த நூற்றாண்டிலும்
இந்த சந்தோஷத்திற்கு சாட்சி பகர நாம்
ஆயத்தமா?
[இது பாலைவனச் சத்தம் – ஜனவரி 2017 இதழில் வெளியான எனது
கட்டுரை]